மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!

மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!

மாத்தியோசிஓவியம்: வேல்

‘நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக் கீசர்

மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!


நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
நந்திடைக் காடரும் போகர் புலிக்கை யீசர்
கருவூரார் கொங்கணவர் காலாங்கி
சிந்தி அழுகண்ணர் அகப்பேய் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ் சேர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தையுன்னிச் சிரத் தனியாய்ச் சேர்த்து வாழ்வோம்’


- இப்படி ஒரு பாடல், சென்னை, கலைவாணர் அரங்கத்துல இனிமையா கேட்டுதுங்க. சித்த மருத்துவத்துல முதல் சித்தராக விளங்கும் அகத்திய முனிவர், மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். இதையொட்டி, கடந்த வருஷம் முதல் அவரது பிறந்த நாள், தேசிய சித்த மருத்துவத் தினமாகக் கொண்டாடப்படுதுங்க. இந்த ஆண்டு நடந்த துவக்க விழாவுலதான், சித்தர் பாடலைக் காதுகுளிர கேட்டேன்.

என்னை இந்த விழாவுக்குப் பார்வையாளரா அழைச்சிருந்த, சித்த மருத்துவ நண்பரோடு சேர்ந்து, கலைவாணர் அரங்கத்தைச் சுத்தி வந்தேன். சித்த மருத்துவம் படிக்கும் மாணவர்களோட ஆராய்ச்சி கட்டுரைகளை, வரிசையா ஒட்டி வைச்சிருந்தாங்க. உலகத்தின் முதல் விஞ்ஞானிகள் நம் சித்தர்கள்தான் என்பதை, அங்கிருந்த ஆராய்ச்சி கட்டுரைகளைப் படிக்கும்போது தெளிவா தெரிஞ்சுக்க முடிஞ்சது. சித்த மருத்துவம்னா,  நாடியை பிடிச்சுப் பார்த்து, பச்சிலையை உரல்ல அரைச்சி கொடுப்பார்னு நினைக்க வேண்டாம். கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் செயலி... மாதிரியான நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி, சித்த மருத்துவம் பார்க்குற அளவுக்கு, தொழில்நுட்ப ரீதியா, சித்த மருத்துவம் வளர்ந்திருக்கு.

‘‘கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்’’ இப்படி சொன்னவர், நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினரா வந்திருந்த தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித்தான். கூடவே, இன்னொரு விஷயத்தையும் சொன்னாரு. ‘‘பாரம்பர்ய ஆயுர்வேத மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க, கேரள மாநில அரசு, மத்திய அரசிடம் நிறைய நிதி பெற்று வருகிறது. தமிழ்நாடும் சித்த மருத்துவத்தை மேலும் மேலும் வளர்த்தெடுக்க, மத்திய அரசிடம், அதிக நிதி கேட்க வேண்டும்’’னு உதாரணத்தோட சொன்னாருங்க.

மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!

அடுத்துச் சொல்லப்போறதும் கூட சித்தர் சொன்ன தகவல்கள்தான். 2017-ம் வருஷம் புதுடெல்லியில நடந்த சர்வதேச இயற்கை விவசாய மாநாட்டுக்கு நம்ம ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் நடராஜன் வந்திருந்தாரு, அந்தச் சமயத்துல, அவரோட நிறைய நேரம் பேசுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அப்போ சித்தர்கள் பத்தி நிறையா தகவல்களைச் சொன்னாருங்க. அதுல சில முக்கியமான தகவலை, உங்களோட பகிர்ந்துக்கிறேன்.

‘‘நான் சின்னப் பையனா இருந்த சமயத்துல, எங்க அக்காவுக்குக் கல்யாணம் நடந்துச்சி. கந்தசாமிபாளையத்துல இருக்கிற எங்க அக்கா வீட்டுக்கு ஒருமுறை போயிருந்தேன். அப்போ, அவங்க வீட்டுல ஒரு சித்தர் வந்து தங்கியிருந்தாரு. அந்தப் பகுதியில தண்ணி தட்டுப்பாடு அதிகம். அதனால, கிணறு வெட்டுலாம்னு எங்க அக்கா குடும்பத்தார் முடிவு எடுத்தாங்க. இதை அந்தச் சித்தர்கிட்ட சொன்னாங்க. அவர் உடனே, ஓர் ஆலோசனை சொன்னாரு. அடுத்த நாள் காலையில அதற்கான வேலையை ஆரம்பிச்சாங்க.

பருவத்துக்கு வராத, இளம் பசுங்கன்றைக் குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம், மாலையெல்லாம் போட்டு, கூட்டி வந்தாங்க. அந்தச் சித்தர், பசுங்கன்றைக் கிணறு வெட்ட வேண்டிய தோட்டத்துக்குள்ள மேய விட்டாரு. கொஞ்ச நேரம் நிலத்தைச் சுத்தி வந்த இளங்கன்று, ஒரு இடத்துல சிறுநீர் கழிச்சப்படி நின்னுச்சி. உடனே, சித்தர் அந்த இடம் நோக்கி, எல்லோரையும் அழைச்சிக்கிட்டுப் போனாரு. ‘மனுசனைக்காட்டிலும் இயற்கையைப் பத்தின, நுண்ணறிவு கால்நடைகளுக்கு அதிகம். இளங்கன்று சிறுநீர் கழிச்ச, இந்த இடத்துல கிணறு வெட்டினா, வற்றாத நீர் கிடைக்கும்’னு சொன்னாரு.

