மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!

மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!

மாத்தியோசி

விடிந்தால் பொங்கல் பண்டிகை. செங்கல்பட்டிலிருந்து வேடந்தாங்கல் செல்லும் கடைசிப் பேருந்துல ஏறினேன். கூட்டம் அவ்வளவாக இல்லை. பேருந்து, புழுதிவாக்கம் கூட்டு ரோடு வந்தபோது, ஏதோ கோளாறு ஏற்பட்டு நின்னுடுச்சி. அந்த இடத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில்தான் வேடந்தாங்கல் இருக்குது. இரவு 11 மணிக்கு மேல ஆயிடுச்சி. என்னை மாதிரி ஊரைச்சுற்றுகிற தேசாந்திரிகளுக்கு இது புது விஷயம் கிடையாது. சரி, பொடி நடையாக நடக்கலாம்னு வண்டியைவிட்டு இறங்கினேன். பேருந்துல வந்தவர்கள்ல நான்கு பேர், வேடந்தாங்கல் செல்லும் சாலையில் நடந்து போய்கிட்டிருந்தாங்க. எட்டி நடந்து, அந்த நடைக்குழுவுல ஐக்கியமானேன்.

“எல்லாரும் வேடந்தாங்கல்தான் போறீங்களா” என்று பேச்சைத் தொடங்கினேன்.

‘‘ஆமாங்கய்யா... பொங்கலுக்குப் புதுத் துணிமணி வாங்க, செங்கல்பட்டு போயிட்டு வர்றோம்’’னு சொல்லி முடித்தார், அந்தக் குழுவுல இருந்த வயதில் மூத்தவர்.

அடுத்து, “என்ன வேலை செய்றீங்க”னு கேள்வியை வீசினேன்.

‘‘ஐயா, நாங்க இருளர் சமூகத்தைச் சேர்ந்தவங்க. பாம்பு, எலி பிடிக்கிறதோடு விவசாய வேலைகளும் செய்துக்கிட்டிருக்கோம்’’னு சொன்னாரு,

ரொம்ப நாளா, இருளர்களைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். இந்த மக்கள்கிட்ட வெளி உலகத்துக்குத் தெரியாத, பல அரிய தகவல்கள் இருக்கு. அதைத் தெரிஞ்சக்க இப்போ வாய்ப்பு கிடைச்சதுக்கு, இயற்கைக்கு நன்றி சொன்னேன்.

அந்த நடைபயணக்குழுவினரை உற்சாகப்படுத்துற மாதிரி, அடுத்தக் கேள்வியைக் கேட்டு வைச்சேன்.

வேடந்தாங்கல்னு, அந்த ஊருக்கு பெயர் வந்ததுக்குக் காரணமே, உங்க மக்கள்தான்னு படிச்சிருக்கேன்னு சொன்னேன்.

வாயில் போட்டிருந்த வெற்றிலையைத் துப்பிவிட்டு, பதில் சொல்ல ஆரம்பிச்சாரு, அந்த மூத்தவர்.

மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!

‘‘உண்மைதாங்க, எங்க தாத்தா, இதைச் சொல்லியிருக்காரு. எங்க மக்களை வேடர்கள், காட்டுக்காரர்கள், இருளர்கள்னு பல பேர் வைச்சி அழைப்பாங்க. ரொம்பக் காலத்துக்கு முன்பு, வேடர்களாக இருந்த எங்க மக்கள் இங்க வந்து தங்கியிருக்காங்க. அந்தப் பகுதியில தண்ணீர் நிக்குற தாங்கல் இருந்ததால, வேடந்தாங்கல்னு பேரு உருவாயிடுச்சி. வேடர்களா இருந்தாலும், எங்க மக்கள் வேடந்தாங்கலுக்கு வரக்கூடிய பறவைகளை வேட்டையாட மாட்டோம். காலங்காலமா இந்தப் பகுதியில வசிச்சுக்கிட்டிருக்கோம். உங்களை மாதிரி பட்டணத்துல இருந்த வர்றவங்களுக்குத்தான், எங்களோட பூர்வீக கதை தெரியுது’’னு கொஞ்சம் உற்சாகமாகப் பேச ஆரம்பிச்சாரு.

‘‘இருளர்கள் தமிழகப் பழங்குடிகளில் இரண்டாவது பெரிய குடிகளாவர். இவர்கள் ஆங்காங்கு தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். நீலகிரி, ஆனைமலை, மருதமலை, மேட்டுப்பாளையம், சிறுவாணி ஆகிய மலைப்பகுதிகளிலும், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய சமவெளிப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.  ஆதி காலத்தில், நீல மலையில், அதாவது நீலகிரி மலையில் வசித்து வந்த பழங்குடி மக்களான இருளர்கள்தான், முதலில் தரைப்பகுதிக்கு இறங்கிய ஆதிவாசிகள். இன்று தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும், கோயம்புத்தூர் நகரத்தில், சிறு சிறு குழுக்களாக இருளர்கள் வசித்து வந்தனர். இந்த இன மக்களின் தலைவன் பெயரால்தான், கோயம்புத்தூர் நகரம் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர்ல இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்நாடு, கேரள பகுதிக்கு இந்த இனக்குழு பரவ ஆரம்பிச்சாங்க.

