
தோட்டக்கலைத் துறையின் புதிய திட்டம்!ஓவியம்: வேலு
அருகிலுள்ள நகரத்துக்குப் போய்விட்டு ‘காய்கறி’ கண்ணம்மாவோடு பேசிக் கொண்டே ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி.
வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச மண்வெட்டியோடு கிளம்பிய ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், இவர்களோடு சேர்ந்து கொண்டார். மூவரும் நடந்தவாறே பேசிக் கொண்டு வர, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.
“டெல்டா மாவட்டங்கள்ல பரவலா நெல் சாகுபடிதான் செய்றாங்க. நெல்லுக்கடுத்துப் பயறு வகைகளைச் சாகுபடி செய்வாங்க. இப்போ நிறைய விவசாயிகள், எண்ணெய் வித்துப்பயிர்கள், சிறுதானியங்கள்னு சாகுபடி பண்ண ஆரம்பிச்சுருக்காங்க.
காவிரித் தண்ணீரை நம்பிதான் இந்தப்பகுதிகள்ல நெல் சாகுபடி செய்றாங்க. ஆனா, காவிரியில சில வருஷங்களாவே சரியா தண்ணீர் கிடைக்காததால, டெல்டா பகுதி விவசாயிகளைக் காய்கறிகள், பழங்கள், பூக்கள் மாதிரியான பயிர்களுக்கு மாத்துறதுக்கான வேலைகளை ஆரம்பிச்சுருக்கு, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை. அதுக்காக டெல்டா பகுதியில, பரவலா மண்கண்டம் எப்படி இருக்குதுனு ஆய்வு செஞ்சுருக்காங்களாம். அதுக்கேத்த பயிர்களை முடிவு பண்ணி தோட்டக்கலைத்துறை சார்பா மானியத்தோடு கூடிய புதுத்திட்டத்தை அறிவிக்கப் போறாங்களாம்” என்றார் வாத்தியார்.
“நான் ஒரு சுவாரஸ்யமான செய்தி வெச்சுருக்கேன்” என்று ஆரம்பித்த ஏரோட்டி, “வேலுார் மாவட்டம், காட்பாடிக்குப் பக்கத்துல இருக்குற வண்டறந்தாங்கல்ங்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மாடுகளை வளர்த்துட்டு இருக்கார். தான் வளர்க்குற ஒரு பசுமாட்டை மஞ்சுவிரட்டுப் போட்டிக்காகப் பழக்கியிருக்கார், குமார்.

அந்தப் பசுவோட பெயர் ‘ஒன் மேன் ஆர்மி’. இதுவரைக்கும் ஐம்பது போட்டிகள்ல கலந்துக்கிட்டு எட்டு லட்சம் ரூபாய் அளவுக்குப் பரிசு வாங்கியிருக்குதாம் அந்தப்பசு. இப்போ அந்தப் பசுச் சினையா இருக்குதாம். ஆசை ஆசையா வளர்க்குற அந்தப்பசு மாட்டைத் தன்னோட குடும்பத்துல ஒரு ஆளா நினைச்சு... கிராமத்துல இருக்குற அத்தனை பேரையும் அழைச்சு, தடபுடலா விருந்து வெச்சு பசுவுக்கு வளைகாப்பு நடத்தியிருக்கார், குமார்.
சொந்தக்காரங்க மூலமா, தாம்பூலத் தட்டுக்கள்ல பூ, பழங்கள், இனிப்புகள்னு ஊர்வலமாகக் கொண்டு வந்து மாட்டுக்குச் சந்தனம், குங்குமம் பூசி நலங்கு செஞ்சுருக்காங்க. நிகழ்ச்சியில கலந்துக்கிட்ட எல்லோருக்கும் பிரியாணி விருந்து கொடுத்துருக்கார், குமார். பசுமேல இவ்வளவு பாசமானு சொந்தக்காரங்க, ஊர்க்காரங்க எல்லாம் ஆச்சர்யப்பட்டுப் போனாங்களாம்” என்றார்.
“இந்தளவுக்குப் பசுவுக்கு மரியாதை கொடுக்குறாங்கன்னா பெரிய விஷயம்தான்” என்று சொல்லிக்கொண்டே ஒரு தர்பூசணிப்பழத்தை அறுத்து ஆளுக்கு ஒரு கீற்றைக் கொடுத்தார், காய்கறி.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்த வாத்தியார், “தஞ்சாவூர், கும்பகோணம் சுத்துவட்டாரப் பகுதிகள்ல இருக்குற திருப்புறம்பியம், உத்திரை, ஆலமன்குறிச்சினு பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பம்ப்செட் மூலமா குறுவை நெல் சாகுபடியை ஆரம்பிச்சுருக்காங்க. இந்தப்பகுதிகள்ல பெரும்பாலும், ஆடுதுறை-37 ரக நெல்லைத்தான் சாகுபடி செய்வாங்க. இப்போ வயல்ல நெல் கதிர்கள் பால் பிடிக்கிற பருவத்துல இருக்குதாம். ஆனா, விவசாயிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுறதுக்கு மின்சாரம் இல்லையாம்.
