
மாத்தியோசிஓவியம் வேலு
ஒருமுறை சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு சமயத்துல, பஞ்சாப் மாநிலம், பொற்கோவில் உள்ள அமிர்தசரஸ் பகுதிக்குப் போயிருந்தேன். ஊரே விழாக்கோலம் பூண்டு இருந்துச்சி. என்னடா அது, தமிழ்ப் புத்தாண்டைச் சீக்கியர்களும் கொண்டாடுறாங்களான்னு சந்தேகம் வந்துச்சி. பஞ்சாபி நண்பர்கிட்டே கேட்டேன். ‘‘சீக்கிய மதம் தனக்கெனப் படையை உருவாக்கியதைக் குறிப்பதும் பஞ்சாப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவதுதான் பைசாக்கி திருவிழா. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 13 அல்லது 14-ஆம் தேதி இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவோம்’’னு சொன்னாரு.

சுதந்திரத்துக்கு முன், இதே தேதியில், இதே நகரத்துலத்தான் ‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலைகளும் நடந்தேறியதுங்கிறது ரத்தம் கலந்த வரலாறு.
சமீபத்துல, அமிர்தசரஸ் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவுக்கு பயணம் செய்தது நினைவுக்கு வந்துச்சி. அதுக்கு மூலக்காரணம் பாரதி மணி, ஐயா. இவரது ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ நூலில் பஞ்சாப், பாஸ்மதி அரிசினு ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. பாரதி திரைப்படத்தில பாரதியின் அப்பா சின்னச்சாமியாக நடித்து, யார் இவர்னு திரும்பிப் பார்க்க வைத்தவர். இதன் பிறகு, இவருக்கு ‘பாரதி மணி’ என்று பெயர் உருவானது. இப்போதும் திரைப்படங்களில் நடிச்சிக்கிட்டிருக்கார்.
நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் பிறந்து, புதுடெல்லியில ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தவர். பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியிருக்காரு. பிரபல எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் மருமகன். நேரு, இந்திராகாந்தி, சஞ்சாய்காந்தி, ஷேக் ஹசினா, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், நார்மன் போர்லாக் (இந்திய பசுமைப் புரட்சிக்குக் காரணமானவர்), பி.எம்.பிர்லா... போன்றவர்களோடு நெருங்கி பழகியவர். இவரைப் பத்தி சொல்லிக்கிட்டேப் போகலாம். தான் பார்த்த, படித்த, பழகிய அனுபவங்களை ரசிக்கும்படியாகத் தனது நூலில் எழுதியுள்ளார்.
தற்போது, பெங்களூருவில் வசிக்கும், பாரதி மணி அவர்களைச் செல்போனில் தொடர்புகொண்டு, பேசினோம். ஒவ்வொரு சம்பவத்தையும் ரசித்து, ருசித்து சொன்னார். அந்த உரையாடல் ஒரு பேச்சுக்கச்சேரிப் போல இருந்தது. அந்தக் கச்சேரியில் இடம்பெற்ற தகவல்களும் நூலில் பஞ்சாப் குறித்து இடம் பெற்ற செய்திகளையும் சுண்டக்காய்ச்சி கொடுத்திருக்கேன்.
இனி பாரதி மணி உங்களோடு பேசுவார்...
‘‘பஞ்சாபிகள் 1947-ஆம் ஆண்டு நடந்த நம் நாட்டின் பிரிவினைக்குப்பிறகு, லாகூரிலிருந்தும் ராவல் பிண்டியிலிருந்தும் தன் சொத்துச் சுகங்களை விட்டுவிட்டு, தன் பத்து வயதிலேயே வரும்வழியில் தன் கண்ணெதிரே தாயும் சகோதரிகளும் கற்பழிக்கப்படுவதைப் பார்க்கும் கொடுமைக்காளாகி, மிருதுளா சாரா பாய் தலைமையில் டெல்லியில் இயங்கிவந்த அகதிகள் முகாமில் சரணடைந்தார்கள்.
