மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!

வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!
பிரீமியம் ஸ்டோரி
News
வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!

மரத்தடி மாநாடுஓவியம்: வேலு

யலுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டுக் கை, கால்களைக் கழுவிக் கொண்டு,  கொட்டகையை நோக்கி வந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வியாபாரத்தை முடித்துவிட்டு வந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும், வாத்தியார் வெள்ளைச்சாமியும் பேசிக்கொண்டே தோட்டத்துக்கு வந்து சேர்ந்திருந்தனர். மூவரும் அமர்ந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டதும்... ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார். “பவானிசாகர் அணை மூலமா... கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பகுதிகளுக்குப் பாசன வசதி கிடைக்குது. அதில்லாம, கசிவுநீர்த் திட்டம் மூலமா ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள்ல கிட்டத்தட்ட மூணு லட்சம் ஏக்கர் அளவு நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்குது. 

வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!

நீலகிரி மாவட்டத்துல பெய்ற மழைநீர், நீர் மின் அணைகள்ல தேக்குற தண்ணீர் ரெண்டும்தான், பவானிசாகர் அணைக்கு நீர் ஆதாரம். ஆனா, அணைக்குத் தண்ணீர் வரத்து குறைவா இருக்குறதால, முழு அளவுல பாசனத் தேவையையும் குடிநீர்த் தேவையையும் பூர்த்திச் செய்ய முடியலை. அதனால, பாண்டியாறு-மோயாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேத்தணும்னு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வெச்சுட்டுருக்காங்க.

அறிஞர் அண்ணா முதலமைச்சரா இருந்த சமயத்துலேயே பாண்டியாறு - புன்னம்புழா-மோயாறு இணைப்புத் திட்டத்துக்காக அடிக்கல் நாட்டியிருக்காங்க. ஆனா, இப்போ வரை வேலைகள் நடக்கலை. இந்தப் பாண்டியாறு-மோயாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துனா வருஷம் முழுசும் பவானி ஆத்துல தண்ணி ஓடும்” என்றார், வாத்தியார்.

“தேர்தல் நேரத்துல ஓட்டுக் கேட்டு வர்ற அரசியல்வாதிகள்கிட்ட நெருக்கடி கொடுக்கணும். அப்போதான் கொஞ்சமாவது மக்கள் நலத்திட்டங்களைப் பத்தி யோசிப்பாங்க” என்ற ஏரோட்டி அடுத்தச் செய்தியை ஆரம்பித்தார்.

“தேர்தல் நேரம்கிறதால நாடு முழுக்க அரசியல்வாதிகள் பிரசாரம் செஞ்சுட்டுருக்காங்க. தினமும் காலையில பிரசாரத்துக்குக் கிளம்புறப்போ பிரசார வாகனத்துக்குப் பூசணிக்காய் சுத்தி உடைக்கிறதை நிறைய பேர் வழக்கமா வெச்சுருக்காங்க. அதனால, திருஷ்டிப்பூசணிக்கு கிராக்கி அதிகரிச்சுருக்கு. பொதுவா, அமாவாசை நாள்கள்லயும் வெள்ளிக்கிழமைகள்லயும் திருஷ்டிப்பூசணி தேவை அதிகமாயிருக்கும். ஆனா, இப்போ அரசியல்வாதிகளால தினமும் தேவை இருக்கு. இப்போ வெயில் சுட்டெரிக்குறதால, பூசணி உற்பத்தியும் குறைவாத்தான் இருக்கு. அதனால, பூசணி விலை அதிகரிச்சுட்டே இருக்கு. வழக்கமா ஒரு பூசணி 50 ரூபாய் அளவுல விற்பனையாகும். ஆனா, இப்போ 200 ரூபாய் வரை விற்பனையாகுதாம். இதேபோல எலுமிச்சைக்கும் தேவை அதிகமா இருக்குதாம்” என்றார், ஏரோட்டி.

கூடையிலிருந்து ஆளுக்கு ஒரு தர்பூசணி கீற்றை எடுத்துக் கொடுத்தார், காய்கறி. அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“தமிழ்நாட்டுல 16 வட மாவட்டங்கள்ல செயல்பட்டுட்டு வந்த பல்லவன் கிராம வங்கிகளையும், 16 தென் மாவட்டங்கள்ல செயல்பட்டு வந்த பாண்டியன் கிராம வங்கிகளையும் ஒண்ணா இணைச்சுட்டாங்க. இனிமே இந்த வங்கிகள் ‘தமிழ்நாடு கிராம வங்கி’ங்கிற பெயர்ல செயல்படும். 630 கிளைகள், 10 வட்டார அலுவலகங்களை உள்ளடக்கி, 45 லட்சம் வாடிக்கையாளர்கள், 22 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம்னு வெற்றிகரமா செயல்படப்போகுது, தமிழ்நாடு கிராம வங்கி. இந்த வங்கியில விவசாயத்துக்கான நகைக்கடன்கள், பயிர்க் கடன்கள் எல்லாம் குறைஞ்ச வட்டியில கொடுக்கப்போறாங்க. அதில்லாம நிறைய கடன் திட்டங்களும் முதலீட்டுத்திட்டங்களும் இருக்குதாம்” என்றார்.