திருப்புறம்பியத்தில் இருக்குற டிரான்ஸ்ஃபார்மர் பழுதாகி ஒரு வாரம் ஆகியும் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கலையாம். அதனால, பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாததால, நெற்பயிர்கள் வாட ஆரம்பிச்சுடுச்சாம். அதைக் கண்டு கவலைப்பட்ட விவசாயிகள், ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்துட்டு வந்து பம்ப்செட்களை இயக்கி, வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிப் பயிர்களைக் காப்பாத்திட்டு இருக்காங்களாம். வசதி இல்லாத விவசாயிகள் என்ன செய்றதுனு தெரியாம தவிச்சுட்டுருக்காங்களாம்” என்றார்.
அடுத்தச் செய்திக்குத்தாவிய ஏரோட்டி, “புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் பகுதியில அம்புலி ஆத்துக்குக் குறுக்கே காமராஜர் காலத்துல கட்டுன அணை ஒண்ணு ரொம்ப வருஷமாகப் பராமரிப்பு இல்லாம இருக்குதாம். அதைச் சரி செய்யலாம்னு அந்தப்பகுதி இளைஞர்கள் சிலர் முடிவு எடுத்துருக்காங்க. அவங்க, அணையிலிருந்து தண்ணீர் வெளியே வர்ற மதகு, கால்வாய்களைச் சீரமைச்சு குளங்களையும் தூர்வாரிட்டு இருக்காங்க. அதைக் கேள்விப்பட்ட 62 வயசான ராஜம்மாள்ங்கிற பாட்டி, தூர்வாருற பணிக்காக 10,000 ரூபாய் கொடுத்துருக்காங்க. அந்தப்பணம் அவங்க 100 நாள் வேலைத்திட்டம்னு சொல்லப்படுற ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்து சம்பாதிச்ச பணம். தன்னோட பேரக்குழந்தைங்க படிப்புக்காக அந்தப்பணத்தைச் சேர்த்து வெச்சுருக்காங்க, ராஜம்மாள் பாட்டி. ஊருக்கு ஒரு நல்ல காரியம்கிறதால, அந்தப்பணத்தை எடுத்துக் கொடுத்துட்டாங்களாம். கஷ்ட நிலையில இருக்குற சமயத்துலயும் ஊருக்கு உதவுற அந்தப்பாட்டியை எல்லோரும் பாராட்டிட்டுருக்காங்க” என்றார்.
“இந்த மாதிரி நல்ல மனசுக்காரங்கள்லாம் இருக்குறதாலதான், நாட்டுல இன்னமும் மழை பெய்யுது” என்ற வாத்தியார் அடுத்தச் செய்தியை ஆரம்பித்தார். “பொள்ளாச்சி பகுதியில இளநீர் தென்னைச் சாகுபடி அதிகமா நடக்குது. இந்தப் பகுதியிலிருந்துதான் சென்னை, மதுரை, திருச்சி, சேலம்னு தமிழ்நாடு முழுக்க இளநீர் அதிகமா போகுது. இப்போ கோடை வெயில் அதிகமா இருக்குறதால, இளநீருக்கு அதிக தேவை ஏற்பட்டிருக்குதாம்.
அதனால, இளநீருக்கான பண்ணைக் கொள்முதல் விலையை உயர்த்தியிருக்காங்க, பொள்ளாச்சி பகுதி விவசாயிகள். ‘டிஜே’ ரக இளநீர் ஒண்ணுக்குப் பண்ணை விலையா 32 ரூபாய்னு நிர்ணயம் செஞ்சுருக்காங்க. சௌகாட் ஆரஞ்சுங்கிற செவ்விளநீர் ஒண்ணுக்கு 33 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சுருக்காங்க. நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேணாம்னு விவசாயிகளுக்கு இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலமா அறிவுறுத்தியிருக்காங்க” என்றார், வாத்தியார்.
அந்த நேரத்தில், “வயலுக்குத் தண்ணிப் பாய்ச்சிட்டு வந்திடுறேன். நீங்க வீட்டுக்குப் போங்க” என்று ஏரோட்டி சொல்லியவாறே வயலை நோக்கி கிளம்ப, அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.
மரக்கன்று உற்பத்தி!
கோயம்புத்தூரில் உள்ள மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில், மரப் பயிர்களுக்கான விதைகளைக் கையாளும் முறைகள், விதை பரிசோதனை மற்றும் தரமான மரக்கன்று உற்பத்தி பயிற்சி ஜூன் 20-21 தேதிகளில் நடைபெறவுள்ளது.
‘‘எங்கள் நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் தாய்மரத் தேர்வு, விதைச் சேகரிப்பு, விதையைப் பதப்படுத்துதல், முளைப்புப் பரிசோதனை, நாற்றுத் தயாரிப்பு போன்ற நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகள் பயிற்சி அளிக்கவுள்ளனர். செய்முறை பயிற்சியும் வனத்தில் உள்ள மரங்களைப் பார்வையிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்டணப் பயிற்சியில் கலந்துகொள்ள, விவசாயிகள், மாணவர்கள் மற்றும் மரம் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என அழைப்பு விடுத்துள்ளது வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம்.
தொடர்புக்கு: முனைவர்.ஆர். ஆனந்தலக்ஷ்மி, விஞ்ஞானி, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்-2. தொலைபேசி: 0422 2484100, 94437 65003.