நீங்கள் கேட்டவை
புறா பாண்டி
##~## |
''எங்கள் கிணற்றில் நீர் இறைக்கப் பொருத்தப்பட்டுள்ள மோட்டாரை, கிணற்றில் நீர் இருக்கும் உயரத்தைப் பொறுத்து, ஏற்றி இறக்கி இடம் மாற்றி வைக்க வேண்டியுள்ளது. நீரின் மட்டத்திலேயே மிதக்கும் மோட்டார் ஏதேனும் இருக்கிறதா? அதுபற்றிய விவரங்கள் கிடைக்குமா?''
கே. கந்தசாமி, கோயம்புத்தூர்
'நபார்டு' வங்கி உதவி பெற்று, மோட்டாருக்கான மிதவையைத் தயாரித்து வரும் சென்னையைச் சேர்ந்த எம். பார்த்தசாரதி பதில் சொல் கிறார்.
''மிதக்கும் மோட்டார் இல்லை. ஆனால், மோட்டாரை மிதக்க வைக்கும் மிதவையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது கிணற்று நீரின் மேல் மட்டத்திலேயே மோட்டாரைத் தாங்கி, மிதந்து கொண்டே இருக்கும். அதனால், நீரின் மட்டம் உயர்வதைப் பற்றியோ, குறைவதைப் பற்றியோ... கவலைப்பட வேண்டியதில்லை. வேலைப்பளுவும் குறையும். இதில் ஃபுட் வால்வுக்குப் பதிலாக, ஃபில்டருடன் கூடிய பேஸ்கட் பொருத்தப்பட்டிருப்பதால், நீளமான குழாய் தேவையில்லை. மோட்டாரில் உறிஞ்சும் வேலை குறைவதால், தானாகவே உந்து சக்தி அதிகமாகும்.
மோட்டார் கவிழ்ந்து விடாமலிருக்கவும், பாதுகாப்புக்காகவும் மோட்டாரின் எடைக்கேற்ற பளுவுடன் கூடிய ராட்டினம் போன்ற அமைப்புடன், பிளாஸ்டிக் கயிறு மூலம் மோட்டார் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். தண்ணீர் மட்டம் ஏறி இறங்குவதற்கு ஏற்ப மோட்டாரும் ஏறி இறங்கும். மோட்டார் மழையில் நனைந்துவிடாமல் இருப்பதற்கான வசதியும் உண்டு.

இந்த மாதிரியான சௌகரியங்களால் மோட்டாரின் ஆயுள் நீடிக்கிறது. இந்த அனைத்து அமைப்புகளும் சேர்ந்த மிதவை,
15 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. போக்குவரத்து, பொருத்துவதற்கான ஆட்கள் கூலி தனி. இதற்கு நபார்டு வங்கி மூலம் 13 ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை மானியமும் உண்டு.''
தொடர்புக்கு: தொலைபேசி: 044-22500306.
''எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ரோஷா, சரியான வளர்ச்சியில்லாமல் இருக்கிறது. பூவும் சரியாக மலர்வதில்லை. எப்படி சரி செய்வது?'
ஆர். தெய்வநாயகம், பெங்களூரு.
அலங்கார மலர் தோட்டம் அமைத்து வரும் மதுராந்தகத்தைச் சேர்ந்த ம. ஆறுதல் பதில் சொல்கிறார்.
''தொட்டியில் வளர்க்கப்படும் ரோஜா செடியாக இருந்தால், ஆண்டுக்கு ஒரு முறை மண்ணை மாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும், ரசாயன உரங்களை வைக்கக் கூடாது. காரணம்...? ரசாயன உரம் கொடுப்பதால் ஆரம்பத்தில் செடி நன்றாக இருந்தாலும், நாளடைவில் பூச்சி, நோய் தாக்குதல் உண்டாகும். இயற்கை முறையில் செடிகளை வளர்ப்பதுதான் நல்லது.

