மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!

மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓவியம்: வேல்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, பேருந்திலிருந்து இறங்கி, தோட்டத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். கடைவீதியைக் கடக்கும்போது, ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் ‘காய்கறி’ கண்ணம்மாவும் அவரோடு இணைந்து கொண்டனர். வானம் லேசாக இருட்டிக்கொண்டு வர மூவரும் சற்று வேகமாக நடந்து தோட்டத்தை அடைந்தனர். கொட்டகைக்கு வெளியில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு அதில் மூவரும் அமர்ந்து கொண்டனர்.

வழக்கம்போல ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார், வாத்தியார்.

“சாயப்பட்டறைகள், குளிர்பான நிறுவனங்கள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை செய்ற நிறுவனங்கள் எல்லாம் அவங்கவங்க இஷ்டத்துக்குப் போர்வெல் போட்டுத் தண்ணி எடுத்துப் பயன்படுத்துறாங்க. நிறைய பேர் போர் தண்ணியை லாரி மூலமா விற்பனை செய்றாங்க. இப்படி வரைமுறையே இல்லாம தண்ணியை எடுக்குறதைக் கட்டுப்படுத்துறதுக்காக... ‘மாநில நிலத்தடி நீர் ஆதார மையத்துகிட்டத் தடையில்லாச் சான்று வாங்கித்தான் நிலத்தடி நீரை எடுக்கணும்’னு போன ஜூலை மாசம், தமிழகப் பொதுப்பணித்துறை ஓர் உத்தரவு போட்டுச்சு.

‘இந்த உத்தரவைத் தடை செய்யணும்’னு சில நிறுவனங்கள், சென்னை உயர்நீதி மன்றத்துல வழக்கு தாக்கல் செஞ்சாங்க. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்போ... பொட்டுல அடிக்கிற மாதிரி ஒரு தீர்ப்பைச் சொல்லிருக்கு நீதிமன்றம்.

மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதாவது, ‘வணிக நோக்கில், நிலத்தடி நீரைத் தனியார் எடுக்கும்போது, அதைக் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டியது, மக்கள் நலன் சார்ந்த அரசின் கடமை. தண்ணீர் வியாபாரம் செய்யும் மனுதாரர்கள், தேசத்தின் சொத்தான நிலத்தடி நீருக்கு உரிமை கொண்டாட முடியாது. நிலத்தின் உரிமையாளராக இருந்தாலும் அந்த நிலத்தில் கிடைக்கும் கனிமங்கள், தாதுக்கள், தண்ணீரை எடுக்க அவர்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வராது. நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்த, அரசு கொண்டு வந்த விதிமுறைகளை, அவர்கள் எதிர்க்க முடியாது. வணிக ரீதியாக, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகரித்துவிட்டது. அதனால், பொதுமக்கள் நலன் கருதி, அதைக் கட்டுப்படுத்த வேண்டும். தேசியச் சொத்தாகத் தண்ணீர் கருதப்படுவதால், அதைச் சட்டவிரோதமாக உறிஞ்சுவது, குற்றம்தான்.

குளங்கள், குட்டைகள், ஏரிகள் என நீர் ஆதாரங்களை... அரசாங்கம் விழிப்புடன் இருந்து, பாதுகாக்க வேண்டிய தருணம் இது. வரம்பு மீறி நிலத்தடி நீரை உறிஞ்சுவோரை, கருணை காட்டாமல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தண்ணீர் உள்ளிட்ட தேசிய சொத்துக்களை, அரசுதான் பாதுகாக்க வேண்டும். அனுமதியின்றி, நாட்டின் சொத்தை எடுப்பது திருட்டுதான். இந்தக் குற்றத்தைச் செய்வோருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமம் பெறாமல், நிலத்தடி நீரை எடுப்போர் மீது, திருட்டுக் குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக நிலத்தடி நீரை உறிஞ்சுவோரை அடையாளம் கண்டு, போலீசில் புகார் செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிரந்தரமாக உரிமம் வழங்கக் கூடாது’னு உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்புச் சொல்லிருக்கார். இனிமேலாவது இப்படித் தண்ணீர் எடுக்குறது குறையுமானு பார்ப்போம்” என்றார், வாத்தியார்.

