
மாத்தியோசிஓவியம் வேலு
அண்மையில தலைமைப் பண்பு (Leadership) குறித்த பயிலரங்குக்குப் போயிருந்தேன். வகுப்பு எடுத்த பயிற்றுநர், ‘‘அமெரிக்காவைப் பாருங்கள், ஐரோப்பாவைப் பாருங்கள்’’னு மேலைநாட்டு, வறட்டு மேலாண்மை தத்துவங்களை ஒப்பித்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல, பீனிக்ஸ் பறவை மாதிரி, சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவோம்’’னு சொல்லி முடிச்சார். பங்கேற்றவர்களும் கருத்துகளைச் சொல்லலாம்னு, அழைப்பு விடுத்தாங்க.

மேடையில ஏறி, எத்தனை நாளைக்குத்தான் வெளியூர் சரக்கை விற்பனை செய்வீங்க. நம்ம நாட்டுலையும் வெளிநாட்டுக்காரன் ஆச்சர்யப்படற அளவுக்குத் தலைமைப் பண்பு, மேலாண்மை தத்துவம் கொட்டிக் கிடக்குது. அப்புறம், எப்போதும், பீனிக்ஸ் பறவைப்போல உயிர்த்தெழுவோம்னு தன்னம்பிக்கைக்கு உதாரணம் சொல்றீங்க. பனைமரம்போல, இந்த உலகத்துல தன்னம்பிக்கைக்குச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
பனம்பழத்தை நெருப்புல சுட்டு எடுத்த பிறகும், அதிலுள்ள பனைவிதை முளைச்சி, பல ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும். பீனிக்ஸ் பறவை பறக்காத நாட்டுல, பனை விதையை எடுத்துக்காட்டா சொல்லுங்கன்னு சொன்னேன். அரங்கம் ஒரு நிமிடம் அமைதியா இருந்துச்சி. மேடையைவிட்டு கீழே இறங்கியவுடனே அரங்கம் அதிர கைத்தட்டல் ஓசை கேட்டது. அது எனக்குக் கிடைத்த கைத்தட்டல் கிடையாது. சுட்ட பிறகு பனைங்கொட்டை முளைக்கும் என்று கண்டறிந்த தமிழ் மக்களின் அறிவுக்குச் சொந்தமானது.
தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஒவ்வொருவரும் பனைவிதைப்போல, நெருப்பில் சுட்டப்பிறகுதான், தன்னையும் உயர்த்திக்கிட்டு மற்றவர்களுக்கும் பயனுள்ளபடி வாழறாங்க. இன்றும்கூட பல பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்துல தலைவன் எப்படி இருக்க வேண்டும்ங்கிறதுக்கு மகாத்மா காந்தி என்ற பெருங்கிழவன் உதாரணமாக இருக்காரு. நான் காந்தியை பார்த்ததில்லை. காந்தி வழியில் வாழ்பவர்களையும் வாழ்ந்தவர்களையும் நெருங்கிப் பார்த்திருக்கேன். இதுல இரண்டு பேர் முக்கியமானவங்க. முதலில் வருபவர் நம் நினைவில் வாழும் ‘இயற்கை இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார். அடுத்தவர், மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அன்னா ஹசாரே (Anna Hazare) . ஹசாரேவைப் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும், அந்த மனிதனிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கு.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அன்னா ஹசாரேவைச் சந்திக்கச் சென்ற அனுபவம் இப்போதும், பசுமையா இருக்கு. ராலேக்கண் சித்தி என்ற அந்தக் கிராமத்துல நான்கு வாரங்கள், தங்கியிருந்து எழுதியவைதான் ‘கிராம ராஜ்ஜியம்’ என்ற பெயரில் பசுமை விகடனில் தொடர் கட்டுரையாக வெளிவந்துச்சி. அந்தக் காலகட்டத்துல அன்னா ஹசாரேவுக்கு, இப்போது உள்ள அளவுக்கு ஊடக வெளிச்சமில்லை. சமூகச் சேவகர் என்ற அடையாளத்தோடு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். இப்போதும் அப்படித்தான் இருப்பதாக அங்குள்ள நண்பர்கள் சொன்னாங்க.
