விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது..!படங்கள்: ஜி. பிரபு
##~## |
மரத்தின் மீது வாகாக கை வைத்து 'வாத்தியார்' வெள்ளைச்சாமி நின்று கொண்டிருக்க,
துண்டை உதறியபடி வயலில் இருந்து கரையேறி வந்த 'ஏரோட்டி' ஏகாம்பரம், ''என்ன வாத்தியாரே, ஒரு தோரணையா நின்னுக்கிட்டிருக்கற மாதிரியில்ல இருக்கு... ஏதும் விசேஷமோ?'' என்று கேட்டார்!
''ஆமாய்யா... விசேஷமேதான்! விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிச்சுருக்காங்கள்ல. ஒரு விவசாயியா அதை நெனச்சு ஏக பெருமை எனக்கு!''
அந்த நேரம் பார்த்து வண்டியில் இருந்து கூடையோடு இறங்கி வந்த 'காய்கறி' கண்ணம்மாவும் அதைக் காதில் வாங்கிவிட, ''பாருடா... விவசாயிக்கு விருதா! எதுக்காக கொடுத்திருக்காங்க?'' என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
''புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது விவசாயி வெங்கடபதி ரெட்டியாருக்குத்தான் 'பத்மஸ்ரீ’ விருது கொடுக்கப்போறாங்க. கனகாம்பரம், சவுக்கு ரெண்டுலயும் அதிக மகசூல் கொடுக்குற மாதிரியான நாத்துகளை கதிர் வீச்சு மூலமா இவர் உருவாக்கியிருக்கார். அதுக்காகத்தான் இந்த விருது. இவர் உருவாக்குன நாத்துக்களைத்தான் இந்தியா முழுக்க விவசாயிகள் பலரும் சாகுபடி பண்ணிக்கிட்டுருக்காங்களாம். இந்த நாத்துக்களுக்கு இவர் காப்புரிமையும் வாங்கி வெச்சுருக்கார். கனகாம்பர நாத்துக்கு விஞ்ஞானி அப்துல் கலாம் பேரையும், சவுக்கு நாத்துக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேரையும் வெச்சுருக்கார். ஒரு முக்கியமான விஷயம் என்னான்னா... இவர் நாலாவது வரைக்கும்தான் படிச்சுருக்கார்'' என்றார், வாத்தியார்.

இதைக் கேட்டதுமே... ''நீயும்தான் இருக்கே'' என்று ஏரோட்டியை ஒரு இடி இடித்தார், காய்கறி.
அதைக் கண்டு கொள்ளாத ஏரோட்டி, ''விருது வாங்கியிருக்கற விவசாயியை ஒரு விவசாயியா நாமளும் பாராட்டுவோம்'' என்று சொல்லிவிட்டு, தொண்டையைக் கனைத்தபடியே... ''சித்திரை, வைகாசி மாதங்கள்ல அதிகமான வெயில் அடிக்கும்ல. அந்த சமயத்துல நாட்டுக்கோழிகளுக்கு வெள்ளைக்கழிசல் நோய் வருமாம். அப்படி வந்தா, கண்ல நீர்கோத்துக்கிட்டு கழுத்து திருகிக்கும். இரையே எடுக்காம கோழி செத்துப்போயிடும். மத்த கோழிகளுக்கும் நோய் வேகமா பரவும்.
நோய் வராமத் தடுக்கணும்னா... இப்போவே தடுப்பூசி போட்டுக்கலாம். எல்லா கால்நடை மருந்தகங்கள்லயும் இலவசமாவே இந்தத் தடுப்பூசியைப் போடுறாங்க. நான் என் கோழிகளுக்குப் போன சனிக்கிழமைதான் போட்டுட்டு வந்தேன். நீயும் போய் உன் கோழிகளுக்குப் போட்டுவிடு...'' என்று உருப்படியானத் தகவல் ஒன்றைச் சொன்னார்.

