மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

அம்மா கொடுத்த

பொங்கல் சிறப்பிதழ்

##~##

ஆட்டுக்குட்டிக்கு வாஞ்சையோடு தழையை நீட்டிக் கொண்டிருந்தார் ஏரோட்டி! 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, அந்த பகுதியில் உலாத்திக் கொண்டிருக்க... வழக்கம்போல கூடையோடு வந்து சேர்ந்தார் 'காய்கறி' கண்ணம்மா!

வந்த வேகத்திலேயே... ''என்னய்யா ஏகாம்பரம்... இன்னிக்கு காலையிலயே ஆளு ஜம்முனு இருக்கே... குளிச்சியாக்கும்'' என்று நக்கலாகக் கேட்டபடியே கூடையை இறக்கி வைக்க...

''உன்னைய மாதிரி வாளியில தண்ணியைப் பிடிச்சு வெச்சு ரூமுக்குள்ளாற குளிக்கறவன்னு நினைச்சியா? நித்தமும் தோட்டத்துல மோட்டாரைப் போட்டுவிட்டு, மணிக்கணக்கா குளிக்கிறவன் நான். தண்ணி 'பொதபொத'னு கொட்டுறது, சும்மா, குத்தாலத்துல குளிக்கிற மாதிரி சுகமா இருக்கும். தெரியும்ல'' கொஞ்சம் சிடுசிடுப்பு காட்டினார் ஏரோட்டி.

''யோவ்... வெளையாட்டுக்குச் சொன்னா.... இந்த கோவம் காட்டுறே?'' என்று அலுத்துக் கொண்ட காய்கறி,

மரத்தடி மாநாடு

''இந்தா, ரெண்டு பேருக்கும் பால் பொங்கல் கொண்டு வந்துருக்கேன்... சாப்பிடுங்க!'' என்றபடியே இலையில் வைத்துக் கொடுத்தார். இருவரும் அதை சுவைக்க ஆரம்பிக்க, அன்றைய மாநாடும் அமர்க்களமாக ஆரம்பமானது.

''அரசு ஊழியர்கள், போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு எல்லாம் பொங்கல் போனஸ் அறிவிச்சும்கூட, இந்தக் கரும்பு விலையை அறிவிக்காமலே இருந்த முதலமைச்சரம்மா... ஒரு வழியா அறிவிச்சுட்டாங்க. 'ஒரு டன்னுக்கு 2,100 ரூபாய் கொடுக்கிறேன். இதனால விவசாயிகள் மகிழ்ச்சி அடைவாங்க'னு புளகாங்கிதப்பட்டு வேற சொல்லியிருக்காங்க...'' என்று வாத்தியார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...

''அட, விவசாயிங்களுக்கும் பொங்கல் போனஸ்தான்'' என்று துள்ளிக் கொண்டு சொன்னார் காய்கறி!

''அட நீ வேற கண்ணம்மா... அம்மா சொன்னதைக் கேட்டு நொந்து நூலாகியிருக்காங்க விவசாயிங்க. நீ வேற, போனஸ்... அது இதுனு மேற்கொண்டு பிரச்னையைக் கிளறாதே! ஏற்கெனவே, '2,500 ரூபாய்க்கும் மேல கொடுத்தாத்தான் கட்டுப்படியாகும்'னு கூப்பாடு போட்டுக்கிட்டிருக்காங்க விவசாயிங்க. அ.தி.மு.க-வோட தேர்தல் அறிக்கையிலயும் இதை ஆமோதிச்சி சொல்லியிருந்தாங்க ஜெயலலிதாம்மா. ஆனா, இப்ப என்னடான்னா... 2,100 ரூபாய்னு சொல்லி, நோகடிச்சுட்டாங்க'' என்ற வாத்தியார்.

''குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு... அரசியல்வாதி பேச்சு, அந்த நிமிஷமே போச்சுங்கறதுதான் காலகாலமா நடக்குது. இதுல தேர்தல் வாக்குறுதியையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு பேசிட்டிருக்கீங்களே. அம்மா, 'கரும்பு அல்வா' கொடுத்திருக்காங்க... அவ்வளவுதான்!'' என்று நொந்து கொண்டார் ஏரோட்டி!

''விலை விஷயம் ஒருபக்கமிருக்க... சமீபத்துல வந்த 'தானே' புயலால நெல்லிக்குப்பம், இ.ஐ.டி பாரி சர்க்கரை மில், ஓடாம நின்னுபோயிருக்கு. அதனால, 25 ஆயிரம் டன்னுக்கு மேல கரும்பு தேங்கிப் போச்சாம்.  விவசாயிகள்லாம் தொடர்ந்து கேட்டதுக்கப்பறம்... பக்கத்துல இருக்குற தியாகதுருகம் மில்லுக்கு கரும்புகள அனுப்பிருக்காங்க. அதுக்கான போக்குவரத்துச் செலவும் விவசாயிக தலையிலதான் விழப்போகுதாம், பாவம்'' என்று துணைச் செய்தியையும் சொல்லி நிறுத்தினார் வாத்தியார்.

''வேடிக்கையான ஒரு சேதி எங்கிட்ட இருக்கே...'' என்று குஷாலாக சொன்ன காய்கறி,

''சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தன்னு ஒருத்தர், பிரதமருக்கு ஒரு லெட்டர் போட்டிருக்கார். அதுல... 'முல்லை-பெரியாறு பிரச்னையை பிரதமர் தலையிட்டு சுமூகமா தீர்த்து வெச்சா, எனக்குச் சொந்தமா இருக்குற 11 சென்ட் நிலத்தை... பிரதமர், கேரளா அரசாங்கம், தமிழ்நாட்டு அரசாங்கம் மூணு பேருக்கும் சரிசமமா பிரிச்சு எழுதிக் கொடுக்கிறேன்'னு எழுதியிருக்காராம்'' என்று சொன்னார்.

