மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

ஓவியம்: வேலு

மாட்டுப்பொங்கலன்று காலையில் சீக்கிரமே வந்துவிட்டனர், ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும், ‘வாத்தியார்’ வெள்ளைச் சாமியும். சற்று நேரத்தில் வந்து சேர்ந்த ‘காய்கறி’ கண்ணம்மா, ஏரோட்டியின் மனைவியோடு சேர்ந்து அடுப்புக்கூட்டி பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மாடுகளைக் குளிப்பாட்டி பொட்டு வைத்து அழைத்து வந்து பொங்கல் பொங்கியதும் குலவையிட்டு வழிபாடு செய்தனர். மாடுகளுக்குக் கொஞ்சம் பொங்கலை ஊட்டிவிட்டு வந்தமர்ந்தார், ஏரோட்டி. மூவரும் கரும்பைச் சுவைத்துக் கொண்டே அன்றைய மாநாட்டைக் கூட்டினர்.

ஒரு செய்தியைச் சொல்லி மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார். “தமிழ்நாட்டுல சென்னை, நீலகிரி மாவட்டங்களைத் தவிர்த்து எல்லா மாவட்டங்கள்லயும் நெல் விளையுது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா பகுதிகள்ல அதிக அதிகளவு நெல் விளையுது.

இந்திய உணவுக்கழகம், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகம் மூலமா விவசாயிகள்ட்ட இருந்து நெல் கொள்முதல் பண்ணுது. இப்படிக் கொள்முதல் செய்ற நெல்லைத்தான் அரிசியா அரைச்சு ரேஷன் கடைகள்ல கொடுக்குறாங்க. போன 2018-ம் வருஷம் அக்டோபர் மாசத்துல இருந்து நெல் கொள்முதல் நடந்துட்டுருக்கு. இப்போதைக்கு 600 கொள்முதல் நிலையங்கள் மூலமா கொள்முதல் நடந்துட்டுருக்கு. இந்தக் கொள்முதல் நிலையங்கள்ல சாதா ரக நெல்லை ஒரு குவிண்டால் 1,800 ரூபாய்னும், உயர் ரக நெல்லை ஒரு குவிண்டால் 1,840 ரூபாய்னும் கொள்முதல் பண்றாங்க. பரவலா இப்போ நெல் அறுவடை தொடங்கியிருக்குறதால கூடுதலா 1,700 கொள்முதல் நிலையங்களைத் திறக்கப் போறாங்களாம். இதுல்லாம தேவைப்படுற இடங்கள்ல மாவட்ட கலெக்டர்கிட்ட அனுமதி வாங்கிக் கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்குறதுக்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு உணவுத்துறை மூலமா சுற்றறிக்கை கொடுக்கப்பட்டிருக்கு. ஆனா, கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்குறதுல வாணிபக்கழகம் மெத்தனமா இருந்து விவசாயிகளை அலைக்கழிக்கிறாங்கனு குற்றச்சாட்டுக் கிளம்பியிருக்கு.

விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

உதாரணமா, ஈரோடு மாவட்டத்துல எழுமாத்தூர், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகள்ல நெல் கொள்முதல் மையம் திறந்துருக்காங்க. ஆனா, அதிகம் நெல் பயிரிட்டுருக்குற மொடக்குறிச்சி பகுதிகள்ல கொள்முதல் மையம் இல்லை. அதனால, விவசாயிகள் ரொம்பத் தூரம் போக வேண்டியிருக்கு. இதே மாதிரி தமிழகம் முழுக்கவே பிரச்னைகள் இருக்கு. நெல் அதிகம் விளையுற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்தப்பகுதிகள்ல கொள்முதல் மையங்களை அமைக்கணுங்கிறதுதான் விவசாயிகளோட கோரிக்கை” என்றார், வாத்தியார்.

அடுத்தச் செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, “காரைக்குடியில் ‘சிக்ரி’னு சொல்லப்படுற ‘மத்திய மின்வேதியியல் ஆய்வகம்’ இயங்கிட்டுருக்கு. இந்த ஆய்வக விஞ்ஞானிகள், போன வருஷம் மண்வளப் பரிசோதனை உபகரணத்தைக் கண்டுபிடிச்சாங்க. இப்போ அதுல கூடுதலா, ‘ஜி.பி.எஸ்’ வசதியை இணைச்சுருக்காங்க. இதன் மூலமா விவசாயிகளே தங்களோட நிலத்து மண்ணோட கார அமிலத்தன்மை, மின் கடத்தும் திறன்; மண்ணுல இருக்குற நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்துக்களோட அளவு எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முடியும். மண்ணை, சாம்பிள் எடுத்து வேளாண்துறை அலுவலகத்துல கொடுத்துப் பரிசோதனை முடிவுக்காக நாள் கணக்காகக் காத்துட்டுருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. விவசாயிகளே நினைச்ச நேரத்துல மண்ணைப் பரிசோதனை செஞ்சு தேவையான சத்துக்களை மண்ணுக்குக் கொடுத்துட முடியும். இந்தக் கருவியில் ஜி.பி.எஸ் வசதி இருக்குறதால, எந்த இடத்துல மண்ணைப் பரிசோதனை செஞ்சோம்கிற விவரத்தையும் துல்லியமாகத் தெரிஞ்சுக்க முடியும். இந்தக்கருவியைக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்றதுக்கு மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம் ஏற்பாடு செஞ்சுட்டுருக்கு” என்றார்.