''ஆமாய்யா... ரொம்ப கவனமா இருக்கணும். கொலைகாரப்பய நோய் அது'' என்று ரொம்பவே எச்சரிக்கை செய்த வாத்தியார்,
''ஈரோடு, கருங்கல்பாளையத்துல வாரா வாரம் புதன், வியாழக்கிழமைகள்ல மாட்டுச் சந்தை நடக்கும். புதன்கிழமையன்னிக்கு வயசான எருமை மாடுகள், அடிமாடுகள், காளைகள்ல்லாம் வரும். வியாழக்கிழமை அன்னிக்கு, கறவை மாடுகளைக் கொண்டு வருவாங்க. சிந்தி பசு, நாட்டு மாடு, ஜெர்சி, சாதா எருமை, டில்லி எருமைனு ஏகப்பட்ட ரகங்கள் விற்பனைக்கு வரும். போன 2-ம் தேதி கூடுன சந்தையில, 6 ஆயிரம் கறவை மாடுகளும், 600 எருமை மாடுகளும் வந்திருந்துச்சாம். நாட்டு மாடுக 28 ஆயிரம் ரூபாய்ல இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வித்திருக்கு. வழக்கமா சிந்தி பசு 32 ஆயிரம் ரூபாய்ல இருந்து 45 ஆயிரம் ரூபாய் வரைக்கும்தான் விக்குமாம். ஆனா, அன்னிக்கு ஒரு சிந்தி பசு... ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போச்சாம். ஈரோடு மாவட்டத்துலேயே இந்தளவு விலைக்கு இதுவரைக்கும் சிந்தி மாடு வித்ததேயில்லையாம். ஆந்திராக்காரர் ஒருத்தர்தான் இவ்வளவு விலை கொடுத்து வாங்கிட்டுப் போயிருக்கார்'' என்று சொன்னார்.
''அம்மாடியோவ்... அம்புட்டு விலையா?'' என்று அநியாயத்துக்கும் ஆச்சரியம் காட்டினார், காய்கறி.
''என்னிக்கோ ஒரு நாளைக்குத்தான் இந்த மாதிரியெல்லாம் விக்கும். நல்ல சுழி இருந்துஇருக்கும். அதனால விலை கிடைச்சுருக்கும்'' என்று தொழில்நுட்பத் தகவல்களையும் தட்டிவிட்ட ஏரோட்டி, அடுத்து ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

''திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துல கோனூர், கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டைனு நிறைய ஊர்கள் இருக்கு. இங்கல்லாம் கரிசல் மண் கண்டங்கிறதால பனிகாலத்துல கொண்டைக்கடலை போடுவாங்க. இந்த வருஷமும் அப்படிப் போட்டிருக்காங்க. இப்போ அறுவடை நேரத்துல, 200 ஏக்கர்ல பச்சைப்புழுத் தாக்குதல் பலமா இருக்குதாம். அதைப்பத்தி விவசாயத்துறை அதிகாரிகள்ட்ட புகார் சொன்னா, யாரும் கண்டுக்கவே மாட்டேங்குறாங்களாம்'' என்று வருத்தமாகச் சொன்னார்.
''அதெல்லாம் அப்படித்தான்'' என்று சொன்ன வாத்தியார்,
''திண்டுக்கல் பக்கத்துல இருக்கற சிறுமலையில ஏகப்பட்ட மூலிகைகள், மரங்கள் எல்லாம் இருக்கு. 'ராமாயண காலத்துல... சஞ்சீவி மலையை அனுமார் தூக்கிட்டு வர்றப்போ... பெயர்ந்து விழுந்த மலை இது. அதனாலதான் இதுல ஏகப்பட்ட மூலிகைகள் இருக்கு'னு புராணக் கதை சொல்லுவாங்க. முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவுல இருக்கற இந்த மலையை வெச்சுக்கிட்டு, சமீபகாலமா ஏகப்பட்ட ரகளை நடந்துட்டிருக்கு. 'இந்த மலை முழுக்கவே எனக்குத்தான் சொந்தம்'னு கொஞ்ச நாளைக்கு முன்ன.. வெள்ளோடு கிராமத்துல இருக்குற 'ஸ்டீபன்’றவர் வனத்துறை மேல வழக்கு போட்டிருக்கார்'' என்று சொல்ல...