''இது உனக்கு வேடிக்கையான சேதியாக்கும். அப்படியாவது பிரதமருக்கு புத்தி வரட்டுமேனுதான் அவர் லெட்டர் போட்டிருக்கார். தமிழ்நாட்டுல கூடங்குளம் பிரச்னை, முல்லை-பெரியாறு பிரச்னை எல்லாம் பத்திக்கிட்டு எரியுது. அதையெல்லாம் கண்டுக்காம, அரசாங்கச் செலவுல சிவகங்கைக்கு வந்து, தனியாருக்குச் சொந்தமான ஆஸ்பத்திரியை திறந்து வெச்சுட்டுப் போறாரு பிரதமர். அதுல இன்னொரு கொடுமை என்னான்னா, அந்த ஆஸ்பத்திரியை மூணு மாசத்துக்கு முன்னயே திறந்து, நோயாளிகளுக்கு சிகிச்சையெல்லாம் கொடுத்துட்டிருக்காங்களாம்.

வந்ததுதான் வந்தார், தமிழ்நாட்டுல இருக்கற பிரச்னைகள் தொடர்பா ஏதாச்சும் வாயைத் திறந்திருக்கலாம். ஆனா, கம்முனு போயிட்டார். அந்தக் கோபத்துலதான்... விவேகானந்தன் விளாசியிருக்கார்'' என்று காய்கறியின் சேதிக்கு, பொழிப்புரை எழுதினார் வாத்தியார்.

''அதான் முல்லை-பெரியாறு பிரச்னை அமுங்கிப் போச்சுல்ல. வழக்கம் போல கேரளாவுக்குக் காய்கறி, பலசரக்கு எல்லாம் போய்க்கிட்டுதான் இருக்கு. பிரச்னை நடந்துக்கிட்டிருக்கப்பவே போலீஸ்காரங்க உதவியோட திருட்டுத்தனமா காய்கறி போய்க்கிட்டுதான் இருந்துச்சு. இப்போ கேரளாக்காரங்களே வந்து, வாங்கிட்டுப் போக ஆரம்பிச்சுட்டாங்க. அவ்வளவுதான்யா தமிழ் உணர்வெல்லாம்'' என்று சீறினார் ஏரோட்டி!

''சரி, இன்னொரு சங்கதியைக் கேள்விப்பட்டியா? மத்திய வேளாண்துறை சமீபத்துல வெளியிட்ட அறிக்கையில, 'கடந்த மூன்று ஆண்டுகளில் தென்னிந்தியாவில் 3,160 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொள்ளவில்லை'னு சர்டிஃபிகேட் கொடுத்திருக்காங்க'' என்றார், வாத்தியார்.

இதைக் கேட்டதுமே, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, ''அடப்பாவிகளா... எப்படிப் புளுகுறானுங்க. டிராக்டர் கடன் கட்ட முடியாம, விவசாயிக தற்கொலை பண்ணிக்கிட்ட விஷயமெல்லாம்... என்னவாச்சாம்?'' என்று 'நறநற'த்தார் ஏரோட்டி!

''ம்... நம்மள மாதிரி ஆளுங்களுக்கு உண்மை தெரியும்யா. ஆனா, எப்படிச் செத்தாலும் சரி... எதுக்காகச் செத்தாலும்... 'தீராத வயிற்று வலியால் தற்கொலை’னுதான் போலீஸ் பதிவு பண்ணிக்கிட்டிருக்கு. அப்படி இருக்கறப்ப, உண்மை எப்படி வெளியில வரும்?'' என்று கேட்டார் வாத்தியார்.

''என்னிக்குத்தான் இந்த நாடு திருந்தப்போகுதோ?'' என்று தலையில் அடித்துக் கொண்ட ஏரோட்டி,

''சேலம் மாவட்டம், கொளத்தூர் மலைப் பகுதியில தின்னப்பட்டினு ஒரு கிராமம். அங்க ஏறத்தாழ 1,000 ஏக்கருக்கு மேல நிலக்கடலை, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, மஞ்சள், மிளகாய், பருத்தி, வாழைனு சாகுபடி நடக்குது. காட்டுப்பன்னிக ராத்திரி நேரத்துல கூட்டம் கூட்டமா வந்து பயிர்களை 'ஸ்வாகா’ பண்ணிடுதாம்.

'வேலி போட்டுத்தாங்க’னு ரொம்ப நாளா விவசாயிங்க கேட்கறாங்க. 'நீங்களே பாதுகாத்துக்கங்க’னு வனத்துறை அதிகாரிங்க கைவிரிக்கறாங்களாம். ஊர்ல இருக்குற 400 குடும்பத்துலயும் வீட்டுக்கு ஒருத்தருனு விடிய விடிய பன்னிகள தொரத்திட்டு இருக்காங்களாம். பாவம்'' என்று சொல்லிவிட்டு,

''அட, சாமி கும்பிடறதுக்கு நேரமாகிப் போச்சே... போய் சாமான்களை எடுத்துட்டு வந்துடறேன்'' என்று படபடக்க... முடிவுக்கு வந்தது, மாநாடு.