மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!

மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!

மாத்தியோசிஓவியம் வேலு

காராஷ்டிர மாநிலத்தின் சின்னக் கிராமமான ‘ராலேகண் சித்தி’ (Ralegan Siddhi)-க்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். அன்னா ஹசாரே (அண்ணா ஹஜாரே- என்றும் அழைக்கிறார்கள்)-வை ஒருமுறையேனும் சந்தித்துவிட வேண்டும்னு பல ஆயிரம் மைல் பயணித்து வருபவர்களையும் அங்கு பார்த்திருக்கிறேன். அதுவும், அறத்துடன் மக்கள் பணி செய்ய நினைக்கிறவங்க முதலில் இவரிடம் வந்துதான், அடிப்படைக் கல்வியைக் கத்துக்கிட்டுப் போறது வழக்கம்.  இப்படி, இவரின் கைப்பிடித்து, பொதுவாழ்வில் நுழைந்த பலர் உச்சத்தில இருக்கிறாங்க. 

மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!

இதில் இரண்டு பேர் முக்கியமானவங்க. ஒருவர் இப்போது, டெல்லி முதல்வர் பதவியிலும், மற்றொருவர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் பதவியிலும் இருக்கிறாங்க. காந்திய வழியில செல்லக் கூடியவங்க, தலைமைக்கு ஆசைப்படமாட்டாங்க. தலைவர்களை உருவாக்குபவார்களாக இருப்பாங்கன்னு படிச்சிருக்கேன். அதை நேரடியா பார்க்குற வாய்ப்பு கிடைச்சது.

அன்னா ஹசாரே, தனது கிராமத்துக்கு மட்டும் வேலை செய்யவில்லை. சுற்றியுள்ள கிராமத்துக்கும் முடிஞ்ச அளவுக்கு வளர்ச்சி பணிகளைச் செய்துகிட்டிருக்காரு. தினமும், கிணறு வெட்டுதல், பண்ணைக்குட்டை அமைப்பு, சமஉயர வரப்பு கட்டுதல்னு ஏதாவது வேலை நடந்தபடியே இருக்கும். காலையில வேலை நடக்கும் இடத்துக்குப் போயிடுவாரு. ‘அதைச் செய், இதைச் செய்....’ என்ற உத்தரவுகூடப் போடமாட்டார். அங்கு நடக்கும் வேலைகளைக் கூர்ந்து கவனிப்பாரு. தேவைப்பட்டால் மட்டுமே ஆலோசனை வழங்குவார். மாலை நேரத்தில உள்ளூர் மக்கள், சமூகச் சேவகர்கள்... அவரைத்தேடி வந்துடுவாங்க. இந்தச் சந்திப்பு பத்து மணி வரைகூட நீளும். பெரும்பாலும் இரண்டு வேளை உணவுதான் சாப்பிடுவார். சில சமயம் அது ஒரு வேளையாகவும் சுருங்கும். தேசிய நீர்ப்பிடிப்பு மேம்பாட்டு நிலையத்தில பயிற்சி பெறுவர்களுக்கு வழங்கப்படும் அதே உணவுதான் அன்னாவுக்கும். பெரும்பாலும் அந்தக் கிராமத்தில் விளைந்த கோதுமை அல்லது சோள ரொட்டியும், கொண்டைக்கடலை குருமாவும்தான் இருக்கும்.

மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் உருவாக்கிய தடுப்பணைகளும் கால்வாய்களும்தான், இன்று ராலேகண் சித்தியைப் பசுமையாக்கியுள்ளது. இந்தக் குக்கிராமத்தில்.. வங்கி, மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளினு நகரத்தில் உள்ள வசதிகள் அத்தனையும் உருவாக்கப் பட்டிருக்கு. ‘நாட்டின் நிலையான நீடித்த வளர்ச்சி பெற்ற மாதிரி கிராமம்’ (Sustainable Village Model For The Country)னு அரசு அமைப்புகளே பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

நாடு போற்றும் வகையில் உயர்ந்து நிற்கும் ஹசாரே, ஒரு காலத்தில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தவர்னு சொன்னா ஆச்சர்யமாகத்தான் இருக்கும். 1965-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரில் ராணுவ வாகனத்தின் டிரைவராக ஹசாரே சேவை செய்தாரு. தன் கண் முன்னால், சக ராணுவ நண்பர்கள் போரில் இறப்பதைக் கண்டவருக்கு, வாழ்க்கை மேல விரக்தி உருவாயிருக்கு. நல்ல நாள் பார்த்து தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்திருக்காரு. கடைசியா டெல்லியைச் சுற்றிப்பார்க்க விரும்பி, டெல்லி ரயில் நிலையம் போயிருக்காரு. அங்கிருந்த கடையில ஒரு புத்தகம் அவர் கண்ணைக் கவர்ந்து இழுத்திருக்கு. உடனே, அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தொடங்கியிருக்கிறாரு. சிறிது நேரத்துல அவரது தற்கொலைத் திட்டம் தவிடு பொடியாகிடுச்சு. 

மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!

‘விவேகானந்தரின் சிந்தனைகள்’ என்ற அந்தப் புத்தகத்தில ‘‘மனித வாழ்வு என்பதே சக மனிதர்களிடம், அன்பு காட்டுவதும், அவர்களுக்கு உதவி செய்வதும்தான்...’’ என்ற வாசகம் ஹசாரேவைச் சிந்திக்க வைச்சிருக்கு. இனி, என் வாழ்வு மனிதகுல சேவைக்கே என்று முடிவு எடுத்திருக்காரு. அதன் பின்பு நடந்ததை ஊர் அறியும். இந்த கிராமத்தின் பிரதான தொழிலான விவசாயம் ஒரு காலத்தில 1,700 ஏக்கர் அளவில செழிப்பா இருந்திருக்கு. ஆனா, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒரு கட்டத்தில் 125 ஏக்கர் அளவுக்குச் சுருங்கிடுச்சு. ஆண்டுக்கு 500 மி.மீ மழை (தமிழ்நாட்டின் மழை அளவு 950 மி.மீ) பெய்யும். ஆனா, நிலத்துக்குள் இறங்குவதற்கு வாய்ப்பில்லாம, அந்த நீர் வழிந்தோடியிருக்கு. ‘‘கிடைக்கின்ற இந்த மழைநீரை அறுவடை செய்தாலே... நிலங்களில் பயிர் அறுவடை சாத்தியமாகிவிடுமே என்று யோசித்தேன். செயலில் இறங்கினேன். கிராம மக்களும் என்னுடன் கைகோர்த்தார்கள்’’னு மக்களின் பங்கேற்பையும் அன்னா ஹாசரே குறிப்பிட தவறமாட்டர்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சுற்றுவட்டாரத்திலிருக்கும் மூன்று, நான்கு கிராமங்களில் 1972-ஆம் ஆண்டுவாக்கில் டாடா நீர்ப்பாசன மீட்புக் குழுவினர், நிலத்தடிநீர் சேமிப்பு வேலைகளைச் செய்திருக்காங்க. அதன் மூலமா, அங்கெல்லாம் பாசனத்துக்கு ஓரளவு தண்ணீர் கிடைச்சிருக்கு. உடனே, அதை ராலேகண் சித்தியிலும் செயல்படுத்த களத்தில் இறங்கினாங்க. நிலத்துக்குள் நீரைக் கொண்டு சேர்க்க பெரிய வல்லுநர்களின் ஆலோசனைகளையோ, மெத்தப் படித்தவர்களின் அறிவுரைகளையோ அவங்க தேடி போகல. மக்களே ஒன்றாகக் கூடித் திட்டமிட்டாங்க. வாய்க்கால்கள், கசிவுநீர்த் தேக்கம், கல்லணைகள், சிமென்ட் அணைகள் கட்டி அமைப்பதற்கான திட்டங்களைத் தீட்டி, வேலைகளை ஆரம்பிச்சாங்க. 

மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!

இந்த அறப்பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே... ‘விதிமுறைகள்’ என்ற பெயர்ல முட்டுக்கட்டைகளைப் போடும் வேலையினையும் அரசு இயந்திரம் செய்திருக்கு. இந்தக் காலக்கட்டத்தில அரசு ஊழியர்கள் செய்த, லஞ்ச ஆட்டத்தைப் நேரில் பார்த்த அன்னா ஹசாரே, பிற்காலத்தில் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலமா, லஞ்ச அரக்கர்களை அடக்கி ஒடுக்கினாரு. இன்றும்கூட மகராஷ்டிர மாநிலத்தில் லஞ்சம் கேட்கும், அரசு அலுவலர்களிடம், ‘‘அன்னா ஹசாரே பரிவார் (கூட்டம்) அமைப்பைச் சேர்ந்தவன்’’னு சொன்னால் போதும், கையெடுத்து கும்பிட்டுவிட்டு, வேலையைச் செய்து முடிப்பார்கள், அரசு அலுவலர்கள். ‘‘மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கு ஊழல் நடந்தாலும் தட்டிக் கேட்பேன்’’னு கர்ஜனை செய்வார் இந்த ‘இந்தியன் தாத்தா’.