உடனே, கிணறு தோண்டுற வேலையை ஆரம்பிச்சாங்க. இதைப்பார்த்த, எங்க அக்கா வீட்டுச் சொந்தக்காரங்க, அவங்க நிலத்துலயும் கிணறு வெட்ட, இதேபோல எல்லாம் செய்து, இளம்பசுங்கன்றை நிலத்துக்குள்ள விட்டாங்க. அந்தக் கன்று, நிலத்தைச் சுத்திச் சுத்தி வந்துச்சே தவிர, சிறுநீர் கழிக்கவே இல்லை. இந்த அறிகுறி இருந்தா, அந்த இடத்துல நீரோட்டம் குறைவுன்னு அர்த்தம். எங்க அக்கா வீட்டுத் தோட்டத்துல, வெட்டின கிணத்துல சித்தர் சொன்னபடியே, இன்றளவும் வற்றாத நீர் சுரந்துக்கிட்டிருக்கு. சித்தர் செய்த செயலை மூடநம்பிக்கையா பார்க்காம, அறிவியலா, விஞ்ஞானமா பார்த்தா இன்னும் நிறைய விஷயங்களை மாடுகள்கிட்ட கண்டுபிடிக்க முடியும்.

அகத்தியர் ஜால வித்தை, போகர் ஜால வித்தைனு சித்தர்கள் எழுதி வைத்த நூல்கள் ஏராளம். இதுல சித்து விளையாட்டுகள் மட்டும் கிடையாது. விவசாயம், தோட்டக்கலை, நீரோட்டம், கால்நடை மருத்துவம்னு வாழ்வியலுக்குத் தேவையான ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்குது. உதாரணத்துக்குப் பால் சுரக்காத மாடுகளுக்குச் சுரைக்காயை வெட்டிக் கொடுத்தா, நல்லா பால் சுரக்கும். சுரைக்காய், பால் கொடுக்கும் திறனைத் துண்டிவிடும் தன்மை கொண்டது. இதே மருத்துவமும் மனிதர்களுக்கும் பயன்படுது. தாய்ப்பால் குறைவாக உள்ள தாய்மார்கள், சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டால், குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.  இப்படி உணவே மருந்து, மருந்தே உணவுங்கிறதுதான், நம்ம சித்தர்களோட கொள்கை.

மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!

சித்தர்கள் கிராமப் பகுதிகளுக்குப் போகும்போது, நோய் நீங்க மருத்துவம் செய்யுறது, நீர்வளம் உள்ள பகுதியை அடையாளப்படுத்திக் கொடுப்பது, நிலத்துக்கு அடுத்தப்படியா மிகப்பெரிய செல்வமாக இருந்த கால்நடைகளுக்கு நோய் தீர்க்கும் மருத்துவத்தைக் கற்றுப் கொடுப்பதைக் கடமையாகவே வைச்சிருந்தாங்க. தேசாந்திரிகளாகச் சுற்றித் திரிந்த நம் சித்தர்கள் கால்நடை மருத்துவ முறைகளை ஓலைச்சுவடியில் எழுதி வைத்து, ‘மாட்டு வாகடம்’ என்ற பெயர்ல பாதுகாத்து வந்தாங்க. இன்றும்கூட, மாட்டு வாகட ஓலைச்சுவடிகள் வைத்துள்ள குடும்பங்கள் தமிழ்நாட்டுல உண்டு. சில மாட்டு வாகட ஓலைச்சுவடிகள் மட்டும் அச்சில் வந்து, மறு உயிர் பெற்றிருக்கு. என்னோட பங்குக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், யு-டியூப் சேனலில் பஞ்சகவ்யா தொடங்கி சித்தர்கள் சொல்லி வைத்த மருத்துவ முறைகள் சம்பந்தமான தகவல்களை பகிர்ந்துக்கிட்டிருக்கேன்.

‘வாகடத்தின் பயனறியார் நாடி காணார்
வலக்கையைப் பிடித்திழுத்துச் சொல்வார்
ஆகடிகமாகவே நல்லோர் தம்மை
அசாத்திய நோயிதென்று அறைந்து சொல்வார்- வியாதிகட்கு
பிணி தீர்போமென்று சொல்வார் தீர்க்கமாட்டார்
ஓஹோ ஹே... ஹோ வைத்தியர் தாமே என்பார்
ஒரு போதும் மோட்சமில்லைதானே!’


மாட்டு வாகடத்தைப் படித்தவர்களால்தான், சிறப்பாக மருத்துவம் பார்க்க முடியும்ங்கிறதான், இந்தச் சித்தர் பாடலோட பொருள்’’னு ‘பஞ்சகவ்யா சித்தர்’ சொல்லி முடிச்சாருங்க.