மரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா?

ஓவியம்: வேல்
மானாவாரியாக விதைக்கப்பட்டிருந்த நிலக்கடலை வயலில் களையெடுக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அதற்காகக் காலையிலேயே தோட்டத்துக்கு வந்திருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், வயலில் பணியாளர்களோடு வேலை செய்து கொண்டிருந்தார். அவருடனே கிளம்பி வந்திருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, வரப்பில் அமர்ந்து பண்பலை வானொலியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், தோட்டத்து நாய்கள் பாசமுடன் குரைப்பதைக் கண்டு, ‘காய்கறி’ கண்ணம்மாவின் வருகையை அறிந்துகொண்ட ஏரோட்டி, வயலிலிருந்து மேலேறி வந்தார். அவர் கை கால்களைக் கழுவிவிட்டு வருவதற்கும், காய்கறி தனது சுமையை இறக்கி வைத்து ஆசுவாசப்படுத்துவதற்கும் சரியாக இருந்தது.
வானொலியின் ஒலி அளவைக் குறைத்துவிட்டு ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.

“இந்தி நடிகர் அமிதாப்பச்சன், போன வருஷம் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 350 விவசாயிகள், வங்கிகள்ல வெச்சுருந்த கடன் தொகையைக் கட்டி அந்த விவசாயிகளைக் கடன் தொல்லையில இருந்து விடுவிச்சார்ல. அதேபோல இந்த வருஷமும், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 850 விவசாயிகளோட வங்கிக் கடன் தவணையை கட்டியிருக்கார். ரொம்பக் கஷ்டத்துல கடன் தவணையைக் கட்ட முடியாமத் தவிக்கிற விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து, அவங்க பல்வேறு வங்கிகள்ல வெச்சுருந்த அஞ்சரைக்கோடி ரூபாய் கடனை அமிதாப்பச்சன் கட்டியிருக்கார். அதனால, தற்கொலை செஞ்சுக்குற அளவு விரக்தியில இருந்த நிறைய விவசாயிகள் பலனடைஞ்சுருக்காங்க” என்றார், வாத்தியார்.
“பரவாயில்லையே... நல்ல விஷயமா இருக்கே. என்னதான் கோடி கோடியாச் சம்பாதிச்சாலும் இவ்வளவு பெரிய தொகையை இனாமா கொடுக்கக் கண்டிப்பா பெரிய மனசு வேணும்” என்று பாராட்டினார், காய்கறி.
அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்த ஏரோட்டி, “2019-ம் வருஷம் ஜனவரி மாசத்துல இருந்து கம்பு, கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்களையும் ரேஷன் கடைகள்ல விற்பனை செய்ய முடிவு செஞ்சுருக்காங்க. இப்போ சிறுதானியங்கள் பத்தின விழிப்பு உணர்வு அதிகரிச்சுட்டு வர்றதால, அதோட தேவையும் அதிகரிச்சுருக்கு. இந்தச் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டு பெரிய பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள்ல எல்லாம் இப்போ சிறுதானியங்களை விற்பனை செய்ய ஆரம்பிச்சுருக்காங்க. அரிசி, கோதுமை விலையைவிட அதிகமா சிறுதானியங்களுக்கு விலை வெச்சு விற்பனை செய்றாங்க.
ஆனா, விவசாயிகள்கிட்ட ரொம்பக் குறைவான விலைக்குதான் கொள்முதல் செய்றாங்க. இதனால, விவசாயிகளுக்குப் பிரயோஜனமே இருக்குறதில்லை. கமிஷன் கடைக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும்தான் அதிக லாபம் கிடைக்குது. அதனால, ரேஷன் கடைகள்ல குறைஞ்ச விலைக்குச் சிறுதானியங்களை விற்பனை செஞ்சா விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும். நுகர்வோருக்கும் குறைஞ்ச விலையில சிறுதானியங்கள் கிடைக்கும்னு முடிவு பண்ணி... ரேஷன் கடைகள்ல சிறுதானியங்களை விற்பனை பண்ற திட்டத்தை ஆரம்பிக்கப் போகுது, உணவுத்துறை.
இதுக்காக மத்திய அரசுகிட்ட அனுமதியும் வாங்கியாச்சாம். நீலகிரி, திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்கள்னு மலைப்பகுதிகள் உள்ள மாவட்டங்கள்ல ‘மலைவாழ் மக்கள் கூட்டுறவுச் சங்கங்கள்’ மூலமா சிறுதானியங்களை விற்பனை செய்றாங்க. இது மாதிரியான சங்கங்கள்ல இருந்து சிறுதானியங்களை வாங்க முடிவு செஞ்சுருக்காங்க. தமிழ்நாடு மட்டுமல்லாம வெளி மாநிலங்கள்ல இருக்குற கூட்டுறவுச் சங்கங்கள்லயும் சிறுதானியங்களைக் கொள்முதல் பண்ண முடிவெடுத்துருக்காங்க” என்றார், ஏரோட்டி.
