மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

கொள்முதல் மையங்களில் இனி, காசோலை !

##~##

கொளுத்தும் வெயிலில் களைப்போடு வந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, களத்து வீட்டின் முற்றத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலிலேயே அமர்ந்து விட்டார். உழவு செய்த டிராக்டர்காரருடன் பேரம் பேசிக்கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வாத்தியாரைப் பார்த்தவுடன் வந்து கட்டிலுக்கு அருகில் இருந்த உரலில் அமர்ந்து கொண்டு...

''போதும்மா நீ சுரைக்கா பறிச்சது... வந்து உக்காரு வா'' என்று, கூரையின் சுரைக்கொடியில் காய் பறித்துக் கொண்டிருந்த 'காய்கறி’ கண்ணம்மாவை அழைத்தார்.

''என்னய்யா ஃபைலெல்லாம் எடுத்துக்கிட்டு வந்திருக்க... எங்கயும் வேலைக்கு அப்ளிகேஷன் போடப் போறியா?'' என்று வாத்தியாரைப் பார்த்துக் கேட்டார், ஏரோட்டி.

''அத ஏன்யா கேக்குற... நம்ம முக்கு வீட்டு நிர்மலா டீச்சர் மக கவிதா, எல்.ஐ.சி ஏஜென்டா இருக்குதுல்ல. அந்தப் புள்ளைக்காகதான். பேரப்பிள்ளைங்க பேர்ல பாலிசி போட்டேன். பர்த் சர்டிபிகேட் கொடுங்க... ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொடுங்க...னு உக்கார விடாம போனை போட்டுப் போட்டு விரட்டிக்கிட்டே இருக்கு. இப்பதான் அதெல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்'' என்று அலுப்பாகச் சொன்னார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு

''இந்தாங்கய்யா... அலைஞ்சு திரிஞ்சு வந்துருக்கீங்க போல இருக்கு. இதைக் குடிங்க'' என்று பாட்டிலில் கொண்டு வந்திருந்த பதநீரை எடுத்துக் கொடுத்த, காய்கறி,

''அப்பப்பா... நுங்கு, பதனியெல்லாம் என்னா விலைக்கு விக்கிது... போன வருஷம் ஒரு கிளாஸ் பதநீ 5 ரூபாய். இப்போ 10 ரூபாய் ஆக்கிட்டாங்க'' என்று ஏகத்துக்கும் வருத்தப்பட்டுக் கொண்டார்.

''இப்போலாம் பனை மரம் ஏறுதுக்கு ஆளே இல்லை. பெட்ரோல் விலை ஏறிக்கிடக்கறதால, வண்டி வாகனத்துல கொண்டு வந்து விக்கிறதுக்கு போக்குவரத்துச் செலவும் கட்டுப்படி ஆகறதில்லை. அதனாலதான் விலை அதிகமா இருக்கு.ஒவ்வொரு மாவட்டத்துலயும் பனை கூட்டுறவுச் சங்கம் முலமா பாக்கெட் போட்டு பதநீரை விக்கிறாங்க. கலப்படம் இல்லாம சுத்தமா இருக்கும். விலையும் கம்மி. அதை வாங்கிக் குடிக்க வேண்டியதுதானே'' என்றார் ஏரோட்டி.

''பதநீர்ல கூடவா கலப்படம்?'' அப்பாவியாய் கேட்டார், காய்கறி.

