மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

ஆலை ஊழியர் போராட்டத்தில்

 ##~##

தென்னந்தோப்புக்குள் சொட்டு நீர்க்குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை ஆட்கள் சரி செய்து கொண்டிருக்க... அதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். வரப்பில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தார், 'காய்கறி’ கண்ணம்மா. சிறிது நேரத்திலேயே, குடை பிடித்தபடி 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி வந்து சேர, ''என்னய்யா... இவ்வளவு லேட்டா வாரீரு'' என்று கேட்டுக் கொண்டே வரப்புக்கு வந்தார், ஏரோட்டி.

''பேரப்பிள்ளைங்கள்லாம் ஊருல இருந்து லீவுக்கு வந்திருக்காங்க. ராத்திரியில பாதி நேரம் கரன்ட் இல்லாததால, ஃபேன் ஓடாம, அதுகளால தூங்க முடியல. பாவம்... ஏ.சி ரூமுக்குள்ள படுத்துப் பழக்கப்பட்டுப் போன பிள்ளைங்க. அதுங்களுக்காக, வீட்டுக்கு இன்வெர்ட்டர் போடலாம்னு ஆளை வரச்சொல்லியிருந்தேன். அதான் லேட்'' என்றார் வாத்தியார்.

'சரி, சரி... ரொம்ப அலுத்துப் போய்த்தான் வந்திருக்கீங்க.  இந்தப் பழத்தைச் சாப்பிடுங்க'’ என்று கூடையில் இருந்து சில மாம்பழங்களை எடுத்துக் கொடுத்தார், காய்கறி.

''சுவையா இருக்கே. என்ன ரகம் இது?'' என்று கேட்டார், வாத்தியார்.

''சேந்தமங்கலம், கொல்லிமலை அடிவாரம்... ஏரியாவுல இருந்து வருது. அங்க இப்பதான் மாம்பழ சீசன் ஆரம்பிச்சுருக்கு. காசாலட்டு, பங்கனப்பள்ளி ரகம்தான். ஆனா, மரத்துலயே பழுக்க வெச்சுதான் பறிப்பாங்க. அதனாலதான் இவ்வளவு சுவையா இருக்கு'' என்றார், காய்கறி.

மரத்தடி மாநாடு

''மாம்பழ சீசன் ஆரம்பிச்சுடுச்சுனா, கார்பைட் கல் மூலமா பழுக்க வெக்கற வேலையை ஆரம்பிச்சுடுவாங்களேனு பயந்தேன்... நல்லவேளை, இயற்கையாவே பழுத்தப் பழமா கொண்டு வந்திருக்கே'' என்றபடியே தானும் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டார்... ஏரோட்டி!

''சரியா சொன்னே... நரம்பு மண்டலத்தைப் பாதிக்க வெச்சுடுமாம். புற்றுநோய்கூட வருமாம். அதனால கல்வெச்சு பழுக்க வெக்கறதுக்குத் தடை விதிச்சுருக்காங்க. ஆனாலும், சில வியாபாரிங்க அதையெல்லாம் சட்டை செய்யுறதேயில்ல. இப்போகூட தூத்துக்குடி, வ.உ.சி. மார்க்கெட் பக்கத்துல, மொத்த வியாபாரக் கடையில இப்படி பழுக்க வெச்சதைக் கண்டுபிடிச்ச அதிகாரிங்க, ஒரு டன் மாம்பழத்தையும்  பறிமுதல் பண்ணி, ஃபினாயில் ஊத்தி புதைச்சுட்டாங்களாம்'' என்றார், வாத்தியார்.

''கல்லு வெச்சு பழுத்ததா... தானா பழுத்ததா?னு எப்படிய்யா கண்டுபிடிக்கிறது?'' என்று அறிவுப்பூர்வமாக ஒரு கேள்வி எழுப்பினார், காய்கறி.

''மாம்பழத்தை வாங்குறப்பவே அதுல கரும்புள்ளி, ஒரு மாதிரியான சுருக்கம்னு இருந்தாலே... சந்தேகப்பட வேண்டியதுதான். ஒருவேளை வாங்கிட்டு வந்துட்ட பிறகு, சந்தேகம் வந்தா, நல்லா கழுவிட்டு, தோல நீக்கிட்டுத்தான் சாப்பிடணும்' என்று அதற்கான பக்குவம் சொன்னார் வாத்தியார்.

''நல்லதா போச்சு, இனிமே சந்தையில மாம்பழத்தை வாங்கும்போதே உஷாராயிடுவேன்'' என்ற காய்கறி, தொடர்ந்து ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

மரத்தடி மாநாடு

''விழுப்புரம் மாவட்டத்துல வெள்ளையாம்பட்டு காலனியில 'ஆத்தலான்’றவர் ஒரு பசு மாடு வளத்துக்கிட்டுருக்கார். அது ஒரே பிரசவத்துல மூணு கிடேரிக் கன்னுகள போட்டிருக்கு. அதை ஊரே திரண்டு வந்து அதிசயமா பார்த்திருக்கு. மூணு கன்னுகளுக்கும் ஊட்டச்சத்து ஊசி போட்டிருக்கார் மாட்டு டாக்டர். நல்ல ஆரோக்கியமா இருக்குதாம் மூணு கன்னுங்களுமே. ஆத்தலானுக்கு அதிர்ஷ்டம்தான்'' என்றார் சிரித்தபடியே!