“நல்ல விஷயமாத்தான் இருக்கு. ஆனா, நம்ம அரசு அதிகாரிகள், இந்த மாதிரி கட்டுப்பாடு விதிக்கிறதே லஞ்சம் வாங்குறதுக் காகத்தானோனு சந்தேகமாவுல்ல இருக்கு” என்று சொன்ன காய்கறி, கூடையிலிருந்து வேகவைத்த வேர்க்கடலையை எடுத்து வைத்தார். அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.

“பொள்ளாச்சிப்பக்கம் இருக்குற தென்னை விவசாயிகளுக்கு ரெண்டு வருஷமா பெரிய தலைவலியா இருக்குறது, வெள்ளை ஈ தாக்குதல் பிரச்னைதான். அதுக்கு ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாதுனு வேளாண்மைத்துறை விஞ்ஞானிகள் சொல்லிருக்காங்க. தொடர்ச்சியா மழை பெய்ஞ்சா சீதோஷ்ண நிலை மாறும். அதனால, வெள்ளை ஈக்கள் கட்டுப்படும்னு சொல்ற விஞ்ஞானிகள், தென்னையைவிட வாழையில்தான் அதிகமா வெள்ளை ஈக்கள் தாக்குதல் இருக்குனு சொல்றாங்க. வாழையிலையில இருக்குற சாற்றை வெள்ளை ஈக்களோட புழுக்கள் விரும்பி சாப்பிடுதாம். வாழைத்தோப்புலதான் வெள்ளை ஈக்கள் அதிகமா உற்பத்தியாகுதாம். அதனால, தென்னந்தோப்புக்குப் பக்கத்துலயோ, தென்னைக்கு ஊடுபயிராவோ வாழையை நடவு செய்ய வேணாம்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.

அதேபோல குரோட்டன்ஸ் செடிகள், கொய்யா, மரவள்ளி மாதிரியான பயிர்கள் இருந்தாலும் வெள்ளை ஈக்கள் பெருகுதாம். அதனால, வெள்ளை ஈ பிரச்னை கட்டுக்குள்ள வர்ற வரைக்கும் தென்னந்தோப்புக்குள்ள இந்தப் பயிர்களைச் சாகுபடி செய்யாம இருக்குறது நல்லதுனு வேளாண்மைத் துறை சார்பா சொல்லியிருக்காங்க” என்று ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே... சடசடவெனப் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மூவரும் நனைந்துவிடாமல் இருப்பதற்காக எழுந்து கொட்டகைக்குள் ஓட, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

வாத்தியார் சொன்ன கொசுறு:

ஒரே இடத்தில் 16,300 ரோஜாச் செடிகள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் செலவில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய ரோஜாத்தோட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. ரோஜாவுக்காக மட்டுமே பிரத்யேகமாக அமைக்கப்படும் இப்பூங்காவில் தற்போது நாற்பது சதவிகித அளவு பணிகள் முடிந்துள்ளன. ஊட்டி, பெங்களூரு போன்ற பல பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,500 ரகங்களில் ஆயிரக்கணக்கான ரோஜாக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றில் மிக அரிய ரகங்களான கறுப்பு நிற ரோஜா, ஊதா நிற ரோஜா, பச்சை நிற ரோஜா ஆகியவையும் உண்டு. பூங்கா அமைக்கப்படும் விதம் மற்றும் ரோஜாச் செடிகள் நடவுப் பணிகள் போன்றவற்றைப் பார்வையிட விரும்புபவர்களுக்கு அனுமதி அளிக்கிறது, தோட்டக்கலைத்துறை. அதற்குப் பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறுவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள செடிகளில், ரோஜாக்கள் பூத்து குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோட்டக்கலைத்துறையில் டிப்ளமோ படிப்பு!

ஸ்ரேல் நாட்டு நிதியுதவியில், தோட்டக்கலைத்துறை சார்பில்... திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் காய்கறிகளுக்கான மகத்துவ மையமும் கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் மலர்களுக்கான மகத்துவ மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் விவசாயக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ரெட்டியார்சத்திரத்தில் உள்ள காய்கறி மகத்துவ மையத்திலும், தளியில் உள்ள மலர்கள் மகத்துவ மையத்திலும் இரண்டு ஆண்டுக் காலத் தோட்டக்கலை டிப்ளமோ படிப்புகளைத் துவங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரண்டு மையங்களிலும் ஆண்டுக்குத் தலா 50 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விரைவில் இதற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது.

‘வெளிநாட்டு வெள்ளாமை’ தொடர் இந்த இதழில் இடம்பெறவில்லை.