
ஓவியம்: வேலு
வேளாண்மைக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள், பொங்கல் விழா கொண்டாட வருவதாகச்

சொல்லியிருந்ததால்... காலையிலேயே தோட்டத்துக்குக் கிளம்பினார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அவரோடு இணைந்துகொண்டார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. இருவரும் நடந்து கொண்டிருக்கும்போது, பண்பலை வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த ‘கடவுள் என்னும் முதலாளி... கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி...’ எனும் பாடல் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.
முன்னரே தோட்டத்துக்கு வந்திருந்த ‘காய்கறி’ கண்ணம்மா, முற்றத்தைக் கழுவி, சாணம் மெழுகி, கோலம் போட்டு வைத்திருந்தார். ஏரோட்டி, மாடு, கன்றுகளைக் குளிப்பாட்டி பொட்டு வைத்துக்கொண்டிருந்த சமயத்தில், வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் வேனில் வந்து இறங்கினர்.
பரபரவென்று அலங்காரம் செய்து பொங்கல் வைத்து குலவையிட்டு அமர்க்களமாகக் கொண்டாடிவிட்டு, மாணவிகள் கிளம்பிய பிறகு, மூவரும் ஆசுவாசமாக அமர்ந்து பொங்கலைச் சுவைத்துக்கொண்டே மாநாட்டைக் கூட்டினர். ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், ஏரோட்டி.
“தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடியில் இருக்குற திருஆரூரான் சர்க்கரை ஆலை, விவசாயிகளோட பெயர்ல 300 கோடி ரூபாயை வங்கிகள்ல கடன் வாங்கியிருக்குறதா புகார் வாசிக்கிறாங்க, விவசாயிகள். ஆதனூரைச் சேர்ந்த கரும்பு விவசாயி மோகன்தாஸுக்கு, ‘நீங்க வாங்கியிருக்குற மூணு லட்சம் ரூபாய் கடன்ல 2,58,918 ரூபாய் நிலுவையில இருக்கு. உடனடியா வந்து கட்டுங்க’னு ‘பாபநாசம் ஸ்டேட் பேங்க்’ல இருந்து நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க.

ஏற்கெனவே மோகன்தாஸுக்கு ஆதனூர் கூட்டுறவு வங்கிக்கணக்குலதான் கரும்புக்கான பணத்தை வரவு வெச்சுட்டுருந்துருக்காங்க, திருஆருரான் சர்க்கரை ஆலை அதிகாரிகள். போன வருஷம் ‘கரும்புக்கான பணத்தை இனிமே பாபநாசம் ஸ்டேட் பேங்க்லதான் கட்டுவோம்’னு சொல்லி திருஆருரான் சர்க்கரை ஆலை அதிகாரிகள்தான் மோகன்தாஸை அழைச்சுட்டுப் போய் நிறைய பேப்பர்ல கையெழுத்து வாங்கியிருக்காங்க. அதை வெச்சுதான் இப்போ அவர் பேர்ல மோசடியா கடன் வாங்கிட்டாங்களாம். திருஆரூரான் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு கொடுக்கிற பல விவசாயிகளுக்கு இதே மாதிரி, சில தனியார் பேங்க்குகள்ல இருந்தும் நோட்டீஸ் வந்துருக்காம்.
திருஆரூரான் சர்க்கரை ஆலை, ஸ்டேட் பேங்க்ல மட்டும் விவசாயிகள் பேர்ல முறைகேடா 297 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்குறதா சொல்றாங்க. இப்படிப் பாதிக்கப்பட்ட விவசாயிகள்கிட்ட, ‘நீங்க இந்தப் பணத்தைக் கட்டவேண்டாம். சர்க்கரை ஆலை நிர்வாகமே கட்டிடும். நாங்க சொல்ற ஆவணங்கள்ல கையெழுத்து மட்டும் போட்டு, உங்க பேர்ல உள்ள கடனைப் புதுப்பிச்சுக் கொடுங்க’னு வங்கி அதிகாரிகள் சொல்றாங்களாம்.
விவசாயிகள் பெயர்ல கடன் வாங்கினா நாடாளுமன்றத்தேர்தல் சமயத்துல தள்ளுபடி ஆகிடும்னு கணக்குப் போட்டு பேங்கும், சர்க்கரை ஆலை நிர்வாகமும் சேர்ந்து இப்படி மோசடி செஞ்சுருக்கறதாவும் பேச்சு அடிபடுது. ஆனா, வங்கி தரப்புல இது வழக்கமான நடைமுறைதான். கடனைச் சர்க்கரை ஆலையே அடைச்சுடும். விவசாயிகளுக்கு ஒரு பிரச்னையும் வராதுனு சொல்றாங்களாம்” என்றார், ஏரோட்டி.
“ஆமாய்யா... இதபத்தி ‘ஜூனியர் விகடன்’ புத்தகத்துல செய்தி வெளியிட்டிருந்தாங்க. அதுக்கப்புறம், சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகள் சிலரை நேர்ல வரச்சொல்லி தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் அழைப்பு விட்டுருந்தார். விவசாயிகளோட புகாருக்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகுதுனு இனிமேதான் தெரியும்” என்ற வாத்தியார், அடுத்தச் செய்திக்குத் தாவினார்.
“இப்போ சட்டசபை கூடுனப்போ... காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார், ‘நாங்குநேரி தொகுதி காரியாண்டி பகுதி சுற்றுவட்டார கிராமங்கள்ல விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டத்துல 7,000 ஆடுகளும் 3,000 மாடுகளும் பயனாளிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கு. ஆனா, அந்தப்பகுதியில கால்நடை மருத்துவமனை இல்லாததால விவசாயிகள் கஷ்டப்படுறாங்க.
பக்கத்து ஊர்கள்ல இருக்குற கால்நடை மருத்துவமனைகளுக்கு மினி வேன் வெச்சுதான் அழைச்சுட்டுப்போக வேண்டிய சூழ்நிலையில விவசாயிகள் இருக்காங்க. அதுக்கு நிறையச் செலவு பண்ண வேண்டியிருக்கு. அதனால, அந்தப் பகுதியில மருத்துவமனை அமைக்கணும்’னு கேட்டார். அதுக்குப் பதில் சொன்ன கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், ‘காரியாண்டி பகுதியில மருத்துவமனை அமைக்கச் சாத்தியக்கூறு இல்லை. ஆனா, கால்நடை கிளை நிலையம் தொடங்கலாம். அதுக்கான நடவடிக்கை உடனடியா எடுக்கப்படும். அதே மாதிரி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் கொடுக்கப்போறோம். அதுமூலமா விவசாயிகள் ஆடு, மாடுகளை இலவசமா மருத்துவமனைக்குக் கொண்டு போகலாம்’னு அறிவிச்சுருக்கார்” என்றார், வாத்தியார்.

அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்த ஏரோட்டி, “தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப்பகுதியில கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு மேல திராட்சைச் சாகுபடி நடந்துட்டுருக்கு. ஆயிரக்கணக்கான ஏக்கர்ல திராட்சை பயிரிடப்பட்டாலும்... செவட்டை நோய், அடிச்சாம்பல் நோய்னு பல பிரச்னைகளைச் சந்திச்சுட்டுருக்காங்க, விவசாயிகள்.
பாடுபட்டு விளைய வெச்சாலும் பல நேரங்கள்ல சரியான விலை இல்லைங்கிறதால, நிறைய விவசாயிகள், திராட்சைக்கொடிகளை அழிச்சுட்டு பந்தல் காய்கறிகளுக்கு மாறிட்டுருக்காங்க. இன்னும் சில விவசாயிகள் கேரள மாநிலத்திலிருந்து ‘பேஷன் ஃப்ரூட்’ நாற்றுகளை வாங்கிட்டு வந்து சாகுபடி செய்ய ஆரம்பிச்சுருக்காங்க. இதுக்குப் பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் தேவையில்லையாம். தொழுவுரம் போட்டாலே போதுமாம். ஏழு மாசப்பயிர்ங்கிறதால விவசாயிகளுக்குச் சாகுபடி பண்ண எளிதா இருக்குதாம். இந்தப் பேஷன் ஃப்ரூட் பழங்களைக் கேரள வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து, கிலோ 40 ரூபாய்னு கொள்முதல் செஞ்சுக்குறாங்களாம். முட்டுவளிச்செலவு குறைவா இருக்குறதால நிறைய விவசாயிகள் இப்போ திராட்சையை அழிச்சுட்டு ஃபேஷன் ஃப்ரூட் சாகுபடிக்கு மாறிட்டுருக்காங்களாம்” என்றார்.
“காலையிலே இங்க வந்துட்டதால இன்னும் நிறைய வீடுகளுக்குக் காய் கொடுக்கலை, நான் கிளம்புறேன்” என்று சொல்லிக்கொண்டே கூடையைத் தூக்கிக்கொண்டு கிளம்பினார், காய்கறி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.