
மாத்தியோசிஓவியம்: வேலு
சின்னச் சின்ன விஷயங்களைக் கவனமா செய்தா, பெரிய செயல்கள் வெற்றியா அமையும். சில வருஷங்களுக்கு முன், தாய்லாந்து நாட்டுல நடந்த இயற்கை விவசாயம் சம்பந்தமான பயிலரங்குக்குப் போயிருந்தேன். தாய்லாந்து நாட்டைப் பத்தி, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கு அங்க நடக்குற இயற்கை விவசாயத்து மேலயும், அந்த நாட்டுல தயாரிக்கிற செல்போன் மேலயும் தனிமரியாதை உண்டு. ஏன்னா, நோக்கியா செல்போன் வந்த ஆரம்பகாலக்கட்டத்துல, தாய்லாந்து நாட்டுல தயாரிச்ச செல்போனைத்தான், இந்தியாவுல விற்பனை செய்தாங்க. எத்தனை முறை, கீழே போட்டு எடுத்தாலும், கல்லு மாதிரி உடையாம உழைச்சது. அதுக்குக் காரணம், தாய்லாந்து நாட்டுத் தயாரிப்புதான். இதனாலயே, தாய்லாந்து போனா, ஒரு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கணும்னு திட்டம் வைச்சிருந்தேன். அதுக்கான வாய்ப்பாக இந்தப் பயிலரங்கு அமைஞ்சது.
பல நாட்டுல இருந்தும், பயிலரங்குக்கு வந்திருந்தாங்க. (வாய்ப்பு கிடைக்கும்போது, விவசாயப் பயிரலங்குல நடந்த விஷயங்களையும் செல்றேன்) நிகழ்ச்சி முடிஞ்ச கையோடு ஒவ்வொருத்தரும் தாய்லாந்து நாட்டோட தலைநகரைச் சுத்திப்பார்க்க கிளம்பிட்டாங்க. நான் மட்டும், நல்ல ஸ்மார்ட் போன் எந்தக் கடையில விக்கும்னு தேடி தேடி அலைஞ்சேன், கடைசில நல்ல செல்போனை வாங்கினேன். சென்னைக்கு வந்தவுடனே, ஸ்பென்சர் பிளாசாவுல சுத்தி அலைஞ்சி, செல்போனுக்குத் தோதா, ஒரு கவரையும் வாங்கிப்போட்டேன். ரெண்டு, மூணு நாள் போன் அற்புதமா வேலை செஞ்சுது. நாலாவது நாள், செல்போன் சூடாக ஆரம்பிச்சது. சரி, எல்லாச் செல்போனும் பேசுனா சூடாகும்தானேனு சமாதானப்படுத்திக்கிட்டேன். ஆனா, பாருங்க... அந்தத் தாய்லாந்து செல்போன், துணியைத் தேய்க்கிற இஸ்திரிப் பெட்டி கணக்கா சூடாக ஆரம்பிச்சது. அப்புறம் செல்போன்ல யாராவது கூப்பிட்டாலே, எனக்குச் சூடாக ஆரம்பிச்சது. இப்படியே ஒரு வாரம் போனது. ஆசை ஆசையாய் வெளிநாட்டுல வாங்குன போன், இப்படிப் பண்ணுதேன்னு வருத்தமா இருந்துச்சி. தாய்லாந்து நாட்டு செல்போன் கம்பெனிக்கு, இ.மெயில் அனுப்பித் தகவலைச் சொன்னேன். ‘பிரச்னை ஒண்ணும் கிடையாது. உங்க செல்போனைத் தாய்லாந்துக்கு அனுப்பி வைங்க, பழுது பார்த்து தர்றோம்’னு பதில் வந்துச்சி.

வெளிநாட்டுப் போனை ஒருவாரம்கூடப் பயன்படுத்த முடியாம போயிடுச்சின்னு, ஒரு பக்கம் வருத்தமும் அந்தப் பணத்துக்கு இங்கேயே ஒரு செல்போனை வாங்கியிருக்கலாமேனு கழிவிரக்கமும் உண்டானது. ஒருகட்டத்துல சரி, தாய்லாந்துக்கு அனுப்பி, பழுது பார்ப்போம்னு முடிவு பண்ணினேன். அந்தச் சமயத்துல, ஒரு யோசனை வந்ததுச்சி. செல்போன்ல என்ன பழுதுன்னாலும், நொடியில தீர்த்து வைக்கிற ஆள் ஒருத்தர் சென்னை எம்.எம்.டி.ஏ காலனி, மார்க்கெட் பக்கத்துல இருக்கிறது நினைவுக்கு வந்துச்சி. பத்துக்குப் பத்து அடி அளவு கடையில இருந்தாலும், எந்த நாட்டு செல்போனையும் பிரிச்சி, மேய்ஞ்சி பழுது பார்க்கிறதுல, ஜெயக்குமார்ங்கிற அந்த ஆளு கில்லாடி.
ஒரு எட்டு அவர்கிட்ட, கொடுத்து சோதிப்போம்னு போனேன். எனக்கு முன்னாடி ரெண்டு, மூணு பேரு நின்னாலும் என்னோட முகத்தைப் பார்த்தவுடனே, ஸ்டூலைக் கொடுத்து உட்கார வைச்சி, என்ன விஷயம்னு கேட்டாரு. தாய்லாந்து செல்போன் கதையை விலாவாரியா எடுத்துச் சொன்னேன். ‘‘ஐயா... உங்க செல்போனைக் கொடுங்க’னு வாங்கினாரு. செல்போன் மேல போட்டிருந்த கவரைக் கழட்டி வீசிட்டு, இப்ப பேசிப்பாருங்க போன் சூடாகாதுனு சொல்லிட்டு, அடுத்த ஆள் போனைப் பிரிச்சுப்பார்க்க ஆரம்பிச்சாரு.
