மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!

இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!

மரத்தடி மாநாடுஓவியம்: வேலு:

ன்று காலையில் சீக்கிரமாகவே வயலுக்கு வந்துவிட்டனர், ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும். ஏரோட்டி, வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்க... பெஞ்சில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார், வாத்தியார்.

‘என்னாங்கய்யா செய்தித்தாள்ல முக்கியச் சேதி’ என்று கேட்டுக்கொண்டே வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, கூடையை இறக்கி வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டார். வேலையை முடித்துவிட்டு ஏரோட்டியும் வந்து சேர, அன்றைய மாநாடு கூடியது.

“இனிமே நாடாளுமன்றத்தேர்தலைப் பத்திதான் அனல் பறக்கச் செய்திகள் வரும். யாரு, யாரோட கூட்டணி... யாருக்கு எத்தனை தொகுதினு செய்திக்குப் பஞ்சம் இருக்காது. என்னென்ன கூத்து நடக்கப் போகுதோ. நாம நம்மளோட வேலையைப் பார்க்க வேண்டியதுதான்” என்ற வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.

“திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில ‘மன்னவனூர்’னு ஓர் ஊர் இருக்கு. அந்த ஊர்ல மத்திய அரசோட செம்மறி ஆடு மற்றும் ரோம ஆராய்ச்சி மையம் இருக்கு. அந்த ஆராய்ச்சி மையத்துல ‘பாரத்மெரினோ’, ‘அவிக்காலின்’ ரகச் செம்மறி ஆடுகள்ல 500 ஆடுகளை வளர்த்துட்டுருக்காங்க. இந்த ரெண்டு செம்மறி ஆடுகளுமே ரோமத்துக்கான ரகங்கள். பாரத் மெரினோ ரக ஆடுகளோட ரோமத்துல இருந்து உல்லன் ஸ்வெட்டர், சட்டைகள் தயாரிக்கப்படுது. அவிக்காலின் ரக ஆடுகளோட ரோமத்துல இருந்து கம்பளி விரிப்புகள் தயாரிக்கப்படுது. ஆராய்ச்சி மையத்துல வருஷத்துக்கு 200 குட்டிகள்வரை உற்பத்தி செய்றாங்க. இந்த ஆடுகள் மேயுறதுக்காக 145 ஏக்கர் பரப்புல மேய்ச்சல் நிலம் இருக்கு. மேய்ச்சல் நிலம் முழுக்கவே இயற்கையா அமைஞ்சுருக்குற பசுமைப் புல்வெளி.

இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!

போன வருஷம் டிசம்பர் மாசத்துல இருந்து இந்த வருஷம் ஜனவரி மாசம் வரைக்கும் கொடைக்கானல்ல கடுமையான குளிர் அடிச்சது. அப்பப்போ பனிப்பொழிவும் இருந்தது. ராத்திரி நேரங்கள்ல வெப்பநிலை ரொம்பக் குறைஞ்சு இருந்துச்சு. அந்தளவுக்குப் பனி இருந்ததால, மலைப்பகுதியில இருந்த புல்லெல்லாம் அழுகிப் போயிடுச்சு. ஜனவரி மாசத்துக்கு அப்புறம் வெயில் அதிகரிச்சதுல புல்லெல்லாம் கருகிப்போச்சு. அதனால, மலைப்பகுதியில ஆடுகளுக்குக் கடுமையான உணவுத்தட்டுப்பாடு வந்துருக்கு.

ஆராய்ச்சி நிலைய மேய்ச்சல் நிலங்கள்லயும் இதே பிரச்னை. அதனால, ஆராய்ச்சி நிலையத்துல ஆடுகளுக்கு... துவரைச் செடியின் இலை, தண்டு, துவரம்பொட்டு மூணையும் அரைச்சு, புட்டு மாதிரி ஆக்கித் தீவனமாகக் கொடுத்துட்டுருக்காங்க. இந்த ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிச்சு 53 வருஷம் ஆகிடுச்சாம். இத்தனை வருஷத்துல இந்த மாதிரிச் சூழ்நிலை வந்ததே இல்லையாம். கோடைமழை பெய்ஞ்சாதான் மலையில இனி, புல் முளைக்கும்” என்றார், வாத்தியார்.

“அடப்பாவமே...” என்று வருத்தப்பட்ட ஏரோட்டி அடுத்தச் செய்திக்குத் தாவினார். “முன்னாடியெல்லாம் ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் மட்டுமே பரிந்துரை செஞ்சுக்கிட்டுருந்த வேளாண்மைத்துறை அலுவலர்கள், இப்போ இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நீலகிரி மாவட்டத்துல நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துல... பேசுன நீலகிரி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ், ‘தோட்டக் கலைத்துறை மூலமா அனுபவமுள்ள இயற்கை விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை வெச்சு,  இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்குகளை நடத்தப்போறோம். இயற்கை விவசாயிகளைக் கொண்ட ஒரு குழுவையும் அமைச்சுருக்கோம். ஒவ்வொரு விவசாயியும் ஒரு சென்ட் நிலத்திலாவது இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளணும்’னு பேசிருக்கார். அதுக்கு விவசாயிகள் மத்தியில வரவேற்பு கிடைச்சுருக்குதாம்” என்றார், ஏரோட்டி. “இயற்கை விவசாயத்துக்கு மாறியாகணுங்கிறது காலத்தின் கட்டாயம்” என்று சொன்ன காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு ஒரு மாதுளம்பழத்தை எடுத்துக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.

“மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ‘இயற்கை வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர்தான் ‘ஜீரோ பட்ஜெட்’ அப்படிங்கிற இயற்கை விவசாய முறையை வடிவமைச்சவர். ஊடுபயிர் சாகுபடி மூலமா பிரதானப் பயிர் சாகுபடியை ஈடுகட்டிடலாம்ங்கிறதை மையமா வெச்சுதான் ஜீரோ பட்ஜெட்ங்கிற பெயரை வெச்சார், பாலேக்கர். ஆனா, ‘இந்த முறைக்கு மாறுறவங்க ஆரம்பகாலங்கள்ல சில செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கு. குறிப்பா, நெல் விவசாயத்துல ஊடுபயிர் சாகுபடியையெல்லாம் செய்ய முடியாது. அதனால, ஜீரோ பட்ஜெட்னு சொல்லக் கூடாது’னு சில சர்ச்சைகள் கிளம்புச்சு. ஆனாலும் பாலேக்கர் அந்தப் பெயரை மாத்தலை. இந்தத் தொழில்நுட்பம் பெரியளவுல இந்தியாவுல பரவ ஆரம்பிச்சதும், நிறைய பேர் ஜீரோ பட்ஜெட்ங்கிற தலைப்பைப் பயன்படுத்திப் பயிற்சிகள் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அவங்கள்ல பெரும்பாலானவங்க பாலேக்கரோட பெயரைப் பயன்படுத்தலை.

அதனால, சமீபத்துல தன்னோட வேளாண்மை முறைக்கு, ‘சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை முறை’னு பெயரை மாத்திட்டார், பாலேக்கர். கிட்டத்தட்ட 12 வருஷம் காடுகள்ல சுத்தி, ஆதிவாசிகளோட வேளாண்மை முறைகளைப் பார்த்து, காடுகள்ல இருக்கிற தாவரங்களோட வளர்ச்சி முறையை ஆராய்ச்சி செஞ்சு, இந்த வேளாண்மை முறையை வடிவமைச்சுருக்கார் பாலேக்கர்” என்றார், ஏரோட்டி.
“அப்போ அவர் பெயரை வெச்சுக்குறதுல எந்தத் தப்பும் இல்லை” என்ற வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!

“தமிழ்நாட்டுல கால்நடைப் பராமரிப்புத் துறைக்குக் கீழே இயங்கி வர்ற கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள்ல காலியாக இருக்குற ‘கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்’ பணிக்குத் தகுந்த நபர்களை நியமிக்க, போன வருஷம் அரசு அனுமதி கொடுத்துருந்துச்சு. அந்த வேலைக்கான தகுதி, ’10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்று இருக்கணும். சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சுருக்கணும்’ங்கிறது தான். அதுக்கான அறிவிப்பு வெளியானதும் ஏகப்பட்ட படித்த வேலையில்லாத இளைஞர்கள் அந்தப்பணிக்காக விண்ணப்பிச்சுருந்தாங்க. முதுகலைப்படிப்பு, எம்.பி.ஏ, பொறியியல் படிப்பு, ஆராய்ச்சிப்படிப்புனு படிச்சுருந்த வங்கெல்லாம் விண்ணப்பிச்சுருந்தாங்க. அவங்களுக்கு இந்த வருஷம் ‘பிப்ரவரி 23-ஆம் தேதியில இருந்து அந்தந்த மாவட்டங்கள்ல நேர்காணல் நடத்தப்படும்’னு கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பா அறிவிச்சுருந்தாங்க. ஆனா, அந்த அறிவிப்பு வந்த மறுநாளே மறு தேதி அறிவிக்காம நேர்காணலை ஒத்தி வெச்சுட்டாங்க.

அதுபத்தி விசாரிச்சப்போ, ஒவ்வொரு அமைச்சரும் அவங்கவங்க மாவட்டங்கள்ல இவங்களுக்குத்தான் வேலை கொடுக்கணும்னு ஒரு பட்டியல் தயார் பண்ணிக் கொடுத்துருக்காங்களாம். ஒவ்வொரு போஸ்டிங்க்குக்கும் லட்சக்கணக்குல விலை பேசியிருக்காங்களாம். அந்தத்துறையில இருக்குற அதிகாரிகளும் அவங்க பங்குக்கு ஒரு பட்டியல் தயாரிச்சுருக்காங்களாம். அதனால, எப்படிப் பணியாளர்களைத் தேர்வு செய்றதுங்குறதுல குழப்பமாம். ஏற்கெனெவே யார் யாருக்கு வேலை கொடுக்கணும்னு பட்டியலைத் தயார் செஞ்சு வெச்சுட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களை அழைச்சு போலியா நேர்காணல் நடத்துனா, தேர்தல் சமயத்துல சர்ச்சை கிளம்பும்னுதான் ஒத்தி வெச்சுட்டாங்கனு ஒரு பேச்சு இருக்கு” என்றார்.

அந்த நேரத்தில், “இன்னும் நாலஞ்சு வீடுகளுக்குக் காய்கறி கொடுக்கணும், நான் கிளம்புறேன்” என்று சொல்லிக்கொண்டே காய்கறி கூடையைத் தூக்க… அன்றைய மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.