மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!

நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!
பிரீமியம் ஸ்டோரி
News
நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!

மரத்தடி மாநாடுஓவியம்: வேலு

க்னி நட்சத்திரம் ஆரம்பித்துக் கத்திரி வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. வீட்டு வாசலிலேயே நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். சற்று நேரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர்ந்துவிட, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார். “சென்னையைச் சேர்ந்த மேனன்ங்கிறவர், சென்னை உயர் நீதிமன்றத்துல, ‘சென்னையில், தண்ணீர் செல்லும் கால்வாய்கள், கழிவுநீர்க் கால்வாய்கள், நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் கட்டப்படலை.  

நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!

அதனால், மழைக் காலங்கள்ல பெருக்கெடுக்கும் வெள்ளம், ஏரி, குளங்கள்ல இருந்து வெளியேறுற நீரைக் கட்டுப்படுத்த முடியலை. மழைக் காலங்கள்ல ஏரி, குளங்கள்ல இருந்து வெளியேறுற உபரி நீர் முழுக்கக் கடலுக்குப் போயிடுது. அதனால, நவீன நீர் மேலாண்மைத் திட்டங்களைப் பயன்படுத்தி ஏரி, குளங்களைச் சீரமைக்கணும்’னு வழக்கு தாக்கல் செஞ்சுருந்தார். அதுசம்பந்தமா, நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை தாக்கல் செஞ்ச பதிலில், ‘சென்னையில் பத்தாயிரத்துக்கும் மேலான ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுருக்கு. அதுல 4,161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருக்கு. அடையாறு மற்றும் கிளை நதிகளில் 19 கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் நடந்துருக்கு. அடையாறு மீட்புத் திட்டத்துக்காக 555 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியிருக்கு. முதல்கட்டமா 104 கோடி ரூபாய் பொதுப்பணித்துறைக்கு வழங்கப் பட்டிருக்கு’னு சொல்லியிருந்தது.

அந்த வழக்கை விசாரிச்ச எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ நீதிபதிகள், ‘நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலைனா தென் ஆப்பிரிக்காவில், கேப்டவுன் நகரில் ஏற்பட்ட மாதிரியான தண்ணீர் பஞ்சம், நமக்கும் வெகுவிரைவில் ஏற்பட்டுடும். மாநிலம் முழுக்க உள்ள ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள், குளங்களைச் சுத்தப்படுத்தி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்குறதுக்கு நிதி ஒதுக்கப்படணும். நீதிபதிகளான எங்களுக்கே மஞ்சள் நிறத்தில்தான் தண்ணீர் கிடைக்கிறபோது, விவரிக்க முடியாத அளவுத் துயரத்தை அனுபவிக்கிறார்கள், சாதாரண மக்கள். அதனால், நீர்நிலைகளையும், தண்ணீர் செல்லும் பாதைகளையும் பாதுகாக்க, கீழ்கண்ட உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டி உள்ளது.

நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களைப் பாதுகாக்க, தலைமைச் செயலர் தலைமையில், சிறப்புப் பிரிவை ஏற்படுத்தணும். வருவாய் துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி, மின் வாரியம், குடிநீர் வாரியம் போன்ற துறை உயரதிகாரிகளோடு, மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளைச் சேர்த்துக் குழுக்களை அமைக்கணும். இந்தக்குழுக்கள்ல உள்ள அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உதவி செய்ய ஊழியர்களை நியமிக்கணும். தமிழ்நாடு முழுக்க போலீஸ் உதவியோடு ஆக்கிரமிப்புகளை அகற்றணும். போலீஸ் ஒத்துழைக்கலைனா ராணுவத்தை அழைச்சுக்கலாம். ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி மின் இணைப்பைத் துண்டிச்சுடணும். இந்த விஷயத்துல கடமை தவறும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கணும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்புப் பிரிவு, அரசுக்கு அறிக்கை அளிக்கணும். அறிக்கையோட நகலை உயர் நீதிமன்ற பதிவாளருக்கும் அனுப்பணும்’னு அதிரடியா உத்தரவுகளைப் பிறப்பிச்சுருக்காங்க” என்றார், வாத்தியார்.

“எல்லாத்துக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுதான் வேலை செய்யணும்னா, இந்த அதிகாரிகளும் அரசாங்கமும் எதுக்கு இருக்குறாங்கனே தெரியலை” என்று அங்கலாய்த்த ஏரோட்டி, அடுத்தச் செய்தியை ஆரம்பித்தார்.