''அடி ஆத்தி, ஒரே ஆளுக்கு 30 ஆயிரம் ஏக்கர் மலை சொந்தமா? மலை முழுங்கி மகாதேவன் கதைனு சொல்லுவாங்களே... அதுமாதிரியில்ல இருக்கு?'' என்று நக்கலடித்தார் காய்கறி!

தொடர்ந்த வாத்தியார், ''இந்தக் கூத்து ஒருபக்கமிருக்க... சிறுமலையில வனத்துறைக்குச் சொந்தமான ஆயிரத்து ஐநூறு ஏக்கர்ல கொஞ்ச பேர் ஆக்கிரமிச்சு விவசாயம் பாத்துக்கிட்டிருக்காங்க. இவங்கள வெளியேத்தறதுக்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கப் போக, இந்த மக்கள், 'நாங்க நாப்பது வருஷமா விவசாயம் பாக்குறோம். எங்களுக்குத்தான் நிலம் சொந்தம்'னு தனியா ஒரு வழக்கு போட்டிருக்காங்க. இதுமாதிரி மலையை சொந்தம் கொண்டாடி மொத்தம் 13 வழக்குகள் இருக்குதாம்.
இதனால மலைப்பகுதியில எந்த வளர்ச்சிப் பணியையும் செய்ய முடியாம முழிச்சுட்டுருக்காம் வனத்துறை. இதுக்கு இடையில மரம் கடத்துற ஆளுங்க, இஷ்டத்துக்கு மலையை மொட்டை அடிச்சுட்டு இருக்காங்களாம். எல்லா பிரச்னைக்கும் விடிவு காண்ற வகையில, சிறுமலையை, 'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி’யா மாத்துறதுக்கான வேலைகளையும் செஞ்சுட்டுருக்காங்களாம் கெவருமென்ட்ல'' என்றார்.
''மலையையே மொத்தமா மொட்டை அடிச்ச பிறகு, அதை பாதுகாக்கப்பட்ட பகுதியா அறிவிச்சா என்ன, அறிவிக்காட்டி என்ன?'' என்று அங்கலாய்த்த ஏரோட்டி, துண்டை உதறிக் கொண்டு எழ, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.
'ஃபவுண்டேசன் டே’
பிப்ரவரி 3-ம் தேதியன்று தூத்துக்குடி கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் 'ஃபவுண்டேசன் டே’ விழா நடைபெற்றது. 1948-ம் ஆண்டில் மீன்வளம் சார்ந்த புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்காக துவங்கப்பட்ட இந்த நிலையம் 59-ம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தது. பிறகு, துணை ஆராய்ச்சி நிலையமாகவும்... 75-ம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சி நிலையமாகவும் நிலை உயர்த்தப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது.
ஆண்டுதோறும் 'ஃபவுண்டேசன் டே’ அன்று மட்டும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியருக்கு ஆராய்ச்சி நிலையத்தைப் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதேபோல அனுமதிக்கப்பட்டு, அனைவரும் பார்வையிட்டனர். ஆராய்ச்சி நிலைய முதல்வர் விஞ்ஞானி மதன் தலைமையில் விஞ்ஞானிகள், ஊழியர்கள் ஆகியோர் ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
ஆழ்கடல் ஆராய்ச்சிப் பணிகள், கடல் முத்து உற்பத்தி, கடல்வாழ் உயிரின வளர்ப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றம், மெல்லுடலி உயிரின உற்பத்தி, உயிரியல் தொழில்நுட்பங்கள், பாதுகாத்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள், மீன்பிடித் தொழிலின் கண்காணிப்பு மற்றும் அதனைச் சார்ந்த புள்ளிவிவர வங்கி, கடல்வாழ் உயிரினங்களின் வேற்றுமை நிகழ்வுகள் குறித்த ஆராய்ச்சிப் பணிகள், சுற்றுச்சூழல் மற்றும் கடல்நீர் மாசுபடுதல் குறித்த ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அனைவருக்கும் விளக்கப்பட்டன.