அந்தச் சமயத்தில் சுக்குமல்லி காபி தயாரித்து மூவருக்கும் கொண்டு வந்து கொடுத்தார், ஏரோட்டியின் மனைவி. அதைப் பருகிக்கொண்டே அடுத்தச் செய்தியை ஆரம்பித்தார், வாத்தியார்.

“உடுமலைப்பேட்டை பக்கத்துல இருக்குற அமராவதிப் பகுதியில் ‘வனத்துறை மரபியல் ஆராய்ச்சி மையம்’ செயல்பட்டுட்டுருக்கு. இந்த ஆராய்ச்சி மையத்துல, மூங்கில் நாற்றுகள், மரக்கன்றுகள்னு உற்பத்தி செஞ்சு விவசாயிகளுக்குக் கொடுத்துட்டு இருக்காங்க. வருஷம் முழுக்கக் காய்க்கக்கூடிய எலுமிச்சை மரக்கன்றுகளையும் இங்க உற்பத்தி செஞ்சுட்டு இருக்காங்க.

காய்க்குற பருவத்துல இருந்த பல ரக எலுமிச்சை மரங்கள்ல இருந்து திசுக்களை எடுத்து ஒருங்கிணைச்சு நாற்றுகளை உற்பத்தி செஞ்சு மரமா வளர்த்துருக்காங்க. அந்த மரத்துல இருந்து இப்போ நாற்று உற்பத்தி பண்றாங்களாம். இந்த ரக எலுமிச்சை மரங்கள்ல வருஷம் முழுக்கக் காய் காய்க்குமாம். எப்பவுமே மரத்துல பூ, பிஞ்சு, காய், பழம்னு இருந்துட்டே இருக்கும். வருஷம் முழுக்கக் காய்ச்சாலும்... வழக்கமான எலுமிச்சை சீசன்ல அதிகளவு காய்க்குமாம். இந்த ரக நாற்றுகள் தேவைப்படுற விவசாயிகள் முன்பதிவு செஞ்சு நாற்றுகளை வாங்கிக்க முடியுமாம்” என்றார்.

“எங்கிட்டயும் ஒரு உடுமலைப்பேட்டை பகுதி செய்தி இருக்கு” என்ற ஏரோட்டி, “அமராவதி அணை மூலமா திருப்பூர், கரூர் மாவட்டங்கள்ல 54,367 ஏக்கர் பரப்புக்கு பாசன வசதி கிடைச்சுட்டுருக்கு. அமராவதி பழைய ஆயக்கட்டுப் பாசனம், எட்டு ராஜவாய்க்கால்களுக்குட்பட்ட 7,520 ஏக்கர் பரப்பு நிலங்களுக்கு, முதல் போக நெல் சாகுபடிக்காக, போன வருஷம் ஜூலை மாசம் 23-ம் தேதி தண்ணீர் திறந்து, நவம்பர் 19-ம் தேதி நிறுத்திட்டாங்க. போன வருஷம் நாலு முறை அணை நிரம்பினதால, ரெண்டாம் போக நெல் சாகுபடிக்கும் தண்ணீர் திறந்துடுவாங்கங்கிற நம்பிக்கையில்... கல்லாபுரம், ராமகுளம் பகுதியில 500 ஏக்கர் பரப்புல நடவு செய்றதுக்காக விவசாயிகள் நாற்றங்கால் அமைச்சுருக்காங்க.

இப்போ கரூர் தாலூகாவுல இருக்குற 10 பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால்களுக்குட்பட்ட நிலங்களுக்கும், புதிய ஆயக்கட்டு பாசனத்துல இருக்குற நிலங்களுக்கும் பாசன காலத்தை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிச்சுருக்காங்க. வடகிழக்குப் பருவமழை சரியாகக் கிடைக்காத சூழ்நிலையில் அணையில இருந்து ஆயக்கட்டுப்பகுதிகளுக்குத் தொடர்ந்து தண்ணீர் கொடுக்குறதால, அணையில நீர்மட்டம் குறைஞ்சுக்கிட்டே இருக்கு.

அதனால, பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசனத்தை நம்பி அமைச்ச நாற்றங்கால்கள்ல நாற்றுகள் வீணாகிட்டுருக்கு. குறைஞ்சபட்சம் அறுபது நாளுக்காவது தண்ணீரை எங்களுக்குத் திருப்பிவிட்டாதான் ரெண்டாம் போகச் சாகுபடியை செய்யமுடியும்னு விவசாயிகள் கவலையில இருக்காங்க” என்றார்.

அந்த நேரத்தில், சூரியனை மறைத்திருந்த மேகங்கள் சற்று விலக, வெயில் சுள்ளென்று அடிக்கத் தொடங்கியது. ‘மாடுகளுக்குத் தண்ணி காட்டிட்டு இடம் மாத்திக் கட்டிட்டு வந்துடுறேன்’ என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி கிளம்ப... அன்றைய மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.