மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!

மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!

ஓவியம்: வேல்

‘புயல்’என வானிலை மையம் எச்சரித்திருந்ததால், வாத்தியார் வெள்ளைச்சாமியும், காய்கறி கண்ணமாவும் ஏரோட்டி ஏகாம்பரத்துடன் முன்கூட்டியே தோட்டத்துக்கு வந்துவிட்டிருந்தனர்.

மூவரும் அமர்ந்து அறுவடை செய்து வைத்திருந்த வேர்க்கடலையை சுவைக்க ஆரம்பித்தனர். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார், வாத்தியார்.

“நமக்கு ஆதார் நம்பர் கொடுத்துருக்கிற மாதிரி, ஆந்திர மாநிலத்துல ஒவ்வொரு விவசாய நிலத்துக்கும் ‘புதார்’னு ஒரு அடையாள அட்டை கொடுத்துட்டுருக்காங்க. அதுக்காகப் புதார்ங்கிற இணையதளத்தையும் துவங்கியிருக்காங்க. இந்தத் திட்டத்துப்படி ஆந்திராவுல இருக்குற விவசாய நிலம், வீட்டுமனைனு எல்லா நிலங்களுக்கும் 11 இலக்க அடையாள எண் கொடுத்து அடையாள அட்டை கொடுக்கப்போறாங்க. அந்த எண்ணைப் பயன்படுத்தி, புதார் இணையதளத்துல, மக்கள் தங்களோட நிலம் தொடர்பான ஆவணங்களை எப்போ வேணாலும் சரிபார்த்துக்க முடியும். ஒரு நிலத்தை விற்பனை செய்யும்போதே இந்த இணையதளத்துலயும் அது பத்தின தகவல்களைப் புதுப்பிச்சுடுவாங்க. அதனால, பட்டா மாறுதல்ல மோசடி எல்லாம் செய்ய முடியாது. ஆந்திரா முழுவதும் இருக்குற 3,57,00,000 நில ஆவணங்களுக்கு, புதார் அடையாள அட்டை வழங்கப்போறாங்களாம்” என்றார்.

மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!

“நல்ல விஷயமா இருக்கே” என்ற ஏரோட்டி அடுத்தச் செய்தியை ஆரம்பித்தார்.  “சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்குப் பக்கத்துல இருக்குற எஸ்.புதுார்ங்கிற ஊர்ல இருக்குற கண்மாய்கள்ல ஏகப்பட்ட மலைப்பாம்புகள் அலையுதாம். இந்தப்பாம்புகள் கண்மாயில மேய்ச்சலுக்கு வர்ற ஆடுகளைப் பிடிச்சு முழுங்கிடுதாம். இதேமாதிரி ராத்திரி நேரத்துல இரை தேடி கிராமத்துக்குள்ள வந்து ஆடு, கோழிகளைப் பிடிச்சு சாப்பிடுறதால விவசாயிகள் பயந்து போய் இருக்குறாங்களாம்” என்றார், ஏரோட்டி.

“ஆமாய்யா, இதே மாதிரி கோயம்புத்தூர் பேரூர் பகுதியில சிறுத்தைகள் வந்து ஆடுகளைப் பிடிச்சுட்டுப் போயிடுதுனு ஒரு சேதி சொன்னாங்கய்யா” என்ற காய்கறித் தொடர்ந்தார்.

“கோயம்புத்துர் மாவட்டம், பேரூர் பக்கத்துல மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்துல இருக்குற மோளப்பாளையம், வடிவேலம்பாளையம் கிராமங்கள்ல அடிக்கடி சிறுத்தைகள் வருதாம். மோளப்பாளையம் கிராமத்துல லட்சுமணன்ங்கிறவருக்குச் சொந்தமான நாலு ஆடுகளைச் சிறுத்தைகள் தாக்கினதுல நாலுமே செத்துப்போச்சாம். அதே மாதிரி, அய்யாச்சாமிங்கிறவரோட பட்டிக்குள்ள ரெண்டு சிறுத்தைகள் புகுந்து ஆடுகளை வேட்டையாட ஆரம்பிச்சதுல ஆடுகள் பட்டியை உடைச்சுக்கிட்டு ஊருக்குள்ள ஓடிடுச்சாம். அப்படியும் மூணு ஆடுகளைச் சிறுத்தைகள் கொன்னு சாப்பிட்டுடுச்சாம்.

