
மாத்தியோசி
‘ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்’னு சொல்வாங்க. இதுக்கு என்ன அர்த்தம்னு, இப்போ உள்ள தலைமுறைக்குத் தெரியாது. ஏதோ கேலி, கிண்டல்னுகூட நினைச்சுக்குவாங்க. ஆனா, இந்த முதுமொழியில பல விஷயங்கள் அடங்கியிருக்கு. அந்தக் காலத்துல கல்யாண வீட்டு நுழைவாயில, சந்தனத்தைக் குலைச்சு வெச்சுக்கிட்டு ரெண்டு பேர் நிப்பாங்க. ஆண்கள் உள்ளே நுழைஞ்சவுடன், மார்பிலயும் ரெண்டு கைகள்லயும் சந்தனத்தைப் பூசிவிடுவாங்க. அப்போல்லாம் மார்புல சந்தனம் இருந்தாதான், கல்யாணத்துக்குப் போய்ட்டு வந்ததுக்கு அடையாளம். இது வெறும் சடங்கு மட்டுமில்லீங்க. சந்தனத்தை உடம்புல பூசிக்கிட்டா, உற்சாகம் பிறக்கும், உடம்புல சூடு குறையும். தோல் நோய்கள் வராது. தோல் சுருக்கம் ஏற்படாது.
இதோட தொடர்ச்சியாத்தான், இன்னைக்கும் ரெண்டு பெண்களைக் கல்யாண மண்டபத்து வரவேற்பு பகுதியில நிக்க வெச்சு, பன்னீரையும் சந்தனத்தையும் சின்னச் சின்னக் கிண்ணத்துல வெச்சி வரவேற்கிறோம்.
சந்தனத்தை உடம்பு மேல தேய்ச்சுக்கிட்டா நல்ல பலன் கிடைக்கும்ங்கிற தகவலை டி.வி விளம்பரத்தைப் பார்த்தாலே நல்லா புரியும். சந்தனத்தைச் சேர்த்துத்தான், 99 சதவிகித அழகுசாதனப் பொருள்களைத் தயாரிக்கிறாங்க. சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் சந்தனத்தை மணக்க மணக்க பயன்படுத்துறாங்க. சித்த மருத்துவத்தை நேர்மையா செய்திட்டிருக்கிற மருத்துவர்கிட்ட பேசும்போது, சந்தனத்தைப் பத்தி முக்கியமான ரகசியத்தைச் சொன்னாரு.

அதாவது, சந்தனத்தைத் தினமும் உணவு பொருள்ல கலந்து சாப்பிட்டு வந்தா, ஓர் ஆண்டுக்குள் முகத்துல சுருக்கம் மறைஞ்சு, தோல் பளபளப்பாகி இளமை திரும்புமாம். நாற்பது வயசுல சாப்பிட்டா, முப்பது வயசு மாதிரி தோற்றப் பொலிவு இருக்கும்னு சொன்னாரு.
இவ்வளவு சிறப்பான சந்தனம் மரத்தோட அருமை பெருமைகளை அசைப்போட்டப்படியே, கர்நாடக மாநிலத்தில உள்ள ‘சேண்டல்வுட் சொஸைட்டி ஆஃப் இந்தியா’ (Sandalwood Society of India) சமீபத்துல சென்னை தரமணி பகுதியில உள்ள, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்துல நடத்திய ‘சந்தனம்-செம்மரம் வளர்ப்பு’ பத்தின கருத்தரங்குல கலந்துகிட்டேன். மதிய உணவுக்குப் பிறகு, பாதிபேர் ஊருக்குப்போனாலும், அந்த அமர்வுலதான், பல முக்கியமான தகவல்கள் பேசப்பட்டது.
கர்நாடக மாநிலத்தோட வனத்துறையின் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அனிதா ஐ.எஃப்.எஸ் பேசும்போது, ‘‘கர்நாடக மாநிலத்தின் வனத்துறை, சந்தன மரம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்து வருகிறது. சந்தன மரம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குச் செடிக்கு 100 ரூபாய் மானியம் கொடுக்கிறோம். நடவு செய்தது முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தொடந்து வழங்கி வருகிறோம். இதன் மூலம் சந்தனமரச் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாகுபடி மட்டுமல்லாமல், விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு வழிகாட்டி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியின் பரிந்துரைப்படிதான், சந்தனம் உள்ளிட்ட மரப்பயிர்களை விஞ்ஞான ரீதியில் கர்நாடகாவில் சாகுபடி செய்கிறோம். சந்தன மரம் வளர்ப்பில் கர்நாடகமும் தமிழ்நாடும்தான் முன்னிலையில் உள்ளது. சந்தன மர வளர்ப்பை அதிகமாக ஊக்கப்படுத்துவதன் மூலம், விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும், இரண்டு மாநிலங்களின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். நம் விவசாயிகளும் கோடீஸ்வரர்களாக மாறும் நாள் வெகுதூரமில்லை’’ என்று பூரிப்புடன் பேசினாங்க.
