மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

வாடகை டிராக்டர்... வருது ஒரு திட்டம்!

##~##

விடிவதற்கு முன்னரே தோட்டத்துக்கு வந்துவிட்ட 'ஏரோட்டி’ ஏகாம்பரம், தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். சாவகாசமாக மெதுநடை போட்டு 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி வந்து சேர,

''முன்னயெல்லாம், பயிரோட தேவையைப் பொருத்து தண்ணி பாய்ச்சுவோம். இப்போல்லாம் கரன்ட் இருக்கறதைப் பொருத்துதான் பாய்ச்ச வேண்டியிருக்கு'' என்று புலம்பியபடியே மேலேறி வந்தார்.

''என்னய்யா இது கண்ணு முழியெல்லாம் வெளியில வந்து நிக்குது. ராத்திரியில ஒழுங்கு மரியாதையா தூங்கறது இல்லையா?'' என்று அதிர்ச்சியோடு கேட்டார் வாத்தியார்.

''ம்க்கும்... இந்த அம்மா ஆட்சியில கரன்ட் வர்ற நேரத்தை அந்த ஆண்டவனால கூட சொல்ல முடியாது. இந்த லட்சணத்துல எங்க தூங்கறது. பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவையில்ல கரன்ட் கொடுக்கறாங்க''

-சிடுசிடுவென ஏரோட்டி விழுந்து கொண்டிருக்கும்போதே... 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர்ந்துவிட... ஆரம்பமானது அன்றைய மாநாடு.

''சரி... கரன்ட் கதையை விட்டுத்தள்ளு. அது நம்ம தலையெழுத்து. அதுக்காக கோவப்பட்டா, ரத்தக் கொதிப்புத்தான் எகிறும்'' என்று சமாதானப்படுத்திய வாத்தியார், ஒரு செய்தியை எடுத்துவிட்டார்.

''கொடைக்கானல்ல தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தோட தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் இருக்கு. இதை ஆரம்பிச்சு... கடந்த பிப்ரவரி 23-ம் தேதியோட அம்பது வருஷம் ஆயிடுச்சாம். அதுக்காக பொன்விழா நினைவு தோரண வாயில் கட்டி, திறப்பு விழா பண்ணியிருந்தாங்க. மின்சார அமைச்சர், வேளாண் அமைச்சர், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதினு நிறைய பேரை அழைச்சுருந்தாங்க. திறப்பு விழாவோட சேர்த்து, விவசாயிகளுக்கு நறுமணப் பயிர்கள் பத்தின பயிற்சிக்கும் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. ஆனா, அமைச்சருங்க எல்லாரும் 'சங்கரன்கோவிலே சரணம்'னு இடைத்தேர்தல்ல கவனமா இருக்க... துணைவேந்தர் மட்டும்தான் கலந்துகிட்டாராம்.

மரத்தடி மாநாடு

அமைச்சருங்க வரலங்கறதால, நிகழ்ச்சியை அடக்கிவாசிக்க நினைச்சு, பத்திரிகை நிருபர்கள் உட்பட யாருக்கும் தகவலே தரலயாம்'' என்று வருத்தத்தோடு சொன்னார்.

''அட, காலக் கொடுமையே... இப்படி ரகசியமா நடத்தினா, விவசாயிக எப்படிக் கலந்துக்குவாங்க?'' என்று அப்பாவியாகக் கேட்டார், காய்கறி.

''விவசாயிக கலந்துகிட்டா வம்புனு நினைச்சு கூப்பிடாம விட்டுட்டாங்களோ... என்னவோ?'' என்று சிரித்தார் ஏரோட்டி.

''ஆமாம்... நம்ம முதலமைச்சரம்மா... குறைஞ்ச வாடகையில விவசாயிகளுக்கு டிராக்டர் கொடுக்கற திட்டத்தை ஆரம்பிச்சுருக்காங்க தெரியுமா?'' என்று அடுத்த சங்கதியை எடுத்துவிட்டார் வாத்தியார்.