''ஆவின் பால்லயே கலப்படம் பண்றானுங்க' என்ற வாத்தியார்,

''பதநீர்ல தண்ணி, சாக்ரீம் இதையெல்லாம் கலந்து பானையில ஊத்தி, பனை மட்டையை ஊறப் போட்டுடுவாங்க. இததான் பதநீர்ல கலப்படம். பால்ல என்ன கலந்துருக்கானுங்கனு தெரியுமா? சோயா பீன்ஸைக் காய வெச்ச பவுடரை தண்ணியில கலந்தா... பால் மாதிரி வெள்ளையா இருக்குமாம். இதைத்தான் ஆவின் பாலோட கலந்துடறானுங்க. மதுரை ஆவின் பால்பண்ணைக்கு... திருநெல்வேலி மாவட்டம், தென்காசி பகுதியில இருக்கற தனியார் பால் பண்ணையில இருந்து அனுமதி இல்லாம ஒரு நாளைக்கு 4,000 லிட்டர் பால் வாங்கிட்டிருந்திருக்காங்க. அது என்னானு தோண்டிப் பாத்தப்பதான் இந்த கலப்பட விஷயம் தெரிஞ்சுருக்கு. அந்தப் பண்ணையில இருந்து வந்த பால் மொத்தமுமே போலியாம். இப்போ விசாரணை நடந்துட்டிருக்கு'' என்றார், வாத்தியார்.

''அடப்பாவிகளா... மனுஷ, மக்க உசுரோட விளையாடுறானுங்களே..! இந்த பாலைக் குடிச்சா என்னென்ன நோய், நொடியெல்லாம் வந்து தொலையுமோ. அவனுங்க எல்லாம் மண்ணா போக...'' என்று சாபமிட்டார் காய்கறி.

''எதுலதான் கொள்ளை அடிக்கல. இப்படித்தான், ரொம்ப நாளா, நெல் கொள்முதல்லயும் விவசாயிகளுக்கு முழுசா பணத்தைக் கொடுக்காம, புரோக்கருங்களோட சேர்ந்துக்கிட்டு கொள்முதல் மைய அதிகாரிக ஏகத்துக்கும் கொள்ளை அடிச்சுட்டு இருக்காய்ங்க. இப்ப அதுக்கு ஒரு முடிவு கட்டியிருக்குது, அரசாங்கம். 'இனிமே, கொள்முதலுக்கான பணத்தை 'செக்’ போட்டுத்தான் கொடுக்கணும். இல்லேன்னா, பேங்குல விவசாயிகளோட 'அக்கவுண்ட்’ல கட்டிடணும்’னு மத்திய அரசோட உணவு மற்றும் வழங்கல் துறை உத்தரவு போட்டிருக்கு. இந்தப் பருவத்துல இதை நடைமுறைப்படுத்தப் போகுது தமிழ்நாடு அரசு'' என்று சொன்னார் ஏரோட்டி.

''என்னய்யா... இது? செக் கொடுத்தா மட்டும் கமிஷன் வாங்க மாட்டாங்களா? கமிஷனை வெட்டுனாத்தானய்யா செக்கே எழுதுவாங்க. இப்படி திட்டம் போட்டெல்லாம் தப்பு நடக்காம நிறுத்த முடியாது. சட்டங்களை எளிமையாக்கி, தண்டனைகளை கடுமையாக்கணும். அப்ப மட்டும்தான் பயப்படுவாங்க. அதுவும் நம்ம நாட்டு அரசாங்க அதிகாரிகளைக் கண்டிப்பா திருத்தவே முடியாது.

இப்பப் பாரு... முதலமைச்சரம்மா ஏப்ரல் ஒண்ணாம் தேதி, 'வேளாண் கையேடு’னு விவசாயிகளுக்குத் தேவையான விஷயங்களையெல்லாம் புத்தகமாக்கி வெளியிட்டாங்கள்ல. அது, இதுநாள் வரைக்கும் எந்த விவசாயிக்கும் கிடைக்கல. கேட்டுப் போற விவசாயிகள 'இன்னும் புக் ரெடியாகல, இனிமேதான் பிரிண்ட் எடுக்கணும்’னு சொல்லி அலைக்கழிக்கறாங்களாம் அதிகாரிக. இப்படி அதிகாரிகளை வெச்சுக்கிட்டு என்னாத்த பண்றது?'' என்ற வாத்தியார்,

''சரிப்பா... பசிக்குது, போய் கஞ்சியைக் குடிச்சுட்டு, ஒரு தூக்கத்தைப் போட்டுட்டு வர்றேன்'' என்று கிளம்ப முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு.