மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!

மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!

மாத்தியோசி படங்கள்: வேலு

‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ங்கிற பழமொழி யானைக்குத்தான் சரியா பொருந்தும். ‘சின்னதம்பி’ யானையைப் பத்தி, சூழலியல் ஆர்வலரான நண்பர்கிட்ட பேச்சுக்கொடுத்தேன். ‘‘யானைங்க ஊருக்குள்ள வந்து போறதுக்கு, உப்பும்கூட ஒரு காரணம்’’னு காரசாரமா பேச்சை ஆரம்பிச்சாரு.

‘‘பல வருஷங்களுக்கு முன்ன, சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகச் சாலையோரத்துல உப்பு, புளி மூட்டைகளை வனத் துறையினர் போட்டாங்க. ஏன்னா, காட்டுக்குள்ள ஒருவகை உப்பு மண்ணையும், உப்புத்தன்மையுடைய தாவரங்களையும் வனத்திலேயே தேடி உண்ணும் வழக்கம் கொண்டது யானைகள். சாலையோரத்துல கடல் உப்பு கிடைப்பதை தெரிஞ்சிக்கிட்ட யானைகள், அதைச் சாப்பிட சாலைக்கு வர ஆரம்பிச்சது.

இதை உண்டு பழகிய யானைகள், தினம் தினம் சாலைக்கு வர சுற்றுலாப் பயணிகளும் குதூகலமா கண்டு ரசிச்சாங்க. எங்களை மாதிரியான சூழலியல் போராளிங்க, இது இயற்கைக்கு எதிரான செயல்னு போராட்டம் செய்தோம். இதனால, உப்பு போடுற செயலை வனத்துறையினர் நிறுத்திட்டாங்க. ஆனா, உப்பு சாப்பிட்டு பழகின யானைங்க சும்மாயிருக்குமா?

மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!

ஊருக்குள்ள புகுந்து, சத்துணவுக் கூடங்கள், வீடுகள், டீக்கடைகள் என யானைங்க, எங்கு வந்தாலும் முதல்ல ருசிப்பது உப்பு, புளியைத்தான்.

இப்படி நம்ம மேல குற்றத்தை வைச்சுக்கிட்டு யானைங்க மேல குறைச்சொல்லக் கூடாது.

யானைகளோட முக்கிய உணவு மூங்கில். தமிழ்நாட்டுல பல்லாயிரம் ஹெக்டேர் பரப்புல பல்கியிருந்த மூங்கில் காடுகள் இப்போ அழியுற நிலையில இருக்கு. முற்றின மூங்கிலைத் திரும்பத் திரும்ப முறையா வெட்டி எடுத்தால்தான், மீண்டும் புதுப்புது கிளைகள் உருவாகி, மூங்கில் வளம் குறையாம, வளர்ந்துகிட்டே இருக்கும். மூங்கிலை வெட்டி பொருள்கள் செய்து வந்த பழங்குடி மக்களை, காட்டுக்குள்ளே செல்லக் கூடாதுனு வனத்துறையினர் தடைப் போட்டாங்க. இதனால, இளம்குருத்து வராமல், மூங்கில் பூத்து, பூத்து அழிந்துவிட்டன’’னு அலுத்துக்கிட்டாருங்க.

யானைகளைப் பத்தி பேசினா, எனக்கு ‘யானை டாக்டர்’தான் நினைவுக்கு வந்துடுவாரு. நம்ம சென்னையில உள்ள ‘வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரி’யில படிச்ச டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானை மருத்துவத்துல கில்லாடி. சுருக்கமா டாக்டர் கேனு சொல்வாங்க. நினைவுல வாழும் டாக்டர் கிருஷ்ணமூர்த்திப் பத்தி, நம்ம எழுத்தாளர் ஜெயமோகன், ‘யானை டாக்டர்’னு சிறுகதை எழுதியிருக்காரு. இந்தச் சிறுகதையைப் பல தடவை படிச்சிருக்கேன். யானைகளைப்பத்தி தெரிஞ்சுக்க விரும்புறவங்களுக்கு, அது சிறந்த வழிகாட்டியாக இருக்கும். இப்போ பள்ளி பாடப்புத்தகத்திலும்கூட இந்தக் கதையைப் பாடமா சேர்த்திருக்காங்க.

உலக அளவில் யானைகள் குறித்து, டாக்டர் கே, அளவுக்கு ஆய்வு செய்தவர்கள் கிடையாது. சரியான வாகனப் போக்குவரத்து, சாலைகள் இல்லாத 1980-கள்ல, டாப்சிலீப், கூடலூர்னு மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளுக்குள்ள போய் யானைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்காரு. காயம்பட்ட யானைகளுக்கு மயக்க மருந்து கொடுக்காமலே காயங்களுக்கு மருந்து போட்டவர். தமிழகக் கோயில்யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித் திட்டம் இவரோட பரிந்துரைதான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்குச் செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும்னு தொடர்ந்து சொல்லிவந்தார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினாரு. இதனால, தந்தங்களுக்காக யானைகளைக் கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பிச்சாங்கிறது தனிக்கதை.

‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதையில, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி யானைகளைப் பத்தி நெகிழ்ச்சியா பேசும் வரிகளைப் பாருங்க...

‘உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம். மத்த மிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கிறதில இருக்கிற கம்பீரத்தைப் பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது, துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்குப் பொறுமையா ஒத்துழைப்பு கொடுக்கும். என்ன ஒரு அமைப்பு. கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார், யானை மட்டுமில்லை, சிறுத்தை, காட்டெருமை எல்லாமே அப்படித்தான்’.
அடிப்பட்ட யானைக்கு மருத்துவம் பார்க்கும்போது, இடம் பெறக்கூடிய உரையாடலைப் பாருங்க...