''இது என்ன புதுத்திட்டம்? கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லு வாத்தியாரே...'' என்று ஆர்வமானார் ஏரோட்டி.

தொண்டையைக் கனைத்துக் கொண்ட வாத்தியார், ''விவசாயப் பொறியியல் துறையில விவசாயிகளுக்காக டிராக்டர், புல்டோசர் எல்லாம் வெச்சு பராமரிச்சு வாடகைக்கு விடுறது வழக்கம். செல்வாக்கு இருக்குற விவசாயிகள்தான் அதை வாடகைக்கு எடுக்க முடியும். இல்லாட்டி சிபாரிசு இருந்தாத்தான் கிடைக்கும்.

அதையெல்லாம் தவிர்த்து எல்லாருக்கும் கிடைக்கணும்கறதுக்காக கம்ப்யூட்டர் மயமாக்கப் போறாங்க. முன்பதிவு செஞ்சுட்டு, தேவைப்படற நாளுக்கு ரெண்டு நாள் முன்ன வாடகைப் பணத்தை பேங்க்ல கட்டிட்டா போதும்... சரியான நேரத்துக்கு டிராக்டர் கிடைச்சுடும்.

இப்போதைக்கு மாநிலம் முழுவதுக்கும் சேர்த்து 165 டிராக்டர்களும், 99 புல்டோசர்களும் இருக்குதாம். கூடுதலாவும் வாங்கப் போறாங்களாம். டிராக்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு 300 ரூபாய்தான் வாடகை. புல்டோசருக்கு 750 ரூபாய் வாடகைனு நிர்ணயிச்சுருக்காங்க'' என்று சொன்னார்.

''பரவாயில்லையே... தனியார்கிட்ட வாடகைக்கு எடுத்தா... டிராக்டருக்கு

500 ரூபாயும்... புல்டோசருக்கு 900 ரூபாயும்ல கொடுக்க வேண்டியிருக்கு'' என்று காய்கறி சந்தோஷப்பட்டுக் கொள்ள...

''அட நீ வேற கண்ணம்மா, மொத்த தமிழ்நாட்டுக்கே 165 டிராக்டர்னா... ஒரு மாவட்டத்துக்கு அஞ்சு டிராக்டர்தான் இருக்கும்போல. இது எந்த மூலைக்கு? ஒரு கிராமத்துக்கே பத்தாதே! கூடுதலா வாங்கிப் போடாட்டி, இந்தத் திட்டமும் ஏட்டுச்சுரைக்காய்தான்'' என்று அலுத்துக் கொண்டார் ஏரோட்டி.

''ஆமாம், நாட்டுல இருக்கற ஆறுகளையெல்லாம் இணைச்சு, வறட்சியே இல்லாம ஆக்கணும்னு பெரிய கோர்ட்ல உத்தரவு போட்டுட்டாங்களாமே. டி.வி. பொட்டியில ஏதோ சொல்லிக்கிட்டிருந்தாங்க. எனக்கு ஏதும் விளங்கல... கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன் வாத்தியாரய்யா...'' என்றபடியே காதைத் தீட்டினார் காய்கறி.

''ஓ... உச்ச நீதிமன்ற விஷயத்தைக் கேக்கறியா..? 'நாட்டுல வத்தாத நதிகள் நிறைய ஓடுறப்ப... பல பாகங்கள் எதுக்காக வறண்டு கிடக்கணும். அதனால, நாடு முழுசும் இருக்குற நதிகளை எல்லாம் இணைக்கணும். உடனடியா ஒரு உயர் மட்டக் கமிட்டியை இதுக்காக அமைக்கணும். இது நாட்டுக்கு நலம் தரக்கூடிய முக்கிய விவகாரம்னு நாங்க நினைக்கிறோம். அதனால, இந்த விஷயத்துல மத்திய, மாநில அரசுகள் முழு அக்கறையோட பங்கேற்கணும்''னு உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு'' என்று சொன்னார் வாத்தியார்.

