மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!

மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!

மாத்தியோசிஓவியம்: வேலு

ஒரு தடவை ஈரோட்டில் நடந்த இயற்கை விவசாயக் கூட்டத்தில கலந்துகிட்டு, சென்னைக்குப் புறப்பட்டுக்கிட்டிருந்தேன். அந்தக் கூட்டத்தோட கதாநாயகன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வசம், நான் சென்னைக்குச் செல்லவுள்ளதைச் சொல்லியிருக்கிறார்கள். 

மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!

‘‘நானும் செங்கல்பட்டு வரையிலும் வரேன், சேர்ந்து போகலாம்ய்யா’’னு சொன்னாரு நம்மாழ்வார். ஈரோட்டிலிருந்து ஜீவா போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறி, சேலம் வந்து சேர்ந்தோம். சேலத்திலிருந்து புறப்படும் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப்பேருந்தில் சென்னைக்குப் புறப்பட்டோம். நம்மாழ்வாருடன் பயணம் செய்வது என்றால், இனிப்பு நிறைந்த அறைக்குள் அடைத்து வைப்பதுபோல, இனிமையாக இருக்கும். அதுவும் நகைச்சுவையாகப் பேசத்தொடங்கினால், சிரித்துச் சிரித்து வயிறுவலி வந்துவிடும். எப்பவும் பயணத்திலேயே இருக்கிறீங்களே.. எப்ப தூங்குவீங்கனு கேட்டேன்.

‘‘நெப்போலியன் குதிரை மேலேயே தூங்கிப் பழகின மாதிரி, இந்த ஆழ்வார், பேருந்துலயே, தூங்கி பழகிட்டேன்ய்யா. எல்லாம் கோழி தூக்கம்தான்’’னு உதாரணத்துடன் சொன்னாரு.
 
தமிழ்நாட்டில் நம்மாழ்வார், படுத்து உறங்காத பேருந்து நிலையங்களே கிடையாது என்று சொல்லலாம்.

ஒருமுறை நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில், நம்மாழ்வார் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். கமுக்கமாக வந்த காவல் துறையினர், ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றுள்ளனர். ‘‘நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் தமிழ் அமைப்பைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள் என்று தவறாக, காவல் நிலையத்துக்குத் தூக்கி வந்துவிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள்’’னு மறுநாள் காலையில் மன்னிப்பு கேட்டுள்ளனர் காவல்துறையினர்.

சரி, மீண்டும் பேருந்துப் பயணத்துக்கு வருவோம். இரவு முழுவதும், பலவிதமான கதைகளைப் பேசியபடியே அதிகாலை 4 மணிக்குச் செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். நானும் செங்கல்பட்டில் இறங்கி, நம்மாழ்வாருடன் பொழுது விடியும் வரை பேசிவிட்டு, சென்னைக்குப் புறப்பட நினைச்சேன். 

மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!

‘திருப்போரூர்’ ரங்கநாதன் ஏற்பாட்டில், நடைபெறவிருந்த, இயற்கை விவசாயிகள் கூட்டத்துல கலந்து கொள்ளத்தான், ஆழ்வார் செங்கல்பட்டு பேருந்து நிலையத்துல காத்திருந்தாரு. இப்போது, அந்த இடத்தைப் பழைய பேருந்து நிலையம்னு சொல்றாங்க. நல்ல குளிர், சால்வையை இறுக்கமா போத்திக்கிட்டு, பேருந்து நிலைய இருக்கையில் போய் உட்கார்ந்தோம்.

‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்’
னு நம்மாழ்வார், வெண்கல குரலில் பாடவும், பேருந்துக்குக் காத்திருந்தவர்கள் எல்லாம், எங்களைச் சுத்தி சூழ்ந்து நின்னுக்கிட்டாங்க.

‘‘ஐயா, இன்னைக்கு என்ன தேதி தெரியுமா? மார்கழி மாதம் 3-ம் நாள். திருப்பாவையில், நம்ம பொண்ணு ஆண்டாள் மூன்றாம் நாளில் பாடும் பாடலைத்தான் பாடினேன். என்ன... சொல்வளம், கருத்து வளம்.

ஓங்கி உலகளந்த உத்தமன் புகழைப் பாடி நீராடி, பாவை நோன்பு இருந்து வழிபட்டால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழியும். அதாவது எந்த ஒரு சேதத்தையும் பயிர்களுக்கோ, மனிதர்களுக்கோ, இதர உயிரினங்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தாதபடி அளவோடு மழை பெய்யுமாம். அப்படி மழை வளத்தால் வயல்களில் செழித்து வளர்ந்திருக்கும் செந்நெல்பயிர்களின் ஊடாகத் தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி நீந்தியபடி இருக்குமாம். தேன் நிறைந்த பூக்களில் எல்லாம் தேனைப் பருகுவதற்காகத் தேனீக்கள் திரிந்துகொண்டிருக்குமாம். வீடுகளில் கட்டப்பட்டு இருக்கும் பசுக்கள்கூட, தங்கள் கன்றுக்கு ஊட்டியது போக, கறப்பவர்களுக்கு அவர்களுடைய குடம் நிறையும்படி பாலைக் கொடுக்குமாம். சீமை மாடு மட்டமல்ல, நம்ம நாட்டு மாடுகளும் குடம் நிறையப் பால் கறந்திருக்கிறதைக் கவனிங்க.

தீங்கின்றி நாடெல்லாம் நல்ல மழை பெய்யும்னு ஆண்டாள் பாடி வைச்சிருக்கா. ஆனா, நல்ல மழை பெய்யும்படியா இப்போ சூழல் இருக்கு. புதுச்சேரியில இருக்கிற ஆரோவில்லுக்கு 1987-ம் வருஷம் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். என்னிடம் ‘இனிமேல் உங்கள் நாட்டில் பருவமழையே பெய்யாதென்று’ சொன்னார். ஏன் என்று நான் கேட்டதற்கு, ‘உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாகக் கீழே இறக்குகிறது.

அந்த மழை நீர் பூமியில் இறங்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மலையில் உள்ள மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள தேயிலைத் தோட்டம் போட்டுவிட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு சாண் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக்கூடிய ஈரக்காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. எங்கு பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்குப் புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை’ என்று சொன்னார்.

அவர் சொன்ன நாளிலிருந்து தொடர்ந்து, காலநிலையை உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதேதான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் குறிப்பிட்டு இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணரமாட்டார்களா, தவற்றைத் திருத்திக்கொள்ள மாட்டார்களா என்று. ஆனால், யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப் படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. இனியாவது, காடு வளர்ப்பு வேலைகளையும் செய்வோம்’’னு நம்மாழ்வார் சுத்தி நின்றவர்களுக்கு சொற்பொழிவு ஆற்றி முடிச்சாருங்க.

தன்னைச் சுற்றி ஐந்து பேர் இருந்தாலும் சரி, ஆயிரம் பேர் இருந்தாலும் சரி, கருத்து செறிவுடன் பேசும் வல்லமை பெற்றிருந்தாரு ஆழ்வார். சுமார் 5 மணிக்கு, திருப்போரூர் செல்லும் முதல் பேருந்து வந்து சேர்ந்தது. ஆழ்வாரைப் பேருந்தில் அமர வைத்துவிட்டு, சிங்காரச் சென்னைக்குப் புறப்பட்டு வந்தேன். இப்படி, எத்தனையோ பயணங்கள், நிகழ்ச்சிகளுக்கு, நெஞ்சுக்கு நெருக்கமானவருடன் சென்றது, பசுமையான நினைவுகளாக நிறைஞ்சி கிடக்கின்றன.