மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

புறா பாண்டி

##~##

''நான் சென்னையில் பணிபுரிகிறேன். எனக்கு, திருவள்ளூரில் 100 மா மரங்களைக் கொண்ட தோப்பு உள்ளது. எனது தோப்பில் கிடைக்கும் பழங்களை விற்க ஆலோசனை தேவை?'

எஸ். சுந்தர்ராஜ், வில்லிவாக்கம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 'லியோ இயற்கை விவசாயப் பண்ணை’யை சேர்ந்த பாரதி பதில் சொல்கிறார்.

''சென்னையில் பணிபுரிபவர்கள் பலருக்கு எங்கள் பகுதியில் மாந்தோப்பு உள்ளது. பெரும்பாலானவர்கள் மாமரங்களை குத்தகைக்குத்தான் விடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 'ஒரு மரத்துக்கு இவ்வளவு’ என்று குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து பணம் பெற்று மொத்தமாகக் குத்தகைக்கு விடுவார்கள். இன்னும் சிலர், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மரங்களில் காய் பிடிக்கத் தொடங்கும்போது, காய்களின் எண்ணிக்கையை வைத்து, குத்தகைக்கு விடுவார்கள். இயற்கை முறையில் சாகுபடி செய்தால், குத்தகைக்கு விடுவதைவிட நேரடி விற்பனைதான் லாபமாக இருக்கும்.

நீங்கள் கேட்டவை

ஆரம்ப கட்டத்தில் எனக்கும் விற்பனையில் சில பிரச்னைகள் இருந்தன. ஆனால், நேரடி விற்பனையில் ஈடுபட்ட பிறகு பண்ணையிலேயே பழங்கள் விற்பனையாகி விடுகின்றன. சனி-ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் தோட்டத்தில் விற்பனை செய்யலாம். அக்கம்பக்கம் உள்ள நண்பர்களிடம் சொல்லி வைத்தாலே போதுமானது. அவர்கள் மூலமாக விற்பனையை அதிகரித்துவிட முடியும். என்னுடைய கணிப்புப்படி உங்களது 100 மரங்களில் குறைந்தபட்சம் 5 டன் வரை மகசூல் கிடைக்கலாம். அதனால், எளிதாக விற்பனை செய்து விடலாம். நேரடி விற்பனை உங்களுக்கு சரிப்பட்டு வராது என்றால், அருகில் உள்ள கோயம்பேடு சந்தையில் நீங்கள் விற்பனை செய்யலாம்.''  

தொடர்புக்கு, செல்போன்: 93805-33376.

''என்னிடம் கலப்பினப் பசுக்கள் மூன்று உள்ளன. நன்றாக பால் கறக்கின்றன. ஆனால், கன்று ஈன்றவுடன், மாடு நடக்க முடியாமலும், எழ முடியாமலும் அவதிப்படுகின்றன. கால்நடை மருத்துவரை அணுகினால் கால்சியம் பற்றாக்குறை என்று மருந்து கொடுக்கிறார். ஆனால், அது தற்காலிகமாகத்தான் பயனளிக்கிறது. இதைச் சரி செய்ய மூலிகை மருத்துவத்தில் வழி உண்டா?''

வேலவன், ராசிபுரம்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, 'ஜெயம் பிராணிகள் அறக்கட்டளை' நிர்வாக அறங்காவலரும், பிராணிகள் நல கௌரவ அலுவலருமான கே.வி. கோவிந்தராஜ் பதில் சொல்கிறார்.

''கலப்பினக் கறவை மாடுகளில், மூன்றாவது முறை கன்று ஈன்றவுடன் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கை. கால்சியம் பற்றாக்குறையை உடனடியாக போக்க, சுண்ணாம்பு நீர் கை கொடுக்கும். ஒரு கிலோ கல் சுண்ணாம்புத் தூளை மண்பானையில் கொட்டி, 10 லிட்டர் நீர் சேர்த்து ஊற வைத்து, மறுநாள் காலை தெளிந்த சுண்ணாம்பு நீரை மட்டும் சேகரிக்க வேண்டும். ஒரு மாட்டுக்கு அரை லிட்டர் என்ற அளவில் தினமும் கொடுத்து வந்தால், இருபது நாட்களில் கால்சியம் குறைபாடு நீங்கி விடும். தொடர்ந்து, தீவனத்துடன் ஒரு கைப்பிடி அகத்திக் கீரை கொடுத்து வந்தால், கால்சியம் பற்றாக்குறை ஏற்படாது. கூடவே, தினமும் 20 வெற்றிலை அல்லது ஒரு சோற்றுக் கற்றாழை மடல் போன்றவற்றையும் கொடுத்து வரலாம்.

நீங்கள் கேட்டவை

வேம்பு, துளசி, மூங்கில் இலை, நொச்சி, ஆவாரை, சோற்றுக்கற்றாழை, அருகம்புல், கொய்யா, வெற்றிலை, முருங்கை... ஆகிய இலைகளில் தலா ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றோடு ஒரு கைப்பிடி வாழைப்பூவைச் சேர்த்து இடித்து தனியாக வைக்க வேண்டும். திப்பிலி, மிளகு, சுக்கு, வெந்தயம், கசகசா, ஓமம், பெருங்காயம், சீரகம், சதக்குப்பை, சித்தரத்தை, சோம்பு, வால்மிளகு, மல்லித் தூள் ஆகியவற்றில் தலா 10 கிராம்; காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றில் தலா 50 கிராம்; 100 கிராம் பனை வெல்லம், 250 கிராம் வெங்காயம், கால் மூடி தேங்காய், ஒரு துண்டு வசம்பு இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து இடித்து கொள்ளவேண்டும்.

