மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!

மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!

மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!

விதைப்பதற்காக எடுத்து வைத்திருந்த நிலக்கடலையைக் காயவைத்து, எடுத்து மூட்டை கட்டிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. சற்று நேரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர அன்றைய மாநாடு கூடியது.

வழக்கம்போல ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார். “இலவச மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகளுக்கான பல விஷயங்களுக்காகப் போராடுன நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் திறந்துருக்காங்க. விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்குறதுக்காக அந்தக்காலத்துல ‘கோவை வடக்கு தாலுக்கா விவசாயிகள் சங்கம்’னு ஆரம்பிச்சாங்க. அந்தச் சங்கத்துக்கு 1972-ஆம் வருஷம் தலைவரானார், நாராயணசாமி நாயுடு. அப்போ இலவச மின்சாரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த ‘கட்டை வண்டி போராட்டம்’ இன்றும் மறக்க முடியாதது. தமிழ்நாடே ஸ்தம்பிக்கிற அளவுக்கு அந்தப்போராட்டம் நடந்துச்சு.

மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!

நாடு முழுக்க அதிர்வை ஏற்படுத்துன அந்தப் போராட்டத்தைப் பத்தி அப்போ ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைலகூடச் செய்தி வெளிவந்துச்சு. நாராயணசாமி நாயுடு, 1984-ஆம் வருஷம் இறந்துட்டார். அவர் இறக்குற வரைக்குமே விவசாயிகளுக்கான பல போராட்டங்கள்ல பங்கெடுத்து குரல் கொடுத்துட்டுருந்தார். அதுக்கப்புறம் விவசாயிகள் சங்கம் ஆறேழாகப் பிரிஞ்சாலும், எல்லாருமே நாராயணசாமி நாயுடுவைத் தலைவராத்தான் கொண்டாடுறாங்க. விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலரும் நாராயணசாமி நாயுடுவுக்கு மணி மண்டபம் கட்டணும்னு இருபது வருஷத்துக்கு மேல தொடர்ந்து கோரிக்கை வெச்சுட்டுருந்தாங்க.
2011-ஆம் வருஷம் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா, சட்டசபையில 110-ம் விதியின் கீழ்... ‘நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் கட்டப்படும்’னு அறிவிச்சார். அதன்படி, ஒன்றரைக்கோடி ரூபாய் பணம் ஒதுக்கி, 2,109 சதுர அடி பரப்புல செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் அமைச்சுருக்காங்க. அதைப் பிப்ரவரி 6-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வெச்சுருக்கார்” என்றார்.

“அரசாங்கமே நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் அமைச்சுருக்குறது, விவசாயிகளுக்குக் கிடைச்ச பெருமை” என்று சொன்ன ஏரோட்டி, அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

“ஒவ்வொரு மாவட்டத்துலயும் 10 பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்து அந்தப் பள்ளிக்கூடங்கள்ல ‘மூலிகைப் பூங்கா’ அமைக்கிறதுக்குத் தமிழக வனத்துறை ஏற்பாடு செஞ்சுருக்கு. மூலிகைகள் பத்தின விழிப்பு உணர்வு இல்லாததால, வீட்டைச்சுத்தி இருக்குற மூலிகை செடிகளைக்கூட நம்மால அடையாளம் காண முடியலை. எல்லாச் செடிகளையுமே களைச்செடிகளாத்தான் பார்க்குறோம். அதனால, பள்ளிக்கூடத்துல படிக்கிறப்பவே குழந்தைகளுக்கு மூலிகைகளைப் பத்திச் சொல்லித்தரணும்னு முடிவு பண்ணி இந்தத் திட்டத்தை ஆரம்பிச்சுருக்காங்க. தேர்வு செய்ற பள்ளிக்கூடங்களுக்குக் காட்டுமல்லி, காட்டு இஞ்சி, கருநொச்சி, பிரம்பு, முருங்கை, வேம்பு, கற்றாழை, கீழாநெல்லி உட்பட இருபதுக்கும் மேற்பட்ட மூலிகை நாற்றுகளைக் கொடுத்து நடவு செய்ய வெக்கப் போறாங்க. அந்த மூலிகைகளோட பெயர், அதனால, குணமாகுற வியாதிகள் பத்தியும் அறிவிப்புப் பலகை வைக்கப் போறாங்க. அந்தப் பள்ளிக்கூட மாணவர்களே அந்தப் பூங்காவைப் பராமரிப்பாங்களாம்” என்றார்.

மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!

“நல்ல விஷயம்தான்...” என்ற காய்கறி, கூடையில் இருந்து ஒரு தர்பூசணிப் பழத்தை எடுத்து கீற்றுகளாக நறுக்கி ஆளுக்கு இரண்டாகக் கொடுத்தார். அதை ருசித்துக் கொண்டே அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சுத்தி புவனகிரி, கீரப்பாளையம்னு நிறைய ஊர்கள்ல நெல் சாகுபடி அதிகமா நடக்குது. இந்தப்பகுதிகள்ல கிட்டத்தட்ட 50,000 ஏக்கர் பரப்புல சம்பாப்பருவத்துல நெல் சாகுபடி செஞ்சுருந்தாங்க. இப்போ அறுவடை நடந்துக்கிட்டுருக்கு. ஆனா, போதுமான அளவுக்குக் கொள்முதல் நிலையங்களை அரசாங்கம் அமைக்காததால, நிறைய விவசாயிகள் வியாபாரிகளுக்குத்தான் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலையில இருக்குறாங்க. தூரமா இருந்தாலும் பரவாயில்லைனு, ‘மார்க்கெட் கமிட்டி’க்கு நெல்லை எடுத்துட்டுப் போனாலும், அங்க எடைபோடறதுக்கே ரெண்டு மூணு நாள் காத்திருக்க வேண்டியிருக்குதாம். அதுக்கப்புறம் பணம் பட்டுவாடா செய்றதுக்கும் தாமதப்படுத்துறாங்களாம். இப்படி அலைக்கழிக்கிறதால நிறைய விவசாயிகள் உடனடியா பணம் வேணுங்கிறதுக்காக வியாபாரிகளுக்குத்தான் விற்பனை செய்றாங்களாம். விவசாயிகளோட அவசரத்தைச் சாக்கா வெச்சு ஒரு மூட்டை (62 கிலோ) நெல்லை 1,000 ரூபாய்க்குதான் வியாபாரிகள் கொள்முதல் செய்றாங்களாம். அதனால, நெல் விவசாயிகள் ரொம்பவும் மன உளைச்சல்ல இருக்குறாங்களாம்” என்றார்.

தன் பங்குக்கு ஒரு செய்தியைச் சொன்னார், காய்கறி. “பொங்கல் பண்டிகைக்கு அப்புறம் கொத்தமல்லி, கறிவேப்பிலை, தக்காளி, கத்திரிக்காய்னு எல்லாத்துக்குமே சடார்னு விலை இறங்கிப்போச்சாம். வரிசையா கல்யாண முகூர்த்தங்கள் இருந்தும் காய்கறிகளோட விலை சரிஞ்சுட்டதால ரொம்பக் கவலையில இருக்குறாங்க, காய்கறி விவசாயிகள். வழக்கமா இந்தச் சீசன்ல கிடைக்குற விலையைவிட இந்த வருஷம் ரொம்பக் குறைவான விலைதான் கிடைக்குதாம். குறிப்பா, கொத்தமல்லிக்கெல்லாம் பறிப்புக் கூலிக்குக்கூடக் கட்டுபடியாகாத நிலை வந்துடுச்சாம். அதனால, நிறைய விவசாயிகள் கொத்தமல்லியைப் பறிக்காம விட்டுட்டாங்களாம். உடுமலைப்பேட்டைச் சந்தையில, ஜனவரி மாசக் கடைசியில கிலோ 30 ரூபாய்னு விற்பனையான தக்காளி... இந்த வாரம் எட்டு ரூபாய்க்கும் கீழேதான் விற்பனையாகுதாம். பீன்ஸ், 55 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகக் குறைஞ்சுடுச்சு. கத்திரிக்காய் 40 ரூபாய்ல இருந்து 25 ரூபாயாகக் குறைஞ்சுடுச்சு. அதே மாதிரி 40 ரூபாய்க்கு விற்பனையாகிட்டுருந்த அவரைக்காய் இப்போ 15 ரூபாய்க்குதான் விற்பனையாகுது” என்றார், காய்கறி.

அந்த நேரத்தில், “மாடுகளுக்குத் தண்ணி காட்டிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக் கொண்டே ஏரோட்டி எழுந்துச்செல்ல, அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

- படம்: தி.விஜய், ஓவியம்: வேலு