
மரத்தடி மாநாடுஓவியம்: வேலு
ஊருக்குள் காய்கறி வியாபாரத்தை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் தோட்டத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர். காய்கறி வருவதைப் பார்த்ததும் இவர்கள் அங்கேயே நின்றுவிட்டனர். காய்கறி வந்து சேர்ந்த சமயம், இளநீர்காரர் வர... மூவரும் ஆளுக்கொரு இளநீரைக் குடித்துவிட்டுத் தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

போகும் வழியிலேயே ஒரு செய்தியைச் சொல்லி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், ஏரோட்டி.
‘‘மத்திய அமைச்சர்கள், ஆள் ஆளுக்கு புது புது யோசனைகளைச் சொல்லிக்கிட்டிருக்காங்க. நம்ம நாட்டுல இருக்குற கரும்பு ஆலைகள்ல கழிவாகக் கிடைக்கிற மொலாசஸை வெச்சு எத்தனால் உற்பத்தி பண்ண முடியும். அது மூலமாவது கரும்புச் சாகுபடி விவசாயிகளுக்குக் கட்டுபடியான விலை கிடைக்கும். இப்படி உருப்படியான யோசனைகளையெல்லாம் சொல்லமாட்டாங்க. ஏன்னா, அவங்களுக்குக் கமிஷன் கிடைக்காதுல்ல. நாடு முழுக்கக் கரும்பு விவசாயிகள் கட்டுபடியான விலை கேட்டு நாயாக் கத்திட்டிருக்காங்க. அதுக்கு யோசனை சொல்ல ஆள் கிடையாது” என்று காட்டமானார்.
அதற்குள் மூவரும் தோட்டத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர். மர நிழலில் அமர்ந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார். “உணவுப்பொருள்களை விற்பனை செய்றவங்க எல்லோரும் கட்டாயம் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் வாங்கணும்னு மாநில உணவுப் பாதுகாப்புத்துறை அறிவிச்சுருக்கு. விளைபொருள்களை உணவுப்பொருளாக மதிப்புக்கூட்டி பாக்கெட்டில் அடைச்சு விற்பனை செய்றவங்க, காளான் பண்ணை வெச்சுக் காளானைப் பாக்கெட்டில் அடைச்சு விற்பனை செய்றவங்க எல்லோருமே கண்டிப்பா உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் வாங்க வேண்டியது அவசியம்.
நிறைய பேர் இப்போ சான்றிதழ் வாங்கித்தர்றேனு சொல்லிக் காசை விவசாயிகள்கிட்ட அதிகப்பணம் கேட்டுக்கிட்டுருக்குறதா புகார் வருது. இதுக்காக இடைத்தரகர்கள்கிட்டப் போக வேண்டியதேயில்லை. உரிமம், பதிவுச் சான்றிதழ் ரெண்டுக்குமே
https://foodliccensing.fassai.gov.in என்கிற இணையதளத்துல விண்ணப்பிச்சு, இணையதளம் மூலமாகவே கட்டணத்தையும் கட்ட முடியும்.
ஒரு வருஷத்துல இருந்து அஞ்சு வருஷம்வரை சான்றிதழ் வாங்கிக்கலாம். வருஷத்துக்குப் பனிரெண்டு லட்சம் ரூபாய் அளவுக்கு வியாபாரம் பண்றவங்களுக்கு ஒரு வருஷத்துக்கான கட்டணம் நூறு ரூபாய்தான். அதுக்கு மேல வியாபாரம் பண்றவங்களுக்கு 2,000 ரூபாய்தான் கட்டணம். இணையதளத்துல விண்ணப்பிச்சா ஒரு மாசத்துல பதிவுச்சான்று கிடைச்சுடும். உரிமம் கிடைக்க ரெண்டு மாசம் ஆகும்” என்றார்.
கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு கொய்யாப்பழங்களை எடுத்துக்கொடுத்த காய்கறி, “ஆயக்குடி சந்தையில கொய்யா, வரத்து அதிகமானதால சடார்னு விலை இறங்கிப்போச்சு. போன மாசம் 25 கிலோ அளவு கொண்ட ஒரு பெட்டி 900 ரூபாய்லருந்து 1,100 ரூபாய் வரை விற்பனையாச்சு. இப்போ ஒரு பெட்டி 250 ரூபாய்ல இருந்து 500 ரூபாய் வரைதான் விற்பனையாகுது” என்று ஒரு தகவலை எடுத்துவிட்டார்.
