மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!

மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!

மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!

விட்டக்குறை, தொட்டக்குறைப்போல, இருளர்கள் சம்பந்தமான தகவல், பொங்கல் அன்னிக்கும் கிடைச்சது. அதாவது, வேடந்தாங்கல் பகுதியில இருந்த நண்பரோட தோட்டத்துக்குப் போனவுடனே, எனக்கு இளநீர் கொடுத்து உபசரிக்க நினைச்சாங்க. காலையில வெறும் வயித்துல இளநீரைக் குடிச்சா, வயிற்றுப்புண் வந்து அல்சர் உருவாகிடும், அதனால, தேங்காயை வெட்டிக்கொடுங்க சந்தோஷமா சாப்பிடுறேன்னு சொன்னேன். அவங்க தோட்டத்துல இருந்த தென்னை மரத்துக்கு அரை நூற்றாண்டு வயசு இருக்கும். நெடு நெடுன்னு வளர்ந்து நின்னுருந்திச்சி.

தோட்டத்துல வேலை செய்ற ஆளைக் கூப்பிட்டு, தேங்காய் வெட்டச் சொன்னாங்க. ‘‘ஐயா, எனக்கு இந்த மரத்துல ஏறுன்னா, கையும் காலும் உதறுது. நம்ம வேலி ஓரத்துல இருளருங்க எலிப் பிடிச்சிக்கிட்டிருக்காங்க, அவங்களைக் கூப்பிட்டு, மரம் ஏறச்சொல்லலாம்’’னு யோசனை சொன்னாரு. சரின்னு சொன்னவுடனே, ஒரு விசில் அடிச்சாரு, ரெண்டு இளைஞர்கள், ஒரு முதியவர்னு மூணு பேர் வந்தாங்க.

ஓர் இளைஞரைத் தென்னை மரத்துல ஏறச்சொன்னாங்க, வந்த வேகத்துல, அந்த இளைஞர் மரத்துல மடமடன்னு ஏறி, தேங்காயைப் பறிச்சிப்போட்டாரு. சில நிமிடத்துல, சுவையான தேங்காயை வெட்டி சாப்பிடறதுக்கு எல்லாருக்கும் கொடுத்தாங்க. அவங்க வேலை செய்யுற திறனைப் பார்க்கும்போது, ஆச்சர்யமா இருந்துச்சி. திறமையா வேலை செய்யத் தெரிஞ்சிருக்கிறதால, சுத்துப்பட்டுக் கிராமத்துல விவசாய வேலைன்னா, இருளர்களைத்தான் அழைக்கிறதா சொன்னாங்க. நெல் அரவை இயந்திரம் புழக்கத்துல வராத, அந்தக் காலத்துல உரல்லதான் நெல்குத்தி, அரிசி ஆக்குவாங்க. அப்படி நெல் குத்துற வேலைக்கு இருளர்களைத்தான் அழைப்பாங்களாம்.

மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!

எனக்குக் கொடுத்த, சுவையான தேங்காயைச் சாப்பிட்டு முடிக்குற நேரத்துல, அந்த முதியவரான இருளர் முகம் பரபரப்பானதைக் கவனிச்சேன். எல்லோரையும் செய்கையால அப்படியே இருக்கச்சொன்னாரு.
‘‘ஐயா, கொஞ்ச நேரம் அப்படியே அசையாம இருங்க. உங்களுக்கு ஏதாவது வாசனை வருதா’’னு குழுவில இருந்த இளைஞர் கேட்டார்.

ஆமாம், உளுத்தம் பருப்பை ஊற வைக்கும்போது, வரக்கூடிய வாசனைப்போல இருக்குன்னு சொன்னேன்.

உங்க மூக்குக்கு வாசனைப் பொடியும் வாயில நாட்டுச்சர்க்கரையும்தான் போடணும். அவ்வளவு கச்சிதமா சொல்லிட்டீங்க. இருங்க இந்த வாசனை எங்கிருந்து வருதுன்னு, இப்போ தெரிஞ்சிடும்’’னு சிரிச்சிக்கிட்டே அந்த இளைஞர் சொன்னாரு.

மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!

சில நொடியில, வேலி ஓரமா இருந்த புதர்ல இருந்து, ஒரு நல்ல பாம்பு எங்க கண் முன்னாலயே, சாவகாசமா கடந்து போச்சி. பாம்பைப் பார்த்தவுடனே, எங்களுக்குத்தான் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டுச்சி. ஆனா, அந்த மூணு பேரும், ஏதோ விருந்தாளியைப் பார்க்குற மாதிரி ஆவலா பார்த்துக்கிட்டிருந்தாங்க. அந்த மூத்தவர் ‘‘நல்ல பாம்பு இருக்கக் கூடிய பகுதியில, உளுத்தம் பருப்பைத் தண்ணியில ஊற வைச்சா வெளிவரும் வாசம் போல அடிக்கும். அதை வைச்சி, அந்தப் பகுதியில நல்ல பாம்பு இருக்குன்னு தெரிஞ்சிக்குவோம். இப்படி ஒவ்வொரு பாம்புக்கும் தனி தனி வாசம் உண்டு’’னு சொன்னாரு.

