மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!

மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!

ஓவியம்: வேலு

டகிழக்குப் பருவமழை உபயத்தால், அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அதனால், ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்துக்குத் தண்ணீர் பாய்ச்சும் வேலை இல்லை. அவரும் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் தேநீர்க்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரம், ‘காய்கறி’ கண்ணம்மா வியாபாரத்தை முடித்துவிட்டு வர, மூவரும் பேசிக்கொண்டே தோட்டத்துக்குக் கிளம்பினர். தோட்டத்தை அடையும் சமயத்தில் வானம் இருட்டிக்கொண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. ‘அடாது மழை பெய்தாலும் விடாது மாநாடு நடக்கும்’ என்று சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார். “சேலம் மாவட்டம், தாரமங்கலம், கொங்கணாபுரம், இடைப்பாடி, சங்ககிரி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூர் பகுதிகள்ல கிட்டத்தட்ட 4,500 ஏக்கர் பரப்புல ஊடுபயிரா துவரைச் சாகுபடி செய்றாங்களாம். இப்போ காய்பிடிக்கிற பருவத்துல இருக்குற துவரைச்செடிகள்ல காய்ப்புழுக்கள் தாக்கி அதிகப் பாதிப்பை ஏற்படுத்துதாம். நிறைய விவசாயிகள் இந்தப்பிரச்னைக்கு என்ன செய்யலாம்னு கேட்டுட்டுருக்காங்க. அதுக்கான தீர்வைச் சொல்லியிருக்கார், சேலம் மாவட்ட வேளாண்மைத்துறை இயக்குநர் செல்லத்துரை.

‘பச்சைப்புழு, பிளவு இறக்கைப் பூச்சி, துவரை காய்த் துளைப்பான் மாதிரியான புழுக்கள்தான் துவரையைத் தாக்குது. பருத்தி, நிலக்கடலை, கொண்டைக்கடலை, மக்காச்சோளம், கம்பு, வெண்டைக்காய், தக்காளி, மொச்சை, அவரை மாதிரியான பயிர்களையும் இந்தப்புழுக்கள் தாக்கும். பிளவு இறக்கைப் பூச்சிகள்... துவரை, மொச்சை, சோயாப் பயிர்கள்ல இருக்கும். பச்சை நிறத்தில், மெல்லிய ரோமங்களோடு பிளவுபட்ட இறக்கைகளுடன் இருக்கும். இந்தப்பூச்சிகள் மொட்டுக்களைச் சாப்பிடுறதால, செடிகள்ல மகசூல் பாதிப்பு ஏற்படும்.

பச்சைக்காய்த் துளைப்பான் புழுக்கள்... அவரை, துவரை, கொள்ளு, பட்டாணி, மொச்சை பயிர்கள்ல இருக்கும். இது இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். இந்தப்புழுக்கள் காய்களைத் துளைத்து, விதைகளைத் தின்றுவிடுவதால் மகசூல் பாதிக்கப்படும். விதைப்புக்கு முன் ஆழமாக உழுது கிளறிவிட்டால் மண்ணுக்கு அடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் அழிந்துவிடும். துவரை நடவு செய்யும்போது, ஒன்பது வரிசைகளுக்கு இடையில், ஒரு வரிசை சூரியகாந்தி செடிகளை வளர்த்தால் துவரையில் பூச்சிகள் கட்டுப்படும். விளக்குப்பொறிகள், இனக்கவர்ச்சிப் பொறிகள், பறவை தாங்கிகள் அமைத்து இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். வாரம் இரண்டு முறை வேப்பங்கொட்டைச்சாறு தெளித்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்’னு செல்லத்துரை சொல்லிருக்கார்” என்றார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!

காய்கறி, தான் கொண்டு வந்திருந்த ஆரஞ்சுப்பழங்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.

“கஜா புயலால தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்ல கிட்டத்தட்ட ஒரு கோடி தென்னை மரங்கள் சாய்ஞ்சுபோய்க் கிடக்கு. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் திரும்பவும் நடவு செய்றதுக்காகப் புதிய கன்னுகளை வாங்க அலைஞ்சுட்டு இருக்காங்க. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டு நிறைய தனியார் நர்சரி பண்ணைகள்ல தென்னங்கன்னோட விலையை இரண்டு மடங்கு அதிகரிச்சுட்டாங்க.

