
மாத்தியோசி
ஆந்திர மாநிலம், ராஜமுந்திரிக்குப் பலமுறை போயிருக்கேன். ஒவ்வொரு முறையும், அந்த ஊர் நண்பர்கள், ‘கடியம்’ (Kadiyam) போயிட்டு வருவோம், வாங்கன்னு கூப்பிடுவாங்க...’’ ஆனா, கடியம் போறது, கடினமான காரியமாவே இருந்து வந்துச்சு. போன வருஷம், கடியத்துக்குப் போக வாய்ப்பு கிடைச்சது. செங்கல்பட்டுல இருந்து, காக்கிநாடப் போற ரயில்ல ஏறி, ராஜமுந்திரிக்குப் பயணமானேன். சாயங்காலம் ஏழு மணி வாக்குல, வண்டி ஆந்திரா எல்லைக்குள்ளப் போனது. அடுத்து, ஒவ்வொரு ஸ்டேஷன்லேயும், மோர் விற்பனை ஜோரா நடந்துச்சு. சாப்பிட்டு முடிச்சவுடனே, மோரை வயிறு முட்ட குடிச்சாங்க.
என்னோட பயணம் செய்த ஆந்திராகாரர்கிட்ட, மோர் ரகசியத்தைக் கேட்டேன். ‘‘பாபு (தம்பி), ஆந்திர மக்கள் கார, சாரமா சாப்பிடுவாங்க. அப்படிச் சாப்பிட்டாலும், உடம்புக்குத் தொந்தரவு வராம இருக்கிறதுக்குக் காரணம், இந்த மோர்தான். தயிரைக்காட்டிலும் மோர்தான் நல்லது. ராத்திரி சாப்பிட்டை முடிச்சிட்டு, வயிறு நிறைய மோர் குடிச்சா, தூக்கம் சும்மா கும்முனு வரும். உடம்பும் ஆரோக்கியமா இருக்கும். அதனாலத்தான், ஆந்திர மக்கள் மோரை விரும்பிக் குடிக்கிறாங்க. நீங்களும்கூட, கொஞ்சம் குடிங்க பாபு’’னு சொல்லிட்டு, எனக்கும் இஞ்சி, கொத்தமல்லி தழைப்போட்ட மோர் பாட்டிலைக் குடிக்கக் கொடுத்தாரு.
சுவையான மோரைக் குடிச்சிட்டுத் தூங்கினேன், அதிகாலையிலத்தான் தூக்கம் கலைஞ்சது. ஜன்னல்ல எட்டிப்பார்த்தா, ரெண்டு பக்கமும், மீன் குளங்களா இருந்துச்சு. முன்னாடியெல்லாம், இவ்வளவு மீன் குளங்கள் கிடையாதேனு, அந்த ஆந்திரா நண்பர்கிட்ட பேச்சு கொடுத்தேன். ‘‘பாபு, சரியா கண்டுபுடிச்சிட்டீங்க. இந்தப் பகுதியில நெல்லுதான் விளைஞ்சது. ஆனா, அதுல போதுமான லாபம் கிடைக்கில. அதனால, இந்தப் பகுதியில உள்ள விவசாயிங்க, மீன் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுல வேலையும் குறைவு. வருமானமும் வளந்துகிட்டே இருக்குது’’னு சொன்னாரு. ‘‘விவசாயத்தைக்காட்டிலும், மீன் வளர்ப்பை முறையாகச் செய்தால், நல்ல லாபம் கட்டாயம் கிடைக்கும்’’னு மீன்வளத்துறை விஞ்ஞானிங்க சொன்ன விஷயம் பளீச்சுனு நினைவுக்கு வந்துச்சு.

ராஜமுந்திரி நகரம், கோதாவரி நதிக்கரையில இருக்கு. ஆறு நிறைய வெள்ளம் ஓடிக்கிட்டிருந்துச்சி. ஒரு காலத்துல, இந்தப் பகுதி சோழ மன்னர்களின் ஆட்சியில இருந்திருக்கு. குறிப்பா, ராஜேந்திரச்சோழன், கங்கைப் பகுதிக்கு இது வழியாகப் போனதா வரலாறு சொல்லுது. ராஜமந்திரிங்கிற தமிழ்ப் பேரு, ராஜமுந்திரின்னு மாறிடுச்சு. மத்தபடி, முந்திரிக்கும், இந்த ஊருக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாதுங்க.
