குப்பைக்குப் போகும் கோழிக் குடலில்... குணபஷலம் தயாரிக்கலாம்! படங்கள்: தி. விஜய்
புறா பாண்டி
##~## |
''கேரளா மாநிலத்தில் முயல் வளர்ப்பு லாபகரமானத் தொழிலாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அதை தமிழ்நாட்டில் லாபகரமாக செய்ய முடியாதா?''
எம். ஸ்டீபன்ராஜ், தோகா
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் முயல் பண்ணை நடத்தி வருபவரும், முயல் வளர்ப்பில் முனைவர் பட்டம் பெற்றவருமான டாக்டர். மிக்தாத் பதில் சொல்கிறார்.
''கேரள மாநிலத்தில் முயல் வளர்ப்புக்கேற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால், அங்கு அதிகளவில் முயல் பண்ணைகள் உள்ளன. தவிர, அங்கு இறைச்சித் தேவைக்காகவும் முயல் வளர்க்கப்படுகிறது. அதோடு, முயல் பண்ணை வைத்திருப்பவர்களே இறைச்சியையும் விற்பனை செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் முயல் இறைச்சி அவ்வளவாக பிரபலமாகவில்லை. வீட்டில் அழகுக்குகாக முயல் வளர்ப்பதைத்தான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். தேவை குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டில் பண்ணைக்கான வாய்ப்புகளும் குறைவாகத்தான் இருக்கிறது. கேரளாவில் உயிர் எடைக்கு கிலோ 140 ரூபாய் என கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இதுபோல விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், தமிழகத்திலும் முயல் வளர்ப்பில் இறங்கலாம்.

வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ள பகுதிகள்தான் முயல் வளர்ப்புக்கு ஏற்றவை. குட்டி முயல்களுக்கு அரிசிக் கஞ்சி கொடுத்தால், கொழுகொழுவென வளரும். ஆனால், வளர்ந்த முயல்களுக்கு அதைக் கொடுக்கும்போது சினை பிடிப்பதில் பிரச்னைகள் வரும். அதனால், குதிரைமசால், தவிடு... போன்றவற்றைத் தீவனமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களைக் கவனித்தால் லாபகரமாக முயல் பண்ணையை நடத்த முடியும். பண்ணை தொடங்க விரும்புபவர்கள் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிடலாம். தொழில்நுட்பங்களைச் சொல்லித்தரவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.''
தொடர்புக்கு: Dr.Migdad, Ashiyana rabbit farm, Tirur.676107,Kerala,India. 098952-97205, 0494-2429205 www.ashiyanarabbitfarm.com
''எங்கள் குடியிருப்புப் பகுதியில் தினமும் ஆயிரம் லிட்டர் அளவுக்கு கழிவுநீர் வெளியேறுகிறது. அது, சுற்றுவட்டாரத்திலேயே தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இக்கழிவுநீரை எளிய வழியில் சுத்திகரிக்க வாய்ப்பிருக்கிறதா... அந்த நீரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?''
பி. சம்பூர்ணம், ஆத்தூர்.
'இயற்கை வேளாண்மை நிபுணர்' டாக்டர். சுல்தான் அகமது இஸ்மாயில் பதில் சொல்கிறார்.
''நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும்கூட கழிவுநீர் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக கொசு உற்பத்தி, நோய் உற்பத்தி என்று தங்களுடைய சுகாதாரத்துக்கு தாங்களே கேடு விளைவித்துக் கொண்டுள்ளனர் பலரும்!
வீட்டில், குளியலறை, கழிவறை, சமையலறை... ஆகியவற்றில் இருந்து வெளிவரும் நீரைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டங்களை வளர்க்கலாம். ஆனால், தற்காலத்தில் சோப்பு, பாத்திரம் துலக்கும் பவுடர் என்று எல்லாவற்றிலும் ரசாயனத் தாக்கம் அதிகம் இருப்பதால், கழிவுநீரை அப்படியே செடி, கொடிகளுக்குப் பாய்ச்சுவது நல்லதல்ல. அதை எளிய முறையில் சுத்திகரித்து, செடிகளுக்குப் பாய்ச்சலாம்.