கொய்யாப்பழத்தைச் சுவைத்துக் கொண்டே அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.
“நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகள்ல உள்ள மக்களுக்கு... கால்நடைப் பராமரிப்புத் துறையின் விலையில்லா ஆடு வழங்குற திட்டத்துல ஆடுகளைக் கொடுத்துருக்காங்க. பந்தலூர், பிதர்காடு, சந்தக்குன்னு பகுதிகள்ல பயனாளிகளுக்குக் கொடுத்த ஆடுகள் அடுத்தடுத்து இறந்துட்டே இருக்குதாம். அதில், சந்தக்குன்னு பகுதியில் பூமணி, ராஜாமணி, பார்வதி, தேவினு நாலு பேருக்குக் கொடுத்த ஆடுகள்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆடு இறந்துப்போச்சாம். கவிதா, சிவலட்சுமினு ரெண்டு பேருக்குக் கொடுத்த ஆடுகள்ல ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு ஆடுகள் இறந்துப்போச்சாம். ஆனா, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம். இந்த ஆடுகளைத் தாராபுரம், திருப்பூர் பகுதி சந்தைகள்ல இருந்து வாங்கிட்டு வந்தாங்களாம்.
‘சமவெளிப்பகுதிகள்ல இருந்து ஆடுகளை வாங்கிட்டு வந்து மலைப்பகுதிகள்ல வளர்த்தா அந்த ஆடுகளால தாக்குப்பிடிக்க முடியாது’னு பயனாளிகள் சொல்லியும் அதிகாரிகள் கண்டுக்காம, ஆடுகளை வாங்கிக் கொடுத்திருக்காங்களாம். குளிர் தாங்கமாட்டாமத்தான் ஆடுகள் இறந்துருக்கணும்னு பயனாளிகள் சொல்றாங்க” என்றார், ஏரோட்டி.
அந்த நேரத்தில், பக்கத்துத் தோட்டத்து ஆடுகள் ஏரோட்டியின் கடலை வயலுக்குள் நுழைய... ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அவற்றைத் துரத்த ஓடினார், ஏரோட்டி. அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
வாத்தியார் சொன்ன கொசுறு:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசுத் தோட்டக்கலை பண்ணையில் ஆண்டுதோறும் மிளகாய், கத்திரி, மேரிகோல்டு, மஞ்சள் சாமந்தி, குண்டுமல்லி, டில்லி கனகாம்பரம், ரெட்லேடி பப்பாளி, வி.ஆர்.ஐ-3 ஒட்டு ரக முந்திரி, பாலுார் ஒட்டுரகப் பலா, லக்னோ -49 ஒட்டு ரகக் கொய்யா ஆகிய நாற்றுகளும் செந்துாரா, நீலம் உள்ளிட்ட பல வகையான மாங்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நாற்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
தேவைப்படுபவர்கள், மானியம் இல்லாமல் முழுவிலை கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம். நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பதினான்கு லட்சம் வீரிய ரக மிளகாய் கன்றுகளில் விற்பனையானது போக, 84 ஆயிரம் செடிகள் பண்ணையில் இருப்பில் உள்ளன. மேலும், 2,000 பாலுார்-1 ரகப் பலா கன்றுகளும் இருப்பில் உள்ளன. நடப்பாண்டுக்கான மானியத் திட்டங்கள் மார்ச் மாதத்தோடு நிறைவடைய உள்ளன. அதனால், தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலரிடம் சான்று பெற்று, கன்றுகளை மானிய விலையில் வாங்கிக்கொள்ளலாம்.
ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு
தமிழகத்தில் மதுரை மல்லி, சிறுமலை வாழைப்பழம், நீலகிரி தேயிலை, காஞ்சிபுரம் பட்டுப்புடவை என இருபதுக்கும் மேற்பட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளன. இந்த வரிசையில் ஈரோடு மஞ்சளும் இணைந்துள்ளது. தனித்துவமான நிறம், சுவை கொண்ட ஈரோடு மஞ்சள், பல மருத்துவச் சிறப்புகளையும் உள்ளடக்கியது. இந்த மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருப்பது, இதன் கூடுதல் சிறப்பு.
இதை அறிந்த ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்னப்பத்தை ஏற்றுக்கொண்ட புவிசார் குறியீட்டுத் துறை மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிராவின் வைகான் மஞ்சளுக்கும், ஒடிசாவின் கந்தமால் மலை மஞ்சளுக்கும் இதற்கு முன்னர் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஈரோடு மஞ்சளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.