மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!

திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!
பிரீமியம் ஸ்டோரி
News
திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!

மாத்தியோசி

‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா’னு, எழும்பூர் உணவகத்துல இருந்த தொலைக்காட்சியில பாடல் ஓடிக் கொண்டிருந்திச்சி. திரைப்படம் சம்பந்தமா ஆராய்ச்சி செய்ற நண்பர் ஒருத்தர், சுவையான தகவல்கள் பத்தி பேச, மாலை நேர சிற்றுண்டிக்கு அந்த அருமையான உணவகத்துக்கு அழைச்சிருந்தாரு. அந்த நண்பருக்கு உலகச் சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை அத்தனை தகவலும் அத்துபடி.

‘‘திரைப்படத்தை வெறும் பொழுதுப்போக்கா பார்க்காதீங்க. அதுல வரலாறு, பண்பாடு, இலக்கியம், அரசியல்... எல்லாம் கலந்திருக்கு’’னு திரைப்படத்துறையை விமர்சனம் செய்பவர்கள்கிட்ட விளக்கம் சொல்லுவாரு. நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்போதைக்குத் திரைப்படம்தான் உலகின் பெரிய காட்சி ஊடகம்; வலுவான ஊடகம். இப்போ ஒளிபரப்பான முள்ளும் மலரும் படத்தோட, நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாட்டுலகூட... பலவிதமான உணவியல், ஊட்டச்சத்துவியல் தகவல்கள் விரவி கிடக்குது. 1978-ம் ஆண்டு, இந்தப் படம் வெளிவந்த சமயம், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில இருந்த உணவுப் பழக்கத்தைத் தெளிவா படம் புடிச்சிக் காட்டுது. சரியா, 40 வருஷத்துக்கு முன்ன வீடுகள்ல தினமும் நெல்லுச்சோறு கிடையாது.

அமாவாசை, நல்ல நாள், திருவிழா, உறவினர்கள் வந்தால் மட்டும்தான், வீட்டுல நெல்லுச்சோறு சமைப்பாங்க. மத்த நாள்கள்ல கம்பு, சோளம், கேழ்வரகு மூலமா செய்த கூழ், களி, தோசைனு சத்தான சிறுதானிய உணவுகளைத்தான் சாப்பிட்டாங்க. அதனாலத்தான், இந்தப் படத்துல, நித்தம் நித்தம் நெல்லுச்சோறு சாப்பிடலாம்னு கதாநாயகி ஆசைப்பட்டுப் பாடுற மாதிரி, கங்கை அமரன் பாடலை எழுதியிருக்காரு’’னு அந்த நண்பர் சொல்லி முடிக்கவும்,

என் பங்குக்குச் சினிமா சம்பந்தமான தகவலைச் சொன்னேன். சமீபத்துல ‘சர்கார்’ திரைப்படத்துலகூட, நாட்டுல நடக்குறதைக் காட்சிப்படுத்தவும்தான், தமிழ்நாடு முழுக்கப் பரபரப்பானது வரலாறு.

ஒருமுறை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், திரைப்படத்துக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உள்ளத் தொடர்பு பத்தி அருமையா சொல்லிருந்தாரு. ‘‘நாட்டில் உணவு பஞ்சம் இருந்த சமயத்தில், தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு காட்சியில் விதவிதமான உணவு வகைகளைச் சாப்பிடும் காட்சி கட்டாயம் இடம்பெறும். ஆக, மனிதர்கள் எதிர்ப்பார்ப்பைத் திரையில் காட்சிப்படுத்தி ரசித்தார்கள்’’ என்று எழுதியிருந்தாரு.

‘கல்யாண சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம்’ங்கிற ‘மாயபஜார்’ திரைப்படம்கூட உணவு பஞ்சம் இருந்த 1957-ம் ஆண்டு வெளிவந்திருக்கு. இந்தச் சாப்பாட்டு பாடல் காட்சியை, அந்தக் காலத்துல ரசிச்சி ரசிச்சிப் பார்த்த கதையைப் பலபேரு சொல்லியிருக்காங்கனு சொன்னேன்.

திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!

‘‘உண்மைதான், இப்போ வரக்கூடிய புதிய திரைப்படங்களை நல்லா கவனிச்சிப்பார்த்தா, ஒரு விஷயம் நல்லாத் தெரியும். பெரும்பாலான படங்கள்ல ‘டாஸ்மாக்’ மதுபானக்கடை உள்ள காட்சி இருக்கு’’னு தன்னோட ஆராய்ச்சி அனுபவத்தை உதாரணத்தோடு சொன்ன அந்த நண்பர், அடுத்த தகவலை ‘‘நீங்க சொல்லுங்க’’ என்பதுபோலப் பார்த்துவிட்டு, செட் தோசையையும் வடகறியையும் சுவைக்க ஆரம்பிச்சாரு.

அந்தக் காலத்துல, நடந்த முக்கியமான சம்பவத்தைப் சொல்ல ஆரம்பிச்சேன்... ஒரு முறை சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவுக்கு, பாட்டு எழுத கவிஞர் மருதகாசி போயிருக்காரு. அந்தக் காலத்துல, திரைப்படங்கள் எடுக்கிறதுல, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்தான் முன்னிலையில இருந்திருக்கு. அதனால, நடிகர், நடிகை, கவிஞர்னு எல்லாக் கலைஞர்களும் சேலம் நகர்ல வலம் வந்த நேரம் அது. பாட்டு எழுதறதுக்குப் போன கவிஞர் மருதகாசி சில நாள்கள், சேலத்துல தங்கியிருக்காரு. தினமும் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவுலதான் சாப்பாடு. படத்தையே பிரமாதமா எடுத்தவங்களுக்குச் சாப்பாடு எப்படிப் போடணும்னு தெரியாதா என்ன? தினமும் திருப்தியான சாப்பாடு போட்டிருக்காங்க.

