மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000

மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000

மணக்கவும் வியக்கவும் வைத்த சந்தனமரக் கருத்தரங்கு!மாத்தியோசிஓவியம்: வேலு

‘விடிஞ்சா கல்யாணம், கையில பிடி பாக்கு வெத்தலை’ங்கிற கதைபோல, சமீபத்துல நடந்த சந்தன மரக் கருத்தரங்கு பத்தி, கடைசி நேரத்துல தகவல்கள் கிடைச்சது. சென்னை தரமணி பகுதியில உள்ள, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்துலதான் நிகழ்ச்சி நடந்துச்சு. கர்நாடக மாநிலத்தில உள்ள ‘சேண்டல்வுட் சொஸைட்டி ஆஃப் இந்தியா’ (Sandalwood Society of India)ங்கிற அமைப்போட, தமிழ்நாடு பிரிவுதான், இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க.

இந்த அமைப்பின் தமிழ்நாடு மண்டல இயக்குநர் டாக்டர் முருகசெல்வம், தன் வீட்டுக் கல்யாணம் போல, எல்லோரையும் வாய் நிறைய வரவேற்றாரு. சந்தன வாசம், கருத்தரங்கு நடந்த அரங்கு முழுக்கக் கம கமத்துச்சு. பல பகுதியிலிருந்து மரம் வளர்ப்பு ஆர்வலர்களும் விவசாயிகளும் வந்திருந்தாங்க. ‘மரம்’ கருணாநிதி, ‘எழில்சோலை’ மாசிலாமணி, கோயம்புத்தூர் மரம் வளர்ப்போர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த நாராயணசாமி, ஆர்.கே.ராம்குமார்னு ஊடகங்ளுக்கு அறிமுகமான முகங்களையும் பார்க்க முடிஞ்சது. கஞ்சிப் போட்ட கதர் சட்டை அணிந்த பெரும் பணக்கார விவசாயிகளும், காமா சோமாவென்று என்னைப்போல உடையணிந்தவர்களுமாகக் கருத்தரங்கு நிறைந்திருந்துச்சு. கூடவே, சனிக்கிழமை விடுமுறையைத் தியாகம் செய்துவிட்டு வந்த தமிழக அரசு அலுவலர்களையும் பார்க்க முடிஞ்சது. தோட்டக்கலைத் துறையின் இயக்குநர் சுப்பையன், மருத்துவப் பயிர்கள் வாரியத்தின் உறுப்பினர் செயலர் கணேஷ், தமிழ்நாடு தலைமை வனப் பாதுகாவலர் மல்லேஷ்ப்பா வருவாங்கன்னு நிகழ்ச்சி நிரல்ல இருந்துச்சு. ஆனா, என்ன காரணமோ, இந்த முக்கியமான மும்மூர்த்திகளும் தரிசனம் கொடுக்கல. இவங்களுக்கு மாற்றா வேறு அலுவலர்கள் வந்து பேசினாங்க. அதேசமயம் கர்நாடக மாநிலத்தோட வனத்துறை உயர் அலுவலர்கள், சந்தன மரம் வளர்க்கும் விவசாயிகளை அழைச்சுக்கிட்டு வந்து ஆர்வமா கலந்துக்கிட்டாங்க. குஜராத், மகாராஷ்டிராவுல இருந்தும்கூட விவசாயிகள் வந்திருந்தாங்க.

மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000

‘சந்தனம்-செம்மரம் வளர்ப்பு முறைகள், விற்பனை வாய்ப்புகள், சட்டத்தில் உள்ள சவால்கள்’ சம்பந்தமாகப் பல வல்லுநர்கள் பேசுனாங்க. தொடக்க விழாவுல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், ‘‘சந்தனம், செம்மரம் வளர்ப்பதைப்போல வேப்ப மரம் வளர்ப்பதும் முக்கியமானது’’னு அருளாசி வழங்கி வேறு கோணத்துல சிந்திக்க வைச்சாரு.

தமிழக வனத்துறையின் தலைமை முதன்மை வனப் பாதுகாவலர்(திட்டமிடல்), ராஜேஷ்வரி, ‘‘நான் பிறந்த மாநிலம் ஆந்திரா. வனத்துறை குடிமைப் பணிக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்தேன். முதல் பணி, வேலூர் மாவட்டத்தில் தான். அப்போது, ஜமுனாமரத்தூர் பகுதியில ஏராளமான சந்தன மரங்கள் இருக்கும். இந்த மரங்களை வெட்டிக் கடத்துவதற்கு ஆந்திராவிலிருந்து வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து, ஆந்திரா மாநிலத்துக்குச் சென்று சந்தன மரங்களை வெட்டுகிறார்கள். இயற்கை வளமுள்ள தமிழ்நாட்டில் சந்தன மரங்களையும் செம்மரங்களையும் விவசாயிகள் வளர்க்க முன்வர வேண்டும்’’னு அக்கறையாகவே பேசினாங்க. சந்தன மரம் வளர்ப்பு, அதோட சட்ட திட்டங்கள்... ஊரறிந்த ரகசியம்தான். ஆனா, சந்தன மரத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு...

