மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!

கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!
பிரீமியம் ஸ்டோரி
News
கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!

மரத்தடி மாநாடுஓவியம்: வேலு

யிர்களுக்குத் தெளிப்பதற்காகத் தேமோர்க் கரைசல் தயார் செய்து கொண்டு இருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் பேசிக்கொண்டே தோட்டத்துக்கு வந்தனர். தயார் செய்த கரைசலை எடுத்து வைத்துவிட்டுக் கைகால்களைக் கழுவி கொண்டு வந்தமர்ந்தார், ஏரோட்டி. ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார், வாத்தியார்.

“வருஷத்துக்கு 177.25 டி.எம்.சி காவிரித் தண்ணீரைக் தமிழ்நாட்டுக்குக் கர்நாடக அரசு கொடுக்கணும். ஒவ்வொரு மாதமும், எவ்வளவு தண்ணீர் கொடுக்கணுங்கிறதைக் காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்திருக்கு. அதன்படி, ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்துவிடணும். அந்தத் தண்ணீர் கிடைத்தால்தான் டெல்டா மாவட்டங்கள்ல குறுவைப் பருவ நெல் சாகுபடி செய்ய முடியும். இதோடு குடிநீர்ப் பிரச்னையையும் தீர்க்க முடியும்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திலும் கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு ஜூன் மாதம், 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கணும்னு உத்தரவு போடப்பட்டிருக்கு. கர்நாடக மாநிலத்தில் ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ் அணைகள்ல, இப்போ 23.8 டி.எம்.சி அளவு தண்ணீர் இருக்கு. ஆனாலும், அணைகள்ல போதுமான தண்ணீர் இல்லை. அதனால, தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாதுனு கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் சொல்லியிருக்கிறார்.

கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக  அரசு மதிக்கிறதேயில்லை. அவங்க தண்ணீர் கொடுக்க முடியாதுனு திட்டவட்டமா சொல்லியும், பொதுப்பணித்துறையைக் கைவசம் வைத்திருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தப் பதிலும் சொல்லலை. மவுனமா இருக்குறதோடு மட்டுமில்லாம, அடுத்தகட்ட நடவடிக்கையையும் எடுக்கலை. இதனால, தமிழக மக்கள் அதிருப்தியில் இருக்காங்க” என்றார்.

“அவர் கவலை அவருக்கு. மத்திய அமைச்சர் பதவி கேட்டுக் குடைச்சல் கொடுக்கிறவங்களை எப்படிச் சரிக்கட்டுறது, ராஜ்யசபா எம்.பி பதவி கேட்கிறவங்களை எப்படிச் சமாளிக்கிறது, உள்ளாட்சித் தேர்தல்ல யாரோட கூட்டணி வைக்கிறதுனு மண்டை குழம்பிப் போய்க் கிடக்கிறார். அவருக்குக் காவிரியில் தண்ணி வந்தா என்ன, வராட்டி என்ன” என்று காட்டமானார், ஏரோட்டி.

“சரி சரி... கோபம் வேணாம். நீயும் நானும் கோபப்பட்டு என்னவாகப் போகுது” என்று ஏரோட்டியைச் சமாதானப்படுத்திய காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கொரு மாம்பழத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கிற சூலுார், சுல்தான்பேட்டை சுத்துவட்டாரப் பகுதிகள்ல கிட்டத்தட்ட 20 லட்சம் தென்னை மரங்கள் இருக்கு. இந்தப்பகுதிகள்ல இருந்து தேங்காய், இளநீர் எல்லாம் சென்னை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரைனு தமிழ்நாடு முழுக்க விற்பனைக்குப் போகுது. அதுபோக இந்தப்பகுதிகள்ல கொப்பரை உற்பத்தியும் அதிகளவுல நடக்குது. கிட்டத்தட்ட 300 கொப்பரை உலர் களங்கள் இருக்கு. இப்போதைக்கு அரசு கொள்முதல் நிலையங்கள்ல ஒரு கொப்பரையை 92.50 ரூபாய்னு கொள்முதல் செய்றாங்க. அதே நேரத்துல வெளி மார்க்கெட்ல கொப்பரைக்கு அதிக தேவை இருந்ததால, ஒரு கிலோவுக்கு 124 ரூபாய் வரை கொடுத்துக் கொள்முதல் செய்துட்டு இருந்தாங்க. அதனால, விவசாயிகள் வெளி மார்க்கெட்ல விற்பனை செய்றதைத்தான் விரும்பினாங்க.