கவிஞர், சேலத்துல இவ்வளவு சுவையா சாப்பாடு கிடைக்கும்னு நினைக்கல. ஏன்னா இவர் ஒருங்கிணைந்த பழைய திருச்சி மாவட்டத்துல இருந்த மேலகுடிக்காடு பகுதியைச் சேர்ந்தவரு. அந்தப் பகுதில நெல் விளைஞ்சாலும் இந்தச் சுவையை அனுபவிச்சதில்ல. இப்படிப்பட்ட நிலையில ஒவ்வொரு வேளையும் இலையில சோறும் வைக்கும்போது, அதோட மணமும் சுவையும் கவிஞரைச் சொக்க வைச்சிருக்கு. ஒருநாள் சமையல்காரரைக் கூப்பிட்டு, ‘‘சோத்துல என்ன மந்திரம் செய்யுறீங்க, இவ்வளவு சுவையா இருக்கே... இதுக்கு முன்னாடி, இதுபோல நான் சாப்பிட்டதே இல்லை’’னு புகழ்ந்து சொல்லியிருக்காரு.

‘‘ஐயா, இந்தச் சோறு, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா அரிசில சமைச்சதுங்க. அதனால, கூட ஒரு வாய் சாப்பிட தோணும்னு சமையல்காரர் சொல்லியிருக்காரு. இந்தச் சம்பவம் கவிஞரோட மனசுல பசுமரத்தாணி போலப் பதிஞ்சிப்போச்சி.

1957-ம் வருஷம், ‘மக்களைப் பெற்ற மகராசி’ திரைப்படத்துக்குப் பாட்டு எழுத கவிஞர் மருதகாசிக்கு வாய்ப்பு வருது. ஒவ்வொரு ஊரு சிறப்பையும் சொல்லி எழுதச்சொல்றாங்க... அப்பதான்,

‘‘மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக் கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி வெத வெதச்சி
நாத்தப் பறிச்சி நட்டுப் போடு சின்னக் கண்ணு’
னு எழுதியிருப்பாரு. அந்தக் காலத்துல மட்டுமல்ல, எந்தக் காலத்துக்கும் நல்ல தகவல் சொல்ற பாடல் இது. ‘ஆத்தூர் கிச்சடி சம்பா’னு பாட்டுல வந்தாலும், கிச்சிலிச் சம்பான்னுதான், மக்கள் பேச்சு வழக்குல சொல்றாங்க. ஆத்தூர் கிச்சிலிச் சம்பா சோற்றை, ஒருமுறை சாப்பிட்டா வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு, சோறோட சுவை நாக்குல ஒட்டிக்கிட்டே இருக்கும். ஏறத்தாழ அழிவின் விளிம்புல இருந்த, இந்தப் பாரம்பர்ய நெல் ரகத்தை மீண்டும் மக்கள் மத்தியில பரவலாக்கின புண்ணியம் பசுமை விகடனைத்தான் சேரும்.

ஏன்னா, 2007-ம் வருஷம் பசுமை விகடன் இதழ்ல ‘மணப்பாறை மாடு கட்டி பாட்டு’ல வர்ற ஊர்களோட சிறப்புகளைத் தொடர் கட்டுரையா வெளிவந்துச்சி. அப்போ ஆத்தூர் கிச்சிலிச் சம்பா கட்டுரைக்கான தகவலைத் தேடும்போதுதான், ஒரு உண்மை தெரிஞ்சது, கடல்லயே மீன் இல்லைன்னு சொன்ன மாதிரி. ஆத்தூர் பகுதியிலேயே, கிச்சிலிச் சம்பா நெல் ரகம் கிடைக்கல... அப்புறம் தேடிப்புடிச்சி, நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில பாலாஜி சங்கர்ங்கிற விவசாயிகிட்ட, அந்த நெல் விதை இருக்குன்னு விரிவான தகவல் வெளிவந்துச்சி.

திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!

‘இந்த ரகத்த நாற்று நட்ட பிறகு அதைப் பத்தி பெரிசா கவலைப்படவேண்டியதில்லை. எவ்வளவுதான் தண்ணி நின்னாலும் பயிர் அழுகிப்போகாது. அதேபோலத் தொடர்ந்து ஒரு மாசத்துக்குத் தண்ணியில்லாம காய்ஞ்சாலும் கவலைப்பட வேண்டியதில்லை. இத இயற்கை முறையில சாகுபடி செய்தா, ஏக்கருக்கு 25 மூட்டை மகசூல் கிடைக்கும்’ங்கிறது விவசாயிகளோட அனுபவம்.

இப்போ, ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா பிரியாணி’ அடைமொழிப்போட்டு, செல்போன் ஆப்ஸ்ல சோறு விற்பனை செய்யறாங்கனு சொல்லி முடிக்கவும், நண்பர் செட் தோசை சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருந்துச்சி. சூடான குடகு மலைக்காபியைக் குடிச்சிட்டு, ‘‘என்னோட ஆராய்ச்சிக்கு, முக்கியமான தகவல் கிடைச்சிருக்கு’’னு நெகிழ்ச்சி அடைஞ்சாரு, அந்த நண்பர்.

- மண்புழு மன்னாரு, ஓவியம்: வேலு