இதே மாதிரி வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன்ங்கிறவரோட ஆடுகளையும் சிறுத்தைகள் கடிச்சுடுச்சாம். பக்கத்துல இருந்தவங்க டார்ச் லைட் அடிச்சு விரட்டவும் சிறுத்தைகள் ஓடிப்போயிடுச்சாம். ஆனாலும் ஆடுகளைக் காப்பாத்த முடியலையாம். அதேபோல ஊருக்குள்ள இருக்குற நாய்களையும் சிறுத்தைகள் பிடிச்சுச் சாப்பிட்டுடுதாம். இதனால, மக்கள் வீட்டைவிட்டு வெளிய வரவே பயப்படுறாங்களாம். இந்தச் சிறுத்தைகளைக் காட்டுக்குள்ள விரட்டினாத்தான் நிம்மதியா இருக்க முடியும்னு விவசாயிகள் சொல்றாங்க” என்றார், காய்கறி.

அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்த வாத்தியார், “வீட்டுல அடுப்பெரிக்கப் பயன்படுத்துற தேங்காய்ச் சிரட்டைக்கு இப்போ மவுசு அதிகமாயிட்டே வருது. தேங்காய்ச் சிரட்டையில இருந்து ஐஸ்கிரீம் கப், கலைப்பொருள்கள்னு தயாரிக்கிறாங்க. சிரட்டையை எரிச்சுக் கிடைக்கிற கரி... பேட்டரி தயாரிப்பு, வெடி மருந்து தயாரிப்புல மூலப்பொருளாகப் பயன்படுது. இதுல இருந்து ‘ஆக்டிவேட்டட் கார்பன்’ தயாரிக்கிறாங்க. தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரங்கள், குளிர்சாதனப்பெட்டிகள்ல ஆக்டிவேட்டட் கார்பன் அதிகமாகப் பயன்படுது. தமிழ்நாட்டுல தயாரிக்கப்படுற ஆக்டிவேட்டட் கார்பன்... வடகொரியா, சீனா, அரேபியா, கனடா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்னு நிறைய நாடுகளுக்கு ஏற்றுமதியாகுது. கோயம்புத்தூர் பகுதியில இருந்துதான் அதிகம் ஏற்றுமதியாகுது. பொள்ளாச்சி, கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்கள்ல இருந்து சிரட்டையைக் கொள்முதல் செய்றாங்க. ஒரு டன் தேங்காய்ச் சிரட்டை 9,000 ரூபாய்ல இருந்து 15,000 ரூபாய் வரை விற்பனையாகுது. கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள்ல மட்டும் சிரட்டை மூலமா தினமும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்குதாம்” என்றார்.

அந்த நேரத்தில், புயல் காற்றும் மழையும் உக்கிரமடைந்துச் சுற்றிச்சுழன்று அடித்தது. கொட்டகைகள் எல்லாம் காற்றில் ஆடத்துவங்க மூவரும் பாதுகாப்புக்காக வைப்பறைக்குச் சென்றனர். அத்தோடு அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

புதிய துணைவேந்தர்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக இருந்த முனைவர் ராமசாமியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, கடந்த நவம்பர் 16-ம் தேதி, புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்றிருக்கிறார், முனைவர் நீ.குமார். இவர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 13-வது துணைவேந்தர்.

மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், தோட்டக்கலையில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். தனது கல்லூரிக்காலத்தில் 5 தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார். 36 ஆண்டுகளாக வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியிருக்கிறார், குமார். கோயம்புத்தூர் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் எழுதியுள்ள மூன்று தோட்டக்கலைப் பாடநூல்கள், மத்திய அரசின் தேர்வாணையக்குழுவினால் வழிகாட்டி நூலாகப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

இந்த இதழில் ‘ஏன்... ஏன்? தெரிவோம்...தெளிவோம்!’ தொடர் இடம்பெறவில்லை.