மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

கோடை வரும் பின்னே... மாவுப்பூச்சி வரும் முன்னே... படம்: காசி. வேம்பையன்

பண்ணைக் கருவிகள் சிறப்பிதழ்

##~##

இம்முறை வாத்தியாரின் தோட்டத்தில்தான் மாநாடு என்று தீர்மானிக்கப்பட்டிருந்ததால், 'ஏரோட்டி' ஏகாம்பரமும், 'காய்கறி' கண்ணம்மாவும் அங்கு வந்து சேர, களத்தில் குவிக்கப்பட்டிருந்த நெல்லுக்கு அருகே, திரிந்த கோழி குடும்பத்துக்கு அக்கறையோடு தீனி போட்டுக் கொண்டிருந்தார் 'வாத்தியார்' வெள்ளைச்சாமி.

''என்னய்யா... மாநாடு கூடுற இடத்தை இந்தத் தடவை மாத்திப்புட்டீங்க?' என்று கேட்டு, வாத்தியாரை திருப்பினார் காய்கறி.

''ஒண்ணுமில்ல கண்ணம்மா, ஊருல இருந்து மகன் வந்திருந்தான்ல. ஏகப்பட்ட வேலை. அதான் உங்கள இங்கயே வரச் சொல்லிட்டேன்'' என்று பதில் தந்தார் வாத்தியார்.

''ஓ... ஊருல இருந்து வந்திருக்காப்லயா... ஏக கவனிப்பாத்தான் இருக்கும்'' என்று குஷியோடு சொன்னார் ஏரோட்டி.

''நான் அவன கவனிக்கறது இருக்கட்டும். அவனில்ல என்னைக் கவனிக்கறேன்னு படாதபாடு படுத்தறான். நேத்தைக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் ரத்தக் கொதிப்புக்கு, ரத்தம், நீர்னு எல்லாத்தையும் பரிசோதனை பண்ணனும்னு அடம் பிடிச்சான். எவ்வளவோ சொல்லியும் கேக்காம, வம்படியா கூட்டிட்டுப் போயிட்டான். கொஞ்சூண்டு ரத்தக்கொதிப்பு மட்டும் இருக்கு. பயப்படுற மாதிரி பிரச்னையில்லைனு டாக்டர் சொல்லிட்டார். அதுக்கே ஆயிரம் ருபா காலி. அதோட ரத்தக் கொதிப்பைக் குறைக்கறதுக்கு ஐநூறு ரூபாய்க்கு மாத்திரை வேற எழுதிக் கொடுத்தார்'' என்று வாத்தியார் சொல்ல...

மரத்தடி மாநாடு

''அடி ஆத்தி, இதுக்கே ஆயிரம், ஐநூறுனு அள்ளி முழுங்கறாங்களே...'' என்று அதிர்ச்சி காட்டினார் காய்கறி!

''அதெல்லாம் அப்படித்தான். இதைக் கேட்டாலே ரத்தக் கொதிப்பு இன்னும் ஜாஸ்தியாயிடும்னுதான் நான் இந்த இங்கிலீஷ் மருந்து மாத்திரைகளைத் தொடறதே இல்லை. 'கண்டிப்பா நான் அந்த மாத்திரைகளை சாப்பிட மாட்டேன்'னு சொல்லிடவே... ஈரோடு கெவர்மென்ட் ஆஸ்பத்திரியில இருக்கற சித்த மருத்துவப் பிரிவுக்குக் கூட்டிட்டுப் போனாங்க'' என்றார், வாத்தியார்.

''ரத்தக் கொதிப்புதானய்யா. தெனமும் ரெண்டு வேலிப்பருத்தி இலையைப் பிடுங்கி சாப்பிடு. எந்த மாத்திரையும் தேவையில்லை. ஒன் கொதிப்பு தானா அடங்கிடும்'' என்று கை வைத்தியம் சொன்னார் ஏரோட்டி.

''பாருடா... இன்ஸ்டன்ட் வைத்தியத்தை'' என்று சிரித்துக் கொண்ட வாத்தியார்,

''ஈரோடு கவர்மென்ட் ஆஸ்பத்திரியில 82-ம் வருஷத்துல சித்த மருத்துவப் பிரிவை ஆரம்பிச்சாங்களாம். அங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கறதுக்கும் வசதி இருக்கு. தினமும் 300 வெளிநோயாளிகள் வர்றாங்களாம். 2011-ம் வருஷத்துல மட்டும் பத்து லட்சம் பேருக்கு மேல சிகிச்சை எடுத்திருக்காங்களாம். தமிழ்நாட்டுலேயே இங்கதான் இந்த அளவுக்கு நோயாளிகள் வர்றாங்களாம். இப்போ, புதுசா லட்சக்கணக்கான ரூபாய்க்கு மருந்துகளும் வந்து குவிஞ்சுருக்காம்'' என்று மேல் விவரங்களையும் தந்தார்.

''இயற்கை விவசாயத்துலதான் ஈரோடு முதலிடம்னு நினைச்சேன். சித்த வைத்தியத்துலயும் அந்த ஊர்தான் முதலிடமா!'' என்று ஆச்சரியம் காட்டிய காய்கறி, ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

''மதுரையில சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் துறையில ராஜேந்திரன்றவர் பேராசிரியரா இருக்காராம். இவர் கடலுக்கடியில பெரிய இலையோட இருக்குற ஒரு வகையான கடல் கோரைச் செடியை எடுத்துட்டு வந்து காய வெச்சு, அதுல காளான் வளர்த்திருக்கார். இந்த வகையான கடல் கோரை, மன்னார் வளைகுடா பகுதியில அதிகளவுல கரை ஒதுங்குதாம். எதுக்குமே பயன்படாம இருந்த அதை எடுத்துட்டு வந்து காளான் வளர்த்தப்போ... அதுல நல்லாவே வளருதாம். மீதமாகுற கோரையை, இயற்கை உரமாவும் பயன்படுத்தலாம்னு சொல்லியிருக்காராம். உழவர் சந்தையில காளான் விக்கிற ஒருத்தர்தான் இதையெல்லாம் எங்கிட்ட சொன்னார்'' என்றார்.

