மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!

மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!

மரத்தடி மாநாடுஓவியம்: வேலு

ருக்குள் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்தது. பின் வரிசையில் அமர்ந்து, பேச்சாளர்கள் அள்ளி வீசிக்கொண்டிருந்த வாக்குறுதிகளை ரசித்துக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. தடுப்பூசி போடுவதற்காக மாட்டைக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் திரும்பி வந்துகொண்டிருந்தார். 

மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!

ஏரோட்டியைப் பார்த்ததும் எழுந்து வந்தார், வாத்தியார். அந்த நேரம் வியாபாரத்தை முடித்துவிட்டு ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர, மூவரும் பேசிக்கொண்டே தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அப்போதே ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்தார், வாத்தியார்.

“நாமக்கல், சேலம் மாவட்டங்கள்ல கிட்டத்தட்ட ஆயிரம் முட்டைக்கோழிப் பண்ணைகள் இருக்கு. மொத்தம் அஞ்சு கோடி தாய்க்கோழிகள் மூலமா தினமும் மூன்றரைக்கோடி முட்டைகள் உற்பத்தியாகுது. பிராய்லர் கோழிக்கு விலை நிர்ணயம் செய்ய ஓர் அமைப்பு இருக்குற மாதிரி, முட்டைக்கு விலை நிர்ணயம் செய்றதுக்கு ‘தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு’னு ஓர் அமைப்பு இருக்கு. இதைச் சுருக்கமா ‘நெக்’னு சொல்வாங்க. முட்டை உற்பத்தி அளவு, முட்டைகளோட தேவை மாதிரியான விஷயங்களைக் கணக்கு பண்ணி, முட்டைக்கு விலை நிர்ணயம் செய்வாங்க. நெக் நிர்ணயம் செய்ற விலைக்குதான் பண்ணை முதலாளிகள் வியாபாரிகளுக்கு முட்டையை விற்பனை செய்யணும்னு விதி இருந்தாலும்… அந்த விலையில இருபத்தஞ்சு காசுவரை குறைச்சு பண்ணையாளர்கள் வியாபாரிகளுக்கு முட்டைகளை விற்பனை செஞ்சுக்கலாம்.

ஆனா, நெக் நிர்ணயம் செய்ற விலையிலிருந்து ஒரு முட்டைக்கு நாற்பது காசுவரை குறைச்சுதான் வியாபாரிகள் வாங்குறாங்களாம். இதனால, பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுதாம். மொத்தப் பண்ணைகளுக்கும் சேர்த்து போன ரெண்டு மாசத்துல மட்டும்  200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுருக்குதாம். கோழித்தீவனத்துல முக்கிய மூலப்பொருளான மக்காச்சோளத்துக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுதாம். அதையும் சமாளிக்க முடியாம பண்ணையாளர்கள் திணறிக்கிட்டு இருக்காங்களாம். அரசு கிடங்குகள்ல வீணாகுற கோதுமை, அரிசியை மானிய விலையில் பண்ணையாளர்களுக்கு வழங்கினா உபயோகமா இருக்கும்னு பண்ணையாளர்கள் அரசாங்கத்துக்கிட்ட கோரிக்கை வெச்சுருக்காங்க” என்று வாத்தியார் சொல்லி முடிக்கும்போதே மூவரும் தோட்டத்துக்குள் வந்துவிட்டனர்.

வாத்தியாரும், காய்கறியும் கல்திட்டில் அமர்ந்தனர். மாட்டுக்குத் தண்ணீர் காட்டி நிழலில் கட்டி வைத்துவிட்டு வந்து அமர்ந்த ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