“நல்ல விஷயம்தான், இதை ஒழுங்காச் செயல்படுத்துனா என்னை மாதிரி ஆளுங்களுக்குக் கண்டிப்பா உபயோகமாத்தான் இருக்கும்” என்று சொன்ன காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு ஒரு நாட்டுக் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார். “போன 1958-ம் வருஷம் பொதுப் பணித்துறையை அரசுடைமையாக்கி... அணைகள், ஏரிகள், குளங்கள் மாதிரியான நீர்நிலைகளைப் பராமரிக்கிறது, அரசு அலுவலகங்களுக்குத் தேவையான கட்டடங்களைக் கட்டுறது, கட்டடங்களைப் பராமரிக்கிறது மாதிரியான வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சாங்க. பத்து வருஷத்துக்கு முன்ன பொதுப் பணித்துறைக்குக் கீழ் ‘நீர்வள ஆதாரத் துறை’னு ஒரு துறையை உருவாக்கினாங்க. இந்த நீர்வள ஆதாரத் துறையில் திட்ட உருவாக்கம், வடிவமைப்புப் பிரிவு, நீர் ஆய்வு நிறுவனம்னு என ஏழு பிரிவுகள் இருக்கு. இப்போ நீர்வள ஆதாரத் துறையில், ‘தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு, ஆறுகள் புனரமைப்புக் கழகம்’னு ஓர் அமைப்பை உருவாக்கியிருக்காங்க.
இந்தக் கழகம்தான் தமிழ்நாட்டில் இருக்குற நீராதாரங்களைப் பாதுகாக்குறது, புதுத் திட்டங்களைச் செயல்படுத்தறது மாதிரியான வேலைகளை இனி செய்யும். இந்தக் கழகம், வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம்னு மத்த துறைகளோடு சேர்ந்து நீர்வள ஆதார பாதுகாப்பு, ஆறுகள் புனரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும். அணைக் கட்டுகள், நீர்த்தேக்கங்கள் பாதுகாப்பு நடவடிக்கை, ஏரி, குளங்கள், ஆறுகளின் நீர்வழி தடங்கள்ல இருக்குற ஆக்கிரமிப்புகளை அகற்றிப் புனரமைப்புச் செய்றது, வெள்ளம் வர்ற காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குறது மாதிரியான வேலைகளை இந்தக்கழகம்தான் இனிமே மேற்கொள்ளும். அடுத்த ரெண்டு வருஷங்கள்ல 6,000 கோடி ரூபாய் செலவுல பாசனத் திட்டங்களையும் புனரமைப்புத் திட்டப் பணிகளையும் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கு” என்றார், வாத்தியார்.
அந்தச் சமயத்தில், “மணி பதினொண்ணு ஆச்சு. களை எடுக்குறவங்களுக்கு டீ, வடை வாங்கித்தரணும். நான் போயிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார், ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.
வாத்தியார் சொன்ன கொசுறு:
200 ஏக்கர் பரப்பில் இயற்கை வனம்!
“சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்குப் பக்கத்துல இருக்குற ‘செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய’த்துல கால்நடைகளோட தேவைக்காகவும், பறவைகளை அதிகப்படுத்துறதுக்காகவும் 2 கோடி ரூபாய் செலவுல 200 ஏக்கர் பரப்புல இயற்கை வனம் அமைக்கிற வேலை நடந்துக்கிட்டுருக்கு. இந்தத்திட்டத்துல 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடப்போறாங்க.
அரப்பு, புரசு, நாவல், பலா, கொடுக்காப்புளி, புளி, தடாசு, சிசு, பூவரசு, வேங்கை, செஞ்சந்தனம், ஆச்சா, ஆத்தி, இலுப்பை, நீர்மருது, வாகை, தூங்கு, வெப்பாலைனு தீவனத்துக்குப் பயன்படக்கூடிய 32 வகை மரங்களை வளர்க்கப்போறாங்க. அதோட ஆலமரம், அரசமரம் மாதிரியான நாட்டு மரங்களையும் நிறைய வளர்க்கப்போறாங்க. அதனால, பலவகையான பறவைகள் இந்த வனத்துலேயே தங்கி இனப்பெருக்கம் செஞ்சு பெருக வாய்ப்பிருக்குனு சொல்றாங்க.”

மாதந்தோறும் தேனீ வளர்ப்புப் பயிற்சி!
ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்புக் குறித்த பயிற்சி நடந்து வருகிறது். ஒரு வேளை அன்று அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதையடுத்த வேலை நாளில் பயிற்சி நடைபெறும். தேனீக்களை இனம் காணுதல், பெட்டியில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் மேலாண்மை நுட்பங்கள், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்தசேர்க்கை மூலம் மகசூலை அதிகரிக்கும் முறைகள், தேனை பிரித்தெடுக்கும் முறைகள், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் மேலாண்மை... போன்றவை குறித்து வல்லுநர்கள் விளக்கம் அளிப்பார்கள். இதற்குக் கட்டணம் உண்டு. முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
தொடர்புக்கு, தொலைபேசி: 0422 6611214