பிறகு, ஏற்கெனவே இடித்து வைத்திருக்கும் இலைக் கலவை மற்றும் மூலிகைப் பொருட்கள் கலவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து, 50 கிராம் அளவு உருண்டைகளாகப் பிடித்து, மஞ்சள் தூளில் உருட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு, 'மசால் உருண்டை' என்று பெயர். இதை, கால்நடைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், கால்சியம் பற்றாக்குறை, சினை தங்காமை, குடற்புழு நீக்கம்... போன்ற பல நோய்கள் வராமல் தடுத்து விடலாம். தினமும் மாட்டுக்கு 2 உருண்டைகள், ஆட்டுக்கு 1 உருண்டை என்ற அளவில் குறிப்பிட்ட காலத்துக்குக் கொடுக்க வேண்டும். தயாரித்த மூன்று நாட்களுக்குள் இதைப் பயன்படுத்திவிட வேண்டும் என்பது கவனத்தில் இருக்கட்டும்.''

தொடர்புக்கு, செல்போன்: 98427 -04504.

''சென்னை நகரில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் உள்ள பொது இடத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய விரும்புகிறேன். இலவசமாக மரக்கன்றுகள் கொடுக்கும் அமைப்பு ஏதேனும் உள்ளதா?''

கே. ரமணி, சென்னை.

சென்னை சாலிகிராமத்தில் செயல்பட்டு வரும் 'ட்ரீ பேங்க்’ அமைப்பைச் சேர்ந்த முல்லைவனம் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''தமிழ்நாட்டில் மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னைவாசிகளுக்கு மரக்கன்று வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. தெருவுக்குத் தெரு நிச்சயம், இரண்டு, மூன்று மரங்களாவது இருக்கின்றன. இதை முறைப்படுத்தி, நிறைய மரங்களைப் பெருக்கும் வேலைகளைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். சென்னை நகரில் உள்ள 200 வார்டுகளிலும் எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் மூலமாக தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுத்து வருகிறோம். வேம்பு, புங்கன், மலைவேம்பு, மந்தாரை... என்று இடத்துக்குத் தக்கபடி கொடுக்கிறோம். எங்களைத் தொடர்பு கொண்டால், உங்கள் பகுதிக்கு வந்து மரக்கன்றுகளை நடவு செய்ய தயாராக இருக்கிறோம். தவிர, பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகள் நட விரும்பினாலும், எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 97898-92080.

''எலுமிச்சை - முட்டைக் கரைசல் பற்றி கேள்விப் பட்டேன். அதைத் தயாரிப்பது எப்படி? எந்தப் பயிர்களுக்கு இதைத் தெளிக்கலாம்?''

எம்.சி. பிரகாஷ், திருநெல்வேலி.

கரூர் மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயி பணிக்கம்பட்டி, கோபாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

''பயிர்களில் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டால், வெளுத்து இருக்கும். அந்த மாதிரியான சமயத்தில், எலுமிச்சை- முட்டைக்கரைசலை பத்து லிட்டர் நீருக்கு 200 மில்லி என்கிற அளவில் கலந்து பயன்படுத்தலாம். சத்துக்குறைபாடு இல்லாத சமயங்களாக இருந்தாலும், வளர்ச்சி ஊக்கியாக அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

நீங்கள் கேட்டவை

பெரிய அளவு மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாளி அல்லது பிளாஸ்டிக் டிரம் எடுத்துக் கொள்ளவும் (உலோக வாளி பயன்படுத்தக் கூடாது). அதில் 10 முட்டைகளை உடைக்காமல் அப்படியே வைக்க வேண்டும். அவை மூழ்கும் அளவு எலுமிச்சைச் சாறைப் பிழிந்து காற்றுப் புகாமல் இறுக்கி மூட வேண்டும். கோழி, வாத்து போன்ற பறவைகளின் முட்டைகளைப் பயன்படுத்தலாம். குஞ்சு பொரிக்காத கூமுட்டைகளையும் பயன்படுத்தலாம். ஆனால், முட்டை ஓடு உடையாமல் முழுமையாக இருக்க வேண்டும்.

இப்படியே 10 நாட்கள் வைத்திருந்தால், எலுமிச்சைச் சாறின் வீரியத்தில் முட்டை ஓடுகள் கரைந்துவிடும். முட்டையை அழுத்தினால், ரப்பர் பந்தை அழுத்துவது போல் இருக்கும். இந்த முட்டைகளை மட்டும் எடுத்து, கையால் பிசைந்தோ அல்லது மிக்சி மூலமாகவோ கூழாக அரைக்க வேண்டும். ஏற்கெனவே, முட்டையை ஊற வைத்த எலுமிச்சைக் கரைசலில் கால் கிலோ வெல்லம் அல்லது மொலாசஸ் (கரும்பு கழிவு) சேர்த்து, அரைத்த முட்டைக் கூழையும் ஊற்றி, காற்றுப் புகாமல் மூடி வைத்தால், 20 நாட்களில் எலுமிச்சை-முட்டைக் கரைசல் தயாராகி விடும். இதை பாட்டில்களில் அடைத்து மூன்று மாத காலம் வரை வைத்திருந்தும் பயன்படுத்தலாம். இதிலிருந்து வாயு வெளியேறும் என்பதால், மூடியில் சிறிய துளையிட்டு வைக்க வேண்டும்.''

''சூரிய சக்தியால் எரியும் விளக்கு மற்றும் நீர் இறைக்கும் மோட்டார் ஆகியவற்றுக்கு மானியம் பெற யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?''

கே. கணேசன், பட்டுக்கோட்டை.

தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை, சென்னையில் உள்ளது. இந்த அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 -28222973.

 விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PVQA (space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.