“வால்பாறையில ஊருக்கு நடுவுல வாழைத்தோட்டம் ஆறு ஓடுது. இந்த ஆறு மூலமாத்தான் சோலையாறு அணைக்குத் தண்ணீர் போகுது. இந்த வாழைத்தோட்டம் ஆற்றோட கரையோரமா ஏகப்பட்ட வீடுகளைக் கட்டி மக்கள் குடியிருக்காங்க. போன வருஷம் தென்மேற்குப் பருவமழை சமயத்துல ஆற்றுல வெள்ளம் வந்து வீடுகளுக்குள்ள தண்ணீர் புகுந்தது. அதுக்குக் காரணம் ஆற்றைத் தூர்வாராததுதான். இந்த ஆற்றைத் தூர்வாரி ரொம்ப வருஷம் ஆச்சாம். அதனால, மேடுதட்டிப் போச்சு. கிட்டத்தட்ட மூணு வருஷமா ஆற்றைத் தூர்வாரணும்னு மக்கள் கோரிக்கை வெச்சுட்டுருக்காங்க. ஆனா, அரசாங்கம் கண்டுக்கலை. போன வருஷம், வீடுகளுக்குள்ள தண்ணி புகுந்து பிரச்னை வந்தும், இதுவரை அரசாங்கம் ஆற்றைத் தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்காங்க. அதில்லாம கரையோரமா வசிக்கிற மக்கள் செய்ற அட்டகாசத்துக்கும் அளவில்லை.

இவங்க எல்லோரும் வீட்டுக் குப்பைகளை ஆத்துலதான் கொட்டுறாங்க. அதைவிடக் கொடுமை, நிறைய பேர் வீட்டுக் கழிவுநீர்க் குழாய்களையும், செப்டிக் டேங்க் குழாய்களையும் ஆத்துக்குள்ளதான் விட்டுருக்காங்க. இதனால, சோலையாறு அணைக்குப் போற தண்ணியும் மாசுபடுது. அதனால, அடுத்தப் பருவமழை ஆரம்பிக்கிறதுக்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றைத் தூர்வாரணும், ஆத்துக்குள்ள குப்பை கொட்டுறதையும், கழிவுநீரை விடுறதையும் தடுக்கணும்னும் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வெச்சுருக்காங்க” என்றார்.

கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு வெள்ளரிப்பிஞ்சுகளை எடுத்துக் கொடுத்தார், காய்கறி. அதைச் சுவைத்துக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்த வாத்தியார்.

“இந்தியாவில் விளையுற பருத்தியோட விளைச்சல் அளவு பத்தி அரசு நிறுவனங்களும் அரசு சார்ந்த நிறுவனங்களும் அப்பப்போ அறிக்கை வெளியிடுறாங்க. ஆனா, இந்த அளவு துல்லியமா இருக்குறதில்லை. அதனால, பஞ்சு வர்த்தகர்கள், செயற்கையா தட்டுப்பாட்டை ஏற்படுத்திப் பஞ்சு விலையை ஏத்திடுறாங்க. இப்போ பருத்தி சீசன் முடியுறதுக்குள்ளயே வரத்து குறைவா இருக்குனு சொல்லி, போன மாசத்துல ஒரு கேண்டிக்கு (355.62 கிலோ) பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு விலையை உயர்த்திட்டாங்க, வியாபாரிகள். அதனால, ‘செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலமா பருத்திச் சாகுபடிப் பரப்பளவை அளந்து எவ்வளவு பருத்தி விளையும்னு கணக்கிடணும். இதுமூலமா விவசாயிகளும் தேவை அடிப்படையில உற்பத்தியை அதிகரிச்சு லாபம் பார்க்க முடியும்’னு ஜவுளித்தொழில்ல இருக்குறவங்க கேட்டுட்டுருக்காங்க” என்றார்.