''அப்பாடா, இனியாவது தண்ணிப் பிரச்னைக்கு தீர்வு கிடைச்சா சரிதான்'' என்று பெருமூச்சு விட்டார் காய்கறி.

உடனே, ''ம்க்கும்...'' என்று குரல் கொடுத்த ஏரோட்டி,

''நீ ரொம்பத்தான் ஆசைப்படுறே. கோர்ட் என்னமோ ஒரு நல்ல எண்ணத்தோட சொன்னாலும், இதுல சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் ஆராயாம 'எடுத்தோம்... கவுத்தோம்'னு எப்படி செய்ய முடியும்?'னு புலம்பறாங்களாம் அதிகாரிங்க. ஏற்கெனவே, 'நதி நீர் இணைப்புங்கறது சுற்றுச்சூழலுக்குக் கேடு தரக்கூடிய விஷயம்’னு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், முன்னாள் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள்னு பலரும் சொல்றாங்களே...'' என்றார் ஏரோட்டி.

''வாஸ்தவம்தான்... 'புலியூருக்கு பயந்து எலியூருக்கு போனா... எலியூரும், புலியூரா மாறிடுச்சு'ங்கற கதையா, வறட்சியைத் தடுக்கிறோம்னு நதிகளை இஷ்டத்துக்கும் இணைச்சுவிட்டு, பிறகு அதனால சுற்றுச்சூழல் கேடு உட்பட கண்ட கண்ட பிரச்னைகளும் வந்து சேர்ந்தா... நாடு தாங்குமா?

இப்படி பெரிய அளவுல நதிகளை இணைக்கறத பத்தி பேசறதவிட,  சின்னச்சின்ன அளவுல இருக்கற நதிகளை இணைக்கறது... ஊருகள்ல இருக்கற குளம், ஏரி ஆக்கிரமிப்புகளைத் தடுத்து, அந்த நீரதாரங்களையெல்லாம் தக்க வெச்சுக்கறதுக்கு உண்டான வேலைகளைச் செய்தாலே போதும்னுதான் சுற்றுச்சூழல் விஞ்ஞானிங்க சொல்றாங்க'' என்ற வாத்தியார்,

''சரி, சரி பென்ஷன் சம்பந்தமா, தாலூகா ஆபீஸுக்கு போகணும்'' என்றபடியே எழுந்து நடக்க... முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு.

'உர மானியத்தைக் குறைத்தால்... போராட்டம்!'

 ரசாயன உரங்களுக்கான மானியத்தை 2012-13-ம் நிதியாண்டில் குறைக்கத் தீர்மானித்துள்ளது மத்திய அரசு. 'தற்போது, ஒரு கிலோ நைட்ரஜன் உரத்துக்கு 27 ரூபாய் 15 காசு மானியம் வழங்கப்படுகிறது. இது, அடுத்த நிதியாண்டில் 24 ரூபாயாகக் குறைக்கப்படும். ஒரு கிலோ பொட்டாஷ் உரத்துக்கு தற்போது 26 ரூபாய் 76 காசு மானியமாக வழங்கப்படுகிறது. இது, 24 ரூபாயாக குறைக்கப்படும். ஒரு கிலோ பாஸ்பேட் உரத்துக்கு தற்போது 32 ரூபாய் 33 காசு மானியமாக வழங்கப்படுகிறது. இது 21 ரூபாய் 80 காசாக குறைக்கப்படும்' என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

''இதன் காரணமாக மானியத்தில் 20% வரை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நடவடிக்கை எங்களை மிகவும் பாதிக்கும். இதைக் கைவிடா விட்டால், நாடு முழுக்க போராட்டங்கள் நடத்துவோம்'' என்று எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட ஆரம்பித்துள்ளன விவசாயச் சங்கங்கள்!