லாகூரில் அரண்மனை போன்ற பங்களாவில் பத்து வேலைக்காரர்களுடன் வாழ்ந்தவர், இங்கு ஒரு வாளித் தண்ணீருக்காக அரைமணி நேரம் வரிசையில் காத்திருந்தார். சூன்யத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கிய பஞ்சாபிகள், சில வருடங்களில் தங்கள் கடின உழைப்பால் முன்னேறி, தில்லியையே ஒரு பஞ்சாபி சுபாவாக மாற்றிவிட்டார்கள்.டெல்லியில் பஞ்சாபிகளின் ஆதிக்கம் சுதந்திரத்துக்குப் பிறகுதான் வந்தது என்று பூர்வகுடிகளான மாத்தூர்களும் குப்தாக்களும் பராதிகளும் சொல்வார்கள். பிரிவினைக்குப்பிறகு அகதிகளாக ஓடிவந்து அரசு வழங்கிய ரூ.5,000 கொண்டு, லாஜ்பத் நகர், மாளவியா நகர், படேல் நகர், ஷாதரா போன்ற இடங்களில் கிடைத்த கையகல நிலத்தில் இரு அறைகள் கொண்ட வீட்டைக் கட்டிக்கொண்டு - பழம்பெருமை பேசி முடங்கி உட்காராமல் - பாகிஸ்தானில் செய்து வந்த தொழிலையே உற்சாகத்துடன் தொடர்ந்தார்கள். பிச்சையெடுக்கும் சர்தார்ஜியை நான் இதுவரை பார்த்ததில்லை. கை கால் இல்லாதவர்கூடத் டெல்லிக்கோடையின்போது, ஒரு மரத்தடியில் பெரிய மண்பானையில் குளிர்ந்த தண்ணீரும், குடிக்கப் பெரிய குவளையும் வைத்திருப்பார். முன்னால் விரித்த கைக்குட்டையில் சில அரையணா, ஓரணா நாணயங்கள் இருக்கும். பார்ஸிகளுக்கு அடுத்தபடியாகச் சீக்கியர்களுக்குத்தான் அவர்களது சமூகம் பாதுகாப்பளிக்கிறது.

பஞ்சாபிகளின் புத்திசாலித்தனத்துக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பலன்தான் இன்று பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்த வெற்றியின் ரகசியம் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சேலத்து மாம்பழம் போல் பாஸ்மதி அரிசிக்கு, டேராடூன் பிரசித்தி பெற்றிருந்தது.
ஆனால், நம் இந்திய அரிசிக்குப் பாகிஸ்தான் பாஸ்மதியைப்போல நீளமும் வாசனையும் கிடையாது. அறுபது எழுபதுகளில் எண்ணெய் பலத்தால் தங்கள் பணபலத்தைப் பெருக்கிக்கொண்ட அரபுநாடுகள், பாகிஸ்தானின் பாஸ்மதியையே விரும்பி இறக்குமதி செய்தார்கள். நமது சரக்கைச் சீந்துவாரில்லை. இது பஞ்சாப்பிலுள்ள பெரிய நிலச்சுவான்தார்களையும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு வந்த பெரிய விவசாயிகளையும் சிந்திக்கவைத்தது. ‘நம் இரு நாடுகளுக்கிடையே 1947-இல் மனிதன் போட்ட எல்லைக் கோடுகளையும் மீறி இயற்கையும் வானமும் ஒரே மாதிரியான பூமிவளத்தையும் தட்பவெப்ப நிலையையும் நீர்நிலைகளையும் தானே தந்திருக்கிறது.
லாகூரில் மழையென்றால் வாகா எல்லை தாண்டி, இந்திய பகுதியான இங்கேயும் கொட்டுகிறது. மனிதனுக்கிடையே இருக்கும் துவேஷம் இன்னும் பயிரினங்களுக்குத் தொற்றிக்கொள்ளவில்லையே. அங்கு விளைவது இங்கு விளையாதா’ என்று யோசிக்கலானார்கள். இவர்களிடம் இல்லாதது பாகிஸ்தான் பாஸ்மதியின் நெல் விதைகள். போட்டி காரணமாக அவைகளை நேர்வழியில் பெறமுடியாது. அரசாங்கத்தை நம்பிப்பயனில்லை.
இந்திய எல்லையை ஒட்டியிருக்கும் எல்லாப் பஞ்சாபி விவசாயிகளும் ஒன்றுசேர்ந்து ரகசியமாக நீண்டகாலத் திட்டமொன்று தீட்டி எதிர்க்குரலே இல்லாமல், அதற்கு வேண்டிய பணத்தையும் திரட்டி முழுமுனைப்போடு ஐந்துவருடங்கள் பாடுபட்டார்கள். அது 1965-ஆம் ஆண்டுவாக்கில், நாட்டில் அமைச்சர் சி.சுப்பிரமணியம், எம்.எஸ்.சுவாமிநாதன்... போன்றவர்கள் கொண்டுவந்த ‘பசுமைப் புரட்சி’ நடந்துகொண்டிருந்த காலம். ஓரிரு ஆரம்பத் தோல்விகளுக்குப்பிறகு, குறிப்பிட்ட ஓர் இரவில், இவர்கள் ஆவலோடு காத்திருந்த பாகிஸ்தானி பாஸ்மதி நெல்விதைகள் நாற்பது லாரிகளில் இந்திய எல்லைக்குள் வந்திறங்கின. வாகா எல்லையிலிருந்த பாகிஸ்தான் ரேஞ்சர்ஸுக்கும் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் அவர்கள் ‘கண்களை மூடிக்கொள்ள’ கோடிக்கணக்கில் செலவழித்தார்கள். மூன்றுவருடங்களுக்கு இந்த விதைகளை விற்காமல், இந்திய எல்லையோரத்தில் மறுபயிரிட்டு வீரியமுள்ள விதைகளாகப் பல்கிப் பெருக்கினார்கள்.