இந்தக் கிராமத்தில் நீர்ப்பாசன நுட்பத்தை உலக வங்கி வல்லுநர்கள் குழு பாராட்டிச் சென்றுள்ளது. பல நாட்டைச் சேர்ந்த நீர்ப் பாசன வல்லுநர்கள், இங்குத் தங்கி ஆய்வு செய்றாங்க. ‘‘பெரிய அணைகளைக் காட்டிலும், ராலேகண் சித்தியில் உள்ளது போன்ற நீர் ஆதாரங்கள் தான் நாட்டுக்குத் தேவை’’னு நீரியல் நிபுணர் ராமசுவாமி ஐயர் பலமாகவே பதிவு செய்திருக்காரு.

‘உங்களின் வாழ்க்கை வரலாறு, பொது வாழ்வுக்கு வருபவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். தயவு செய்து அதை எழுதுங்கள்’னு நண்பர்கள் நச்சரிக்கவே, தற்பெருமைக்கு ஆசைப்படாத, அன்னா ஹசாரே, தமிழகம் நோக்கித்தான் வந்தார். 

மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!

‘‘அமைதியான இடம் கிடைத்தால், எழுதுவதற்கு வசதியாக இருக்கும் என்று தேடியபோது என் மனக்கண்ணில் வந்து நின்றது விவேகானந்தர் பாறை. விவேகானந்தர், கன்னியாகுமரியில் தியானத்தில் இருந்தபோது, சிந்தித்த கருத்துகள்தான் அவரை உலகத்துக்கே அடையாளம் காட்டின. அதனால், அதே விவேகானந்தர் பாறையில் பத்து நாள்கள் அமர்ந்து என்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினேன். மராத்தி, ஆங்கிலம், தமிழ் என்று மூன்று மொழிகளிலும் பல பதிப்புகளாக அந்தப் புத்தகம் வெளியாகி உள்ளன.

பள்ளிக் கல்வியைக்கூட முழுமையாக முடிக்காத எனக்கு, டாக்டர் பட்டம் கொடுத்து அழகு பார்த்ததும் தமிழ் மண்தான். 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திண்டுக்கல், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், எனது சமுதாயச் சேவையைப் பாராட்டி டாக்டர் பட்டம் கொடுத்தது. என்னுடைய வாழ்க்கையில் இந்த இரண்டு முக்கியமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்தேறியதால், அந்த மண்ணுக்குக் கடமைபட்டுள்ளேன்’’னு நான் ஊருக்குக் கிளம்பும்போது, உருக்கமாகப் பேசினாரு. கூடவே விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ‘எனது கிராமம் எனது மண்’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்றுத் தமிழ் புத்தகத்தில் கையேழுத்திட்டு, வாழ்த்தி வழி அனுப்பினார் அன்னா ஹசாரே.

மாற்றம் தந்த மழைநீர் சேமிப்பு!

ழைநீர் அறுவடை மூலம் நிலத்தடி நீர் சேமிப்பு வேலைகள்தான் ராலேகண்சித்தி கிராமத்தை இன்றைக்கு உலகறியச் செய்திருக்கின்றன. அங்குள்ள நிலத்தின் இயற்கை அமைப்பு சவலாக இருந்துள்ளது. 15 முதல் 20 அடி ஆழம் வரைதான் மண் கண்டம். அதற்குக் கீழே கடினப் பாறை. கசிவுநீர்க் குட்டைகள், பண்ணைக் குட்டைகள் எல்லாம் அமைத்தார்கள் மக்கள். ஆனால், அதில் தேங்கிய நீர், சிமென்ட் தொட்டியில் உள்ள நீரைப்போல அப்படியே இருந்தது. பழையபடியே கிணறுகள் வறண்டுதான் கிடந்தன.

‘என்ன காரணம்’ என்று ஆய்வில் இறங்கியபோதுதான், பாறைகள் தடுக்கின்றன என்ற விஷயத்தைக் கண்டறிந்தனர். உடனே கசிவுநீர்க் குட்டைகள், பண்ணைக் குட்டைகள் அமைத்த இடங்களின் அருகே 100 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறுகள் (போர்வெல்) அமைத்தனர்.

கிடைத்த மழைநீரையெல்லாம் ஆழ்துளைக் கிணற்றுக்குள் சென்று சேரும் வகையில் வழி செய்தனர். என்ன ஆச்சர்யம்... அடுத்தப் பருவத்தில் மழை பெய்தவுடன் பக்கத்தில் இருந்த கிணறுகளில் நீர்மட்டம் கூடியது. கசிவுநீர்க் குட்டைகளில் இருந்த நீரும் மெள்ள நிலத்துக்குள் இறங்கத் தொடங்கியது. பசுமைப் படர ஆரம்பித்தது.