மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

ஓவியம்: வேலு

வயலில் களையெடுக்கும் வேலை இருந்ததால், காலையிலேயே தோட்டத்துக்குக் கிளம்பினார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அவரோடு ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் இணைந்துகொண்டார். இவர்களுக்கு முன்னரே தோட்டத்துக்கு வந்து காத்துக் கொண்டிருந்த பணியாளர்களுக்குக் களை எடுக்க வேண்டிய வயலைக் காட்டிவிட்டு வந்தமர்ந்தார், ஏரோட்டி. சற்று நேரத்தில், ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்துவிட... ஒரு செய்தியைச் சொல்லி, அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.
 
“ரசாயன உரத்தைப் பயன்படுத்தாதீங்க, பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்காதீங்க’னு நம்ம ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் ஐயா, தன்னோட வாழ்நாள் முழுசும் சொல்லிட்டுருந்தார். அவர் இயற்கை விவசாயப் பிரசாரத்தை ஆரம்பிச்ச காலங்கள்ல அவரைக் கேலி பேசினவங்கதான் அதிகம். ஆனா, கொஞ்சம் கொஞ்சமா இப்போதான் எல்லோருக்கும் புரிய ஆரம்பிச்சுருக்கு. குறிப்பா, எவ்வளவு வீரியமான பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துனாலும் பூச்சிகளை ஒழிக்க முடியாதுனு இப்போதான் விவசாயிகளும் புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்காங்க. சமீபகாலமா தோட்டக்கலைத்துறை அலுவலர்களும், வேளாண்மைத்துறை அலுவலர்களும் பூச்சிகளை ஒழிக்க இயற்கைத் தீர்வைத்தான் சொல்லிக்கிட்டுருக்காங்க.

மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

நீலகிரி மாவட்டத்துல கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீன்ஸ்னு நிறைய மலைக்காய்கறிகளைச் சாகுபடி செய்றாங்க. அதுல கேரட் பயிர்ல நூற்புழுத்தாக்குதலால மகசூல் ரொம்பக் குறைஞ்சுட்டுருந்துச்சாம். நிறைய பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திப் பார்த்தும், முழுசாகக் கட்டுப்படுத்த முடியலையாம். நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்குப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பயிற்சி கொடுத்தப்போ... ‘நாட்டு செண்டுமல்லிச் செடிகளை விவசாய நிலங்கள்ல நட்டு அதை மடக்கி உழணும். இப்படிச் செய்யும்போது நூற்புழுத் தாக்குதல் கட்டுப்படும்’னு அறிவுறுத்தியிருக்காங்க. அதுக்கப்புறம் குன்னூர் பகுதிகள்ல நிறைய விவசாயிகள் இந்த முறையைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றார், வாத்தியார்.
 
அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி. “பயிர்கள், சாகுபடிப்பரப்பு, விளைச்சல், நீர்ப்பாசனம் மாதிரியான விவரங்கள் அடங்கிய நிலப்பதிவேட்டுக்கு ‘அடங்கல்’னு பேர். விவசாயிகள் கொடுக்குற தகவல்கள் அடிப்படையில கிராம நிர்வாக அலுவலர்கள் தான் அடங்கலைத் தயாரிப்பாங்க. அரசுத் திட்டங்கள்ல மானியம் வாங்க அடங்கல் சான்றும் அவசியம். குறிப்பா பயிர் இழப்பீடு வாங்க அடங்கல் சான்று அவசியம். அடங்கல் சான்று கேட்டு வர்ற விவசாயிகளுக்குக் கிராம நிர்வாக அலுவலர்கள் கையிலதான் எழுதிக் கொடுப்பாங்க. பட்டா, சிட்டா மாதிரியான சான்றுகளை ஆன்லைன்ல பதிவிறக்கம் செய்றதுபோல, அடங்கலையும் பதிவிறக்கம் செய்ற மாதிரி ‘இ-அடங்கல்’ திட்டத்தைக் கொண்டு வந்திருக்காங்க.
 
போன அக்டோபர் மாசம் இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கியும் வெச்சுட்டார். ‘இ-சேவை’ மையங்கள்ல விவசாயிகள் பயிர் சாகுபடி விவரங்களைக் கொடுத்து விண்ணப்பிச்சதும்... கிராம நிர்வாக அலுவலரும், வருவாய் ஆய்வாளரும் அதைச் சரிபார்த்துத் தணிக்கை செய்வாங்க. அதுக்கப்புறம் மாவட்ட வருவாய் அலுவலர் ஒப்புதல் கொடுத்ததும், விவசாயிகள் இ-அடங்கலைப் பதிவிறக்கம் செய்துக்க முடியும். ஆனா, இந்தத்திட்டத்துக்குக் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிச்சுட்டுருக்காங்க. அதனால, முதலமைச்சர் ஆரம்பிச்சு வெச்சு ரெண்டு மாசம் ஆகியும் இன்னும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராம இருக்கு” என்றார், ஏரோட்டி.

