மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

புறக்கணிக்கப்பட்ட வேளாண் பல்கலைக்கழகம் ! படம்: தி.விஜய்

மரத்தடி மாநாடு
##~##

காலையிலேயே செய்தித்தாள்களோடு வயலுக்கு வந்துவிட்ட 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, வரப்பில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க, வயலில் வேலை செய்து கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். தூரத்தில் 'காய்கறி’ கண்ணம்மாவின் தலை தெரிந்தவுடன், வேலையை முடித்துக் கொண்டு மேலேறினார், ஏரோட்டி. இருவரும் வாத்தியாருக்கு அருகில், வரப்பில் அமர்ந்து கொண்டனர்.

''என்னங்கய்யா... வெச்சக் கண்ணு வாங்காம பேப்பர் படிச்சுக்கிட்டிருக்கீங்க... அப்படி என்ன முக்கியமான சேதி?'' ஒரு கேள்வியைப் போட்டு மாநாட்டைத் துவக்கி வைத்தார், காய்கறி.

''எல்லாம் பட்ஜெட்தான். நாடே இன்னிக்கு அதைத்தானே பேசிக்கிட்டிருக்கு'' என்ற வாத்தியார்,

''இந்த வருஷ மத்திய பட்ஜெட்டுல தமிழ்நாட்டை திட்டம் போட்டு ஓரங்கட்டிட்டாங்க போல. கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு 100 கோடி; கர்நாடகா, தார்வாட் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு 50 கோடி; அரியானா, சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்துக்கு 50 கோடி; ஒடிசா, வேளாண் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு 50 கோடி; ஐதராபாத்ல இருக்குற என்.ஜி.ரங்கா வேளாண் பல்கலைக்கழத்துக்கு 100 கோடி ரூபாய்னு ஒதுக்கியிருக்காங்க. ஆனா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைக் கண்டுக்கவேயில்ல. ஏற்கெனவே, ரயில்வே பட்ஜெட்டுலயும் பெருசா தமிழ்நாட்டுக்கு ஒண்ணும் செய்யல. தமிழ்நாட்டுல ஏற்கெனவே அறிவிச்ச அகல ரயில்பாதைத் திட்டங்களும் அந்தரத்துலயே நிக்குது. தொடர்ந்து, தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணிக்குதுனு அதிருப்தி கிளம்பியிருக்கு'' என்றார், வாத்தியார்.

''இதெல்லாம் இன்னிக்கு நேத்தா நடக்குது. அண்ணாதுரை காலத்துல இருந்தே இப்படித்தான். அதனாலதானே, அப்பவே, 'வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’னு அவர் சொன்னார். இவிய்ங்களுக்கு இந்தியாவுலதான் தமிழ்நாடு இருக்குங்கறதே மறந்துடுச்சு போல'' என்று சூடாகச் சொன்னார் ஏரோட்டி.

''இங்கிருந்து ஜெயிச்சு போற எம்.பி -யெல்லாம் இதைத் தட்டிக் கேக்க மாட்டாங்களா?'' என்று அப்பாவியாகக் கேட்டார், காய்கறி.

மரத்தடி மாநாடு

''நல்லா கேட்டாங்க போ... இவங்களுக்குப் பதவிதான் முக்கியம். ஓட்டுப் போட்டவய்ங்க எக்கேடு கெட்டா இவங்களுக்கு என்ன?'' கொதித்தார், ஏரோட்டி.

''சரி, நாம ஆகற விஷயத்தைப் பேசுவோம்'' என்று பேச்சைத் திருப்பிய வாத்தியார், ''மழையில்லை, நிலத்தடி நீர் இல்லைனு விவசாயிகள் புலம்பறாங்க. ஆனா, அவங்களேதான் மழைக்கும் ஆப்பு வெச்சுக்கறாங்கனு சுற்றுச்சூழல் ஆர்வலர்களெல்லாம் வருத்தப்பட்டுக்கறாங்க'' என்று தானும் வருத்தப்பட்டார்.

''அட, ஒண்ணுமே வெளங்கலயே... கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லேன்யா! என்று ஏரோட்டி அலுத்துக் கொள்ள...

