மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!

மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!

மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!

யலில் களை எடுக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. மரத்தடியில் அமைக்கப்பட்டிருந்த கடப்பா கல் இருக்கையில் அமர்ந்து பண்பலை வானொலியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டுத் தோட்டத்துக்கு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, கூடையை இறக்கி வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அவரின் வருகையை அறிந்துகொண்ட ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், கை கால்களைக் கழுவிக்கொண்டு வந்து இவர்களுடன் சேர்ந்துகொள்ள, அன்றைய மாநாடு கூடியது.

வழக்கம்போல ஒரு செய்தியைச் சொல்லி மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.

“போன ரபி பருவத்துல, விவசாயிகள்ட்ட இருந்து தமிழக அரசே உளுந்தைக் கொள்முதல் செய்ய முடிவு பண்ணி, 3,000 டன் இலக்கு நிர்ணயம் செஞ்சாங்க. ஆனா, 1,550 டன் அளவுக்குதான் கொள்முதல் செய்ய முடிஞ்சது. அதேமாதிரி இப்போ பச்சைப்பயறையும் மத்திய அரசு நிறுவனம் மூலமா தமிழக அரசே கொள்முதல் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்காங்க. அதன்படி 5,625 டன் பச்சைப்பயறைக் கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி கொடுத்துருக்கு.

மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!

வெளிச்சந்தையில ஒரு கிலோ பச்சைப்பயறை 50 ரூபாய்ல இருந்து 55 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் பண்றாங்க. ஆனா, தமிழக அரசு, தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ பச்சைப்பயறுக்கு அதிகபட்ச விலையா 69 ரூபாய் 75 காசுனு விலை நிர்ணயம் பண்ணிருக்கு. எல்லா மாவட்டங்கள்லயும் இருக்குற ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்ல விவசாயிகள் பச்சைப்பயறை விற்பனை செய்யலாம்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செஞ்சுருக்காங்க. பச்சைப்பயறை விற்பனை செய்ய விரும்புற விவசாயிகள், நிலத்தோட சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு விவரங்களோட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்ல பதிவு பண்ணனும். பச்சைப்பயறு கொள்முதல் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள்ல மட்டும்தான் நடக்கும். விவசாயிகளுக்குப் பச்சைப்பயறுக்கான பணத்தை நேரடியா அவங்களோட வங்கிக்கணக்குலயே கட்டிடுவாங்களாம்” என்றார் வாத்தியார்.

“சிட்டா, அடங்கல்லாம் வாங்குறதுக்குள்ள விவசாயிகளுக்குத் தாவு தீந்துடுமே” என்றார், காய்கறி. “அதுக்கும் இனிமே பிரச்னையில்லை கண்ணம்மா” என்ற ஏரோட்டி, “இதுவரைக்கும் பட்டா, சிட்டா ரெண்டை மட்டும்தான் இ-சேவை மையங்கள்ல வாங்க முடிஞ்சது. இனிமே அடங்கலையும் இ-சேவை மையத்துலயே வாங்குற முறை நடைமுறைக்கு வரப்போகுது. பயிர்க்கடன் உள்ளிட்ட அரசோட எந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கணும்னாலும், பட்டா, சிட்டா, அடங்கல் எல்லாம் தேவைப்படுது. இதுவரை அடங்கலை இ-சேவை மையங்கள்ல வாங்க முடியாம இருந்துச்சு. அடங்கலுக்கு விண்ணப்பிச்சு வாங்கணும்னா 15 நாள்ல இருந்து ஒரு மாசம் வரை ஆகிடும். இனிமே, அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதில்லை. அதையும் இந்த மையங்கள்லயே கொடுக்குற மாதிரியான சாஃப்ட்வேரைத் தமிழக அரசு உருவாக்கியிருக்கு.

இது மூலமா, விவசாயிகளே தங்களோட விளைநிலங்கள்ல இருக்குற பயிரை ஆன்லைன் மூலமா பதிவேற்றம் செய்ய முடியும். கிராம நிர்வாக அலுவலர்களும், கிராமங்கள்ல ஆய்வு செஞ்சு நிலங்கள்ல இருக்குற பயிர்கள் பத்தின விவரங்களைப் பதிவேற்றம் செய்ய முடியும். ரெண்டு பதிவுகளையும் தாசில்தார், துணை தாசில்தார், வேளாண் அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளிச்ச பிறகு, இ-சேவை மையங்கள்ல அடங்கலைப் பதிவிறக்கம் பண்ணிக்கலாம். ஒவ்வொரு போகத்துக்கும் பயிர் மாறும்கிறதால, ஒவ்வொரு மாசமும் 23-ம் தேதிக்குள்ள பயிர் விவரங்களை ஆன்லைன்ல பதிவேற்றம் செய்யணும். இந்த இ-அடங்கல் முறை, சோதனையெல்லாம் முடிஞ்சு, பயன்பாட்டுக்குத் தயாராயிடுச்சு. சீக்கிரத்துல நடைமுறைக்கு வந்துடும்” என்றார்.

“பரவாயில்லையே...” என்ற காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு ஒரு மாதுளம்பழத்தை எடுத்துக் கொடுத்தார். அந்த நேரத்தில் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த பணியாளர்கள் ஏரோட்டியைச் சத்தம் போட்டு அழைக்க, ஏரோட்டி எழுந்து ஓடினார். அன்றைய மாநாடும் அத்தோடு முடிவுக்கு வந்தது.

- ஓவியம்: வேலு