
மரத்தடி மாநாடுஓவியம்: வேலு
காலையிலேயே ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்தின் வீட்டுக்கு வந்துவிட்டனர், ‘காய்கறி’ கண்ணம்மாவும், ‘வாத்தியார்’ வெள்ளைச் சாமியும். வீட்டுவரி கட்டுவதற்காகப் பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்றிருந்த ஏரோட்டி. வீட்டுக்குத் திரும்பிய நேரம் வெயில் சுள்ளென்று அடித்ததால், அன்றைய மாநாடு, ஏரோட்டியின் வீட்டிலேயே கூடியது. வழக்கம்போல ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.

“திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் ‘கள் இயக்கம்’ சார்பா கதிரேசன்ங்கிறவரை தேர்தல் வேட்பாளரா அறிவிச்சுருக்காங்க. அவருக்காக 13 அம்ச கோரிக்கைகளை முன்வெச்சு கள் இயக்கம் சார்பா பிரசாரம் செய்யப்போறதா, கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சொல்லிருக்கார். அதுபத்திப் பேசின நல்லசாமி, ‘காமராஜர் ஆட்சியில இருந்து பழனிசாமி ஆட்சிவரை, பவானிசாகர் அணை நீர் நிர்வாகத்தில் தொடர்ந்து தவறு நடந்துட்டுருக்கு.
வருங்காலத்துல இதுபோன்ற தவறுகள் நடக்காதுனு நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் தொகுதிகள்ல போட்டியிடுற வேட்பாளர்கள் உத்தரவாதம் கொடுக்கணும். தமிழகத்தில் 90 சதவிகிதக் கட்சிகள் கொள்கைகளை மறந்து பேரம் பேசிக் கூட்டணி அமைச்சுருக்காங்க. மக்கள் இந்த மாதிரியான அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு புறக்கணிக்கணும். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கிழக்கிந்திய கம்பெனியோட ஆட்சிதான் நடத்தப்படுது. நாங்கள் விவசாயிகளோட பிரச்னைகளை மையமா வெச்சுப் பிரசாரம் செய்யலாம்னு இருக்கோம்’னு சொல்லிருக்கார். மக்கள் எந்தளவுக்கு ஆதரவு கொடுக்கப்போறாங்கனு பொறுத்திருந்துதான் பார்க்கணும்” என்றார், வாத்தியார்.
அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி. “தமிழ்நாட்டுல பிளாஸ்டிக்குக்குத் தடை விதிக்கப்பட்டிருக்குறதால, பிளாஸ்டிக்குக்கான மாற்றுப்பொருள்களுக்குக் கிராக்கி அதிகமாகிட்டு இருக்கு. குறிப்பா பாக்குமட்டைத் தட்டுக்கும், பாக்கு மட்டை டம்ளருக்கும் நிறையத் தேவை இருக்கு. அதனால, அது தயாரிக்கத்தேவையான மூலப்பொருளான பாக்கு மட்டைக்கு இப்போ தேவை அதிகமா இருக்கு. முன்னாடி பாக்கு மரங்கள்ல இருந்து விழுற மட்டைகளை அப்படியே மண்ணுல மட்க விடுவாங்க. சிலர் அடுப்பெரிக்கப் பயன்படுத்துவாங்க. இப்போ அதுக்கு நிறையத் தேவை இருக்குறதால, அதைச் சேகரிச்சு பலர் விற்பனை செய்ய ஆரம்பிச்சுருக்காங்க. ஒரு மட்டைக்கு ஒரு ரூபாய் விலை கொடுத்துக் கொள்முதல் செஞ்சுக்குறாங்களாம்” என்றார்
. “இப்படித்தான் முன்னாடி மட்டை கம்பெனிகள்ல தேங்காய் மட்டைத்தூளை எரிச்சு அழிப்பாங்க. இப்போ அதை வெச்சுதான் காயர்பித் தயார் பண்ணி ஏற்றுமதி பண்றாங்க. கால மாற்றத்துல கழிவுப் பொருள்களுக்கும் மவுசு கூடிப்போயிடுது” என்ற காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்குக் கொஞ்சம் திராட்சைப் பழங்களை எடுத்துக் கொடுத்தார்.