வெளி மார்க்கெட்ல கொள்முதல் செய்ற வியாபாரிகள், சிண்டிகேட் அமைச்சுக்கிட்டு திடீர்னு கொப்பரை கொள்முதல் விலையை ஒரேயடியாகக் குறைச்சிட்டாங்க. இப்போ வியாபாரிகள் ஒரு கிலோ கொப்பரையை 90 ரூபாய்க்குதான் கொள்முதல் செய்றாங்க. அரசாங்கமே கொள்முதல் விலையை 120 ரூபாய்னு உயர்த்தி வியாபாரிகள்கிட்ட கொள்முதல் செய்யணும்னு விவசாயிகள் கோரிக்கை வைக்கிறாங்க” என்றார், வாத்தியார்.

அடுத்த செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, “திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர் பகுதிகள்ல 55 தனியார் விதை உற்பத்தி நிறுவனங்களும், 17 அரசு விதை உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட்டுக்கிட்டு இருக்கு. ஒரு வருஷத்துக்கு இங்க 40,000 டன் அளவு விதைகள் உற்பத்தியாகுது. ஆனா, விதைச்சான்று, வயல் பதிவு, உற்பத்தி, ஆய்வு, சான்று வாங்குவது மாதிரியான வேலைகளுக்குக் கோயம்புத்தூர் மாவட்டம் அல்லது ஈரோடு மாவட்டத்துக்குத்தான் விவசாயிகள் போக வேண்டியிருக்கு. திருப்பூர் மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகள் ஆகியும் அந்த மாவட்டத்தில் விதைச்சான்று வழங்குற அலுவலகத்தை அமைக்கலை. அதுக்காக விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வெச்சுட்டுருந்தாங்க. இப்போதான், திருப்பூர்ல விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகம் அமைக்கிறதுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கு. கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விதைச்சான்றுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிற 13 வட்டாரங்களில் விதைச்சான்று அலுவலர்களை நியமிக்கப் போறாங்க. இனிமே விவசாயிகள் அலைய வேண்டியதில்லை” என்றார்.

அந்த நேரத்தில் வானம் இருட்டிக்கொண்டு மழைக்கான அறிகுறிகள் தென்பட… “மழைக்கு முந்தி வீடு போய்ச் சேர்ந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டே கூடையைத் தூக்கினார், காய்கறி. அத்தோடு அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது. 

கைவினைப் பயிற்சி

கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, மத்திய அரசின் கீழ் உள்ள கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில், வருகிற ஜூலை 1-ம் தேதியிலிருந்து 6 மாத காலக் கயிறு ‘ஆர்டிசன்’ பயிற்சி (கைவினைப் பயிற்சி) தொடங்க உள்ளது. பயிற்சியில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பத்தை நேரிலோ, கடிதம் மூலமாகவோ மண்டல விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். www.coirboard.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியும். பூர்த்திச் செய்த விண்ணப்பத்தை ஜூன் 21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முகவரி:
அலுவலகப் பொறுப்பாளர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி, வல்லம் வழி, தஞ்சாவூர்-613403.
தொலைபேசி: 0436 2264655.

உழவே தலை 3.0

கோயம்புத்தூர், ஆவாரம்பாளையம் கோஇந்தியா ஹாலில் வரும் ஜூன் 15-ம் தேதி ‘உழவே தலை 3.0’ என்ற விவசாயக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் மண்வளம், பூச்சி மேலாண்மை, பண்ணை வடிவமைப்பு யுக்திகள் போன்றவை குறித்து மண்புழு விஞ்ஞானி முனைவர் சுல்தான் இஸ்மாயில், பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம், எம்.ரேவதி ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கான கட்டணம் ரூ.700. இந்திய தொழில் வர்த்தகச் சபை-கோவை இந்த நிழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புக்கு, தொலைபேசி: 0422 2224000/1.

‘பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்’ தொடர், இந்த இதழில் இடம் பெறவில்லை.