அடுத்தச் செய்திக்குத் தாவிய ஏரோட்டி, “திருப்பூர் மாவட்டம், அவிநாசிக்குப் பக்கத்துல இருக்குற கோதபாளையம் பகுதியில், நூறு ஏக்கர் பரப்புல அமைஞ்சுருக்கு, ‘புதுப்பாளையம் குளம்’. இந்தக்குளம் இருக்குற பகுதியிலயும் குளத்துக்குப் பக்கத்துல இருக்குற அறுபது ஏக்கர் நிலப்பகுதியிலயும் கிட்டத்தட்ட நாநூறு புள்ளிமான்கள் வசிக்குது. ஆனா, இந்த நிலப்பகுதி நாநூறு மான்களுக்குப் போதுமானதா இல்லாததால… தீவனம், தண்ணீர் தேடி, மான்கள் பக்கத்துல இருக்குற விளைநிலங்களுக்குள் புகுந்துடுது. இப்படி வர்ற மான்களைச் சிலர் வேட்டையாடிடுறாங்க. சில மான்கள் வண்டிகள்ல அடிபட்டு இறந்துபோயிடுது. தோட்டத்துக்குள்ள வர்ற மான்களை விவசாயிகள் விரட்டும்போது, பயத்துல ஓடுற மான்களுக்கு அடிபட்டுக் காயம் ஏற்படுது. மான்களால விவசாயிகளுக்கும் விவசாயிகளால் மான்களுக்கும் பாதிப்பு ஏற்படுறது தொடர்கதையா இருக்கு. இந்தப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர்றதுக்காக… மான்கள் இருக்குற பகுதியிலேயே அதுகளுக்கான தீவனம் கிடைக்கிற மாதிரி சில நடவடிக்கைகளை எடுத்துட்டுருக்காங்க, வனத்துறை அலுவலர்கள்.

இதுக்காகப் புதுப்பாளையம், நல்லகட்டிபாளையம் பகுதிகள்ல எட்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிமென்ட் தொட்டிகளை வெச்சு, அதுல தண்ணீர் நிரப்புறாங்க. பக்கத்துலேயே பசுந்தீவனமான குதிரை மசால் பயிரையும் வெக்கிறாங்க. இந்தப் பசுந்தீவனத்தை மான்கள் சாப்பிடுதாங்கிறதையும் கேமராக்கள் மூலமாகக் கண்காணிக்கிறாங்க. மான்கள் இந்தத் தீவனத்தைச் சாப்பிட ஆரம்பிச்சுட்டா, இன்னும் பல இடங்கள்ல இதேமாதிரி தீவனத்தை வைக்க வனத்துறை அலுவலர்கள் முடிவு செஞ்சுருக்காங்க” என்றார்.

“இன்னும் நாலஞ்சு வீடுகளுக்குக் காய் கொடுக்கணும், கிளம்புறேன்” என்று சொல்லிக்கொண்டே கூடையைத் தூக்கிக்கொண்டு காய்கறி கிளம்ப, மாநாடு முடிவுக்கு வந்தது.

மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!

புவி தினத்துக்கு இதுதான் வரலாறு!

வ்வொரு சிறப்பு நாளுக்குப் பின்னும் ஏதோவொரு வரலாறு இருக்கும். அதுபோலத்தான் உலகப் பூமி நாளுக்கும் ஒரு சோக வரலாறு உண்டு. 1969-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து நடந்தது. இதற்குக் காரணமாக இருந்தது ஒரு தொழிற்சாலை. தொடர்ந்து தொழிற்சாலைகள் பலவற்றால் பூமி மாசுபடுவது அப்போது அதிகரித்தது.

இதையெல்லாம் கண்டு மனம் வெந்த சில போராட்டக்காரர்கள், 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, 2 கோடி அமெரிக்கர்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. மனிதர்கள், பூமியை எவ்வளவு சேதப்படுத்தி வருகிறார்கள் என்பதை, அந்த மக்கள் கூட்டம் எடுத்துச்சொல்லியது.

`கேலார்டு நெல்சன்’ (Gaylord Nelson) என்பவர்தான் அந்தப் புரட்சிப் பேரணிக்குப் பின்னால் இருந்தவர்களில் முக்கியமானவர். அதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22-ஆம் தேதியைப் புவி தினமாக அமெரிக்கர்கள் கொண்டாடி வந்தார்கள். 1990-ஆம் ஆண்டில், ஐ.நா சபையால் ‘புவி தினம்’ அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

-கெளசல்யா.ரா