மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

படங்கள் தி. விஜய்

புறா பாண்டி

ஆறாம்  ஆண்டு சிறப்பிதழ்

##~##

''முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சாரம் பெற முடியுமா?''
கே. ராமசாமி, துறையூர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் பதில் சொல்கிறார்.

''ஒவ்வொரு ஆண்டும், எவ்வளவு பேருக்கு இலவச மின்சாரம் வழங்கலாம் என்பதை அரசுதான் தீர்மானிக்கிறது. அதற்குத் தகுந்தவாறு, விண்ணப்பங்களின் பதிவு அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் சான்றுகளுடன், சம்பந்தப்பட்ட பகுதியின் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அங்கு, பதிவுக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்தினால், பதிவு எண் மற்றும் தேதி குறிப்பிடப்பட்ட உரிய ஒப்புகை அட்டை வழங்குவார்கள். பதிவு மூப்பு அடிப்படையில், இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும். இத்திட்டத்தில் அனைத்துச் சமூகத்தினரும் விண்ணப்பிக்கலாம். இதுதான் இலவச மின்சாரம் பெறுவதற்கான பொதுவான வழிமுறை.

இலவச மின்சார விஷயத்தில் பல்வேறு திட்டங்களும் நடைமுறையில் இருக்கின்றன. அவற்றின் அடிப்படையில், முன்னுரிமை கோருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவற்றை கீழே வரிசையாக கொடுத்திருக்கிறேன்...

* 'ஜீவன்தாரா' எனும் திட்டத்தின் கீழ் கிணறு தோண்டினால், 'இத்திட்டத்தில் கிணறு தோண்டப்பட்டது’ என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சான்று பெற்று விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் அனைத்துச் சமூகத்தினரும் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் கேட்டவை

*விதவைகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையில் பணிபுரிவோர், பழங்குடியினர் மற்றும் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் என அனைவருக்கும் சேர்த்து சிறப்புப் பிரிவில் ஒவ்வொரு வருடத்துக்கும் மாநில அளவில 250 இணைப்புகள் ஒதுக்கப்படுகிறது. முறைப்படி 50 ரூபாய் செலுத்திப், பதிவு செய்து, ஒரு வருடம் கழித்துதான் இந்த சிறப்புப் பிரிவில் மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்க முடியும். உரிய ஆவணங்களுடன், மேற்பார்வை பொறியாளர்/ஊரக மின்மயமாக்கல் மற்றும் மேம்பாடு (பகிர்மானம்)/தமிழ்நாடு மின்சார வாரியம், 144, அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினர், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையில் தற்போது பணிபுரிவோர் ஆகியோர் கூடுதல் இயக்குநர், முன்னாள் ராணுவத்தினர் நலப்பிரிவு, 22. ராஜா முத்தையா சாலை, சென்னை-600 006 என்ற முகவரியில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். இங்கிருந்து, மின்வாரியத்துக்கு அவை அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு சிறப்பு முன்னுரிமையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

*தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்யும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மகளிர் மற்றும் ஆதி திராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.  

*தமிழக அரசின் 'இரண்டு ஏக்கர் நிலம்’ திட்டத்துக்கு, சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

*நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களுக்கு, சிறப்பு முன்னுரிமையில் இலவசமாக ஒருமுறை மட்டும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

*பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு, அரசு ஆணை மற்றும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி முன்னுரிமையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.  

*இத்திட்டங்கள் அல்லாமல் சுயநிதித் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அதாவது, இலவச மின்சாரத்தை பெறுவதற்காக காத்திருக்க முடியாதவர்கள், முன் மதிப்பீட்டுத் தொகையாக 500 ரூபாய் செலுத்தி, உரிய விருப்பக் கடிதம் கொடுத்து சுயநிதித் திட்டங்களுக்கு மாறலாம். இதற்கு முன் வைப்புத் தொகையாக ரூ 50 ஆயிரம் செலுத்தவேண்டும். உரிய அரசு ஆணை மற்றும் பொதுப்பணித் துறையின் தடையில்லா சான்று பெற்று மின் இணைப்பு கொடுப்பார்கள். பயன்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். ஏற்கெனவே இலவச மின்சாரத்துக்காக பதிவு செய்திருப்பவர்களும், இத்திட்டத்துக்கு மாறிக் கொள்ள முடியும்.''

தொடர்புக்கு, செல்போன்: 87544-79844.

''தண்ணீர் புல் என்று அழைக்கப்படும் 'எருமைப் புல்’ பற்றி சொல்லுங்களேன்?''

வெ. துரைராஜ், ஈரோடு.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், 'முன்னோடி இயற்கை விவசாயி’ நவநீதகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

''முதலில்... தண்ணீர் புல் என்பது வேறு, எருமைப் புல் என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். பசுமை விகடன் இதழில் (25.08.11 தேதியிட்டது) 'ஒரு லிட்டர் பால் 24 ரூபாய்... நேரடி விற்பனையில் நிறைவான லாபம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில்கூட, தண்ணீர் புல்லும், எருமைப் புல்லும் ஒன்றுதான் என்று ஒரு விவசாயி தவறாக குறிப்பிட்டிருந்தார்.

பார்வைக்கு இரண்டும் ஒன்று போல இருப்பதுதான் குழப்பத்துக்குக் காரணம். ஆனால், இவை இருவேறு ரக புற்கள் என்பதே உண்மை.

