மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!

மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!

ஓவியம்: வேலு

வாத்தியார் வெள்ளைச்சாமியும் ஏரோட்டி ஏகாம்பரமும் அன்று வீட்டுக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில், காய்கறி கண்ணம்மா வந்து சேர்ந்தார். இருவருக்கும் பதநீர் கொடுத்தார் ஏரோட்டி. அதோடு சில நுங்குகளையும் சீவிக் கொடுத்தார். அவற்றைச் சாப்பிட்டுவிட்டு மூவரும் தோட்டத்துக்குக் கிளம்பினர். வழக்கம்போல ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார். 

மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!

“காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நீர் நிலைகளைச் சீரமைத்துப் பராமரிக்கிற பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலாற்றுக்குக் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டுமென்று மக்கள் ரொம்ப நாளா கோரிக்கை வெச்சிட்டிருந்தாங்க. இவர் கலெக்டராகப் பொறுப்பு ஏத்துக்கிட்டதும், இவர்கிட்டயும் அந்தக் கோரிக்கை வந்திருக்கு. உடனே தடுப்பணைகள் கட்ட ஏற்பாடு செய்து விட்டாராம். செய்யாற்றுக்கு நடுவில், வெங்கச்சேரிங்கிற இடத்தில் ஒரு தடுப்பணையும், பாலாற்றுக்கு நடுவில் ஈசூர், வாயலூர்னு ரெண்டு இடங்களிலும், தடுப்பணைகள் கட்டிட்டு இருக்காங்க.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 70 ஏரிகள் புனரமைக்கப் பட்டிருக்கு. நீர்வள, நிலவளத்திட்டத்தின் கீழ், 42 ஏரிகள் புனரமைக்கப்பட்டிருக்கு. பொதுமக்களே முன்வந்து நீர்நிலைகளைத் தூர்வார அனுமதிகேட்டால், உடனடியா அனுமதி கொடுத்துவிடுகிறார், கலெக்டர் பொன்னையா. அதனால, காஞ்சிபுரம் மாவட்டம் நீர்நிலைகள் புனரமைப்பில் முன்னோடி மாவட்டமா இருக்குது” என்றார், வாத்தியார்.

“ஆமாய்யா... நீர்நிலைகளையும் வாய்க்கால்களையும் முறையாகப் பராமரித்தாலே, தண்ணீர்ப் பிரச்னையைப் பாதியளவுக்குக் குறைத்திடலாம். மழை வரலைனு சொல்வதைவிடக் கிடைக்கிற மழைத் தண்ணீரைச் சேமிக்க ஆரம்பிக்கணும். இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அதையெல்லாம் சரியாகக் கடைப்பிடித்தாலே ஓரளவுக்குப் பிரச்னை தீர்ந்திடும்” என்ற ஏரோட்டி, தொடர்ந்தார்.

“நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்காக, தலைமைச் செயலாளர் தலைமையில், பொதுப்பணித் துறையில் சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். இந்தப்பணிகள் பற்றித் தலைமைச் செயலாளர் மாதம் ஒருமுறை ஆய்வு நடத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் ஒத்துழைக்காவிட்டால் ராணுவத்தினரை அழைக்கலாம். கிடைக்கும் மழைநீரை, குளம், குட்டைகளுக்குத் திருப்பிவிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளை உடனடியாகத் தூர்வாரப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்துப் பொதுப்பணித்துறை செயலாளர் அறிக்கை அளிக்க வேண்டும். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் குறித்து ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும். இப்படி நீதிமன்றங்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவுகள் எதையுமே தமிழக அரசு முறையாகச் செயல்படுத்தலை” என்றார் ஏரோட்டி.

அடுத்த செய்திக்குத் தாவிய வாத்தியார், “ஏற்கெனவே, காவிரி மேலாண்மை வாரியம் போட்ட உத்தரவை மதிக்காமல், ‘தண்ணீர் தரமாட்டோம்’னு உறுதியாகச் சொல்லிடுச்சு, கர்நாடக அரசு. இப்போ தெலுங்கு-கங்கை ஒப்பந்தப்படி ஆந்திரா அரசு கொடுக்க வேண்டிய தண்ணீரும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்காதுபோல. தெலுங்கு-கங்கை ஒப்பந்தப்படி, ஒவ்வொரு வருஷத்துக்கும் சென்னைக்கு 12 டி.எம்.சி அளவு தண்ணீரை ஆந்திர அரசு கொடுக்கணும்.