''நீயே சேதி சொல்றப்போ... நான் சொல்லாம இருந்தா சரியா இருக்காது'' என்று காதுகள் புடைக்கச் சொன்ன ஏரோட்டி,

''சென்னை கிறிஸ்துவக் கல்லூரியோட இணைப் பேராசிரியர் நரசிம்மன் தலைமையில் நாலு பேர், கடலூர் மாவட்டத்துல பாதிக்கப்பட்ட மரங்களைப் பத்தி மூணு நாள் ஆய்வு பண்ணி, அதுல ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடிச்சுருக்காங்க. அவ்வளவு புயல் அடிச்சப்பவும், வெண்ணாங்கு, வால்சூறா, நருவுலி, பனை, நாவல் மாதிரியான நம்மூருக்கே உரித்தான மரங்கள் அதிகளவுல பாதிப்புக்குள்ளாகலயாம். முந்திரி, தென்னைனு வெளிநாட்டு வரவான மரங்கள்தான் அதிகமா பாதிப்படைஞ்சுருக்காம்'' என்றார்.

அவரைத் தொடர்ந்த வாத்தியார், ''புயலால சாய்ஞ்சு கிடக்கற முந்திரி, பலா மரங்களை அப்புறப்படுத்தி, தோட்டத்தை சுத்தப்படுத்தித் தர்ற வேலையை அரசாங்கமே செய்து தரப்போறதா முதலமைச்சர் அறிவிச்சுருந்தாங்கள்ல... அந்த வேலையை பண்ருட்டி பக்கத்துல இருக்கற மேலிருப்பு கிராமத்துல  ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, எதிர்பார்த்ததவிட செலவு அதிகமா இருக்கறதால, மேற்கொண்டு இந்த வேலையை எப்படி செய்து முடிக்கறதுனு அதிகாரிங்க கலக்கத்துல இருக்காங்களாம். அந்த ஊரு விவசாயி ஒருத்தர் போன் பண்ணி புலம்பினார்.

மரத்தடி மாநாடு

பசுமை விகடன் நிருபருங்க யாராச்சும் அங்க நேரடியா போயிட்டு வந்தா... விஷயம் கெவருமென்ட் காதுக்கு போகும்'' என்று சந்தடி சாக்கில் ஒரு தகவலைத் தட்டிவிட்டார்.

அடுத்தச் செய்தியையும் தானே ஆரம்பித்த வாத்தியார், ''வெயில் காலம் ஆரம்பிக்கப் போறதால.. பப்பாளி, கொய்யா, கத்திரி, மா, செம்பருத்தி, மரவள்ளி, சூரியகாந்தி, எள், காட்டாமணக்கு... மாதிரியான எழுபது வகையான தாவரங்கள்ல மாவுப்பூச்சி தாக்க வாய்ப்பு இருக்குதாம். பூஞ்சணத் தொற்றும் வருமாம்.

மாவுப்பூச்சி தாக்குல் இருந்தா... தண்ணியை மழை மாதிரி பொழிய வெச்சா... ஓரளவு கட்டுப்படுத்தலாம். அதுக்கு முன்னயே அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம், மூலிகைப் பூச்சிவிரட்டி... இதுல எதையாவது ஒண்ண தெளிச்சிட்டா... தாக்குதலை பெருமளவு குறைச்சுடலாம்கிறது இயற்கை விவசாய வல்லுநர்களோட கருத்து'' என்று தகவலைச் சொல்ல, அத்துடன் முடிந்தது அன்றைய மாநாடு.

நாற்று தயார்...

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக படசோலை, செம்மேடு ஆகிய பகுதிகளில் கொல்லிமலை தோட்டக்கலைப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கில் சில்வர் ஓக், காபி, எலுமிச்சை, மிளகு, ஓட்டு மா, கொய்யா, பலா, அன்னாசி... உள்ளிட்ட நாற்றுகள் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன. சில்வர் ஓக், காபி, எலுமிச்சை நாற்று தலா 5 ரூபாய்; மிளகு 2 ரூபாய்; ஒட்டு மா 30 ரூபாய்; கொய்யா 12 ரூபாய்; அன்னாசி 4 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அண்ணாமலை  பல்கலைக்கழகத்துக்கு முதலிடம்...

கேரள மாநிலம், கொச்சி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் கேரள மீன்வளத் துறை, இந்திய வேளாண் துறை அமைச்சகம், தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியம் ஆகியவை இணைந்து, ஆறாவது சர்வதேச அளவிலான இந்திய வண்ண மீன் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தின. பிப்ரவரி 10 முதல் 14 வரை நடந்த இக்கருத்தரங்கை கேரள முதல்வர் உம்மன் சாண்டி துவக்கி வைத்தார். ஆஸ்திரேலியா, பிஜு தீவுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து வந்த விஞ்ஞானிகள் மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி வண்ண மீன் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் பங்கேற்றனர். கண்காட்சியில் பங்கேற்ற அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.