ஒருநாள் தொலைபேசியில ‘‘மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சமூகச் சேவகர், அன்னா ஹசாரே பற்றிய புத்தகம் ஒன்றை மொழியாக்கம் செய்துள்ளோம். இதை விகடன் பதிப்பகம் வெளியிட வேண்டும்’’ என்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின், அப்போதைய துணைவேந்தர் கருணாகரன் கேட்டுக் கொண்டாரு. உடனே, அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தோம். அடுத்தச் சில மாசத்துல அன்னா ஹசாரேவின் ‘எனது கிராமம், எனது மண்’ என்ற நூலை விகடன் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. சூழல் போராளி ஈரோடு ஜீவானந்தம் தமிழாக்கம் செய்திருந்தார்.

கருணாகரன் மத்தியப் பிரதேசத்தில உள்ள பல்கலைக்கழகத்துல துணைவேந்தரா பணிபுரிந்தபோது, அன்னா ஹசாரே உருவாக்கியிருந்த ராலேக்கண் சித்தி கிராமத்திற்குப் போயிருக்காரு. அவரது சமூகத் தொண்டும் ஊழலுக்கு எதிரான போராட்டமும் கருணாகரனைக் கவர, அன்னா ஹசாரேவின் சிந்தனையைத் தமிழ் கூறும் நல்லுலகமும் தெரிந்து கொள்ளத் தமிழ்மொழியில் பதிப்பிக்க அனுமதி வாங்கியிருக்காரு. மராத்தி நூல் தமிழ் வடிவம் பெற்றது, இப்படித்தான். புதுக்கோட்டையிலிருந்து சர்மா என்பவர் அடிக்கடி, பல செய்திகளை விகடன் அலுவலகத்திற்குச் சொல்வார். அந்தச் சமயத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துத் தலைவர்கள் ராலேக்கண் சித்தி கிராமத்தில் பயிற்சிக்குச் சென்று வந்த செய்திகள் அடங்கிய சிறு கையேட்டை அனுப்பியிருந்தார். ஏற்கெனவே, அன்னா ஹசாரே குறித்து, அறிந்த தகவல்கள் என்னை ராலேக்கண் சித்தியை நோக்கி செல்ல தூண்டியது.
ஒரு பொன்நாளில் அந்தப் புகழ்பெற்ற கிராமத்தை நோக்கி புறப்பட்டேன். முதல்ல புனே மாநகருக்குப் போயி, அங்கிருந்து ‘சிறூர்’ங்கிற நகருக்கு மூன்று மணி நேரம் பயணம் செய்தேன். அங்கு காலை உணவாகப் பாவ் பஜ்ஜியும் சூடான டீயும் குடித்துவிட்டு பஸ் நிலையத்தில் உட்கார்ந்திருந்தேன். ஒரு மணி நேரத்திற்குள் ராலேக்கண் செல்லும் சிவப்பு வண்ண பேருந்து, பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்துச்சி. பேருந்துல என்னையும் சேர்த்து பத்துப் பேர்தான் இருந்தோம். வறண்ட காற்று முகத்தில் அறைந்தபடி வீசிச்சு. பக்கத்தில உட்கார்ந்திருந்த நபர்களைப் பார்க்கும்போதே தெரிந்தது, அந்தப் பகுதியில் நிலவும் வறுமை. ஒரு மணி நேரத்தில் சின்னச் சின்னக் குக்கிராமங்களைக் கடந்து பேருந்து ஓடிக் கொண்டிருந்துச்சு. திடீரெனக் குளிர்ந்த காற்றும் தூரத்தில் பசுமையான வயல்களும் தென்படத் தொடங்குச்சு. அதுதான் ‘ராலேக்கண் சித்தி’னு யாரும் சொல்லாமலே தெரிஞ்சுக்கிட்டேன். சுற்று வட்டார கிராமங்கள் வறட்சியில் முழ்கி கிடக்க, ராலேக்கண் சித்தி மட்டும் பசுமையில் செழித்திருந்துச்சு.
