மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!

மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!

மாத்தியோசி

அண்மையில், தெலங்கானா மாநிலத்தில உள்ள ஹைதராபாத்துக்குப் போயிருந்தேன். அந்தச் சமயத்துல இன்னைக்கு மாலை 5.30 மணிக்குப் பத்திரிகையாளர் பி.சாய்நாத் பேசுறாருனு சேதி வந்துச்சி. சரி, ஒரு எட்டு பார்த்துட்டு வருவோம்னு கிளம்பினேன். ஆங்கிலம் படிக்கத் தெரிஞ்ச மக்கள் மத்தியில சாய்நாத் ரொம்பவே பிரபலம். தி ஹிண்டு ஆங்கிலத் தினசரியில் பணி செய்த சமயத்துல விவசாயிகளோட பிரச்னைகளை அறிவு ஜீவிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் புரியும் விதத்துல எழுதினாரு. மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதி விவசாயிகள் தற்கொலை சம்பந்தமா இவர் எழுதின பிறகுதான், அரசாங்க அதிகாரிங்க, அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தாங்க. தன்னை ஊரகப் பத்திரிகையாளர்(Rural Journalist) னுதான் சொல்லணும்னு அடம் பிடிக்கக்கூடிய விவசாய விரும்பி. முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியோட பேரன். விவசாயிகளுக்காக தொடர்ந்து எழுதியும் பேசியும் வர்றதால விருதுகள், பட்டங்கள்னு வாங்கி குவிக்கக்கூடிய நபர்னு சாய்நாத் பத்தி சொல்லிக்கிட்டேப் போகலாம்.

அடுத்த மாசம் புதுடெல்லியில நடக்கவுள்ள கிஸான் முக்தி யாத்ரா (விவசாயிகள் விடுதலை பயணம்) சம்பந்தமா, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) ஏற்பாடு செய்த கூட்டத்துல பேசத்தான், சாய்நாத், மும்பையில இருந்து ஹைதராபாத்துக்கு வந்திருந்தாரு. ‘பஞ்சாரா ஹில்ஸ்’ங்கிற பகுதியில உள்ள திறந்தவெளி அரங்குலதான் (Amphitheatre) கூட்டம் நடந்துச்சி. நூறு பேருக்குள்ளத்தான் ஆள்கள் வந்திருந்தாங்க. இதுல கதர் ஜிப்பா, பருத்தி சேலைனு நாட்டுப்பற்றும் காந்திய சிந்தனை உள்ள அறிவு ஜீவிகள் எண்ணிக்கைத்தான் அதிகமா இருந்துச்சி. அலங்காரம், அதட்டல், ஆலாபனைனு எந்தப் பகட்டும் இல்லாம நேரடியா பேச்சை ஆரம்பிச்சாரு, சாய்நாத்.

‘‘முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் செய்திச் சேகரிக்கச் சென்றபோது, நான் பார்த்த காட்சிகளுக்கும், இப்போது பார்க்கும் காட்சிகளுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. அப்போது விவசாயிகள் மிகவும் மதிக்கப்பட்டனர். விவசாயம் செய்பவர்களுக்குச் சமூகத்தில் பெரிய மரியாதை இருந்தது. ஒருமுறை பத்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயி ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நீண்ட உரையாடலுக்குப் பிறகு, தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்ய உத்தேசித்திருப்பதாக அந்த விவசாயி சொன்னார்.

மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!

‘டாக்டர், இஞ்ஜினியர்... என படித்துள்ள வரனும் வருகிறது. ஆனால், இவர்களுக்கு என் பெண்ணைக் கொடுக்க மனம் இல்லை. நன்றாகப் பயிர் செய்யும் விவசாயிக்குத்தான் என் மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன்’ எனச் சொன்னவர், அதேபோல ஒரு விவசாயிக்குத்தான் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார்.

ஆனால், இன்று விவசாயிகளே, விவசாயிக்குப் பெண் கொடுக்க முன்வராத நிலை உள்ளதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. இந்த முப்பது ஆண்டுகளில் விவசாயத்தின் மீதிருந்த மதிப்பு எப்படிச் சரிந்துள்ளது என்பதை, இந்தச் சின்ன உதாரணம் மூலமே புரிந்து கொள்ளலாம். விவசாயம்தான், நாட்டின் உயிர்நாடி. பல ஆண்டுகளுக்கு விவசாயம் பாதிக்கப்பட்ட சமயத்தில், முதலில் தற்கொலை செய்து கொண்டது, விவசாயிகள் அல்ல, நெசவாளர்கள்தான். ஆந்திராவிலும் மகாராஷ்ட்ராவிலும் உள்ள கிராமங்களில் வாழ்ந்த நெசவாளர்கள் வருமானம் கிடைக்காமல், தற்கொலை செய்து கொண்டார்கள். விவசாயம் பாதிக்கப் பட்டதால், புதிய துணிகளை வாங்கி அணிவது குறைந்துபோனது. நெசவாளர்களின் துணிக்குத் தங்கள் நிலத்தில் விளையும் தானியங்களைப் பண்டமாற்றாகக் கொடுக்கும் பழக்கம் இருந்தது. விவசாயம் நொடிந்துபோனதால், அதைச்சார்ந்து வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இப்போது கிராமங்களில் மரக்கலப்பை செய்யும் தச்சர்களைப் பார்க்கவே முடியவில்லை. ஆனால், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கிராமந்தோறும் தச்சர் இருப்பார். ஏர் கலப்பை, மண் வெட்டி, களைக்கொத்தி... போன்றவற்றைத் தயார் செய்வது இவரது பிரதான வேலை. விவசாயி, தனது கலப்பையைப் பழுது நீக்க தச்சரிடம் கொண்டு வருவார். தச்சர் பழுது நீக்கி கொடுப்பார். இந்தப் பணிக்கான ஊதியத்தை விவசாயி உடனே கொடுக்க மாட்டார். தன்னுடைய நிலத்தில் உள்ள, நெற்பயிர் அறுவடையானதும், அதில் ஒரு பகுதியைத் தச்சருக்குக் கொடுப்பார். இந்தத் தச்சர், இப்படி ஊர் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் தன் பணிக்காகப் பெற்ற ஊதிய நெல் தானியத்தைத் தன் தேவைக்குப் போக, மீதியைச் சந்தையில் கொண்டு சென்று விற்றுவிட்டு, இரும்பு பட்டைகளை வாங்கி வந்து விவசாயக் கருவிகளைச் செய்வார். ஆக, பணம் என்பது கிராமத்தில் வாழ்பவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லாமல் இருந்தது. இப்படி ஒரு வாழ்க்கை முறை நம் நாட்டில் இருந்தது என்று எண்ணி, இப்போது ஏக்கப்படும் நிலையில் நிற்கிறோம்.