''அட, சொல்ல வர்றதுக்குள்ள இந்த பறபறக்கறே! இப்போ மாநிலம் முழுக்க மஞ்சள் அறுவடை ஆகிட்டிருக்கு. இதை வேக வெச்சு எடுத்து பாலீஷ் பண்ணிப் பத்திரப்படுத்துவாங்க. அப்படி வேக வெக்கறதுக்கு, சில இடங்கள்ல ரப்பர், டயர், பிளாஸ்டிக்கையெல்லாம் போட்டு எரிக்கறாங்களாம். டயரைப் போட்டா தீ நின்னு எரியுதாம். ஆனா, அதை எரிச்சா நிறைய பிரச்னைகள் வருமாம். சுற்றுச்சூழல் மாசு அதிகமாகி, மழையைக் குறைச்சுடுமாம். அதுமட்டுமில்லாம... அதை எரிக்கற விவசாயிங்க, அக்கம் பக்கத்து பகுதியில வசிக்கறவங்கனு பலருக்கும் ஆஸ்துமா மாதிரியான அவஸ்தைகளும் வந்து சேருமாம். அதனாலதான் பழைய காலம் மாதிரி, 'சருகு, தென்னை மட்டையைப் போட்டு எரிக்கணும்’னு சொல்றாங்க. இதுகள எரிச்சா பாதிப்பைக் குறைக்க முடியுமாம்'' என்று ஆரோக்கியமான தகவலைத் தந்தார் வாத்தியார்.

''நம்ம கையில சுவாரஸ்யமான ஒரு சங்கதி இருக்கே'' என்ற ஏரோட்டி,

''ஓசூருக்குப் பக்கத்தால 'தாசரப்பள்ளி தின்னா’, 'சின்ன தின்னா’னு ரெண்டு ஊர்கள் இருக்குதாம். இந்த ஊர்ல யாருமே அசைவம் சாப்பிட மாட்டாங்களாம். அதனால, ஊருல யாரும், ஆடு, மாடுகளையும் வளர்க்கறதில்லையாம்.

200 வருஷத்துக்கு முன்ன, அந்த ஊர்ல திடீர்னு நிறைய பேர் அடுத்தடுத்து செத்துப் போனாங்களாம். அப்போ பஞ்சாயத்து கூடி குறி கேட்டிருக்காங்க. 'காவல் தெய்வம் எல்லம்மா தேவியும், கங்கம்மா சாமியும் ரொம்ப கோபத்துல இருக்கறதால... ஊர்ல யாருமே இனி ஆடு, மாடு, கோழி, பன்னி கறியையெல்லாம் சாப்பிடக்கூடாது'னு சாமி உத்தரவு போட்டுடுச்சாம். அப்போ இருந்து யாருமே சாப்பிடறதில்லையாம். கால்நடைகள வளர்க்கறதும் இல்லையாம். வெளியூர்கள்ல பொண்ணுங்களைக் கட்டிக் கொடுத்தா, தெரியாம சாப்பிட்டுடுவாங்கனு பயந்து யாரையுமே வெளியூர்ல கட்டிக் கொடுக்கறதும் இல்லையாம்'' என்றார்.

''ம்... இந்த பூமியில எத்தனையோ வினோதம்... அதுல இது ஒரு விதம்'' என்று காய்கறி சிரித்துக் கொள்ள...

''அது கிடக்கட்டும். கூடையில என்ன இருக்கு. வந்து எம்புட்டு நேரமாச்சு. எதையாச்சும் எடுத்துக் கொடுக்கக் கூடாதா...?'' என்று ஏரோட்டி எட்டிப் பார்க்க, சடாரென ஆளுக்கு இரண்டு சப்போட்டா பழங்களை எடுத்துக் கொடுத்தார் காய்கறி.

சுவைக்க ஆரம்பித்த ஏரோட்டி, ''அட, இதென்ன இந்த இனி இனிக்குது. இதுவரைக்கும் இப்படியரு பழத்தைச் சாப்பிட்டதில்லையே...'' என்று ஆச்சரியமானார்.

''ம்... முழுக்க முழுக்க இயற்கை முறையில விளைவிச்ச பழம். வியாபாரம் பிய்ச்சுக்கிட்டு போகும்னு சொல்லி ஒருத்தர் கொடுத்தார்... அவர் சொன்னது நிசம்தான்னு நீயும்கூட நிரூபிச்சிட்டே!'' என்ற காய்கறி,

''ஆனா, பிள்ளைங்களுக்குக் கொடுத்தேன். தொட்டுக்கூடப் பாக்க மாட்டேங்குதுக'' என்று நொந்து கொண்டார்.