''கலியுகத்துல என்னா வேணாலும் நடக்கும்'' என்று சொன்ன ஏரோட்டி,

''இலங்கை தலைநகர் கொழும்பு பக்கத்துல... ஒரு கோழி, நேரடியா குஞ்சையே பிரசவிச்சுருக்கு தெரியுமா. ஆனா, குஞ்சு உடனே செத்துடுச்சாம். 'கோழியோட வயித்துக்குள்ளாறயே முட்டை தங்கிடுச்சு. அது அப்படியே 21 நாளானதும் பொரிஞ்சு குஞ்சா வெளியில வந்துருக்கு. அந்த நேரத்துல குஞ்சுக்குக் காயம் அதிகமா ஏற்பட்டதால... செத்துப் போயிடுச்சு’னு பரிசோதனை பண்ணுன டாக்டர் சொல்லியிருக்கார்'' என்ற ஏரோட்டி, அடுத்தச் செய்திக்குத் தாவினார்.

''கூட்டுறவுச் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் எல்லாம், 'கூடுதல் சம்பளம் வேணும்’னு கேட்டு ஏப்ரல் நாலாம் தேதியில இருந்து போராட்டம் பண்ணிக்கிட்டு இருக்காங்கள்ல. அது இன்னமும் முடிவுக்கு வரலை. அதனால, மாநிலம் முழுக்க, கிட்டத்தட்ட 12 லட்சம் டன் வரை கரும்பு அறுவடை பண்ணாம வயல்லயே கிடக்குதாம். 'சரியான நேரத்துல அறுவடை பண்ணலனா, கரும்பு காய்ஞ்சு... பிழிதிறன் குறைஞ்சுடும். ஏற்கெனவே கரும்புக்கு சரியான விலை இல்லாம நட்டத்துல இருக்குற நிலையில, இந்த நொம்பலம் வேற'னு நொந்து கிடக்கறாங்களாம், கரும்பு விவசாயிங்க'' என்றார் ஏரோட்டி.

''கிருஷ்ணகிரி விவசாயிங்களோட சோகக் கதை தெரியுமோ?'' என்று கேட்ட வாத்தியார்,

''கிருஷ்ணகிரி மாவட்டத்துல பயங்கரமான வறட்சி. அதனால, கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள்ல தீவனமே இல்லையாம். ஆடு, மாடுகள வந்த விலைக்கு வித்துக்கிட்டிருக்காங்களாம். சில இடங்கள்ல தீவனம் இல்லாம, பனங்குருத்து, நுங்குக்காய்னு தீவனமா கொடுத்துட்டிருக்காங்களாம், பாவம்' என்ற, வாத்தியார்,

'கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தோட சேலம் மாவட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துல பேராசிரியர் மற்றும் தலைவரா இருந்த கொ.ஆ. துரைசாமி, இப்போ... நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் பதவிக்கு வந்திருக்கார்'' என்றொரு தகவலை தந்துவிட்டு, நடையைப் போட... முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.

இப்போதைக்கு வேண்டாம்... ஈமு!

'ஈமு வளர்த்தால், குபேரனாகலாம்... அம்பானியாகலாம்... பில்கேட்ஸ் ஆகலாம்...' என்கிற அளவுக்கு அனுதினமும் விளம்பரங்கள் வந்தபடியே உள்ளன. மற்றொருப் பக்கம், 'ஈமுகோழி வளர்ப்பில் ஏமாற்றுகிறார்கள்' என்கிற புகார் கணைகளும் புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில், ஈமு பிரச்னை பெரிதாக வெடிக்க... ''இந்த விஷயத்தில் என்ன உண்மை என்பதை அதிகாரிகள் இங்கே விளக்கியே ஆக வேண்டும்'' என்று விவசாயிகள் பலரும் கிடுக்கிப்பிடி போட்டனர்.

மரத்தடி மாநாடு

இதையடுத்து, சேலம் மண்டல கால்நடைத் துறை இணை இயக்குநர் பி.கே. பாலசுப்பிரமணியம், ''கால்நடைத் துறையோ... அல்லது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமோ ஈமு வளர்ப்பை ஆதரிக்கவில்லை'' என்று அங்கே தங்கள் தரப்பைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, ''ஈமு கோழி வளர்ப்பு லாபகரமானதா என்பது குறித்து தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மேற்கொண்டிருக்கும் ஆய்வு, இன்னும் முடிவு பெறவில்லை. இந்நிலையில், விவசாயிகள் அதில் முதலீடு செய்ய வேண்டாம்’' என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது!

தொட்டால் தெரியும் தகவல்..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், திண்டிவனத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி தலைமையில், 6-வது வேளாண் அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. அந்நிகழ்ச்சியில், அனைத்து விவசாயத் தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கான தொடுதிரை கணினிப் பயன்பாட்டைத் துவக்கி வைத்திருக்கிறார் துணைவேந்தர்.

தேவைப்படும் விவசாயிகள், வேளாண் அறிவியல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தொடுதிரை கணினி மூலம், பருவத்துக்கேகேற்ற பயிர் ரகங்கள், என்ன உரம், எவ்வளவு போடுவது, விளைபொருட்களை எங்கு விற்பனை செய்வது... போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். அதோடு, மார்கெட் நிலவரம், பூச்சி, நோய் அறிகுறிகள், விஞ்ஞானிகளின் பரிந்துரைகள், அரசுத்துறை திட்டங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

''இவை அனைத்தும் தாய்மொழியாம் தமிழ்மொழியிலேயே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, அனைத்துத் தரப்பு விவசாயிகளுக்கும் உதவுவதாக இருக்கும்'' என்று பெருமையோடு கூறியிருக்கிறார் துணைவேந்தர்.