அடுத்தச் செய்தியை ஆரம்பித்த வாத்தியார், “பனிரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை சூரியன்ல கறும்புள்ளிகள் தென்படுமாம். போன 2007-ஆம் வருஷம் இந்த மாதிரி கரும்புள்ளிகள் தெரிஞ்சுச்சாம். அதுக்கப்புறம் இப்போ சூரியன்ல கறும்புள்ளிகள் தெரிய ஆரம்பிச்சுருக்காம்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்ல இருக்குற வான் இயற்பியல் ஆய்வகத்துல, சூரியன்ல வீசுற காந்தப் புயல்கள், கறும்புள்ளிகள், சூரியன் வெளியிடும் கதிர்வீச்சுகள் மாதிரியான விஷயங்களைக் கவனிச்சு ஆராய்ச்சி செஞ்சுட்டுருக்காங்க. அந்த ஆராய்ச்சி மைய விஞ்ஞானி எபினேசர், ‘சூரியன்ல அதிக அளவு காந்த புயல் ஏற்பட்டு, வளிமண்டலம் வழியாகப் பூமியின் வட மற்றும் தென் துருவத்தை வந்தடையுது. அதுதான், கறும்புள்ளிகளாகத் தெரியுது. இந்தக் காந்தப் புயலால் வெப்பநிலையில் எந்தப் பாதிப்பும் இருக்காது’னு சொல்லிருக்கார்” என்றார்.

அடுத்தச் செய்திக்குத் தாவிய ஏரோட்டி, “கோயம்புத்தூர்ல இருக்குற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துல 14 உறுப்புக் கல்லுாரிகளும், 26 இணைப்புக் கல்லுாரிகளும் இருக்கு. போன வருஷம் வேளாண் பட்டப்படிப்பில் சேர்றதுக்கு, 40,000 மாணவர்கள் விண்ணப்பிச்சுருந்தாங்க. இந்த வருஷம் இன்னும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பிப்பாங்கனு எதிர்பார்க்குறாங்க. மருத்துவம், பொறியியல் மாதிரி வேளாண்மைப் படிப்புக்கும் ‘புரபஷனல் படிப்பு’னு மத்திய அரசு, அங்கீகாரம் கொடுத்துருக்கறதுதான் வேளாண் படிப்புக்கு மவுசு கூடியிருக்குறதுக்கான காரணம்” என்றார்.

“பசிக்க ஆரம்பிச்சுருச்சு. போய்க் கஞ்சியைக் குடிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே காய்கறி கூடையைத் தூக்க… அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

ஊக்கத்தொகையுடன் வேளாண் படிப்பு!

வே
ளாண் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வைக் கடந்தாண்டு வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் நடத்தி வந்தது. நடப்பாண்டு முதல், ‘தேசிய நுழைவுத்தேர்வுகள் ஒருங்கிணைப்பு ஆணையம்’ (என்.டி.ஏ) மூலம் நடத்தப்பட உள்ளது. அத்தேர்வில் பங்கேற்க, ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதிவரை ‘ஆன்லைன்’ மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக, 700 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினருக்குத் தேர்வுக்கட்டணம் 350 ரூபாய்தான்.

மே மாதம் 7-ஆம் தேதியிலிருந்து 14-ஆம் தேதிவரை விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு. விண்ணப்பத்தில் பூர்த்திச் செய்யப்படும் இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண்கள் போன்றவற்றுக்குத்தான் தேர்வுக் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். அகில இந்திய நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று வரும் மாணவர்களுக்காகத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 15 சதவிகித இடங்கள் (கிட்டத்தட்ட 2,000 இடங்கள்) ஒதுக்கப்படுகின்றன. தேர்வில் வெற்றி பெற்றுப் பல்கலைக்கழகப் படிப்பில் சேர்ந்தால், மாதம் 3,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை பெற முடியும். வேளாண் படிப்பில் சேரத் திட்டமிட்டுள்ள தகுதியான மாணவர்கள் அனைவரும் இத்தேர்வை எழுதலாம். விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு விவரங்கள் போன்றவற்றை www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.