மற்ற எபிசோடுகள்
Published:Updated:

‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!

‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!

மாத்தியோசி

ரு மழை நாளில்... உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். மறுநாள் காலையில் புதுடெல்லி செல்லும் ரயிலைப் பிடிக்க, அரக்க பறக்க ஓடினேன். ஆனாலும் புதுடெல்லிப் போற ரயிலைப்பிடிக்க முடியல. அடுத்த ரயிலைப் பிடிச்சு, அவசரமா போறதைவிட, மாநிலத்தோட தலைநகரான லக்னோ நகரத்துல கூடுதலா ஒரு நாளைப் பயனுள்ளதா கழிக்க நினைச்சேன். ‘லக்னோ’ங்கிற இந்தப் பெயர் நம்ம தமிழ்நாட்டு விவசாயிகளுக்குப் பழக்கமான பெயர்தான். லக்னோ-49 என்ற கொய்யா ரகம், இந்த ஊர்ல உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில இருந்து வெளியிடப்பட்டதுதான். இந்த ரகத்தின் உண்மையான பெயர். சர்தார்(sardar) எல்.49. ‘எல்’ என்ற குறியீடு லக்னோவைக் குறிக்குதுங்க. பெரும்பாலும் லக்னோ-49 என்று சொன்னாதான் சுலபமா புரியும். லக்னோ-47, 48 ரகங்களைக் காட்டிலும், இந்த வெள்ளைக் கொய்யா விளைச்சல் கொடுக்குறதுல கில்லாடி. ஒரு மரத்தில 300 முதல் 500 காய்கள் வரை காய்க்கும் தன்மை உண்டு. இந்த ரகம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் சாகுபடி செய்ய உகந்ததா இருக்கு. அதனால்தான், விவரம் தெரிந்த விவசாயிகள், ‘லக்னோ-49’ ரகத்தைச் சத்தமில்லாம சாகுபடி செய்றாங்க.

சரி, லக்னோ கதைக்கு வருவோம். இதமான சாரல் மழை பெய்துகிட்டே இருந்துச்சி. அடாதமழையிலையும் விடாமல் பூரி, சப்பாத்திகளைச் சுட்டுக்கொண்டிருந்தார்கள் மக்கள். சூடாகப் பூரியைச் சாப்பிட்டுவிட்டு, வாடகைக்கு ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு, அருகில் உள்ள கிராமத்துக்குப் புறப்பட்டேன். ஆட்டோ, கார் டிரைவர்களைவிட, குதிரை வண்டிக்காரர்களுக்குச் சுற்று வட்டார ஊர்களில் உள்ள தகவல்கள் அத்துபடி. அதுமட்டுமில்லீங்க, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலப் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் குதிரை வண்டிகள் நிற்பதையும், அதில் உற்சாகமாக ஏறிச் செல்லும் மனிதர்களையும் பார்க்கலாம். தமிழ்நாட்டிலும் கூட, முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஊர்தோறும் குதிரை வண்டிகள், இருந்துச்சி. காலப்போக்கில் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஆனா, பழநியில மட்டும் குதிரை வண்டிகள், இன்னும் பழைய நினைவுகளைச் சுமந்தபடி சுற்றி வருதுங்கங்கிறதை நினைத்தபடி குதிரை வண்டியில பயணத்தைத் தொடர்ந்தேன். வழியில், நெல், கோதுமை, மா, கொய்யா... என வழி நெடுகிலும் செழிப்பாக இருந்துச்சி. இடையில ஒரு தோட்டத்தில், செடி முருங்கை மரங்கள் ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்திருந்தாங்க. அந்தச் செடி முருங்கை மரங்களைப் பார்க்கும்போது, முருங்கைக் காய்க்கு வளர்ப்பதுபோலத் தெரியல. வட இந்தியர்களுக்கு முருங்கைக் கீரை சாப்பிடற பழக்கமும் கிடையாது. முருங்கைக்காய்கூட அவ்வளவா சாப்பிட மாட்டாங்களேனு யோசனை செய்தபடி குதிரை வண்டியை ஓரம்கட்டச் சொல்லிவிட்டு, தோட்டத்துக்குள்ள போனோம். செடிமுருங்கைத் தோட்டத்தை ஒட்டியபடி ஒரு ஆட்டுக்கொட்டகை இருந்துச்சி. மொத்தம் பத்து ஏக்கர் நிலம் இருக்கும். அதில் பாதியில்தான், செடி முருங்கைச் சாகுபடி. மீதி நிலத்தில் மா சாகுபடி.

‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!