அதைச் சுவைத்துக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார். “சமீபகாலமா தேங்காய் விளைச்சலும் கொப்பரை உற்பத்தியும் ரொம்பக் குறைஞ்சு போயிடுச்சு. கஜா புயலால லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ஞ்சு போச்சு. இப்போ வெயில் கடுமையா அடிக்கிறதால தென்னந்தோப்புகள்ல மண்ணை ஈரமாக்குற அளவுக்குக்கூடத் தண்ணி பாய்ச்ச முடியுறதில்லை. கடுமையான வறட்சியால கிணறு, போர்வெல் எல்லாம் வறண்டு கிடக்கு. இப்படிப் பல காரணங்களால தேங்காய், கொப்பரை உற்பத்தி குறைஞ்சு வரத்துக் குறைவாத்தான் இருக்கு. எப்பவும் வரத்துக் குறைஞ்சா சந்தையில கொள்முதல் விலை அதிகரிக்கும். ஆனா, இப்போ வரத்து குறைஞ்சுருக்குற சூழ்நிலையிலயும் கொள்முதல் விலை குறைஞ்சுக்கிட்டே இருக்குதுனு விவசாயிகள் புலம்புறாங்க.
தமிழ்நாட்டுல உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரத்துல டன் கணக்குல கொப்பரை உற்பத்தியாகுது. இந்தக் கொப்பரைகள்ல பெரும்பகுதியைக் காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகள்ல இருக்குற எண்ணெய் ஆலைகளுக்குத்தான் விவசாயிகள் அனுப்புறாங்க. சில தனியார் நிறுவனங்கள் கிராமங்கள்ல கொள்முதல் நிலையம் அமைச்சு கொள்முதல் பண்றாங்க. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்லயும் வாரா வாராம் கொப்பரை ஏலம் நடக்குது. அதிகத் தேவை இருக்குற கொப்பரைக்கு, விற்பனை செய்யறதுக்குப் போதுமான வசதிகள் இருந்தும், நிலையான கட்டுப்படியான விலை கிடைக்கிறதில்லைங்கிறதுதான் விவசாயிகளுக்கு வருத்தம்.
ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு கிலோ கொப்பரை 130 ரூபாய்க்கு மேல விற்பனையாச்சு. இப்போ தரத்தைப் பொறுத்து 90 ரூபாய்ல இருந்து 100 ரூபாய் வரைதான் விற்பனை ஆகுது. கொப்பரைக் கொள்முதலுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தணும்னு ரொம்ப நாளா விவசாயிகள் கோரிக்கை வெச்சுட்டுருக்காங்க. சில நாள்களுக்கு முன்ன மத்திய அரசு, ஒரு கிலோ கொப்பரைக்குக் குறைஞ்சபட்ச ஆதார விலை 95 ரூபாய்னு நிர்ணயம் பண்ணுச்சு. ஆனா, அரசு கொள்முதல் மையங்கள்லகூட, இந்த விலைக்குக் கொப்பரையைக் கொள்முதல் செய்றதில்லைனு விவசாயிகள் புலம்புறாங்க” என்றார், வாத்தியார்.
அடுத்தச் செய்திக்குத்தாவிய ஏரோட்டி, “திருப்பூர்ல கிட்டத்தட்ட 500 சாய ஆலைகள் இயங்கிட்டுருக்கு. இந்தச் சாய ஆலைகள்ல கொதிகலன்களில் தண்ணீரைக் கொதிக்க வெச்சு நீராவி மூலமா துணிகளுக்குச் சாயம் ஏத்துறாங்க. இந்தக் கொதிகலன்கள்ல இருந்து அதிக அழுத்தத்துல வெளிவர்ற நீராவியிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்னு சென்னையில இருக்குற இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர்கள் கண்டுபிடிச்சு, அதுக்கான தொழில்நுட்பத்தையும் உருவாக்கி இருக்காங்க. கொதிகலன்கள்ல இருந்து நீராவி சாயமேத்துற கலனுக்குப் போற வழியில ஒரு சுழலும் சக்கரத்தைப் பொருத்துறாங்க. நீராவி போற வேகத்துல அந்தச் சக்கரம் சுழலும்போது அதுல பொருத்தியிருக்குற டைனமோ மூலமா மின்சாரம் உற்பத்தியாகுது. இதுக்காகக் கூடுதல் எரிபொருள் செலவாகாது.
