மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!

மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!

ஓவியம்: வேல்

வயலில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்து கொண்டிருந்ததால், அதிகாலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்டார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வெயில் ஏறத்தொடங்கும் வேளையில், ‘காய்கறி’ கண்ணம்மாவும் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் பேசிக்கொண்டே வந்து சேர்ந்தனர்.

அவர்களைப் பார்த்து “என்னய்யா ஆளையும் காணோம், பேரையும் காணோம். எங்க போயிருந்தீரு” என்று கேட்டுக்கொண்டே மேலேறி வந்தார், ஏரோட்டி.

“தீபாவளிக்காகப் பேரப்பிள்ளைகள் எல்லாம் வந்துருந்துச்சுக. ஏதோ பண்டிகை, விசேஷம்னாத்தான் பேரப்பிள்ளைகள் வர்றாங்க. மூணு நாள் அதுகளோட விளையாடவே நேரம் சரியா இருந்துச்சுய்யா. பட்டாசு, பலகாரம்னு வீடே களைகட்டி இருந்துச்சு. தீபாவளிக்கு நீ என்னய்யா பண்ணுன?” என்றார்.

“விவசாயிகளுக்கு என்னய்யா தீபாவளி. நமக்கு ஒரே பண்டிகை பொங்கல்தான். சின்னப் பிள்ளைகளுக்குத் தான் தீபாவளி கொண்டாட்டமெல்லாம்” என்று சொல்லியபடியே அவர்களோடு வந்தமர்ந்தார், ஏரோட்டி. காய்கறி, தான் கொண்டு வந்திருந்த முறுக்கு, அதிரசம் ஆகியவற்றை எடுத்து இருவருக்கும் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.

மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!

“பிரதமர் மோடியோட ‘விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குற திட்டம்’ மூலமா தமிழ்நாட்டுல விளையுற பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்றதுக்குத் தோட்டக்கலை முயற்சி எடுத்துட்டுருக்கு.தமிழ்நாட்டுல மா, வாழை, பப்பாளி, சப்போட்டா, அன்னாசி, திராட்சை, மாதுளை, கொய்யா, நெல்லிக்காய், எலுமிச்சைனு கிட்டத்தட்ட வருஷத்துக்கு 60 லட்சம் டன் பழங்கள் உற்பத்தியாகுதாம். இதுல ஒரு கணிசமான அளவை வெளிநாடுகளுக்கு அனுப்பப் போறாங்களாம். அப்படி வெளிநாடுகளுக்கு அனுப்ப ஆரம்பிச்சா விவசாயிகளோட லாபம் அதிகரிக்கும்னு சொல்றாங்க. தோட்டக்கலைத்துறையும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகப் பிரிவும் சேர்ந்து ஏற்றுமதிக்கான முயற்சிகளை எடுத்துட்டுருக்காங்க” என்றார், வாத்தியார்.

அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்த ஏரோட்டி, “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் கடலூர், திருச்சி, வேலுார் மாவட்டங்கள்ல கரும்பு ஆராய்ச்சி மையங்கள் இயங்கிட்டிருக்கு. இதுல, கடலுார் ஆராய்ச்சி மையத்துல இருந்து ‘சி.ஓ.சி-25’, ‘சி.ஓ.ஜி- 6’னு ரெண்டு புதுக் கரும்பு ரகங்களை வெளியிட்டுருக்காங்க. சி.ஓ.சி-25 ரகம், எல்லாப் பகுதிக்கும் ஏற்றது. அதிக மகசூல் கொடுக்குற ரகம். சி.ஓ.ஜி-6 ரகம், சோடியம், உப்புத்தன்மை அதிகம் இருக்குற பகுதிகள்லயும், கழிவு நீர் அதிகம் கலக்குற பகுதிகளுக்கும் ஏற்ற ரகம். பத்து மாசத்துல இருந்து பதினொரு மாசத்துல அறுவடைக்கு வந்துடும். ஒரு ஹெக்டேருக்கு 140 டன் வரை மகசூல் கிடைக்கும். சர்க்கரைப் பிழிதிறனும் இந்த ரகத்துக்கு அதிகம்.

திருச்சி மாவட்டம், சிறுகமணியில் இருக்குற ஆராய்ச்சி மையத்துல ‘சி.ஓ.எஸ்.ஐ-10012’, ‘சி.ஓ.எஸ்.ஐ-10027’ங்குற ரெண்டு ரகங்கள் ஆராய்ச்சியில் இருக்கு. இந்த ரெண்டு ரகங்களும் எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்ற ரகங்கள் வறட்சிப்பகுதிகள்லயும், உவர்ப்புத் தன்மை அதிகம் உள்ள நிலங்கள்லயும் நல்லா வளரும். அதேமாதிரி, வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆராய்ச்சி மையத்துல, ‘ஜி-08019’, ‘ஜி-08041’ங்குற ரெண்டு ரகங்கள் ஆராய்ச்சியில் இருக்கு. இது ரெண்டும் அதிக மகசூல் கொடுக்குற ரகங்களாம். ஒரு ஹெக்டேருக்கு 145 டன் வரை மகசூல் கிடைக்குமாம். அதோட, சிவப்பு அழுகல் நோய், தண்டு அழுகல் நோய், தண்டுத் துளைப்பான் நோய் எல்லாத்தையும் தாங்கி வளருமாம்” என்றார்.

