
ஓவியம்: வேலு
கொட்டகையில் நாற்றங்காலுக்குப் பயன்படுத்துவதற்காகத் தயாரித்து வைத்திருந்த ஜீவாமிர்தக் கரைசலைக் கலக்கிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அந்தநேரத்தில் சடசடவென தூறல் விழவும் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘காய்கறி’ கண்ணம்மாவும் ஏரோட்டி இருக்கும் கொட்டகைக்குள் ஒதுங்கினர்.
“என்ன திடீர்னு காலையிலே மழை பிடிச்சிடுச்சு” என்று கேட்டார் காய்கறி. “வேறென்ன... பருவமழைதான்” என்றார் ஏரோட்டி. இவர்கள் உரையாடுவதைக் கவனித்துக்கொண்டிருந்த வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
“போன 2017-ம் வருஷம், சிறு குறு விவசாயிகளைக் குழுவா இணைச்சு விவசாயம் செய்ற மாதிரி கூட்டுப் பண்ணைத் திட்டத்தை வேளாண்மைத்துறை மூலமாகச் செயல்படுத்துனாங்க. சிறு விவசாயிகள் தனித்தனியா விவசாயம் செய்யாம, இதுமாதிரி கூட்டாகச் சேர்ந்து செய்றப்போ தண்ணீர் பிரச்னை, வேலையாள் பிரச்னைனு எல்லாத்தையும் சமாளிக்க முடியும். போன வருஷம் இந்த மாதிரி ஒரு குழுவுக்கு 20 பேர்னு 10,000 உழவர் ஆர்வலர் குழுக்களை அமைச்சாங்க. ஐந்து உழவர் ஆர்வலர் குழுக்களை இணைச்சு 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைச்சாங்க. ஒவ்வொரு குழுவுக்கும் மூலதன நிதியா 5 லட்சம் ரூபாய் கொடுத்து இயந்திரங்கள்லாம் வாங்கிப் பயன் படுத்துனாங்க.

அதனால, சாகுபடிச் செலவுகளைப் பெருமளவு குறைச்சு லாபம் பார்க்க முடிஞ்சது. அந்தத் திட்டம் மூலமா மொத்தம் 2 லட்சம் விவசாயிகள் பயன் அடைஞ்சாங்க. திட்டம் நல்லபடியா செயல் பட்டதால, இந்த வருஷமும் 2,000 குழுக்களை அமைக்கிறதுக்கு வேளாண்மைத் துறைக்குத் தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கு. இந்தத் திட்டத்துக்காக, 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்காங்க. இந்த வருஷமும் இரண்டு லட்சம் விவசாயிகளைக் கொண்டு 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப் போறாங்களாம்” என்றார் வாத்தியார்.
அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்த ஏரோட்டி, “உடுமலைப்பேட்டை ஏழு குளப் பாசனத் திட்டத்துக்குட்பட்ட குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணி திறக்கப் போறாங்க. இந்தக் குளங்கள் மூலமா கிட்டத்தட்ட ரெண்டாயிரம் ஏக்கர் பரப்பு நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும். ஆனா, இந்தக் குளங்கள்ல ரொம்ப வருஷமா எந்த மேம்பாட்டுப் பணியும் நடக்கவேயில்லை. குளங்கள்ல இருக்குற ஆக்கிரமிப்புகளை அகற்றவேயில்லை. இந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வெச்சதுக்கு அப்புறம், பெரியகுளத்துல மட்டும் கரைகளைச் சீரமைச்சுட்டுருக்காங்களாம்.
மத்த குளங்கள் எதுலேயும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்யலையாம். திருமூர்த்தி அணையில இருந்து தண்ணீர் தளி வாய்க்கால் வழியா வந்து ஒவ்வொரு குளமாக நிரம்பும். அதுக்காக ஒவ்வொரு குளத்தையும் இணைக்கிற மாதிரி, கால்வாய்களையும் கான்கிரீட் வாய்க்கால்களையும் அமைச்சுருக்காங்க. ஆனா, அந்தக் கால்வாய்களைச் சரியாகப் பராமரிக்காததால தண்ணீர் விரயமாகுற சூழ்நிலை இருக்குது. எல்லாக் குளங்கள்லயுமே முழு அளவுல தண்ணி தேக்க முடியாத சூழ்நிலைதான் இருக்கு. எல்லாக் குளத்துலயுமே ஷெட்டர்கள் பழுதாகிக்கிடக்கு. ஷெட்டர்களைச் சுத்திப் புதர் மண்டிக்கிடக்கு. உபரி நீர் வெளியேறுற இடங்கள் மேடாகிப்போய்க் கிடக்கு. இந்தக்குளங்களை உடனடியாகச் சீரமைக்கணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சுருக்காங்க” என்றார்.
“குளத்தைச் சீரமைக்காமத் தண்ணி திறந்துவிட்டு என்ன பிரயோஜனம்” என்று கேட்டார் காய்கறி.
அந்த நேரத்தில் மழை குறைந்து வரவும் “வானம் வெளுத்துக்கிட்டு வருது. இன்னும் நாலஞ்சு வீடுகளுக்குக் காய் கொடுக்கணும், நான் கிளம்புறேன்” என்று சொல்லிக்கொண்டே காய்கறிக் கூடையைத் தூக்கிக்கொண்டு கிளம்ப, அன்றைய மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.
எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐக்கு (FSSAI) நோட்டீஸ்!
இயற்கை வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. இதனால், இயற்கை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்று பசுமை விகடன் இதழில் முன்பே கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ‘இந்தச் சான்றிதழ் பெற அதிக செலவாகும் என்பதால், இயற்கை விவசாயம் செய்துவரும் பல விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதனால், இந்த விதிகளை ரத்து செய்ய வேண்டும்’ என்று தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ‘அறச்சலூர்’ செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய வேளாண் துறை செயலாளருக்கும், வர்த்தகத் துறை செயலாளருக்கும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கும் 3 வாரங்களுக்குள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
எட்டுவழிச் சாலைக்கு இடைக்காலத் தடை
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் எட்டுவழிச்சாலை திட்டத்தில் நிலத்தை அளவிடும் பணி நடக்கிறது, பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்ற தகவலுடன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘நிலம் அளவிடும் பணியில் ஈடுபடும்போது இடையில் தடையாக உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. அதற்கு மாற்றாக நடப்படும் மரங்கள் முழுமையாக வளர்வதற்கும், அதைப் பாதுகாப்பதற்கும் எந்த ஏற்பாடும் இல்லை. அங்குள்ள மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணிக்கும், அளவிடும் பணிக்கும் தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பணிகளுக்கும் தடை தொடரும்’ என்றனர்.