மூன்று கன அடி அளவுள்ள ஒரு சிமென்ட் தொட்டியை எடுத்துக்கொண்டு, அதன் அடியில் தண்ணீர் வெளியேறுமாறு துளை அமைக்க வேண்டும். பிறகு, தொட்டியில் பாதி அளவுக்கு மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றை நிரப்பி, அதில் சேப்பங்கிழங்கு, கல்வாழை போன்றவற்றை நடவு செய்ய வேண்டும். தொட்டியின் ஜல்லியில் உருவாகும் பாசியில் இருக்கும் நுண்ணுயிரிகள், கழிவுநீரில் கலந்துள்ள ரசாயனங்களை உணவாக எடுத்துக் கொள்ளும். அதனால் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு விடும். சுத்திகரிக்கப்பட்ட நீரை, அடிப்பகுதிக்கு கொண்டு செல்லும் வேலையை கல்வாழை செய்யும். அதன் பிறகு, கீழேயுள்ள துளைகள் வழியாக தண்ணீர் வெளியேறிவிடும்.
ஆயிரம் லிட்டர் அளவு கழிவுநீரைச் சுத்திகரிக்க இந்தக் கொள்ளவு கொண்ட தொட்டி போதுமானது. தொட்டியில் கழிவுநீரை விட்டதும், சிறிது நேரத்திலேயே சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளிவரத் தொடங்கும். இந்த நீரில் செடி, கொடிகள் நன்றாக வளரும்.''
தொடர்புக்கு, செல்போன்: 93848-98358.
''குப்பையில் வீசப்படும் குடல் உள்ளிட்ட பிராய்லர் கோழி இறைச்சிக் கழிவுகளை வேறு எதற்காவது உபயோகப்படுத்த முடியுமா?''
ஊ. காஜாமைதீன், எட்டையபுரம்.
தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி கோ. சித்தர் பதில் சொல்கிறார்.
''பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இறைச்சிக் கழிவுகளை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள். வேளாண்மையைப் பற்றி பேசும் 'விருக்ஷ ஆயுர்வேதம்’ என்னும் நூலில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. இறைச்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் கரைசலை 'குணபஜலம்’ என்கிறார்கள். 'குணபம்' என்றால், இறந்த உடல் என்று அர்த்தம். ஆட்டு எலும்பு, கோழி எலும்பு, மீன் எலும்பு... என்று உண்ண முடியாத கழிவு பாகங்களை குணபஜலம் தயாரிக்கப் பயன்படுத்தலாம். அதைத் தயாரிப்பது பற்றிப் பார்ப்போம்.
இறைச்சிக் கழிவுகள்-5 கிலோ, மாட்டுச்சாணம்-5 கிலோ, மாட்டுச்சிறுநீர்-5 லிட்டர், எந்த இறைச்சியைப் பயன்படுத்துகிறோமோ அதன் குடலில் உள்ள உதப்பை-3 கிலோ (இந்த உதப்பையில்தான் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உள்ளன), கருப்பு எள்-கால் கிலோ, கருப்பு உளுந்து-கால் கிலோ, தேன்-100 மில்லி, நாட்டுச்சர்க்கரை-அரை கிலோ, பசும்பால்-ஒரு லிட்டர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கழிவுகள், சாணம், சிறுநீர், உதப்பை, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை பிளாஸ்டிக் வாளியில் கலந்து வைக்க வேண்டும். எள், உளுந்து ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து ஒரு நாள் வைத்திருந்து மேற்படி கலவையில் போட்டு கலக்கி விட்டு, வாளியின் வாய்ப்பகுதியை மூடி நிழலில் வைக்க வேண்டும். தினம் ஒரு முறை இதைக் கலக்கிவிட வேண்டும். 15-ம் நாள், தேன் மற்றும் பாலை இக்கலவையுடன் சேர்த்துத் தொடர்ந்து கலக்கி வர வேண்டும். அடுத்த 15 நாட்களில் குணபஜலம் தயாராகி விடும். துளிகூட துர்நாற்றம் இருக்காது.