அடுத்து, ‘சேண்டல்வுட் சொஸைட்டி ஆஃப் இந்தியா’வின் பொருளாளர் சோமசேகர் பேசும்போது, ‘‘சந்தன மரம் சாகுபடி செய்ய விரும்புபவர்களுக்கு இரண்டுவிதமான தயக்கம் இருக்கும். ஒன்று அதை எப்படிப் பாதுகாத்து வளர்ப்பது, இன்னொன்று விற்பனை செய்வதில் பிரச்னை ஏற்படாதா என்பவைதான். சந்தன மரத்தைத் தனியார் நிலங்களில் சாகுபடி செய்யலாம். அதைக் கிராம நிர்வாக அலுவலரிடம் கட்டாயம் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். சந்தன மரத்தை வெட்டி நேரடியாக விற்பனை செய்யக்கூடாது. வனத்துறைக்குத் தகவல் சொல்லி, அவர்கள் மூலம்தான் விற்பனை செய்ய வேண்டும். மொத்த விலையில் 80 சதவிகிதம் வளர்த்தவருக்கும் 20 சதவிகிதம் அரசுக்கும் பணத்தைப் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள் வனத்துறையினர். ஆகையால், விற்பனையில் அச்சம் வேண்டாம். சந்தன மரத்தை முறையாக வளர்த்து வந்தால், 15 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். இதற்குள் யாரும் அதை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும். கர்நாடகாவில், சந்தன மரம் சாகுபடி செய்துள்ள தோட்டங்களில் நாய்கள் காவல் காக்கின்றன. சில இடங்களிடல் ஐந்து அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி அதில், சந்தனத்தை நடவு செய்கிறார்கள். செடி வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைப் போட்டு மூடி விடுகிறார்கள். இதனால், திருடர்கள் மேல் மரத்தை வெட்டி சென்றாலும் பூமிக்கு அடியில் உள்ள மரம் தப்பிவிடுகிறது.
தற்போது நவீன தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் சந்தன மரங்களைப் பாதுகாக்கும் விவசாயிகள் உள்ளனர். எலக்ட்ரானிக் சிலிக்கான் சிப்களை மரங்களில் பொருத்தி விடுகின்றனர். யாரவது, மரத்தைத் தொட்டால், உடனே அபாய ஒலி எழும்பிவிடும். உடனே சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்களுக்கு, ‘உங்களின் மரங்களுக்கு ஆபத்து’ என்ற எச்சரிக்கை குறுஞ்செய்தியும் சென்றுவிடும். போலீஸ், வனத்துறையினரின் எண்களைக் கொடுத்திருந்தால், அவர்களுக்கும் தகவல் சென்றுவிடும். இதனால், சந்தன மரத் திருட்டைத் தடுக்க முடியும்.

கர்நாடகாவில் உள்ள வனத்துறை, சந்தன மரம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பக்க பலமாக உள்ளது. ஏக்கருக்கு 600 சந்தன மரங்களைச் சாகுபடி செய்யலாம். இதன் மூலம் 15 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 6 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வருமானமாகக் கிடைக்கும். இது நான் சொல்லும் கணக்கு அல்ல. அரசு சொல்லும் கணக்கு. சந்தன மரம் (இத்தனை வருஷமா சந்தன மரம் ஒட்டுண்ணி மரம்னு சொல்லிக்கிட்டிருந்தோம்) துணை விரும்பும் மரம். எனவே, மற்ற மரங்களுடன் சாகுபடி செய்யலாம். மா, கொய்யா போன்ற பழவகை மரங்களுடன் கலப்பு பயிராகச் சாகுபடி செய்யலாம். வரப்பு பயிராகவும் பயிரிடலாம். கட்டாயம், ஒவ்வொரு விவசாயியும் சந்தன மரங்களைச் சாகுபடி செய்தால், கோடிக்கணக்கில் வருமானம் எடுக்க முடியும். நிலத்தின் மதிப்பைவிட, அதில் வளரும் பயிரின் மூலம் விவசாயிகள் செல்வந்தர்களாக உருவாக முடியும்’’னு நம்பிக்கையுடன் பேசினாருங்க.
தமிழ்நாடு மூலிகைப்பயிர்கள் வாரியத்திலிருந்து வந்திருந்த அதன் அலுவலர் செளந்திரராஜன், ‘‘மூலிகைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வருகிறோம். சந்தனம், செம்மரம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் மானியம் உண்டு. ஆடாதொடை, நிலவேம்பு, சிறுகுறுஞ்சான், அவுரி, அரோ ரூட் போன்ற மூலிகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் உண்டு. அதிகபட்சம் 75 சதவிகிதம் வரை மானியம் கொடுத்து வருகிறோம். மூலிகைப் பயிர்களுக்கான மானியத்தைப் பெற அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும் அல்லது எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். தொலைபேசி: 044 26222565. இ.மெயில்: tnsmpb@gmail.com’’ என்று தெளிவாகச் சொல்லி வழிகாட்டினாருங்க.
‘சேண்டல்வுட் சொஸைட்டி ஆஃப் இந்தியா’ தமிழ்நாடு பிரிவு இயக்குநர் முருகசெல்வம் (தொடர்புக்கு: 63822 12029), நம்மிடம் பேசும்போது, ‘‘சந்தனம்-செம்மரம் வளர்ப்பு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கூடியது. நானும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகில், 20 ஏக்கர் பரப்பளவில் மரப்பயிர்களைச் சாகுபடி செய்துள்ளேன். அதில் சந்தனமும் அடக்கம். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்குச் சந்தன மரம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். நம் பக்கத்து மாநிலமான கர்நாடகம் சந்தன மரம் வளர்ப்பில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நாமும் அவர்களுடன் இணைந்து வேகமெடுப்போம். இதன் மூலம் சந்தனம் மணப்பதைப்போல, விவசாயிகளின் வாழ்க்கையும் மணக்கும். சந்தன மரம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கவே, எங்களின் அமைப்பு உருவாக்கப்பட்டது’’னு நல்மொழிகளைச் சொன்னாருங்க.