ராஜமுந்திரி ரயில் நிலையத்துல இறங்கிச் செய்தித்தாள் வாங்க கடைக்குப்போனா, தமிழ்ப் பத்திரிகைகளும் இருந்ததைப் பார்க்கும்போது, சொந்தக்காரங்களைப் பார்த்த மாதிரி மகிழ்ச்சியா இருந்துச்சு. முதல் நாள் ராத்திரி பெய்ஞ்ச மழையில, ஊரே குளிர்ந்திருந்துச்சு. சூடா டீ குடிக்கலாம்னு, கடையைத் தேடிப்போனேன். ஒரு சுமாரான டீ கடையில, டீ சொல்லிட்டு உட்கார்ந்தேன்.
‘‘அண்ணே, நல்ல குளிர் காத்து வீசுது. ஆறு நிறைய தண்ணியைப் பார்க்கவே ஆனந்தமா இருக்கு. பக்கத்து வயல் ராமசாமியைக் கூப்பிட்டேன். ஏதோ சாக்குப்போக்கு சொல்லி வரமறுத்துட்டாரு. இந்த மாதிரியான ஊரைப்பார்த்துட்டுப் போறது, விவசாயிகளுக்குச் செலவில்ல. வரவுண்ணே...’’ தேன்மதுர தமிழ் மொழியில, இரண்டு தமிழ்நாட்டு விவசாயிகள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும், கடியம் மேல உள்ள ஈர்ப்பு, இன்னும் அதிகமாயிடுச்சு. இன்டர்நெட்ல, இந்த ஊர் பேரைத் தட்டினா, வழித்தடம், நர்சரிகள் பட்டியல்...னு பல தகவல்களையும் அள்ளிக் கொடுத்துச்சி.
ராஜமுந்திரியில இருந்து, சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துல ‘கடியம்’ இருக்கு. இந்தச் சின்ன ஊர், நர்சரி செடி உற்பத்தி செய்யுறதுல, ரொம்பப் பிரபலம். உங்க பகுதியில உள்ள மரக்கன்று விற்பனை செய்ற நர்சரிக்குப் போயி, இந்தச் செடிங்க எந்த ஊர்லயிருந்து வருதுனு கேட்டா, பெரும்பாலும், ‘ஆந்திராவுல இருக்கிற கடியம்’னு பதில் வரும். இந்தச் சுற்று வட்டாரப் பகுதியில மட்டும், சுமார் 500 பெரிய நர்சரிகளும், நூற்றுக்கணக்கான குட்டி குட்டி நர்சரிகளும் பரவிக் கிடக்குது. குவைத், சவுதி அரேபியானு வெளிநாடுகளுக்கும்கூட இங்கயிருந்து செடிங்க ஏற்றுமதியாகுது. மா, கொய்யா, பலானு பலவிதமான செடிங்க குறைஞ்ச விலைக்குக் கிடைக்குது. உதாரணத்துக்கு இங்க பங்கனப்பள்ளி மாஞ்செடியோட விலை ரூ.50 (ஐம்பதுதாங்க). விலைக்குறைவாவும், தரமான செடி வாங்க நினைக்கிறவங்க, வண்டி எடுத்துக்கிட்டு, நேரா கடியத்துக்குத்தான் வராங்க. இந்தப் பகுதியில முதல் நர்சரியை உருவாக்குன புண்ணியவான், ஒரு மாற்றுத்திறனாளிங்கிற தகவல் கேட்டப்போ ஆச்சர்யமாத்தான் இருந்துச்சு. முதல் வேலையா, அந்தப் புனிதனைப் பார்க்கப் புறப்பட்டுப்போனேன்.

