மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

தமிழ்நாட்டில் குறைந்த விலைக்கு நிலம் கிடைக்குமா ?படம்: தி. விஜய்

பொங்கல் சிறப்பிதழ்

##~##

''விவசாயி என்றால், நிச்சயம் அவரிடம் மாட்டு வண்டி இருக்கும் என்பது அந்தக் காலம். இன்று மாட்டு வண்டிகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டதே?''

கே.குமுதா, திருச்சி.

மூத்த கால்நடை மருத்துவரும், தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளருமான மருத்துவர் காசி.பிச்சை பதில் சொல்கிறார்.

''அந்தக் காலத்தில் ஒவ்வொரு ரக மாட்டின் தன்மைக்கு ஏற்ப அவற்றை தகுந்த வகையில் பயன்படுத்தினர் விவசாயிகள். உழவுக்கும், வண்டிகளுக்கும் தனித்தனி ரக மாடுகளைப் பயன்படுத்துவதில் தெளிவாகவே இருந்தனர். ரேக்ளா வண்டி, வில் வண்டி, சுமை வண்டி... என்று வித, விதமான மாட்டு வண்டிகள் நம்மிடம் இருக்கின்றன. காங்கேயம் போன்ற பெரிய மாடுகளை, சுமை இழுக்கும் வண்டியில் பூட்டுவார்கள். புங்கனூர் குட்டை என்ற ரகத்தை ரேக்ளா வண்டியில் ஓட்டுவார்கள். மணப்பாறை ரகத்தில் சற்று குட்டையான மாடுகளை வில் வண்டியில் பூட்டுவார்கள்.

மாட்டு வண்டி சவாரி என்பது, மனதுக்கும், உடலுக்கும் குதூகலம் கொடுக்கக் கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில், சிறுநீரக கல் உள்ளவர்களை, குதிரை வண்டியில் சவாரி செய்யச் சொல்வார்கள். குதிரை வண்டி குலுங்கும்போது, இயற்கையாகவே, சிறுநீரகக் கல் கரைந்துவிடும் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

நீங்கள் கேட்டவை

இதேபோலத்தான் மாட்டு வண்டி சவாரியில் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படும். ஆனால், இதுகுறித்த ஆராய்ச்சி ஏதும் நடைபெறவில்லை. ஒருவேளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தத் தகவல்கள், நம்மிடம் வந்து சேராமலேகூட போயிருக்கலாம்.

மாடுகள் நிலத்தில் ஓடினால், அந்த நிலம் நன்றாக விளையும் என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்து வைத்துள்ளார்கள். அதனால்தான் 'அதிர ஓடினால், முதிர விளையும்’ என்ற பழமொழி உருவானது. பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக மாட்டு வண்டி பந்தயம் நடக்கும். அதற்கு தனி மைதானம் எல்லாம் கிடையாது. வயல்வெளியில்தான் ஓடும். அப்படி மாடுகளின் குளம்புகள் பட்ட நிலத்தில், பயிர்கள் நன்றாக விளையும். மாட்டுக் குளம்புகளில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இருப்பதால், அவை மண்ணில் கலந்துவிடுகின்றன. இதனால் விளைச்சலும் கூடுகிறது. இனி வரும் தலைமுறையாவது, மாடுகள் மற்றும் மாட்டு வண்டிகளின் மகத்துவத்தைப் புரிந்துகொள்வது, எதிர்கால நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

டீசல், பெட்ரோல் போன்றவற்றின் அதீத பயன்பாடு காரணமாகத்தான், இன்றைக்கு புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களையும் நாம் அனுபவிக்கிறோம். எனவே, குறைந்தபட்சம் உழவு போன்ற வேலைகளுக்காவது மாடுகளையும், மாட்டு வண்டிகளையும் பயன்படுத்த விவசாயிகள் முன்வந்தால், அது சுற்றுச்சூழலுக்கு செய்யும் உதவியாகவும் இருக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 93450-09288.

''எங்கள் பகுதி நீர் நிலைகளில் 'ஆகாயத் தாமரை’ வளர்ந்து கிடக்கிறது. அதனால் பாதிப்பு ஏற்படுமா? அதை உபயோகமாக மாற்ற முடியுமா?''

கா. வீரசேகரன், வானவன்மகாதேவி.

இயற்கை விவசாய ஆலோசகர்... சுவாமி. அன்பு சுந்தரானந்தா பதில் சொல்கிறார்.

''பச்சைக் கம்பளம் விரித்தது போல கண்களுக்கு விருந்தளிக்கும் நீர்த்தாவரங்களில் ஆகாயத் தாமரையும் ஒன்று. இது, தென் அமெரிக்காவின் அமேசான் படுகையில் இருந்து உலகுக்குப் பரவிய தாவரம். ஆங்கிலத்தில் 'வாட்டர் ஹயச்சின்த்' (Water hyacinth)என்றழைக்கப்படும் ஆகாயத் தாமரையின் தாவரவியல் பெயர்... 'இச்சோர்னியா கிராஸ்ஸிப்ஸ்' (Eichhornia crassipes).

குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்தி விடுகின்றன. அதனால், இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது. கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால், நீர்நிலைகளில் இருக்கும் நீரின் அளவும் வெகுவாக குறைந்துவிடும். அடர்ந்த புதர் போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால், நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சி தடுக்கப்படும். நீர்வாழ் உயிரினங்களைப் பெருக விடாமலும் தடுக்கிறது. அதனால், இதை 'மிதக்கும் நீர்க்களை’ என்றும் சொல்கிறார்கள்.