350-400 ரூபாய்னு வித்துக்கிட்டிருந்த கன்னுகளை, இப்போ 800 ரூபாய் விலை சொல்றாங்க. புயலுக்கு முன்னாடி பழைய விலைக்குப் பேசி முன்பணம் கொடுத்து வெச்சுருந்த விவசாயிகளுக்கும் இப்போ விலையை ஏத்திட்டாங்க. அதிகத் தேவை இருக்குறதால விவசாயிகளால எதுவும் பண்ண முடியாத சூழ்நிலையில இருக்காங்களாம்” என்றார்.

“எரியுறவன் வீட்டுல பிடுங்குறது ஆதாயம்கிற கதையாவுல்ல இருக்கு” என்று சொல்லி வருத்தப்பட்டார், காய்கறி. அந்த நேரத்தில் மழை ஓயவும் “ஆடு, மாடுகளுக்குத் தீவனம் வெச்சுட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து ஓடினார், ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

விதைக்கப்பட்டார் ‘நெல்’ ஜெயராமன்!

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் கண்டெடுத்த விதைகளில் ஒன்று நெல் ஜெயராமன்.

டெல்டா மாவட்டங்களில் இயற்கை விவசாயத்தைப் பரப்ப  2003-ம் ஆண்டு பூம்புகார் முதல் கல்லணை வரை சுமார் ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்பு உணர்வு நடைபயணத்தில் ஜெயராமனும் கலந்து கொண்டார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயானம் உட்பட 7 பாரம்பர்ய நெல் ரகங்களின் விதைகளைச் சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார்,  மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிலிருந்து ஆரம்பமானது ஜெயராமனின் நெல் பயணம்.

மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!

தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் இயற்கை வேளாண் முறையில் பாரம்பர்ய நெல் சாகுபடி பயிற்சிகளை நடத்தியது, பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேகரிப்பது, பிற மாநிலங்களில் நடைபெறும் விதைக் கண்காட்சிகளில் தமிழ்நாட்டின் பாரம்பர்ய நெல் ரகங்களைக் காட்சிப்படுத்தியது எனத் திறம்படச் செயல்பட்டார். இதன் உச்சம்தான் நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் ஜெயராமனின் முயற்சியால் திருத்துறைப்பூண்டியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ‘தேசிய பாரம்பர்ய நெல் திருவிழா’.

கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்திருவிழாவைப் பெரும்பான்மையான மக்களுக்கு ஊடகங்களின் வழியாகப் பரவலாக்கியதில் நெல் ஜெயராமனுக்குப் பெரும்பங்கு உண்டு. தமிழ்நாட்டில் பாரம்பர்ய நெல் திருவிழாக்கள், கடந்த சில ஆண்டுகளாகப் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் துணைநின்று வழிகாட்டியவர்களில் முக்கியமானவர். விதைப் பரிமாற்றம் என்ற முறையில் ஒவ்வொரு நெல் திருவிழாவிலும் இலவசமாக இரண்டு கிலோ நெல் விதைகளை வழங்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் எண்ணத்தை முன்னெடுத்ததோடு, அதை விதைத் திருவிழாக்களில் ஒரு வழக்கமாக மாற்றியவர் ஜெயராமன்.

‘கட்டிமேடு’ ஜெயராமன், ‘கிரியேட்’ ஜெயராமன்... எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், பசுமை விகடன் இதழ் சூட்டிய ‘நெல்’ ஜெயராமன் என்ற பெயரே அவருக்கு நிலைத்து நின்றது.
தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயராமன் (52) கடந்த டிசம்பர் 6-ம் தேதி காலமானார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அவரது சொந்த ஊரான கட்டிமேடு கிராமத்தில், அவருடைய உடல் நல்விதையாக விதைக்கப்பட்டது.

- பசுமைக்குழு