இந்த குணபஜலத்தை பூச்சிவிரட்டி, வளர்ச்சி ஊக்கி என்று பயன்படுத்தலாம். பத்து லிட்டர் நீரில் 100 மில்லி குணபஜலத்தைக் கலந்து பயிர்களின் மீது தெளிக்கலாம். ஏக்கருக்கு 3 லிட்டர் என்கிற கணக்கில் பாசன நீரில் கலந்து தரை வழி ஊட்டமாகவும் பயன்படுத்தலாம். இப்படிச் செய்யும்போது, மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பெருகி, மண் வளமாகி விடும். எலித்தொல்லை உள்ள இடங்களில், இறந்த எலிகளைப் பயன்படுத்தி குணபஜலம் தயாரித்துப் பயன்படுத்தினால், எலிகள் வராது. இவை அனைத்தும் என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட உண்மைகள்.''
தொடர்புக்கு, செல்போன்: 94431-39788.
''கம்பு, சோளம்... போன்ற சிறுதானியங்களை எங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்ய விரும்புகிறோம். இவை எங்கு அதிகமாகக் கிடைக்கும்?''
வி. வீரகுமார், டர்பன், தென்ஆப்பிரிக்கா.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டி.டி.எஸ் (Deccan Development Society)தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பி. சதீஸ் பதில் சொல்கிறார்.
''இந்தியா முழுவதுமே, சிறுதானியங்கள் முன்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டன. அரிசி, பருத்தி... என்று சாகுபடி முறை மாறியதாலும், நவீன விவசாய முறையாலும் சத்தான சிறுதானியங்கள் மறைந்து போய் விட்டன. அவற்றை மீட்டெடுக்கும் வேலையைத்தான் கடந்த 25 ஆண்டுகளாக நாங்கள் ஆந்திராவில் செய்து வருகிறோம்.

மேடக் மாவட்டத்தில் சுமார் 50 கிராமங்களில், கம்பு, சோளம், வரகு, கேழ்வரகு... என சிறுதானியங்கள் மட்டுமே பிரதானமாகப் பயிரிடப்படுகின்றன. இவற்றை விற்பனை செய்ய கடைகளையும், உணவு விடுதியினையும் நாங்கள் நடத்தி வருகிறோம். நீங்கள், இங்கு சிறுதானியங்களை மொத்தமாக வாங்க முடியும். தற்போது, இந்திய அளவில் இந்தப் பணியை விரிவுப்படுத்த 'மில்லட் நெட்வெர்க் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளோம். இந்த அமைப்பு, சிறுதானியங்கள் சாகுபடி செய்பவர்களை ஒருங்கிணைக்கவும், சிறுதானிய சாகுபடியை விரிவுப்படுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது.''
தொடர்புக்கு: Deccan Development Society,
Village Pastapur, Zaheerabad, Medak - 502 220, Andhra Pradesh,
India. Tel: +91 8451 282271, 282785, Fax: +91 8451 282271,
Email: hyd1_ddshyd@sancharnet.in ,
ddsrural@sancharnet.in
''ஸ்பைருலீனா பாசி வளர்க்க எங்கு பயிற்சி கிடைக்கும்?''
எஸ். ஜெயபால், மேலவளவு.
''காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தில் ஸ்பைருலீனா பாசி வளர்க்க இலவசப் பயிற்சி கொடுக்கிறார்கள்.
தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம்,
காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203. தொலைபேசி: 044-27452371.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை
'நீங்கள் கேட்டவை' பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.