காய்கறி, தான் கொண்டு வந்திருந்த கமலா ஆரஞ்சுப்பழங்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தார். அதைச் சுவைத்துக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“சிவகங்கை மாவட்டத்துல இருக்குற சாலைக்கிராமம், சூராணம் பகுதிகள்ல கிட்டத்தட்ட 3,000 ஏக்கர் பரப்புல, ‘ராமநாதபுரம் குண்டு மிளகாய்’ சாகுபடி செய்யப்படுது. மிளகாய் வியாபாரத்துல ‘புரோக்கர்கள்’ தலையீட்டைத் தடுக்குறதுக்காக அந்தக் கிராமங்கள்ல இருக்குற 1,200 விவசாயிகள் சேர்ந்து, ‘சூராணம் மற்றும் சாலைக்கிராமம் பாரம்பர்ய பயிர் உற்பத்தியாளர் விவசாயிகள் நிறுவனம்’னு அமைச்சுருக்காங்க. போன ஜனவரி, பிப்ரவரி மாசங்கள்ல அந்தச் சங்கத்து உறுப்பினர்கள் கிட்ட இருந்து 12 டன் மிளகாய் வற்றலைச் (காய்ந்த மிளகாய்) சங்கத்து மூலமாகக் கொள்முதல் செஞ்சுருக்காங்க.
 
அந்தச் சமயத்துல ஒரு கிலோ வற்றல் 200 ரூபாய்ல இருந்து 250 ரூபாய் வரை விற்பனையாகியிருக்கு. ‘மே மாசத்துக்கு மேல இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கு’னு வேளாண் வணிக அதிகாரிகள் சொன்னதைக்கேட்டு மொத்த மிளகாயையும், சாலைக்கிராமம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்துல இருப்பு வெச்சுருக்காங்க, விவசாயிகள்.

அதோட, சங்கத்து பேர்ல பொருளீட்டுக்கடனா பத்து லட்சம் ரூபாயும் வாங்கியிருக்காங்க. ஆனா, மே மாசத்துக்கப்புறம் மிளகாய் வற்றல் விலை, கொஞ்சம் கொஞ்சமா இறங்க ஆரம்பிச்சுடுச்சாம். தொடர்ந்து, ஆந்திராவுல இருந்து மிளகாயும், மிளகாய் வற்றலும் அதிகமா வர்றதால இங்க ரொம்பவே விலை குறைஞ்சுடுச்சாம். இப்போ மிளகாய் வற்றல் கிலோ 45 ரூபாய் அளவுலதான் விலை போகுதாம். மொத்த வற்றலையும் வித்தாலும் பொருளீட்டுக்கடனா வாங்குன தொகையில கிட்டத்தட்டப் பாதியளவுதான் கிடைக்குமாம். அதனால, கடனையும் கட்ட முடியாம, மிளகாயையும் விற்பனை செய்ய முடியாம விவசாயிகள் தவிச்சுட்டு இருக்காங்களாம்” என்றார், வாத்தியார்.

“இதுதான்யா விவசாயத்துல பெரிய பிரச்னை. மிளகாய்க்கு மட்டுமில்லை. வெங்காயம், உருளைக்கிழங்குனு எல்லாப்பயிர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கு. வெளி மாநிலங்கள்ல இருந்து விளைபொருள்களைக் கொண்டு வர்றதைத் தடுத்தாத்தான் நம்ம விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்” என்ற ஏரோட்டி அடுத்தச் செய்தியை ஆரம்பித்தார்.

“திருப்பூர், அவிநாசி, சேவூர், கருவலூர், தாராபுரம், சத்தியமங்கலம் உட்படப் பல பகுதிகள்ல அதிகளவு பருத்திச் சாகுபடி நடக்குது. இந்தப் பகுதிகள்ல டிசம்பர் மாசத்துல இருந்து பிப்ரவரி மாசம் வரை பருத்தி சீசன் நல்லா இருக்கும். இந்தப்பகுதிகள்ல விளையுற பருத்தியை விற்பனைக்காக, அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்குத்தான் விவசாயிகள் கொண்டு வருவாங்க. இந்தச்சங்கத்துல வாராவாரம் திங்கள் கிழமை பருத்தி ஏலம் நடக்கும். இந்த வருஷம் வழக்கத்தைவிடப் பருத்தி வரத்து அதிகமா இருக்குதாம். டிசம்பர் பதினேழாம் தேதி நடந்த ஏலத்துக்கு, 2,000 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்காங்க. மொத்தம் 40 லட்சம் ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்திருக்கு. போன வருஷம் டிசம்பர் மாசத்துல இந்தளவுக்கு வரத்து இல்லையாம். போன வருஷம், ஒரு குவிண்டால் அதிகபட்சமா 4,200 ரூபாய்க்குதான் ஏலம் போச்சாம்.

ஆனா, இந்த வருஷம் வரத்து அதிகமா இருந்தும், ஒரு குவிண்டால் பருத்திக்கு 5,000 ரூபாய்க்கு மேல விலை கிடைக்குதாம். போன வருஷம் சீசன்ல மொத்தம் பத்து கோடி ரூபாய்க்குப் பருத்தி வர்த்தகம் நடந்துச்சாம். போன வருஷத்தைவிட இந்த வருஷம் 20 சதவிகித அளவு வரத்து அதிகரிச்சுருக்குறதால பதினைந்து கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும்னு எதிர் பார்க்குறாங்களாம்” என்றார்.

அந்த நேரத்தில், “இன்னும் கொஞ்சம் வீடுகளுக்குக் காய் கொடுக்கணும். நான் கிளம்பறேன்” என்று சொல்லிக்கொண்டே கூடையைத்தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார், காய்கறி. அதோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.