“திருப்பூர் நகரத்துல முக்கியமான தொழில் பின்னலாடை உற்பத்தி. அந்தப் பின்னலாடைகளுக்குச் சாயம் ஏத்துறதுக்காகத் திருப்பூர்ல நிறைய நிறுவனங்கள் இயங்கிட்டுருக்கு. சாய ஆலைகள்ல இருந்து வெளியாகுற கழிவு நீரால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும்ங்கிறதால, கழிவு நீரை ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ முறையில சுத்திகரிப்பு செய்யணும்னு விதி இருக்கு. இதுக்காகத் திருப்பூர்ல 18 பொதுச் சுத்திகரிப்பு நிலையங்களும், 100 தனியார் சுத்திகரிப்பு மையங்களும் இயங்கிட்டுருக்கு. சாயம் ஏத்துற ஆலைகள்ல அதிகளவுல உப்பு பயன்படுத்தப்படுது. கழிவு நீர்ல இருந்து சாயங்களைச் சுலபமா பிரிக்க முடிஞ்சாலும் அதிலிருந்து உப்பைப் பிரிக்கிறது சவாலான விஷயமா இருந்தது. அதனால, கழிவு நீரைச் சுத்திகரிக்கிறதும் கஷ்டமான விஷயமாத்தான் இருந்தது. இப்போ ‘அட்டல் இன்குபேஷன் மையம்’ங்கிற நிறுவனம், உப்பு சேர்க்காம சாயம் ஏத்துற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திருக்கு. இதுக்காக, மும்பையில் இருக்கிற மத்திய அரசோட ‘சென்ட்ரல் இன்ஸ்ட்டியூட் பார் ரிசர்ச் ஆன் காட்டன் டெக்னாலஜி’ நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதுக்கான சோதனை ஓட்டம் நடந்துட்டுருக்கு.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பிச்சுட்டா, சாய ஆலைகள்ல சாயமும் அதிகளவுல வீணாகாதாம். உப்பு சேர்க்கத் தேவையில்லாததால் கழிவு நீரைச் சுத்திகரிச்சு மறுபடியும் பயன்படுத்துறது சுலபமாகிடுமாம். அதனால, சூழல் மாசுபாடு ஏற்படாதுனு விஞ்ஞானிகள் சொல்றாங்க. திருப்பூர்ல இருக்குற பல சாய ஆலைகள், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தயாராகிடுச்சாம்” என்றார் ஏரோட்டி.

“பரவாயில்லையே” என்று பாராட்டிய காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு நுங்குகளை எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“தென்னையில சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமா இருக்குறதால, தென்னை விவசாயிகள் நிறையப் பாதிப்புக்குள்ளாகியிருக்காங்க. குறிப்பா, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்துல தென்னை விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்பட்டாங்க. அதுக்கு ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கக் கூடாதுனு அதிகாரிகள் ஏற்கெனவே சொல்லிருக்காங்க. வெள்ளை ஈ தாக்குதலைத் தவிர்க்க, தொண்டாமுத்தூர் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் ரேவதி, சில இயற்கைத் தீர்வுகளைச் சொல்லியிருக்காங்க. ‘தென்னையில், சுருள் வெள்ளை ஈ தாக்குனா, காய்கள் எண்ணிக்கை குறையுறதோடு மரங்கள்ல ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படுது. தென்னை ஓலைகளோட அடிப்பரப்புலதான் வெள்ளை ஈக்கள் முட்டையிடும்.

அந்த முட்டைகள் வட்ட வடிவில் அல்லது சுருள் வடிவில் இருக்கும். முட்டையிலிருந்து வெளிவருகிற ஈக்கள், தென்னையைத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்துது. மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள் வைக்கிறது, வேப்பெண்ணெய்க் கரைசல் தெளிக்கிறது, ‘கிரைசோபிட்’ இரை விழுங்கிகளைத் தோப்புகளில் விடுறது மூலமா வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் மைதா மாவுங்கிற விகிதத்தில் கலந்து தென்னை ஓலைகளின் மேற்புறமும் அடிப்புறமும் தெளித்தாலும் வெள்ளை ஈக்கள் கட்டுப்படும்’னு ரேவதி சொல்லிருக்காங்க” என்றார் வாத்தியார்.

அந்த நேரத்தில் வெயிலின் உக்கிரம் சற்று குறைந்து காற்று வீச ஆரம்பித்தது. “வெயில் குறைஞ்சுடுச்சு, நான் வீட்டுக்குக் கிளம்புறேன்” என்று சொல்லிக் கொண்டே கூடையைத் தூக்கினார், காய்கறி. அன்றைய மாநாடும் அத்தோடு முடிவுக்கு வந்தது.