இந்த வருஷம், வெறும் 2 டி.எம்.சி அளவு தண்ணீரை மட்டும்தான் ஆந்திரா கொடுத்திருக்கு. ‘சென்னையில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுறதால, குடிநீர்த் தேவைக்காக 2 டி.எம்.சி தண்ணீர் கொடுங்க’னு பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் ஜெயராமன் ரெண்டு பேரும் ஆந்திரா போய் அந்த மாநில அதிகாரிகளிடம் கேட்டாங்க. ஆனா, ‘கண்டலேறு அணையில் போதுமான தண்ணீர் இல்லை. அதனால், தண்ணீர் கொடுக்க முடியாது’னு ஆந்திர மாநில அதிகாரிகள் சொல்லிட்டாங்களாம். அதனால, சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு இன்னும் அதிகமாகிறதுக்கு வாய்ப்பு இருக்கு. மழை கிடைத்தால் மட்டும்தான் சமாளிக்க முடியும்” என்றார்.

“அதுதான் நம்ம தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், புதுசா ஒரு ஐடியாவைச் சொல்லியிருக்கிறாரே… அதாவது, ‘சென்னைக் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குகிறதுக்காகச் செயற்கை மழையைப் பொழிய வைக்க அரசு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது’னு ஒரு நிகழ்ச்சியில பேசியிருக்காரே” என்றார் காய்கறி.

“ஏற்கெனவே ஒருத்தர் அணையில தெர்மாகோல் போட்டார். அடுத்து இவர் கிளம்பியிருக்கிறார். அதெல்லாம் சாத்தியமான விஷயமே கிடையாது. வேதிப்பொருள்களைப் பயன்படுத்திச் செயற்கை மழை பொழிய வைக்கிறது, இன்னமும் சோதனை முயற்சியாத்தான் இருக்கு. அதுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும். அதில் பயன்படுத்துகிற வேதிப்பொருள்களால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்கிறதை விட்டுவிட்டு, எப்படித்தான் இந்த மாதிரி யோசிக்கிறாங்கன்னே தெரியலை” என்று சொன்ன ஏரோட்டி அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

“இந்த முறை கோடை மழையும் சரியாகக் கிடைக்கவில்லை. தென்மேற்குப் பருவமழையும் சரியா கிடைக்கலை. அதனால, கம்பம் பகுதிகளிலும் கேரள மாநிலம் இடுக்கி பகுதிகளிலும் ஏலக்காய் சீசன் 2 மாசம் தள்ளிப் போகும். 6,000 டன் வரை மகசூல் குறையும்னு நறுமணப் பொருள்கள் வாரியம் சொல்லியிருக்கு. வழக்கமா ஜூன் மாசத்துல ஏலக்காய் அறுவடை ஆரம்பிக்கும். ஆனா, இந்த வருஷம் காய்ப்பில்லாததால அறுவடை ஆரம்பிக்கப்படல. சர்வதேச அளவுல ஏலக்காய் உற்பத்தி பாதிக்கப் பட்டிருக்கிறதால, ஏலக்காய் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கும்னு சொல்றாங்க” என்றார் ஏரோட்டி.

அந்த நேரத்தில், தென்மேற்குப் பருவக்காற்றின் உபயத்தால் மழை பெய்ய ஆரம்பிக்க… ‘ஆடு மாடுகளைக் கொட்டகைக்குள் விட்டுவிட்டு வந்துடுறேன்’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து ஓடினார், ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!

வாத்தியார் சொன்ன கொசுறு மல்பெரி… கவனம்!

ட்டுப்புழு வளர்க்கும் விவசாயிகள், மல்பெரிச் செடிகளைப் பூச்சித் தாக்குதலிலிருந்து காக்கும் முறைகள்குறித்துச் சொல்லியிருக்கிறது, பட்டு வளர்ச்சித்துறை. “மல்பெரிச் செடிகளின் வளர்ச்சி மற்றும் இலைகளின் தரத்தைப் பொறுத்துத்தான் பட்டுப்புழுக்களின் ஆரோக்கியம் அமையும். மல்பெரியில் மாவுப்பூச்சிகள் தாக்கி இலையின் நரம்புகள், இளம் தண்டுகளில் சாற்றை உறிஞ்சி சேதம் ஏற்படுத்த வாய்ப்புண்டு.

‘அசிரோபேகஸ் பப்பாயே’ எனும் ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 500 வீதம் வயலில் வைத்தால், மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். மல்பெரி வயல்களில் களைகள் இல்லாத வகையில் பராமரிக்க வேண்டும்.

இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு, 20 மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை வைக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 3 மில்லி வேப்பெண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளிப்பதன் மூலமும் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்தலாம். செடிகளின் வேர்ப்பகுதியில் கறையான்களின் தாக்குதல் இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்”