நீங்கள் கேட்டவை

எருமைப் புல்லின் தண்டு, பட்டை, பட்டையாக இருக்கும். பசுமையான நிறத்தில் இருக்கும். வழக்கமாக சூரிய ஒளியில்தான், புல் வகைகள் நன்கு வளரும். எருமைப் புல், நிழலில்கூட நன்கு வளரும். இதை தென்னந்தோப்பில் நடும்போது, களைச்செடிகள் முளைப்பதைக் கட்டுப்படுத்த முடியும். இது அனுபவத்தில் பார்த்த உண்மை. எருமைப் புல் முளைத்த பிறகு பார்த்தால், தோப்பில் பச்சைப் போர்வை விரித்தது போலத் தெரியும். இதன் மேல் நடக்கும்போது பாதங்களுக்கு சுகமாக இருக்கும். அதனால், இதை அலங்காரப் புல்வெளி அமைக்கவும் பயன்படுத்துகிறார்கள். இது மாடுகளுக்குச் சிறந்த தீவனமும்கூட.

தண்ணீர் புல்லின், தண்டு உருண்டை வடிவில் இருக்கும். வாய்க்கால், குளங்களில் மண்டிக் கிடக்கும் ஒரு வகையான புல் இது. வருடக் கணக்கில் தண்ணீரில் மிதந்தாலும் அழுகாது. வறட்சிக் காலங்களில்கூட பட்டுப் போகாமல், கொஞ்சம் தண்ணீர் கிடைத்தாலும், வளரத் தொடங்கி விடும். குளக்கரைகளில், சரிவான நிலங்களின் ஓரத்தில் இதை வளர்த்து, மண் அரிப்பைத் தடுக்கலாம்.

நீங்கள் கேட்டவை

இதையும் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். காய்ந்த தண்ணீர் புல்லை ஒரு வருடம் வரை வைத்திருந்து தீவனமாகப் பயன்படுத்த முடியும்.''  

தொடர்புக்கு, செல்போன்: 94878-50277, 99444-22664.

''ஒட்டுரக கொய்யா 4 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். விளைச்சல் நன்றாக உள்ளது. ஆனால், கொய்யா பழத்தில் புழுக்கள் நிறைய உள்ளன. அதைத் தடுக்க இயற்கை முறையில் வழிகள் ஏதும் உள்ளதா?''

ல. கந்தசாமி, உடையக்குளத்துப்பட்டி.

கொய்யா சாகுபடியில் அனுபவம் வாய்ந்த தேனிமாவட்ட முன்னோடி விவசாயி ஆண்டவர் பதில் சொல்கிறார்.

''ரசாயன விவசாயம் செய்தபோது, என்னுடைய தோட்டத்து கொய்யா பழங்களிலும் இப்படி தொல்லைகள் இருந்தன. என்னதான், வீரியமான விஷ மருந்துகள் அடித்தாலும், பழ புழுக்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால், வேப்பம் பிண்ணாக்குக் கரைசலைத் தெளித்தால், புழுக்கள் காணமால் போய்விடும்.

தரமான வேப்பம் பிண்ணாக்கு 5 கிலோ அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இதில் 15 லிட்டர் தண்ணீர் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவும். மூன்று நாள் கழித்து 10 லிட்டர் தண்ணீரில், ஒரு லிட்டர் வேப்பம் பிண்ணாக்குக் கரைசலைக் கலந்து தெளிக்கவும். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒரு முறை இதேபோன்று தெளியுங்கள். பெரும்பாலும், இரண்டு முறை தெளித்தாலே புழுக்கள் தொல்லை குறைந்துவிடும். அடுத்தப் பருவத்தில், கொய்யா சிறுபிஞ்சாக இருக்கும்போதே, இக்கரைசலைத் தெளிக்கவும். புழு இருந்தாலும், இல்லாவிட்டாலும் வேப்பம் பிண்ணாக்குக் கரைசலைத் தெளிப்பது நல்லது. இதனால், புழுக்கள் கட்டுப்படுவதோடு, காய்களும் திரட்சியாக கிடைக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94441-77232.

நீங்கள் கேட்டவை

''திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா?''

வி. பூபதி, வேலம்பாளையம்.

கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த நாராயணசாமி பதில் சொல்கிறார்.

''சாயப்பட்டறை கழிவு நீர் பாய்ந்த பகுதியில் புல், பூண்டுகூட முளைக்காது. அந்த அளவுக்கு கழிவு நீரில் ரசாயனங்கள் கலந்துள்ளன. மண்ணில் கலந்துவிட்ட ரசாயனத்தை அகற்றும் சக்தி... வெட்டிவேர் என்கிற பயிருக்கு உண்டு. வெட்டிவேரை சாகுபடி செய்தால், வயலில் உள்ள ரசாயனங்களை உறிஞ்சிவிடும். கூடவே சூபா புல்லையும் வளர்க்கலாம். வெட்டி வேர்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானமும் கிடைக்கும். ஒரு முறை பயிர் செய்தால், பத்து ஆண்டுகள் வரை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். ஏக்கருக்கு ஒரு டன் வெட்டிவேர் மகசூல் கிடைக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெட்டிவேர் சாகுபடி செய்த இரண்டு ஆண்டுகளில் நிலம் வளமானதாக மாறிவிடும். அதன் பிறகு மரப்பயிர்களை சாகுபடி செய்யலாம். மரப்பயிருடன் ஊடுபயிராக வெட்டிவேரை சாகுபடி செய்வது, மேலும் நிலத்தை வளமாக்குவதற்கு உதவும். ஒரு கட்டத்தில் காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்யும் அளவுக்கு நிலம் மிகமிக வளமானதாக மாறிவிடும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94433-84746.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை' பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் Pasumai@vikatan.com  என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PAQA (Space) உங்கள் கேள்வி (Space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.