அந்த மூணு பேருக்கும் பொங்கல் பரிசா, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச தேங்காய், வாழைப்பழம், முருங்கைக்கீரைனு கை நிறைய கொடுத்து அனுப்பினோம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இருளர்களைப் பத்தி இன்னும் கூடுதல் தகவல் தெரிஞ்சிக்கணும்னு முடிவு செய்தேன். கூடவே பொங்கல் விடுமுறையை உபயோகமா கழிக்கத் திட்டமிட்டேன். செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் சாலையில உள்ள தண்டரை கிராமத்துக்குப் போக முடிவு செய்தேன். இந்தத் தண்டரையைப் பத்தி, பத்து வருஷத்துக்கு முன்னாடி அடிக்கடி செய்தி வெளியாகும். அந்தச் சமயத்துல தமிழ்நாடு சுற்றுலாத்துறைச் செயலரா இறையன்பு ஐ.ஏ.எஸ் இருந்தாரு. அப்போ, ‘எக்கோ டூரிஸம்’ங்கிற உயிர்ச்சூழல் சுற்றுலாவைத் தண்டரை கிராமத்தை மையமா வைச்சு தொடங்கினாரு. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசுகூடப் பல விருதுகளைக் கொடுத்தாங்க. ஆட்சி மாறி, காட்சி மாறவும் தண்டரை பத்தின தகவல்கள் வெளியில எட்டிப்பார்க்கிறது அரிதா இருக்கு.

மக்களைப் பத்தியும் இயற்கையைப் பத்தியும் படிக்கக் கிளம்பும்போது, பொதுவாகனத்தைத் தான் பயன்படுத்துறது வழக்கம். அப்போத்தான், அந்த மக்களோட மனநிலையைப் புரிஞ்சிக்க முடியும். இந்தியா முழுக்கப் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்திருக்கேன். அந்த வகையில, இந்தியாவுல உள்ள அழகும் எழிலும் நிறைஞ்ச ரயில் நிலையங்களைப் பட்டியல் போட்டா முதல் பத்து இடத்துக்குள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம் இடம் பிடிக்கும். ஆனா, இந்தியாவுலுள்ள மோசமான பேருந்து நிலையங்களைப் பட்டியலிட்டா, முதல் பத்து இடத்துக்குள்ள செங்கல்பட்டுப் பேருந்து நிலையம் இடம் பிடிக்கலாம்.

இப்பேர்ப்பட்ட செங்கல்பட்டுல இருந்து திருக்கழுக்குன்றம் பேருந்துல ஏறி, 10 கிலோ மீட்டர் தூரத்துல உள்ள தண்டரையில போய் இறங்கினேன். தண்டரைக்குப் போறதுக்கு முன்னாடி, அதோட முன்கதையைத் தெரிஞ்சிக்கிறது நல்லது.  ரோமுலஸ் விட்டேக்கரை தெரியுமா? தெரியாவிட்டாலும் குற்றம் கிடையாது. இவரால் உருவாக்கப்பட்ட கிண்டி பாம்புப்பண்ணையையும் கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கிற முதலைப் பண்ணையையும் பத்தி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பிருக்கு.

மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!

அரசாங்கம் பாம்பு பிடிக்கிறது சட்ட விரோதம்னு அறிவிச்ச நேரம். இருளர் இனத்தைச்சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வேலையிழந்தாங்க. இவங்களோட மறுவாழ்வுக்காக, பல வருசத்துக்கு முன்னாடி, கிண்டி பாம்புகள் ஆராய்ச்சிப் பண்ணையையும் தண்டரை கிராமத்தில இருளர் பழங்குடி பெண்களின் மேம்பாட்டிற்கான (Irula Tribal Womens Welfare Society -ITWWS) அமைப்பையும் விட்டேக்கர் உருவாக்கினாரு. இந்த அமெரிக்கர் எழுதிய ‘இந்திய பாம்புகள்’ புத்தகத்துல பாம்புகள் சம்பந்தமா ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்குதுங்க.

சுற்றிலும் இயற்கை சூழ்ந்த அந்தப் பகுதியில காலடி எடுத்து வைச்சவுடனே, ஆரோக்கியமான காற்றைச் சுவாசிக்க முடிஞ்சது. அதுக்கான காரணத்தை, அந்த இருளர் கூட்டுறவு அமைப்பு வளாகத்துக்குள்ள போனவுடனேதான் பளீச்சின்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. அந்த வளாகம் முழுக்க மூலிகைச் செடிகளும் அரிய மர வகைகளும் நிறைஞ்சு கிடந்துச்சி. இந்த இயற்கையை ரசிக்கவும் இருளர் மக்கள்கிட்ட, மூலிகையை வாங்கவும், விவரம் தெரிந்த சில பேரு வந்து போறதைப் பார்க்க முடிஞ்சது. அங்கவுள்ள குடில்ல, முப்பது பேர் அமர்ந்து விவாதம் நடத்துற மாதிரியான புகைப்படங்கள் இருந்துச்சி.

‘‘இங்க உள்ள அமைதியையும் தூய்மையையும் பார்த்த சில தனியார் நிறுவனங்கள், தங்களோட பணியாளர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி கொடுக்க வார விடுமுறை நாள்ல தங்கியிருப்பாங்க. பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூட, இங்க இலக்கியச் சந்திப்பு நடத்தியிருக்காரு’’னு அங்க இருந்த இருளர் பெண்மணி சொல்லிமுடிச்சிட்டு, சூடான, சுவையான மூலிகைத் தேநீரைக் கொடுத்தாங்க.

-  மண்புழு மன்னாரு,  ஓவியம்: வேலு