
மாத்தியோசிஓவியம்: வேலு
பரபரப்பான ஒரு காலை நேரத்துல, பத்திரிகை தகவல் அலுவலகத்திலிருந்து (Press Information Bureau) ‘‘நவம்பர் 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மலிவான இயற்கை எரிவாயு திட்டத்தை அறிவிக்கிறார். அது சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு, மாலை 4 மணிக்கு நடக்கவுள்ளது. கட்டாயம் நீங்கள் வர வேண்டும்’’னு அழைப்பு வந்துச்சி. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையெல்லாம் நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டு இருக்கிற இந்த நேரத்துல, அரசாங்கம் இயற்கை எரிவாயு பக்கம் திரும்பியிருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டு, புறப்பட்டுப் போனேன்.
நட்சத்திர ஹோட்டல்ல நடந்த இந்த நிகழ்ச்சிக்குப் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை என்னவோ குறைவாத்தான் இருந்துச்சி. வழக்கமா, இந்த மாதிரி நல்ல விஷயங்களுக்குக் கூட்டம் குறைவாத்தான் இருக்கும். நிகழ்ச்சி ஆரம்பிச்சவுடனே, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்களைக் கொட்ட ஆரம்பிச்சாரு.
‘‘இவ்வளவு நாள்களா, நம்ம வீடு தேடி கேஸ் சிலிண்டரைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இனிமேல், தண்ணீர் இணைப்பு மாதிரி, வீட்டுக்கு வீடு கேஸ் லைன் பைப் இருக்கும். அந்தப் பைப்பை அடுப்பில் இணைத்து, சமையல் செய்யலாம். அதாவது, அழுத்தமேற்றப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed Natural Gas-CNG) அதிக அளவில், வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவது, குழாயில் செலுத்தப்படும் இயற்கை எரிவாயு (Piped Natural Gas-PNG) வீடுகளில் பயன்படுத்துவதாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த இயற்கை எரிவாயு எதிர்காலத்தில் பெரிய வரவேற்பைப் பெறும்.

பெட்ரோலுடன் ஒப்பிடும்போது 60 சதவிகிதமும் டீசலுடன் ஒப்பிடும்போது 45 சதவிகிதமும் இயற்கை எரிவாயு மலிவானதாகும். அதோபோல, எல்.பி.ஜி சிலிண்டருடன் ஒப்பிடும்போது, பாதிவிலைதான். ஒரு ஆட்டோ உரிமையாளர் பெட்ரோலிலிருந்து, இயற்கை எரிவாயுக்கு மாறுவதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.7000 சேமிக்க முடியும். இயற்கை எரிவாயு வழங்கும் பணிக்கு, தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில், அதானி கேஸ்... போன்ற நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த இயற்கை எரிவாயுவை, இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள்... என அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும், சிறிய மாற்றம் செய்து பயன்படுத்தலாம். இனி, தயாரிக்கப்படும் வாகனங்கள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும்’’னு அந்த உயர் அதிகாரி, விளக்கமாகச் சொன்னாரு.
ஆபீஸர், நீங்க இயற்கை எரிவாயு, இயற்கை எரிவாயுன்னு சொல்லும்போது, அது மீத்தேன்தான்னு தெளிவா தெரியுது. ஆனா, இந்த மீத்தேன் வாயுவை, எங்க இருந்து எடுக்கப்போறீங்கன்னு கேட்டேன்.
‘‘தற்போது, வெளிநாட்டிலிருந்து கப்பல் மூலமாக, மீத்தேன் வாயுவைக் கொண்டு வந்து, நாடு முழுக்க வழங்கவுள்ளோம்’’னு பதில் சொன்னாரு.