ஒரு டன் கொள்ளளவு கொண்ட கொதிகலன்ல இருந்து ஒரு நாளைக்கு 20 யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியுமாம். திருப்பூர்ல இருக்குற மொத்த சாய ஆலைகள்லயும் இந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தினா, ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமாம். இது மூலமா ஆலைகளோட மின்சாரக் கட்டணத்துல பல லட்சம் ரூபாய் மிச்சமாகுமாம். திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பா இந்தத் தொழில்நுட்பத்தைத் தெரிஞ்சுகிட்டு வந்திருக்காங்க. அதுபத்தி வல்லுநர்கள்கிட்ட ஆலோசனை நடத்தி வர்ற ஜூன் மாசம் சோதனை அடிப்படையில மின்சாரம் தயாரிக்கப் போறாங்களாம்” என்றார்.
அந்த நேரத்தில் “நேரமாயிடுச்சு. பிள்ளைங்க பரீட்சை முடிஞ்சு வந்திருங்க... நான் வீட்டுக்குக் கிளம்புறேன்” என்று சொல்லிக் கொண்டே கூடையைத் தூக்கிக்கொண்டு காய்கறி கிளம்ப... அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன் வளர்ப்புக்குத் தடை!
பல ஆண்டுகளாக இந்தியாவில் தேளி மீன் வளர்ப்புக்குத் தடை உள்ளது. ஆப்பிரிக்க ரகக் கெளுத்தி மீன் வகையான இந்த ரகத்தை... தேளி விரால், கடல் கெளுத்தி என்ற பெயர்களில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். உள்நாட்டு மீன் வளர்ப்புக் குளங்களில் இம்மீனை வளர்ப்பதற்குத் தடை இருந்தும் பல இடங்களில் தடையை மீறி வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய, மாநில அரசுகள் இம்மீன்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு முழுமையாகத் தடை விதித்துள்ளன.
இந்த ஆப்பிரிக்க ரகக் கெளுத்தி மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்களை உணவாக எடுத்துக் கொள்ளக்கூடியவை. இவற்றுக்குக் காற்றில் உள்ள பிராண வாயுவைச் சுவாசிக்கும் திறனும் உண்டு. அதனால், மிகக்குறைந்த ஆழம் உள்ள நீர்நிலைகளிலும் வெகு வேகமாக இனப்பெருக்கம் செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன, இவ்வகை மீன்கள். இவை வளரும் குளங்களில் மற்ற எந்த மீன் இனத்தையும் வளர்க்க முடியாது. இந்த வகை மீன்களைப் பண்ணைகளில் வளர்க்கும்போது அதிக மழைக்காலங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், இம்மீன்களின் குஞ்சுகள் மற்றும் முட்டைகள் வேறு நீர்நிலைகளுக்கு அடித்துச்செல்ல வாய்ப்புண்டு. அப்படி இந்த மீன்கள் மற்ற நீர்நிலைகளிலும் பெருகினால், நமது நாட்டு பாரம்பர்ய மீன் இனங்கள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் வெகு விரைவில் அழிந்து விட வாய்ப்புகள் உண்டு.
இந்த மீனை உண்பவர்களுக்கும் சில நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால்தான், மத்திய மாநில அரசுகள் இம்மீன் வளர்ப்புக்குக் கடுமையான தடையை அமலுக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இம்மீன்கள் வளர்ப்பது தெரியவந்தால்... தமிழக மீன்வளத்துறை மூலம் அந்தக்குளங்களில் உள்ள மொத்த மீன்களையும் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தமிழக அரசு, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலமாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
மீன்வளத்துறை மற்றும் மீன் வளப்பல்கலைக்கழகம் மூலம் பரிந்துரை செய்யப்படும் இந்தியப் பெருங்கெண்டை வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய ரக மீன்களையும் சீனப் பெருங்கெண்டை வகைகளான புல் கெண்டை, சாதாக்கெண்டை போன்ற மீன் வகைகள் மற்றும் மரபு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா போன்ற மீன் வகைகளை மட்டும் வளர்க்குமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.