சுமார் 2,000 பேர் வசிக்கும் சின்ன கிராமம் அது. ஏ.டி.எம், மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, அதிநவீன மருத்துவமனை, ஹெலிக்காப்டர் இறங்க ஹெலிபேட்... என்று சகல வசதிகளும் உள்ள ஓரே இந்திய கிராமம் ராலேக்கண் சித்தின்னு சொன்னா, ஆச்சர்யமாத்தான் இருக்கும். தினந்தோறும் புதிய மனிதர்கள் வந்து போறதால, ‘கிராம தகவல் மையம்’ அமைச்சிருந்தாங்க. அங்கு போய் நம்முடைய விபரத்தை சொன்னவுடனே, நம்மை அன்னா ஹசாரே இருக்கும் இடத்திற்கு அழைச்சிக்கிட்டுப் போனாங்க. மரத்தடியில உள்ள சிமென்ட் மேடையில, மராத்தி மொழியில் பேசிக்கிட்டு உட்காந்திருந்தார் அன்னா ஹசாரே.
‘‘துணைவேந்தர் கருணாகரன்ஜி ஊரில் இருந்து வந்துள்ளார். நம்முடைய அதிதீ (விருந்தினர்). இவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று சொன்ன ஹசாரே ‘‘சாப்பிட்டுவிட்டீர்களா’’ என்று கேட்டவர், பதிலுக்குக் காத்திராமல் உணவுக்கூடத்துக்குக் கூட்டிச்சென்றார் அன்னா ஹசாரே.
அங்கு போன பிறகுதான் தெரிஞ்சது, எனக்கு முன்பே 50 பேருக்கு மேல் சாப்பிட்டுக்கொண்டிந்தாங்க. சில்வர் தட்டை கையில எடுத்துக்கிட்டு வரிசையில நின்னேன். என்னோட தோற்றத்தை பார்த்தவுடனே ‘‘மதராஸி ஆவோ ஜி’’ என்று அன்புடன் அழைச்சாரு, அங்கிருந்த சமையல்காரர். பெரிய பெரிய கோதுமை ரொட்டி நாலும் சோயா குருமாவையும் வஞ்சனையில்லாம பரிமாறினாரு. சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்காத சுவை, அந்த உணவுல இருந்துச்சி.
இரண்டு, மூன்று நாள்களாகப் பயணத்திலிருந்தேன். இதனால, சரியாகச் சாப்பிடவில்லை. அந்தக் குறையை அந்த ஒரு வேளை உணவு போக்கியது. வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது, அன்னா ஹசாரே பக்கத்து கிராமத்துக்குப் போயிருப்பதாகச் சொன்னாங்க. என்னுடன் அமர்ந்து சாப்பிட்டவர்கள், உணவு முடிந்ததும் ஓர் அறைக்குள் போய் உட்கார்ந்தாங்க.
எனக்கும், அடுத்து வேறு வேலை இல்லை. நானும் அவங்களோடு ஐக்கியமானேன். கிராம மக்களிடம் பணியாற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள், அரசு அலுவலர்கள், ராணுவ வீரர்கள்... எனச் சகலத் துறைச் சார்ந்தவர்களும் தரையில் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தாங்க. கிராமத்தை எப்படி வளம் நிறைந்த பகுதியாக மாற்றுவதுனு தன்னார்வ தொண்டர் இந்தி மொழியில் சுவைப்பட பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அந்த அறையிலிருந்து வெளியே வந்து, பெயர் பலகையைப் பார்த்தேன். ‘தேசிய நீர்ப் பிடிப்புப் பயிற்சி மையம்’ (National Watershed Training Center)னு எழுதியிருந்தாங்க.
இந்த வறட்சியான நேரத்தில், ராலேக்கண் சித்தியில் நடந்த, பசுமை மாற்றம் நமக்கு பாடமாக இருக்கும். அதை அடுத்த இதழில் பார்ப்போம்.