நானும் மிஸ்ட் கால், மிஸ்ஸாகாத கால்னு சில பேருக்கு போன்பண்ணி, சோதிச்சு பார்த்தேன். செல்போன் சூடாகல. எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சி. தாய்லாந்துக்கு அனுப்புற வேலை மிச்சமாச்சினு, பணத்தை எடுத்து, ஜெயக்குமார் கையில கொடுத்தேன். ‘‘ஐயா, இதுக்குலாம் பணம் வேணாம். நான் சொல்ற விஷத்தை மட்டும் உங்களுக்குத் தெரிஞ்ச மக்கள்கிட்ட சொல்லிவையுங்க அது போதும். மண்ணுல உழவு செய்யுற விவசாயி தொடங்கி, வானத்துல பறக்குற விமானி வரையிலும், இந்தக் காலத்துல செல்போனைப் பயன்படுத்துறாங்க. பொதுவா, நம்ம மக்கள் மனசுல, எந்தப் பொருளையும் பத்திரமா பாதுகாக்கணும்னு எச்சரிக்கை உணர்வு அதிகம். அதனாலத்தான், செல்போன் கம்பெனிக்காரன் கோடிக்கணக்குல செலவு பண்ணி, பல வருஷம் ஆராய்ச்சி பண்ணி உருவாக்குற செல்போனுக்கு மேல, புதுசா கவர்ங்கிற பேர்ல சட்டையைப் போட்டு, செல்போனைக் கெடுத்துக்கிறாங்க. இதனால, பலவிதமான பிரச்னைகள் வருது. குறிப்பா செல்போன் சூடாகி, சீக்கிரமா பழுதாயிடும். கையில போனைப் பிடிச்சு பேசும்போது, கீழே விழக்கூடாதுனு, போன் மேல பிடிப்புகளை உருவாக்கியிப்பாங்க. ஆனா, நாம போடுற கவர்ங்க, அந்தப் பிடிப்பை மறைச்சிடும். இதனாலத்தான், செல்போனைப் பிடிப்பு கிடைக்காமா, வழுக்கிடும். இதனாலத்தான் பல நேரங்களல செல்போனைக் கீழேபோட்டு உடைக்கிறாங்க. செல்போனைப் பாதுகாக்கிறேங்கிற பேர்ல, செல்போனோட ஆயுளையும் குறைச்சி, பணத்துக்குப் பாதகம் செய்றோம்’’னு அருள்வாக்கு மாதிரி, செல்போன் வாக்கு சொன்னாரு.
இப்படித்தான் ஒருமுறை, ஈரோடு பக்கம் ஒரு நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன். ஏராளமான நில புலம் உள்ள செல்வாக்கான குடும்பம். அப்பா காலத்துக்குப் பிறகு, மகன் வெளிநாட்டுல படிச்சிட்டு, விவசாயத்துல இறங்குறாரு. பல நண்பர்களைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டிக்கிட்டிருந்தாரு. அந்தக் கூட்டத்துல நானும் ஒரு ஆள். சுமார் 25 ஏக்கர் நிலத்துல, பத்து வயசுள்ள மாந்தோப்பு இருந்துச்சி.
நீலம், பெங்களூரானு சல்லிசான விலைக்குப் போற மா ரகங்களை நடவு செய்திருந்தாங்க. இந்தப் பெயர்களைக் கேட்டவுடனே, அந்த இளம் நண்பருக்குக் கோபம் வந்திருக்கு. உடனே, அந்த மரங்களை வெட்டி சாய்ச்சிட்டு, புதுசா மா மரங்களை நடவு செய்யணும்னு முடிவு எடுத்திருக்காரு. அவங்க அப்பாதான், அதெல்லாம் வேண்டாம். எல்லாப் பிரச்னைக்கும் எந்த மூலை(ளை)யில இருந்தும்கூடத் தீர்வு கிடைக்கும்னு சொல்லி, இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்காரு. சுவையான விருந்துக்குப் பிறகு, வந்த வேலை பக்கம் பேச்சுத் திரும்பிச்சி. சிலபேரு, மாந்தோப்புல ஆடு வளர்க்கலாம், கோழி வளர்க்கலாம்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
இந்த மாதிரி பிரச்னைகளைச் சில பகுதியில பார்த்த அனுபவத்தையும், அதற்கான தீர்வையும் சுருக்கமாச் சொன்னேன். நடந்தது, நடந்துப் போச்சி. பெரிய தொகையைச் செலவழிச்சி, மாந்தோட்டத்தை உருவாக்கியிருக்காங்க. அதை அழிச்சிட்டு, புதிய மரங்கள நடவு செய்தா, பணமும் நேரமும் விரயமாகும். அதனால, உங்களுக்குப் பிடிச்ச மாதிரியே, அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகானு நல்ல விலைக்கு விற்பனையாகுற மா ரகங்களை, பழைய மா மரங்கள்ல ஒட்டுக்கட்டலாம். இதன் மூலமா செலவும் குறையும், நீங்க விரும்பின மாதிரியே விதவிதமான மாம்பழங்களும் காய்ச்சி குலுங்கும்னு சொல்லிட்டு, ஒட்டுக்கட்டுற ஆள்களோட முகவரியையும் தோட்டக்கலை வல்லுநர்களோட தொடர்பு எண்களையும் கொடுத்தேன். மா மரங்களை அழிக்க நினைச்ச அந்த இளைஞர் முகத்துல, ஆயிரம் வாட்ஸ் பல்புபோட்ட மாதிரி வெளிச்சம் தெரிஞ்சுதுங்க!