அடுத்தச் செய்திக்குத்தாவிய வாத்தியார், “தமிழ்நாட்டுல எல்லா மாவட்டங்கள்லயும் கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த போறாங்க. இந்தத் திட்டம் மூலமா பயனாளிகள் ஒவ்வொருத்தருக்கும் நூறு சதவிகித மானியத்துல 50 அசில் ரகக் கோழிக்குஞ்சுகளையும், கோழிக் கொடாப்புகளையும் கொடுக்கப் போறாங்களாம்.

இந்தத்திட்டத்துல பெண்கள் மட்டும்தான் பயனடைய முடியும். கிராமப்பகுதிகள்ல நிலையான முகவரியில் வசிக்கிறவரா இருக்கணும். ஏற்கெனவே இலவச கறவைப்பசு, வெள்ளாடுகள் திட்டத்துல பயனடைஞ்சுருக்கக் கூடாது. விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை உண்டு.

இந்தத்திட்டத்துல 30 சதவிகித அளவுக்குத் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடும் உண்டு. இந்தத் திட்டத்துல சேர விரும்புறவங்க, பக்கத்துல இருக்குற கால்நடை மருந்தகக் கால்நடை உதவி மருத்துவர்கிட்ட விண்ணப்பிக்கலாம்” என்றார். “ஆமாய்யா நானும் கேள்விப்பட்டேன். இதே மாதிரி மீன் வளர்ப்புக்கும் ஒரு திட்டத்தை அறிவிச்சுருக்காங்கய்யா” என்ற ஏரோட்டி அது குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“மத்திய அரசோட ‘மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்ட’த்துல மீன் வளர்க்க மானியத்திட்டத்தை அறிவிச்சுருக்காங்க. இந்தத் திட்டத்துல, மீன் வளர்ப்புக்கான புதுக் குளங்கள், குட்டைகள் அமைக்க நாற்பது சதவிகிதம் மானியம் கொடுக்குறாங்க. அதாவது இரண்டரை ஏக்கர் பரப்புல குளம் அமைக்க, இரண்டு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும். ஏற்கெனவே இருக்குற குளம், குட்டைகளைச் சீரமைக்கறதுக்கும் நாற்பது சதவிகிதம் மானியம் உண்டு.

இரண்டரை ஏக்கர் பரப்புல உள்ள குளத்தைச் சீரமைக்க ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும். அதோட, மீன்கள், தீவனம் எல்லாத்துக்கும் மானியம் உண்டு. இந்தத் திட்டத்துல பயனடைய விரும்புறவங்க அந்தந்த மாவட்டத்துல இருக்குற மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துல விண்ணப்பிக்கணும். முன்னுரிமை தகுதி அடிப்படையில பயனாளிகளைத் தேர்வு செய்வாங்களாம்” என்றார். அந்த நேரத்தில் சடசடவென மழை பெய்யத்தொடங்க அனைவரும் கொட்டகைக்கு எழுந்து ஓடினர். அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

உருளைக்கிழங்கைத் தரம்பிரிக்கப் புதிய தொழில்நுட்பம்!

உருளைக்கிழங்கைத் தரம்பிரிக்க ‘ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்’ மற்றும் ‘மெஷின் லேர்னிங்’ என்ற தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது, ‘அக்ரிக்ஸ்’ (agricx) என்ற ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம். ஆக்ரா, குஜராத், மொஹாலி, கர்நாடகா, டெல்லி ஆகிய இடங்களில் இந்நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவில் விளையும் உருளைக்கிழங்குகள், உலக அளவில் பல நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்குத் தேவைப்படும் தரத்தில் உருளைக்கிழங்குகளைக் கொள்முதல் செய்கின்றன.

மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!

ஆனால், பெரும்பாலான விவசாயிகள், வியாபாரிகள் உருளைக்கிழங்குகளைத் தரம் பிரிக்காமல் விற்பனை செய்வதால் சரியான விலை கிடைப்பதில்லை. இந்நிலையில், அக்ரிக்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் 100 குளிர்பதன நிலையங்களை அமைத்துள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் உருளைக்கிழங்குகளைக் கொள்முதல் செய்து தரம்பிரித்துக் குளிர்பதன நிலையங்களில் சேமித்து வைக்கிறது. இதன் மூலம், ஏற்றுமதியாளர்கள் இந்நிறுவனத்திடம் தரமான உருளைக்கிழங்குகளை வாங்க முடியும். மேலும் உருளைக்கிழங்கு தேவைப்படும் நிறுவனங்கள் தேவைப்படும் தரத்தில் உருளைக்கிழங்குகளைக் கொள்முதல் செய்ய முடியும்.

தேங்காய், கொப்பரை விலை அதிகரிக்காது!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம்... தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவற்றுக்கான விலை நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!

அந்த அறிக்கையில், “கடந்த 18 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் பெருந்துறைக் கூட்டுறவு விற்பனை மையம் ஆகியவற்றில் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவற்றின் விலை குறித்த சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.

ஆய்வின் முடிவில் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் தரமான தேங்காய்க்குப் பண்ணை விலையாக 14 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கிடைக்கும். நல்ல தரமான கொப்பரைக்கு ஒரு கிலோவுக்கு 85 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விலை கிடைக்கும் எனத் தெரிய வருகிறது. அதனால், இந்த விலை விவரத்தை அடிப்படையாக வைத்து முடிவெடுக்கப் பரிந்துரைக்கப் படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துரை.நாகராஜன், படம்: தி.விஜய்