எனக்கு மீண்டும் கேள்வி எழுப்ப மனசு வரல. ஏன்னா, கையில வெண்ணெயை வெச்சுக்கிட்டு, நெய்க்கு அலைஞ்ச கதை மாதிரிதான், இந்தத் திட்டம் இருக்கு. உலக அளவுல அதிகமான மாடுகள வெச்சுக்கிட்டு, அதிகளவுல மீத்தேன் வாயுவை வெளியிட்டு பூமியை வெப்பப்படுத்துறோம்னு அமெரிக்கா நாட்டுக்காரன், சந்துல சிந்துபாடிக்கிட்டிருக்கான். ஒவ்வொரு கிராமத்திலேயும், மீத்தேன் வாயு சேகரிக்கக்கூடிய டேங்க்கை உருவாக்கலாம். அதாவது, இப்போ பால் சேகரிப்பு நிலையம் இருக்குற மாதிரி. ஒவ்வொரு விவசாயியும் தன்னோட மாட்டுச் சாணத்தை, எடைப்போட்டு கொடுத்துடணும். அதுக்கான தொகையை வாரம் ஒருமுறை விவசாயிக்கு கொடுத்திடணும். மீத்தேன் வாயு எடுத்தவுடனே, வெளியாகும் சிலரி(கசடு) அருமையான இயற்கை உரம். அதை விவசாயிகளுக்கே கொடுத்திடலாம். இப்படிச் செய்யும்போது பாலைவன தேசத்துக்கிட்ட, பெட்ரோல், டீசல் கேட்டு கையேந்தி நிற்கவேண்டிய நிலை உருவாகாது. நம்ம நாட்டோட பொருளாதரமும் உயரும்.
பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைஞ்சுபோனா, சுற்றுச்சூழல் மாசு குறையும். புயல், பூகம்பம், வறட்சி, வெள்ளம்னு இயற்கைச் சீற்றமும் குறையும். எப்படியோ, விலை குறைவான இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த, மத்திய அரசு மனம் திறந்து அனுமதி வழங்கியிருக்கிறதை வரவேற்கலாம்.
நம்ம மகாத்மா காந்தி கனவுகண்ட அண்மை பொருளாதாரம்ங்கிறது, மீத்தேன் வாயு மாதிரியான விஷயங்கள்தான். ஆனா, அவரைத் தொழில்நுட்பத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் விரோதினு ஒரு கூட்டம் சொல்லிக்கிட்டு திரியுது.
பத்து வருஷத்துக்கு முன்ன, கோ-விஞ்ஞான் கேந்திராவைச் சேர்ந்த சுனில் மான்சின்காவைச் சந்திக்க, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்குப் போயிருந்தேன். அந்த நேரம் பார்த்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர்ல கோசாலை நடத்திக்கிட்டிருக்கும், நண்பர் ஒருத்தரும் வந்திருந்தாரு. ‘‘எங்கள் கோசாலையில் உள்ள மாடுகளின் பொருள்களைக் கொண்டு அர்க், பஞ்சகவ்யா, சோப்பு, சாம்பிராணி... போன்ற பொருள்களைத் தயார் செய்கிறோம். மாட்டுச் சாணத்திலிருந்து கோபர் கேஸை வீட்டுக்கு அடுப்பெரிக்க மட்டுமல்ல, ஸ்கூட்டர், ஆட்டோக்களுக்கு மீத்தேன் இயற்கை வாயுவைப் பயன்படுத்தி இயக்குகிறோம். பண்ணைக்கழிவுகள், காய்கறிக்கழிவுகள், மனித கழிவுகள் மூலமும் மீத்தேன் எரிவாயுவை எடுக்க முடியும். நாங்கள் செய்யும் வேலைகளைப்பார்க்க, நீங்கள் கட்டாயம், எங்கள் விருந்தினராக ராஜஸ்தான் மாநிலத்துக்கு வர வேண்டும்’’னு அன்போடு அழைப்பு விடுத்தாரு.

போன வருஷம் நாட்டிலேயே முதல்முறையாக மீத்தேன் எரிவாயுல இயங்கும் பேருந்துகள் கொல்கத்தா நகர்ல ஓட ஆரம்பிச்சிருக்கு. இந்தப் பேருந்துல ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய்தான் பயணக்கட்டணம். எப்படியோ இன்னும் கொஞ்சம் காலத்துல, உலகத்துல உள்ள எண்ணெய் கிணறுகள் வற்றி, வறண்டு போயிடும்னு விஞ்ஞானிங்க சொல்றாங்க. அப்புறம், மீத்தேன் வாயு கொடுக்கிற மாடுகளுக்குத்தான், மீண்டும் மரியாதை கிடைக்கும். மாடுங்க, மாட்டு வண்டி இழுத்த காலம் மாறி, மாட்டுச் சாணத்துல உள்ள மீத்தேன் வாயு மூலம் மோட்டார் பைக், கார், பேருந்துகள்னு சென்னை, அண்ணா சாலையில ஓடும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கேன்.
- மண்புழு மன்னாரு