எனவே, நண்பர்களே... விவசாயிகளைக் காப்போம்; விவசாயத்தை மீட்போம். விவசாயிகள்மீது, அன்பும் அக்கறையும் கொண்ட நகர மக்களைத் தமிழ்நாட்டில் பார்த்துள்ளேன். அங்குள்ள டாக்டர் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்கிறார். இதேபோல, பேராசிரியர், வழக்கறிஞர்... எனப் பல்வேறு பணிகளில் உள்ளவர்களும் விவசாயத்தை நேசிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், விவசாயிகளுக்கான எந்த நிகழ்ச்சி, சென்னை மாநகரில் நடந்தாலும் கூட்டம் அலைமோதுகிறது. நான் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, இதை நேரில் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டைப் போல, விவசாயிகளுக்குத் தோள் கொடுக்க, தெலங்கானா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகர மக்கள் முன் வர வேண்டும்’’னு சாய்நாத் வேண்டுகோள் விடுத்தாருங்க.

மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!

கூட்டம் முடிஞ்சதும், சாய்நாத்கிட்ட பேச்சுக் கொடுத்தேன்... ‘‘தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ஆதரவான மக்கள் இயக்கங்கள் உருவாகி, நல்ல செயல்கள் நடக்கின்றன. அந்த நல்ல மாற்றம், மற்ற மாநிலங்களுக்கும் பரவ வேண்டும்’’னு தெள்ளுத் தமிழில் பேசி, கைகுலுக்கினாருங்க.

ஹைதராபாத் மாநகரத்துல இருந்து, சென்னைக்குச் சாலை மார்க்கமா பயணம் செய்தேன்ங்க. தெலங்கனா, ஆந்திர மாநிலங்கள எங்க பார்த்தாலும் பச்சை, பசேல்ன்னு பசுமைதான். அதுவும் ஆந்திர மாநிலத்துல, குளம், குட்டைகள்... எல்லாம் நிரம்பியிருந்ததைப் பார்க்க, பார்க்க மனசுக்குக் குளுமையா இருந்துச்சிங்க. ஆந்திரா எல்லையைக் கடந்து, தமிழ்நாட்டு எல்லையில உள்ள முதல் ஊரான ஆரம்பாக்கத்துல நுழையும்போது, ‘ஜவாரி’ ரக மாமரங்கள் கண்ணுல பட ஆரம்பிச்சுது. ஆரம்பாக்கம் பகுதியில ஜவாரி ரக மாமரங்கள் நிறைய உண்டு. சென்னைக்கு வர்ற ஜவாரி மாம்பழங்கள், ஆரம்பாக்கத்துல இருந்துதான் வருது. இந்த மாமரம் மானாவாரி நிலத்தில மங்காத விளைச்சல் கொடுக்கக் கூடியது. ஒரு பழம் உங்க வீட்டுல இருந்தா, வாசனை மூக்கைத் துளைக்கும்.

‘‘இந்த மாம்பழத்தைச் சாப்பிடறதே தனிக் கலை. மரத்துல இருந்து பழமா பறிச்சாலும், முதல்நாள் சாப்பிட்டா பழம் புளிக்கும். ரெண்டாவது நாளும் அப்படித்தான். மூணாவது நாள் சும்மா அல்வாத்துண்டு கணக்கா இனிக்கும். நாலாவது நாளும் அப்படித்தான் இருக்கும். ஆனா, அஞ்சாவது நாள் மறுபடியும் புளிக்க ஆரம்பிச்சுடும். அப்படி ஆகுறதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சிடணும். கண்ணாடி மாதிரிதான் இந்தப் பழத்தைக் கையாளணும். அப்பத்தான் கெட்டுப்போகாம இருக்கும்’’னு ஆரம்பாக்கத்துல உள்ள முன்னோடி விவசாயி ஏ.வி.ஆர் என்ற ராமகிருஷ்ணன், பத்து வருஷத்துக்கு முன்னாடி சொன்ன தகவல் பசுமை நிறைந்த நினைவுகளா எட்டிப்பார்த்துச்சிங்க.

- மண்புழு மன்னாரு,  ஓவியம்: வேலு