’பேண்டேஜை அவுத்திராதில்ல?’ என்றேன். ‘அதுக்குத் தெரியும்’ என்றார். ‘ஆனா யானைக்குப் பொதுவா வெள்ளை நிறம் புடிக்காது. சேறு பூசலைன்னா நிம்மதியில்லாம காலை நோண்டிண்டே இருக்கும்.’ ‘குணமாயிடுமா?’ என்றேன். ‘அனேகமா பதினஞ்சுநாளிலே பழையபடி ஆயிடும். யானையோட ரெஸிஸ்டென்ஸ் பயங்கரம். சாதாரண ஆன்டிபயாட்டிக் கூட அபாரமா வேலைசெய்யும்’ என்றார்.

முதுமலையில் இருந்து மீண்டும் டாப்சிலீப்புக்குக் காரில் திரும்பும்போது டாக்டர் கே சொன்னார் ‘என்ன ஒரு டிவைன் பீயிங். என்னிக்காவது தமிழ்நாட்டிலே யானை இல்லாம போனா அப்புறம் நம்ம பண்பாட்டுக்கே என்ன அர்த்தம்? மொத்த சங்க இலக்கியத்தையும் தூக்கிப்போட்டு கொளுத்திர வேண்டியதுதான்.’

மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!

இப்படி யானைகளைப் பத்தின உணர்பூர்வமான  உயிரோட்டமான தகவல்கள் சிறுகதை முழுக்க பரவிக்கிடக்குது.

ஏன், யானைகள் முக்கியம் முக்கியம்னு சொல்வதை உள்ளுக்குள்ள ஊடுருவிப்பார்த்தா ஒரு விஷயம் தெளிவா தெரியும்.

யானைகள் காட்டுல இல்லைன்னா, காடுகள் சீக்கிரமா அழிஞ்சிடும்ங்கிறதான் உண்மை. ஒரு நாளைக்குச் சுமார் 250 கிலோ உணவை, யானைகள் தின்னும். யானைகள், கொட்டையைத் துப்பிவிட்டுப் பழத்தை மட்டுமே உண்ணாது, பலாப்பழமாக இருந்தாலும் முழுப்பழத்தையுமே தின்னும். ஓர் இடத்தில் எதையாவது தின்றுவிட்டு, வேறொரு இடத்தில் போய்ச் சாணம் போடும். அங்கு புதுசா பல மரங்களும் செடிகளும் முளைக்கத் தொடங்கும். செலவே இல்லாம, காட்டுக்குள்ள மரம் வளர்க்குற வேலையை யானைகள் தொடர்ந்து செய்துக்கிட்டே இருக்கு. நாமதான், நான் நூறு மரம் நட்டேன், ஆயிரம் மரம் நட்டேன்னு பெருமையா சொல்லிக்கிறோம். ஆனா, ஒவ்வொரு யானையும் தினமும் ஆயிரக்கணக்கான மர விதைகளைக் காட்டுக்குள்ள விதைச்சிக்கிட்டே இருக்கு. அதனால, மரம் வளர்க்கணும், காடு வளர்க்கணும்னு சொல்றவங்க எல்லாரும், யானைகள் காட்டுக்குள்ள இருக்கணும்னு குரல் கொடுக்குறாங்க.

நம்ம நாட்டுல யானைகள் படும்பாடு, பெரும்பாடா இருக்கு. ஆனா, ‘வெள்ளை யானை’ங்கிற ஒருவகை யானைக்கு வெளிநாட்டுல கொடுக்கிற மரியாதையும் உபச்சாரமும் அபாரம்.

தேவராம், திருவாசகத்துலகூட (ஐராவதம்)வெள்ளையானைப் பத்தி பாடி வைச்சிருக்காங்க. ஆனா, இந்தியாவுல பேருக்குக்கூட ஒரு வெள்ளை யானை கிடையாது. இன்றைய தேதியில உலக அளவுல வெள்ளை யானைகள் அதிகமா உள்ள நாடு தாய்லாந்துதான். அந்த நாட்டுக்குப் பயணம் போன, சமயத்துலத்தான், ‘வெள்ளை யானை’ன்னா என்ன அர்த்தம்னு கேட்டும் பார்த்தும் தெரிஞ்சிக்கிட்டேன். அங்குள்ள நண்பர்கிட்ட, உங்க நாட்டுல வெள்ளை யானை இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதைப் பார்க்க முடியுமானு ஆச்சர்யமா கேட்டேன். சட்டுன்னு ‘‘இன்று மாலை 5 மணிக்கு, அரசு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் வெள்ளை யானை ஊர்வலம் இருக்கும். நாம் அங்கு போகலாம். இங்கு வெள்ளை யானைகளிடமிருந்து எந்த வேலையையும் வாங்கமாட்டார்கள்.

வித விதமான உணவு வகைகளைச் சாப்பிட கொடுப்பார்கள். இதனால்தான், எந்தப் பணிக்கும் உபயோகம் செய்யாமல், வறட்டு கெளரவத்துக்கும் பெருமைக்கும் பயன்படும் வேலைகளையும் திட்டங்களையும் வெள்ளை யானை (White Elephant) என்று இட்டு அழைப்பது உலகில் பல நாடுகளில் வழக்கம்’’னு சொல்லிட்டு, அந்த நிகழ்ச்சிக்கு, அழைச்சிக்கிட்டுப் போனாருங்க. அரச குடும்பத்தினரை வரவேற்று, கூட்டத்துக்கு முன்னாடி கம்பீரமா அந்த யானைகள் போச்சிங்க. வெள்ளை யானைன்னு சொன்னாலும்கூட இளஞ்சிவப்பு நிறத்துலத்தாங்க இருந்துச்சிங்க.