‘‘கடியம் பகுதியில் 1952-ம் ஆண்டு, பல்ல வெங்கண்ணா என்ற போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பத்தில் பாகப்பரிவினை நடக்கின்றது. சொந்த சகோதரர்களே, ‘நீ நடக்க முடியாதவன், உனக்கு எதற்கு விவசாய நிலம்...’ என்று சொல்லி, ஏக்கர் கணக்கில் தங்களுக்கு எடுத்துக்கொண்டு, அரை ஏக்கர் வளமில்லாத நிலத்தை மட்டும் வெங்கண்ணாவுக்குத் தள்ளிவிடுகிறார்கள். சொந்த சகோதரர்களே தன்னுடைய உடல் ஊனத்தைக் காரணம் காட்டி பேசியது, வெங்கண்ணாவுக்குக் கோபத்தை ஏற்பட்டுத்தியிருக்கிறது. அந்தக் கோபத்தை, வாழ்வில் வெற்றி பெற்று, வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் உழைக்கத் தொடங்குகிறார்.
அந்த அரை ஏக்கர் நிலத்தில், சிறிய அளவில் நர்சரி தொடங்கி அழகுச் செடிகள், கொய்யா, மா... என விதவிதமான செடிகளை வளர்த்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். அயராது உழைப்பும், தரமான செடிகளும், சரியான விலையும், நேர்மையான வியாபாரமும் வெங்கண்ணாவுக்கு நர்சரி தொழில் நல்ல பெயரை உருவாக்கிக் கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வாங்கி நர்சரியை விரிவுப்படுத்துகிறார். தான் மட்டும் நர்சரி தொழில் வெற்றிப் பெற்றால் போதாது என்று, அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளையும் செடிகளை உற்பத்தி செய்ய நர்சரி தொடங்கும்படி ஊக்கிவிக்கிறார்.

அன்று அரை ஏக்கரில் தொடங்கப்பட்ட வெங்கண்ணாவின் நர்சரி இன்று பல நூறு ஏக்கரில் விரிந்து கிடக்கிறது. கடியத்தைத் தாண்டியும், நர்சரிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. நர்சரி செடிகளின் தலைநகர்னுகூட சொல்வது பொறுத்தமாக இருக்கும்’’னு தன்னோட தாத்தாவின் வாழ்க்கையைத் திரைப்படக் கதைபோல, தமிழ்லேயே அருமையா சொல்லி முடிச்சாரு, வெங்கடேஷ். நாலு வருஷம் சென்னையில, பட்டப்படிப்புப் படிக்கும்போது, தமிழ் மொழியைப் பேசக் கத்துக்கிட்டாராம். கொஞ்ச நேரத்துல, விலை உயர்ந்த வெளிநாட்டுக் கார் வந்து நின்னுச்சு. யாரோ செடி வாங்க வந்திருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா, எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், தவழ்ந்தபடியே இறங்கினார். அவரைப் பார்த்து, அங்கிருந்த அத்தனைப்பேரும் கையெடுத்துக் கும்பிட்டாங்க. நம்மை அருகில் அழைச்சிட்டுப் போனாங்க, ‘‘என்னோட குழந்தைங்க, தமிழ்நாட்டுல நிறையவே இருக்கு. குழந்தைனு சொன்னது, நாங்க உற்பத்தி செய்து அனுப்பின, செடிகளைத்தான்’’னு சொல்லிட்டுக் கள்ளம், கபடமில்லாம சிரிச்சிட்டு, ‘‘பாபுவுக்கு, நம்ம நர்சரியைச் சுத்திக்காட்டுங்க’’னு சொல்லிட்டுப் புறப்பட்டுப் போனாரு. மூணு நாள் முழுக்க, நர்சரிங்க நிறைஞ்ச, அந்தப் பகுதிகளைச் சுத்தி சுத்திப்பார்த்து, பலவிதமான கதைகளையும் அனுபவங்களையும் கேட்டு, அலுத்தப் பிறகுதான், ஊருக்குப் புறப்பட்டேன்.
- ஓவியம்: வேல்