காட்டில் வாழ்ந்தவர்கள் என்பதால், பாம்புகள் குறித்த தகவல் இவர்களிடம், பரம்பரை சொத்துபோலப் பாதுகாக்கப்படுகிறது. பாம்பைக் கண்டால், படையே நடுங்கும்போது, அந்தப் பாம்பை இருளர்கள் அச்சமின்றிக் கையில் எடுத்து காட்டுகிறார்கள்’’னு ஆராய்ச்சியாளர்கள் இருளர்களைப்பத்தி எழுதியிருக்கிறதைச் சுருக்கமா சொல்லி முடிச்சுட்டு, மழை வரப்போறதைக்கூட முன்கூட்டியே சொல்வீங்களாமேனு கேட்டேன்.
 
பையில இருந்த வெத்தலையை எடுத்து, வாயில போட்டபடியே, பதில் சொல்ல ஆரம்பிச்சாரு, அந்த மூத்தவர் ‘‘எலிகளை வைச்சித்தான், அந்த வருஷம் நல்ல மழை பெய்யுமா, பெய்யாதான்னு சொல்லுவோம். அதாவது, எலிகள் ஏரிக்கரையோட வெளிப்பக்கம் வலைத்தோண்டி வைச்சா, அந்த வருஷம், பெருமழை பெய்யும். ஒரு வேளை, எலிகள் ஏரிக்கரையோட உள்பக்கமா வலையைத் தோண்டி வைச்சிதுன்னா, அந்த வருஷம் மழைக்கிடைக்காது. மழை பெய்யும் காலத்துல எலிவலை உள்ளே இருந்தா, எல்லா எலிகளும் தண்ணியில மூழ்கிடும். அதனாலத்தான், இயற்கையைக் கணிச்சி, எலிங்க வீட்டைக் கட்டிக்குது. மனுஷனுக்குத் தான், இன்னும் அந்த அறிவு எட்டல. இதை உன்னிப்பா கவனிச்சித்தான், அக்கம் பக்கத்துல உள்ள விவசாயிகள்கிட்ட, இந்தத் தகவலைச் சொல்லுவோம்’’னு அசால்ட்டா சொன்னாரு.

‘‘இன்னைக்கு எங்க வீட்டுல எலிக்குழம்புதான், நீங்களும் வந்து ஒரு வாய் சாப்பிடுங்க’’னு, கூட்டத்துல இருந்த பெண்மணி அன்போட அழைச்சாங்க.

ரொம்ப மகிழ்ச்சி, உயிர் உள்ள பொருளைத்தான், சாப்பிடறதைப் பழக்கமா வைச்சிருக்கேன்னு சொன்னேன்.

‘‘அட, எங்களைவிடப் பெரிய ஆளா, இருப்பீங்கபோல. சரி, உயிரோடவே எலியைக்கொடுக்கிறோம் சாப்பிடுங்க. எலிக்கறியைச் சாப்பிடறதைப்பார்க்கும் போது, சிலபேரு முகம் சுழிச்சிக்கிறாங்க. ஆனா, எலி மாதிரியான சுத்தமான பிராணியைப் பார்க்க முடியாது. அதுங்க தன்னோட உடலை, தினமும் சுத்தம் செய்துக்கும். சுத்தமான தீனியைத்தான் தின்னும். சரி, உங்களுக்குன்னு உயிர் உள்ள கொழுத்த எலியைக் கொடுக்கிறோம்’’னு சொன்னாரு, அந்த இளைஞர்.

தப்பா, நினைக்காதீங்க. உயிர் உள்ள பொருள்னு சொன்னது, கத்திரிக்காய், வெண்டைக்காய், மரவள்ளி, சர்க்கரைக்கிழங்கு... மாதிரியான காய்கறிகளைத்தான். இதுலத்தான், உயிர் உள்ள வைட்டமின் ஏ, பி, சி, டியெல்லாம் இருக்கும்னு மருத்துவ விஞ்ஞானிங்க சொல்றாங்கனு சொன்னேன்.

‘‘அப்படியா, இந்தா பிடிங்க உயிர் உள்ள சர்க்கரைவள்ளிக்கிழங்கு. எப்பவாது, எங்க வீட்டுப்பக்கம் வாங்க’’னு வாஞ்சையோட சொல்லிட்டு, ரெண்டு கிழங்கைக் கையில திணிச்சாரு, அந்த மூத்தவர். அதற்குள்ள ‘வேடந்தாங்கல் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ங்கிற, வரவேற்பு பலகை எட்டிப்பார்த்துச்சி, எல்லாருக்கும் வணக்கத்தை வைச்சிட்டு, என்னோட பாதையில நடக்க ஆரம்பிச்சேன்.

- மண்புழு மன்னாரு, ஓவியம்: வேலு