தோட்டத்தில இருந்த பணியாளர்கள் கிட்ட மதராஸிலிருந்து (சென்னை என்று சொன்னால், வட இந்தியர்களுக்குச் சீக்கிரம் புரியாது). வந்திருக்கிறேன்னு அறிமுகப் படுத்திக்கிடேன். அதில ஒரு ஆள், ராமேஸ்வரம் வரும்போது, மதராஸ் வந்ததாகவும், ‘இட்லி, வடை, சாம்பார்... ரொம்பச் சுவையாக இருந்துச்சி’னு பான்பராக் துப்பிவிட்டு, சிரித்தபடி  சொன்னாரு. பேசிக்கொண்டே பண்ணையைப் பார்த்தேன். அப்போதான், தெரிஞ்சது, செடிமுருங்கை இலைகளைப் பறிச்சி வந்து, ஆடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கிறதைக் கவனிச்சேன். வெள்ளாடுகளுக்கு முருங்கை இலைகளைத் தீவனமா கொடுக்குற காட்சியை, முதல் முறையாக அங்கதான் பார்த்தேன். அந்த ஆடுகள பார்க்க பார்க்க ஆசையா இருந்துச்சிங்க. சும்மா, ஓட்டப்பந்தய வீரர் கணக்கா, ஒவ்வொரு ஆடும் முறுக்கேறிய உடலோடு துள்ளி விளையாடிக் கிட்டிருந்துச்சிங்க.

அந்த இட்லி பிரியரிடம், செடிமுருங்கை இலைகளை ஆடுகளுக்குக் கொடுக்குறது பத்திப் பேச்சுக் கொடுத்தேன். ‘‘ஜி... எங்கள் முதலாளி, லக்னோவில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். அவரது உறவினர் ஒருவர் பீகாரில், முருங்கா (இந்தி வார்த்தை) இலைகளைக் கொடுத்து, ஆடுகள் வளர்த்து, அந்த ஆட்டு இறைச்சியை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறார். அதைப் பார்த்த எங்கள் முதலாளியும், அதே முறையில் ஆடு வளர்க்கிறார்.

வெறும் முருங்கை இலையை மட்டும் கொடுப்பதில்லை. மற்ற தீவனங்களையும் கலந்து கொடுக்கிறோம். என் அனுபவத்தில் இது புதுமையாகத்தான் உள்ளது. ஆடுகள் ஆரோக்கியமாகவும், சீக்கிரமாகவும் வளர்ந்து வளர்ந்து வருகின்றன. இதற்கு மேல், எனக்கு எதுவும் தெரியாது ஜி...’’ என்று சொல்லிவிட்டு, செடிமுருங்கை இலைகளைப் பறிக்கச் சென்றுவிட்டார்.

‘‘முருங்கைக் கீரை இரும்பு, கால்சியம்... உள்ளிட்ட சத்துகள் நிரம்பிய கீரை. இதை ஆடுகளுக்குக் கொடுக்கும்போது, அந்த ஆட்டு இறைச்சியில் ஏராளமான மருத்துவக் குணங்கள் இருக்கும். இந்தச் செடி முருங்கை இலை ஆட்டு இறைச்சியை வட மாநிலங்களிலிருந்து ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ‘ஆர்கானிக் ஆட்டு இறைச்சி’, ‘கிரீன் ஆட்டு இறைச்சி’னு விதவிதமான பெயரில் ஏற்றுமதி செய்து வருகிறார்கள். அந்தப் பீகார்காரர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துல இருந்துதான் பி.கே.எம் (பெரியகுளம்) செடி முருங்கை விதைகளை விதைச்சி, ஆட்டுப் பண்ணைத் தொடங்கினார்...’’ என்ற தகவலை, மூத்த விவசாய விஞ்ஞானி சொன்னபோது, பெருமையாவும், அதே சமயம் கொஞ்சம் வருத்தமாவும் இருந்துச்சிங்க.

நம்ம ஆள்கள் இப்போதுதான், முருங்கை இலைகளை ஏற்றுமதி செய்யும் வேலைகளில் இறங்கியிருக்காங்க. ஆனா, வடநாட்டில உள்ளவங்க, நம்ம ஊர் செடி முருங்கை இலையை, ஆடுகளுக்குக் கொடுத்து மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வித்தையைக் கத்து வைச்சிக்கிட்டு முன்னேறிக்கிட்டிருக்காங்க. நல்லது எங்கிருந்தாலும் நாமும் கத்துக்கிலாம்தானே..!

‘‘சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும்

கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”

- பாரதியார்

மண்புழு மன்னாரு,  ஓவியம்: வேலு