நீங்கள் கேட்டவை

இப்படி பலவிதமானக் குறைகள் இருந்தாலும், ஆகாயத் தாமரை மூலம் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதாவது, ஆகாயத் தாமரை நீரில் உள்ள ஈயம், ஆர்சானிக், பாதரசம்... போன்ற ரசாயனங்களை உறிந்து, நீரைச் சுத்திகரிக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

தற்போது, இச்செடியைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு, காகிதம், கயிறு, நூல் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தவிர, தஞ்சாவூர் பகுதியில் ஆகாயத் தாமரைச் செடிகளை வாழைக்கு மூடாக்காகப் பயன்படுத்தி நல்ல பலன் பெற்று வருகிறார்கள். இதில் சாம்பல் சத்து அதிகம் இருப்பதால், வாழையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. அதனால், இதை மற்ற பயிர்களுக்கும் மூடாக்காகப் பயன்படுத்தலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 099446-91181.

''நாங்கள் சிங்கப்பூரில் வசித்து வருகிறோம். தமிழ்நாட்டில் நிலம் வாங்கி விவசாயப் பண்ணை தொடங்க விரும்புகிறோம். எந்தப் பகுதியில் விலை குறைவாக நிலம் கிடைக்கும். பண்ணை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லுங்கள்?''

ரிபாய், சிங்கப்பூர்.

பழநியில் கூட்டுப்பண்ணை நடத்தி வரும் புகழேந்தி பதில் சொல்கிறார்.

''நீங்கள், 'வெளிநாடு வாழ் இந்தியர்’ என்றால், உங்கள் பெயரில் நிலம் வாங்க முடியாது. ஆனால், இந்தியாவில் உள்ளவர்களுடன் கூட்டுப் பண்ணைகளில் இணைந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் மற்ற தொழில்களைப் போல, விவசாயமும் லாபகரமானத் தொழில் என்ற விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. அதனால், நிலங்களின் விலை எகிறிக் கிடக்கிறது. சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டும், ஏக்கர் 1 லட்ச ரூபாய் என்ற அளவில் தரிசு நிலங்கள் கிடைக்கின்றன. சாலை வசதி, நிலத்தடி நீர் போன்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் உள்ள இடங்களை, ஏக்கர் மூன்று லட்ச ரூபாய் என்ற விலைக்குக் குறைவாக வாங்க முடியாது.

நீங்கள் கேட்டவை

முடிந்தவரை, உங்கள் சொந்த ஊர் பகுதியில் நிலம் வாங்குவது பாதுகாப்பானது. நில விற்பனையில் பல மோசடிகள் நடப்பதால், வெளியூரில் வாங்கும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவிர, பொதுப் பாதை, பொதுக் கிணறு போன்றவற்றைப் பற்றிய குறிப்புகள் பத்திரத்தில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

வில்லங்கச் சான்றிதழ், சட்ட ஆலோசனை போன்றவை திருப்தியாக இருக்கும்பட்சத்தில்தான் நிலம் வாங்குவதைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டும். அதேபோல அருகில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளின் ஆழம், தண்ணீரின் அளவு போன்றவற்றையும் விசாரிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் முப்பது கிலோ மீட்டர் தூரத்துக்குள் தாலூகா அளவுக்கு உள்ள நகரம் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், அவசரத் தேவைகளுக்கும், பண்ணையில் விளையும் பொருட்களை விற்பனை செய்யவும் வசதியாக இருக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 094480-54831.

நீங்கள் கேட்டவை

''மர செக்கில் எண்ணெய் ஆட்டுவதற்கும், இயந்திரம் (ரோட்டரி) மூலமாக எண்ணெய் ஆட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?''

கே. லதாராஜன், சென்னை.

மர செக்கில் எண்ணெய் ஆட்டுவதில் அனுபவம் வாய்ந்த மதுரை, சமயநல்லூர், செந்தில்குமார் பதில் சொல்கிறார்.

''அந்தக் காலத்தில், மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்... போன்றவற்றை ஆட்டினார்கள். காலப்போக்கில் கால்நடைகள் குறைந்து போனதாலும், மர செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழில் நலிவடைந்து விட்டது. இந்த செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், நாங்கள் பழையபடியே மர செக் மூலமாகவே தற்போதும் எண்ணெய் ஆட்டி வருகிறோம். மாட்டுக்குப் பதிலாக, மோட்டார் பொருத்தியிருக்கிறோம் அவ்வளவுதான். இப்படி மர செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும்.

நீங்கள் கேட்டவை

ஆனால், முழுக்க முழுக்க இயந்திரம் (ரோட்டரி) மூலமாக எண்ணெய் ஆட்டும்போது... கைகளில் எண்ணெயைத் தொட்டு பார்க்க முடியாத அளவுக்கு வெப்பத்துடன் இருக்கும். எண்ணெய், இப்படி ஒரேயடியாக வெப்பமாகி விட்டால், அதன் சத்துக்கள் குறைந்துவிடும் என்பதுதான் உண்மை. அதனால்தான், 'ஒரு தடவை பலகாரம் செய்வதற்காக பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக் கூடாது' என்று சொல்கிறார்கள். சொல்லப்போனால், இத்தகைய எண்ணெயை சாப்பிடுவதன் மூலமாக வேறு பல சிக்கல்களும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இயந்திரத் தயாரிப்பில் வரும் எண்ணெய் பார்ப்பதற்கு பளீர் என்று இருக்கும். இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரைதான் தாங்கும்.

மர செக்கு எண்ணெய், பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாகவே இருக்கும். ஆனால், நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்கு கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மர செக்கு எண்ணெயை சாப்பிட்டால்... அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது. உங்கள் அப்பா அம்மாவைக் கேட்டுப் பாருங்கள் இந்த உண்மையைச் சொல்வார்கள்!''

தொடர்புக்கு, செல்போன்: 99942-70338.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை' பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PVQA (space)- உங்கள் கேள்வி (space)உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.