மரத்தடி மாநாடு

''எல்லா வீட்டுலயும் அதுதான் கதை. கலர் கலரா இருந்தாத்தான் திம்பேங்குதுங்குதுக இப்ப இருக்குற பிள்ளைங்க. அந்தக் காலத்துல ஒவ்வொரு சீசன்லயும் விளையுற காய், பழங்களை சாப்பிட்டாதான் உடம்புக்கு நல்லதுனு சொல்வாங்க. அப்போதான் சரிவிகிதத்துல சத்து கிடைக்குமாம். இந்தப் பழத்துல மாவுச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-சி எல்லாம் இருக்குதாம். ரத்த ஓட்டத்துக்கு ரொம்ப நல்லதாம்.

மெட்ராஸ்ல இருந்து பேரன் வந்திருந்தான். அவனுக்கும் கொடுத்துப் பாத்தேன். 'வேணவே வேணாம்'னான். அப்பறம் ஜூஸ் போட்டு பால்ல கலந்து கொடுக்கவும் ஓரளவுக்குக் குடிச்சான்'' என்றார், வாத்தியார்.

''அப்படீனா வீட்டுக்குக் கொஞ்சம் எடுத்துட்டுப் போங்க... விலையும் குறைவுதான்'' என்றவாறு பழங்களை பாலிதீன் பையில் போட்டுக் கொடுத்தார், காய்கறி.

''ம்... இந்த பாலிதீன் பைகளை ஒழிச்சுக்கட்ட அப்பப்ப முயற்சி எடுக்கறாங்க. ஆனா, முழுசா பயன்தான் கிடைக்க மாட்டேங்குது. இப்பகூட கோயம்புத்தூர் மாநகராட்சி புது நடவடிக்கையை எடுத்திருக்கு. கோயம்புத்தூர்ல மெல்லிசான பாலிதீன் பைகளை உபயோகப்படுத்தக் கூடாதாம். அதில்லாம, கடைகள்ல பாலிதீன் பைகளை இலவசமா கொடுக்கவும் கூடாதாம். பொருள் வாங்கறவங்ககிட்டயே பைக்கான பணத்தையும் வாங்கணுமாம். அதனால, பொருள் வாங்கறவங்க, துணிப்பையை எடுத்துட்டுப் போக ஆரம்பிச்சுட்டாங்களாம். மார்ச் 15-ம் தேதியில இருந்து தீவிரமா, இந்த உத்தரவை அமல்படுத்தியிருக்காங்க'' என்ற வாத்தியார்,

''நீயும் இந்த மாதிரி மெல்லிசான பாலிதீன் பைகளை இனிமே உபயோகப்படுத்தக் கூடாது'' என்று காய்கறிக்கு, செல்லக் கட்டளையிட்டார்.

மரத்தடி மாநாடு

உடனே தன் பங்குக்கு ஒரு செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, ''போன வருஷம் வெள்ளைப்பூண்டுக்கு நல்ல விலை கிடைச்சுட்டு இருந்துச்சு. இந்த வருஷம் சர்ருனு இறங்கிடுச்சு. சந்தையில கிலோ 20 ருபாய்க்குதான் எடுத்துக்குறாங்களாம். இந்த விலை, போக்குவரத்துக்குக்கூட கட்டுபடியாகலையாம். அதனால, நீலகிரி மாவட்டத்துல அறுவடையான பூண்டுகள சந்தைக்குக் கொண்டு வராம அப்படியே காய வெச்சு விதைக்காக பத்திரப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்களாம்'' என்றார்.

''அட, இந்தக் கதைதான் சப்போட்டாவுக்கும். இயற்கையில விளையற சப்போட்டா பழத்துக்கு கொஞ்சம் கூடுதலான விலை கிடைக்குதாம். ஆனா, வழக்கமா வர்ற பழங்களுக்கு விலை குறைஞ்சு போச்சு. பண்ணையிலயே கிலோ மூணு ரூபாய்க்குதான் எடுக்கறாங்களாம். சில்லரை விலையிலயே பத்து ரூபாய்க்குதான் விக்குதாம்'' என்ற காய்கறி,

''ரொம்ப நேரம் ஆச்சு... இன்னும் ஏழெட்டு வாடிக்கைகளைப் பாக்கணும். நான் கிளம்பறேன்'' என்றபடி கூடையைத் தூக்க... முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.