
தென்பெண்ணையை அபகரித்த கர்நாடகம்! - செயற்கை வறட்சியால் கலங்கும் தமிழக விவசாயிகள்!
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டுபோய் இருக்கிறது, தென்பெண்ணை ஆறு. அதனால், அந்த ஆற்றுக்குக் குறுக்கேக் கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை ஆகிய அணைகளும் வறண்டு கிடக்கின்றன. ‘‘இந்த வறட்சிக்கு, மழை பொய்த்துப்போனது மட்டும் காரணமல்ல. கர்நாடக அரசு சத்தம் இல்லாமல், தடுப்பணைகளையும் ஏரிகளையும் உருவாக்கித் தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரை அபகரித்ததுதான் முக்கியக் காரணம்’’ என்கிறார்கள், விவசாயிகள்.

இதுகுறித்துக் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘சத்தமில்லாமல் ரூ.1,250 கோடி திட்டம்... தென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகம்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனாலும் விழித்துக் கொள்ளவில்லை தமிழக அரசு. கர்நாடக மாநிலம், சிக்பெல்லாபூர் மாவட்டம் நந்தி துர்க்கத்தில் உள்ள நந்தி மலையில் பிறக்கும் தென்பெண்ணை, தமிழகத்தில் 391 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் பெய்யும் மழை நீரும், சுத்திகரிக்கப்பட்ட நீரும் சேர்ந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்தன. தற்போது அவற்றையும் மடைமாற்றி அபகரித்துக் கொண்டது, கர்நாடக அரசு. தென்பெண்ணை வறண்டு கிடப்பதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ராம கவுண்டர், “நந்தி மலை யிலிருந்து உற்பத்தியாகிவரும் நீர், பெங்களூரு நகரில் உள்ள பெல்லண்டூர் ஏரியில் வந்து சேர்ந்து, அங்கிருந்து வரதூர் ஏரிக்குச் செல்கிறது. இரண்டு ஏரிகளும் நிரம்பியபிறகு வெளியேறும் தண்ணீர், கிளை நதி மூலமாக மீண்டும் தென் பெண்ணை ஆற்றில் கலந்து தமிழகம் வரும். பெங்களூரு நகர்ப் பகுதிகளில், அதிகளவு மழை பொழியும் காலங்களில் மட்டும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். பெங்களூரு நகருக்குக் காவிரித் தண்ணீர் வந்தாலும் அந்த நகரத்தின் பிரத்யேக நீர் ஆதாரம், தென்பெண்ணை தான். எனவே, தென் பெண்ணை மீது விசேஷ கவனம் செலுத்துகிறது, கர்நாடக அரசு. அதனால்தான் அவசரமாகப் பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்களை யும் நிறைவேற்றியிருக்கிறது, கர்நாடகம்.

பெல்லண்டூர் மற்றும் வரதூர் ஏரிகளுக்கு வரும் நீரை, கோலார் மற்றும் சிக்பெல்லாபூர் மாவட்டங் களின் விவசாயத் தேவை களுக்குத் திருப்பிவிடும் வகை யில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்து நாட்டின் நிதியுதவியுடன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர். தற்போது பணிகள் முழுமையாக நிறை வடைந்துவிட்டன. தற்போது அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் மூலமாக, பெங்களூரு நகரில் பெய்யும் மழை நீர் ராட்சதக் குழாய்கள்மூலம் பம்ப் செய்யப்பட்டு பெங்களூரூ புறநகர்ப் பகுதிகள், கோலார், சிக்பெல்லாபூர், சீனிவாசபுரா, மூல்பாகல், கோலார், பங்காரு பேட்டை பகுதிகளில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சிறு சிறு ஏரிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
பெங்களூரு நகரின் கழிவுநீரைச் சுத்திகரித்து, தொழிற்சாலை மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு மீண்டும் பயன்படுத்தும் வகையில், ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஒரு மெகா சுத்திகரிப்பு நிலையத்தை யும் அமைத்துள்ளனர். இப்படிச் சுத்திகரிக்கப்பட்டு வரும் நீரை பெல்லண்டூர் ஏரிக்குத் திருப்பி விட்டுள்ளனர். இதனால், தென் பெண்ணை ஆற்றில் மழை நீரும் வராது, சுத்திகரிக்கப்பட்ட நீரும் வராது.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கிருஷ்ணகிரி அணை வேகமாக வறண்டு வருகின்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு அணையில் மறைந்திருந்த கோயில் ஊஞ்சல் கல்தூண்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. இனி ஒரு சொட்டு தண்ணீர்கூடக் கர்நாடக எல்லையைத் தாண்டித் தமிழகத்துக்குள் வராது. இதனால் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை என எல்லாமே பயனற்றுப் போகும். செயற்கையாக ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த வறட்சியால் ஐந்து மாவட்ட விவசாயிகள் நேரடியாகப் பாதிப்படைந்துள்ளனர். குடிநீருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்துக்காகக் குரல் கொடுக்க வலுவான தலைவர்கள் இல்லாமல் போய்விட்டதால், கர்நாடகம் மிக வேகமாகப் பணிகளை முடித்துவிட்டது” என்றார் வேதனையுடன்.
இப்போதும் நிலைமை ஒன்றும் கெட்டுபோய்விடவில்லை. தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகி, ‘1892-ம் ஆண்டு நீர்ப்பங்கீடு ஒப்பந்த அடிப்படையில், கீழ்ப்பகுதி மாநிலங்களின் அனுமதி பெறாமல், ஆற்றின் குறுக்கே எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. அதைக் கர்நாடகா அரசு மீறி உள்ளது’ என்று வழக்குத் தொடர்ந்து, கர்நாடக அரசின் திட்டங்களை முடக்க முடியும்.
தமிழக அரசு செய்யுமா?
- எம்.வடிவேல் - படங்கள்: வ.யஷ்வந்த்