1792-ஆம் வருஷம், ஆங்கிலேயர்களோட மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் கடுமையா சண்டைப் போட்டாரு. இதனால, கஜானா காலியாகிடுச்சு. போரைத் தொடர்ந்து நடத்த பணம் தேவைப்பட்டுச்சு. இந்தச் சமயத்துலத்தான், தன்னோட ஆட்சிப் பகுதியில உள்ள சந்தன மரங்களை நாட்டுடமையாக்கினாரு திப்பு சுல்தான். கூடவே கடுமையான சட்டத் திட்டங்களும் உருவாக்கினாங்க. கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திராவுல உள்ள பகுதிகள் திப்புவோட ஆட்சில இருந்துச்சு. இதனால, இந்தப் பகுதியில ‘சந்தனமரம்’ங்கிற பெயரைக் கேட்டலே, அலறி அடிச்சு ஓட ஆரம்பிச்சாங்க.

சந்தன மரத்தைப் பட்டா நிலத்துல வளர்க்கலாம். ஆனா, விற்பனை செய்யும்போது, 20 சதவிகிதம் அரசுக்கு கொடுக்கணும்னு அரசு தரப்புல சொன்னாலும், 200 வருஷத்துக்கு முன்னாடி திப்பு சுல்தான் உருவாக்கிய அரதப்பழசான சில விதிமுறைகளும் நடைமுறையில இருக்குங்கிறதுதான் வேடிக்கை.

சரி, வாங்க கருத்தரங்குல அடுத்து, என்ன பேசுனாங்கன்னு பார்ப்போம்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப் பாளையம், வனக்கல்லூரியின் வேளாண் காடுகள் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் கே.டி.பார்த்திபன் பேசும்போது, ‘‘சந்தனமரத்தை ராயல் ட்ரீ எனப் பெருமையாகச் சொல்கிறார்கள். உண்மைதான், பல ஆண்டுக் காலமாகச் சந்தனமும் செம்மரமும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். செஞ்சந்தன மரத்தை 17-ஆம் நூற்றாண்டிலேயே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். சந்தன மரம் ஒரு டன் 18,000 தொடங்கி 50,00,000 ரூபாய் வரையிலும் அதிகபட்சமாக விற்பனையாகிறது. செம்மரம் ஒரு டன் 27,00,000 ரூபாய்க்கும் அதிகபட்சமாக விற்பனையாகிறது.

இந்த அளவுக்கு விலைக் கிடைப்பதால், தமிழ்நாட்டில் இந்த இரண்டு மரங்களையும் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாகச் செம்மரத்தைச் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். இந்திய அளவில் நான்கு மாநிலங்களில் சந்தன மரச்சாகுபடி அதிக அளவில் உள்ளது. முதலிடத்தில் கர்நாடகமும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது. ஆனால், சந்தன மரத்தின் தேவையே ஆண்டுக்கு 100 டன்தான். உற்பத்தி அதிகரித்த வண்ணம் உள்ளது. வாசனை திரவியம், சோப்பு, மருந்து... என 18 தொழில்களுக்கு மூலப்பொருள்களாகச் சந்தனமரம் பயன்படுகிறது. இதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை அதிகளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டும். நமக்குப் போட்டியாக, ஆஸ்திரேலியாவில் சந்தன மரத்தை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்து அறுவடைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

தென்னிந்தியாவில் கேரள மாநிலம், மறையூரில் உள்ள சந்தன மரங்களில்தான், தரமான வாசனை திரவியமும், வைரம் பாய்ந்த (Heart Wood) மரங்களும் உள்ளன. 25 ஆண்டுகள் வயதாகியிருந்தாலும், மரம் எவ்வளவு உயரமாக இருந்தாலும், அதன் தரம்-எடையின் மூலம்தான், அதன் விலை மதிப்பிடப்படுகிறது.

எனவே, தரமான கன்றுகளைத் தேர்வு செய்து நடவு செய்வது அவசியம். கேரளாவுக்கு அடுத்து, கர்நாடகாவில் மைசூரிலும், தமிழ்நாட்டில் திருப்பத்தூரிலும் தரமான சந்தன மரங்கள் உள்ளன.  இதன் சந்தை வாய்ப்பும் மதிப்புக்கூட்டலும் விரிவடைய வேண்டும். சந்தன மரத்தின் விற்பனையில் வெளிப்படைத் தன்மை வேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் சட்டங்களும் விதிமுறைகளிலும் மாறி மாறியுள்ளன. எனவே, ஒருங்கிணைந்த சட்ட விதிமுறைகளை அரசு உருவாக்க வேண்டிய நேரமிது.

மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000

அடுத்து, செம்மரத்தைப் பற்றிப் பார்ப்போம். செம்மரத்தை அதற்கு வாங்குகிறார்கள், இதற்கு வாங்குகிறார்கள்... எனப் பல கதைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சீனாவும் ஜப்பானும்தான் செம்மரங்களை வாங்கிக் குவிக்குது. வாஸ்து சாஸ்திரம் சீனாவில் கொடிக்கட்டிப் பறக்கிறது. செம்மரத்தில் செய்த நாற்காலி, உணவு மேஜைகள் வீட்டிலிருந்தால், செல்வம் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், சீனர்கள் செம்மரத்தை வாங்கி மகிழ்கிறார்கள். ஜப்பானில் இசைக்கருவிகள் செய்யவும், அழகுப் பொருள்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

செம்மரத்தின் பொருள்கள் வீட்டிலிருப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர் ஜப்பனியார்கள். அடுத்து, உணவு பொருள்களில் இயற்கை வண்ணத்தைச் சேர்க்கவும், துணிகளுக்குச் சாயம், தலைமுடிக்கு நிறமூட்டவும் செம்மரம் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் புற்றுநோயைக் குணப்படுத்த, செம்மரத்தை மருந்து பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது என்று சொல்லப்படுகிறது.

நம் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளுடன் வெளிநாடுகளுக்கு, செம்மரத்தை ஏற்றுமதி செய்யலாம் என்று அண்மையில் அறிவித்துள்ளது. இந்த இனிப்பான செய்திக்குப் பின்னால், மரம் வளர்ப்போர் சங்கத்தினரின் உழைப்பு அடங்கியுள்ளது. செம்மரத்திலும் கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது. எல்லா மரங்களையும் ஏற்றுமதி செய்துவிட முடியாது. 25 ஆண்டுகள் வயது ஆனாலும், மரத்தின் அடர்த்தியைப் பொறுத்து, அதாவது, ஒரு கன மீட்டருக்கு 900 கிலோ மேல் அடர்த்தியுள்ள மரங்கள் அதிக சந்தை வாய்ப்பு உள்ளதாகத் தெரியவருகிறது. ஆகையால், இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும், தமிழ்நாட்டில் சிறு குறு விவசாயிகள்தான் அதிகம். இவர்களுக்கும் நல்ல வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கில், 1 ஏக்கர் நிலத்தில் சந்தனம், செம்மரம் உள்ளிட்ட 36 வகையான  பழ வகை, மரவகை, பயிர் வகையினைச் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள, எங்கள் கல்லூரியில் மாதிரிப் பண்ணையை உருவாக்கியுள்ளோம். இந்த நிலத்திலிருந்து ஒரு விவசாயி, தினமும் 550-1,000 ரூபாய் வருமானம் பெற முடியும். இந்தப் பண்ணையைப் பார்வையிட்டு பயன்பெறவும் சந்தனம்-செம்மரச்சாகுபடி குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்’’ என்று அழைப்புவிடுத்து அவசியமான, அத்தியாவசியமான தகவல்களைச் சொல்லி கைத்தட்டல்களை அள்ளினார், முனைவர் பார்த்திபன்.

வடை பாயாசத்துடன் கல்யாண விருந்துபோல, மதிய உணவு இனிமையாக இருந்துச்சு. இதைவிட இனிமையாக இருந்தது, மதிய அமர்வு. கர்நாடக மாநிலத்தில் சந்தன மரம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, சந்தன மரத்திருட்டைத் தடுக்க அம்மாநிலத்தில் செய்யும் அதிநவீன நுட்பம், பாரம்பர்ய நுட்பங்கள், மூலிகைப் பயிர்கள் வாரியத்தில் வழங்கப்படும் மானியங்கள் பற்றி முக்கியமான தகவல்கள் குறித்து வல்லுநர்கள் பேசினாங்க.

சந்தன மரம் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி சொல்லிய அனுபவங்களும் சிறப்பா இருந்துச்சு, ஆனா, நம்ம விவசாயிங்க பாதிபேர், உண்ட மயக்கத்தில் ஊருக்குப் புறப்பட்டுப் போயிட்டாங்க. பாதியில் ஊருக்குப் போனவர்களுக்கும் உங்களுக்கும் சேர்த்து, மதிய அமர்வு தகவல்களை, அடுத்த இதழில் சொல்றேன்.