ஆறு மாதத்துக்கு ஒரு முறை அரை கிலோ அளவுக்கு மட்கிய தொழுவுரம் வைக்க வேண்டும். மாதம் ஒரு முறை, ஒரு லிட்டர் நீரில் 100 மில்லி பசு மாட்டுச் சிறுநீர் கலந்து தெளித்துவிட வேண்டும். இது வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும் செயல்படும். இவற்றை மட்டும் கடைபிடித்தாலே ரோஜாவை ஆரோக்கியமாக வளர்த்து விடலாம். ஒருவேளை, செடியில் பூச்சி, புழுத் தாக்குதல் ஏற்பட்டால்... வேப்பங்கொட்டை-200 கிராம், வெள்ளைப்பூண்டு-25 கிராம் இரண்டையும் இடித்து தூளாக்கி, ஒரு துணியில் கட்டி, அரை லிட்டர் நீரில் நாள் முழுவதும் ஊறவைத்து, சிறிய தெளிப்பான் மூலம் தெளித்தால்... பூச்சி, புழுக்கள் ஓடிவிடும். இந்த பூச்சிவிரட்டியை காய்கறிச் செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.''
''செம்மரம், செஞ்சந்தன மரம் இரண்டும் ஒன்றா..?''
சி. வாசுதேவன், அணைவயல்.
விழுப்புரம் வன விரிவாக்க அலுவலர் கே. ஏழுமலை பதில் சொல்கிறார்.

''செம்மரம் என்பதும் செஞ்சந்தனம் என்பதும் ஒன்றுதான். இம்மரங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நிறைய உள்ளன. குறிப்பாக... தமிழ்நாடு, ஆந்திர மாநில எல்லையில் அதிக அளவில் காணப்படுகின்றன. சந்தன மரத்துக்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு விற்கப்படும் மரம் இதுதான். இசைக் கருவிகள் செய்ய இம்மரம் பயன்படுகிறது. இம்மரம் அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால், ஜப்பான் நாட்டில் இதை கடவுளுக்கு இணையாகப் போற்றுகிறார்கள். அந்த நாட்டில் திருமண சீர் வரிசையாக செஞ்சந்தன மரத்தில் செய்த கட்டில், மேசை, பொம்மைகள் போன்ற பொருட்களைத்தான் கொடுக்கிறார்கள்.
வீடு முழுக்க இம்மரப் பொருட்கள் இருந்தால்... கதிர் வீச்சால் பாதிப்பு உண்டாகாது. அதனால் பல நாடுகளில் அணு உலைகளைச் சுற்றி இம்மரங்களை அதிகமாக வளர்த்து வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்ட வன விரிவாக்க மையத்தில் இக்கன்றுகள் கிடைக்கின்றன.''
''கடல் நீரில் மீன் வளர்க்க விரும்புகிறேன். இப்படி வளர்க்க முடியுமா? எந்த வகையான மீன்களை வளர்க்க முடியும்?''
ஏ. சதீஷ், உத்திரமேரூர்.
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் மீன் வளத்துறை வல்லுநர் முனைவர் எஸ். பாலசுந்தரி பதில் சொல்கிறார்.

''கடல் நீரில் மீன் வளர்க்கலாம். ஆனால், சட்டப்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில்தான் பண்ணையை அமைக்க வேண்டும். கடல் இறால், சிங்கி இறால், கொடுவா மீன், பால் மீன், நண்டு... போன்றவற்றை கடல் நீரில் வளர்க்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் கடல் நீரைப் பயன்படுத்தி இறால் மட்டும்தான் வளர்க்கப்படுகிறது. பால் மீன், மடவை... போன்றவற்றை கேரளாவிலும், கொடுவா மீனை ஆந்திராவிலும் அதிகளவில் வளர்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரை பகுதி இருந்தும், கடல் நீரை பயன்படுத்தி மீன் வளர்ப்பதில் அநேகம்பேர் ஆர்வம் காட்டுவதில்லை. எங்கள் வேளாண் அறிவியல் நிலையத்திலும், சென்னையில் உள்ள மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்திலும் இதற்கான பயிற்சிகளைப் பெறலாம். கடல் இறால் வளர்க்க, 'கோஸ்டல் அக்குவா கல்ச்சர் அத்தாரிட்டி’யிடம் அனுமதி பெற வேண்டும்.''
தொடர்புக்கு: இயக்குநர், மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம், 75, சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028. தொலைபேசி: 044-24618817, 24610565.
கோஸ்டல் அக்குவா கல்ச்சர் அத்தாரிட்டி, சாஸ்திரிபவன், 26, ஹாடோஸ் சாலை, சென்னை-600 006. தொலைபேசி: 044-28234683.
''நான் இயற்கை முறையில் நெல், காய்கறிகளை சாகுபடி செய்ய விரும்புகிறேன். இதற்கான பாரம்பரிய விதைகள் எங்கு கிடைக்கும்?''
குரு பிரசாத், சென்னை.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய பாரம்பரிய அறிவியல் மையத்தில் பாரம்பரிய விதைகள் கிடைக்கின்றன.
தொடர்புக்கு, தொலைபேசி: 044-27430625.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை
'நீங்கள் கேட்டவை' பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.