இப்போது இந்தியா உலகத்திலேயே முதன்மையான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு என்று பெயர்பெற்றுள்ளது. இதன் பின்னே இருக்கும் பஞ்சாபிகளின் சாமர்த்தியமும் உழைப்பும் சிலருக்கே தெரியும். அரசின் உதவியை நாடாமல், தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்டார்கள்.

எண்பதுகளில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தைப் பிடித்திருந்த என் நண்பனுடன் குருதாஸ்பூரில் அவனது கிராமத்து பண்ணை வீட்டைப் பார்க்கப் போயிருந்தேன். ஒன்றரை லிட்டர் பிடிக்கும் பெரிய லோட்டாவில் குடிக்க முடியாமல் குடித்த - வெட்டியெடுத்த பாலாடை மிதக்கும் (மலாய் பாக்கே) - லஸ்ஸியின் ருசி இன்னும் நாவில் இருக்கிறது. அவர்கள் வயலுக்குள் நின்று கொண்டிருந்த நான், சட்டென்று வரப்பின் மீதேறி ‘இன்னும் கொஞ்சநேரம் நின்றால், என் காலில் வேர் பிடித்துவிடும்’ என்று சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது. இரவு விருந்துக்குப் பிறகு அவன் தந்தையோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் மேலே சொன்ன கதையை அவர் சொல்லக் கேட்டேன்.
நீங்கள் செய்தது தவறில்லையா என்ற என் கேள்விக்கு அவரது பதில்: ‘மணி பேட்டா! நாங்கள் திருடவில்லை, பிச்சையெடுக்கவில்லை. இதில் எங்கள் உயர்வோடு, நாட்டின் முன்னேற்றத்தையும் நாங்கள் பார்த்தோம். நேரான விரலில் வராத நெய்யை, விரலை வளைத்தெடுப்பதில் எந்தத் தவறுமில்லை’ என்ற அவரது விளக்கம் எனக்குச் சரியாகப்பட்டது.
இப்படித்தான் ஒருமுறை அலுவல் நிமித்தமாக அமிர்தசரஸ் சென்றபோது, அங்குள்ள பஞ்சாபி நண்பர் ஐந்து கிலோ அளவுக்கு, வாசனை வீசும் ஒரிஜினல் பாஸ்மதி அரிசி பையை அன்புடன் கொடுத்தார். இதன் அருமை எனக்குத் தெரியவில்லை. என்னுடைய கார் ஓட்டுநர், ‘ஐயா, இந்தப் பாஸ்மதி அரிசி யாருக்கும், அவ்வளவு லேசில் கிடைக்காது’ என்று சொன்னார். புதுடெல்லி திரும்பியவுடன், ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, அந்தப் பாஸ்மதி அரிசியை எடுத்து சமைக்கும்படி என் மனைவியிடம் சொன்னேன். குக்கரில், மூன்று விசில் வந்திருக்கும், வாசலில் யாரோ அழைப்பு மணியை அடிக்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தேன். வயதான சர்தார்ஜி நின்றிருந்தார். அவரை வரவேற்று என்ன விஷயம் என்று கேட்டேன். உங்கள் வீட்டில் பாஸ்மதி அரிசியில் சமையல் செய்கிறீகளா என்று கேட்டார். ஆம் என்றோம்.
‘சாலையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது, லாகூரில் சிறுவனாக இருந்தபோது, சாப்பிட்ட அதே பாஸ்மதி அரிசியின் அற்புத மணம் காற்றில் கலந்து வந்தது. கடந்த கால் மணி நேரமாக ஒவ்வொரு வீடாக மோப்பம் பிடித்து, கடைசியில், அந்த அருமையான மணம் வந்த வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று சொல்லிவிட்டு தாடிக்குள் சிரித்தார்.
உடனே, என் மனைவியை அழைத்து, மீதியிருக்கும் பாஸ்மதி அரிசியை, அந்தச் சர்தாஜியிடம் கொடுக்கச் சொன்னேன். ‘பேட்டா(மகனே) எனக்கு இந்தப் பாஸ்மதி அரிசி பிடிக்கும். ஆனால், உனக்கு ஒருவர் கொடுத்ததை, நான் தட்டிப்பறித்துச் செல்லவிரும்பவில்லை’ என மறுத்தார். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, சிறிதளவு பாஸ்மதி அரிசை மட்டும் வாங்கிச் சென்றார்.
ஒருமுறை ‘எங்க சர்தார்ஜிகளுக்கு ஒரே ஒரு கல்ச்சர்தான் உண்டு. அதுதான் அக்ரிகல்ச்சர்’ என்று என் சர்தார் நண்பன் சொன்னார்’’ என்று சரியாகச் சொல்லிமுடித்தார் பாரதிமணி.
பஞ்சாப்பில் நடந்த பசுமைப் புரட்சியை நேரில் பார்த்த முக்கிய சாட்சிகளில், பாரதி மணியும் ஒருவர் என்பது கவனிக்கதக்கது!