ஆமணக்கு எண்ணெய் மூலம் நீர் இறைக்கும் இன்ஜினை இயக்க முடியுமா ?படங்கள்: ஆர். குமரேசன், ஆ. முத்துகுமார் புறா பாண்டி

''நபார்டு வங்கியின் செயல்பாடுகள் என்ன ? நபார்டு வங்கி அலுவலகம் எங்குள்ளது?''
கே. கந்தசாமி, எட்டயபுரம்.
தூத்துக்குடி மாவட்ட நபார்டு வங்கியின் மேம்பாட்டு மேலாளர் எம்.ஆர். நடராஜன் பதில் சொல்கிறார்.

##~## |
''விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி (National Bank for Agriculture and Rural Development) என்பதன் சுருக்கம்தான் நபார்டு (NABARD).. இந்த வங்கியின் செயல்பாடுகள், மற்ற வங்கிகளைப் போல இருக்காது. இதற்குக் கிளைகளும் கிடையாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மேம்பாட்டு மேலாளரை மட்டுமே கொண்ட அலுவலகம்தான் இருக்கும். இந்த மேலாளர்தான், நபார்டு வங்கியின் திட்டங்களை, அடிமட்ட அளவில் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்புவார். இவ்வங்கியில் தனிப்பட்ட நபர்களுக்குக் கடன் கிடையாது. விவசாயக் கூட்டமைப்பு, தொண்டு நிறுவனங்கள், சுயஉதவிக்குக் குழுக்கள்... என்று அமைப்பு ரீதியாக உள்ளவர்களுக்கு மட்டும்தான் கடன் கிடைக்கும். தவிர, இவ்வங்கி நேரடியாக கடன் வழங்குவதில்லை. அரசு வங்கிகள் மூலம்தான் கடன் ஏற்பாடு செய்யப்படும். சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நபார்டு மறுநிதியை வழங்கி விடும்.
நபார்டு மூலம் 'உழவர் மன்றங்கள்’ தொடங்க நிதியுதவி செய்து தருவதோடு, தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. விவசாய நிலங்கள் வாங்க, சூரியசக்தி மூலம் நீர் இறைக்கும் மோட்டார் வாங்க, குளிர்பதனக் கிடங்குகள், சேமிப்புக் கிடங்குகள் தொடங்க... எனப்பலத் திட்டங்களுக்குக் கடன் வசதிகள் உண்டு. அதனால், தங்கள் பகுதியில் உள்ள நபார்டு அதிகாரியை அனைத்து விவசாயிகளும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது, அவசியம்.''
தொடர்புக்கு, செல்போன்: 94433-80627.
மண்டல அலுவலக முகவரி: நபார்டு வங்கி,
48, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 600034. தொலைபேசி: 044-28304444.
''ஆமணக்கு எண்ணெய் மூலம், நீர் இறைக்கும் இன்ஷினை இயக்க முடியுமா? அதற்கான தொழில்நுட்பம் எங்கு கிடைக்கும்?''
அருணாச்சலம், கோபிச்செட்டிப்பாளையம்.
ஆமணக்கு எண்ணெய் மூலம் நீர் இறைக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ள, ஆந்திர மாநிலம், கரீம் நகரில் உள்ள ஊரகக் கண்டுபிடிப்பாளர், மஸ்தான் வலி பதில் சொல்கிறார்.

''மின்சாரம் மற்றும் டீசல் ஆகியவற்றைக் கொண்டு நீர் இறைப்பதில் உள்ள சிரமங்கள், செலவுகள் போன்றவற்றைத் தவிர்க்கத்தான், ஆமணக்கு எண்ணெயில் இயங்கும் இன்ஜினை உருவாகியுள்ளேன். வழக்கமாக நீர் இறைக்கப் பயன்படும் ஆயில் இன்ஜினிலேயே சிறிய மாற்றம் செய்து ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் எண்ணெயில் 2 மணி நேரம் வரை இயக்க முடியும். இதனால், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படாது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் ஈரோடு, சங்ககிரி போன்ற பகுதிகளில் இந்த இன்ஜினை இயக்கிக் காட்டியுள்ளேன். ஆனால், இதற்கு விவசாயிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. முழுமூச்சில் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க, என்னிடம் நிதி வசதியும் இல்லாததால், மேற்கொண்டு அதை நான் முயற்சிக்கவில்லை. இப்போதுகூட அரசு அல்லது தனியார் அமைப்புகள் உதவி செய்யும்பட்சத்தில் இதனை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க நான் தயார்.''
தொடர்புக்கு: செல்போன்: 098491-78064.
''மென்பொருள் துறையில் பணியாற்றி வந்தேன். விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால், முழுநேர விவசாயியாக மாறிவிட்டேன். வயலில் வேலை செய்ய ஆசையாக உள்ளது. ஆனால், கொஞ்ச நேரத்தில் சோர்ந்து விடுகிறேன். எப்படி இதைத் தவிர்ப்பது?''
எஸ். சங்கர், திருச்சி.
சென்னையைச் சேர்ந்த இயற்கை நல மருத்துவர் ஏ.வி.ஜி. ரெட்டி பதில் சொல்கிறார்.
''உங்களுக்கு மட்டும் இந்தப் பிரச்னை கிடையாது. பரம்பரை விவசாயிகளுக்கும் இந்தப் பிரச்னை உண்டு. முன்பு, விவசாய வேலை செய்பவர்கள், ஆரோக்கியமான இயற்கை உணவுகளை உண்டு வந்ததால், நல்ல உடல் வலிமை இருந்தது. இப்போது, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மூலம் விளைவிக்கப்பட்ட உணவைத்தான் அனைவரும் சாப்பிடுகிறோம். அதோடு, உணவுப் பழக்கங்களும் மாறி விட்டன. முற்காலங்களில், விசேஷ நாட்களில் மட்டும்தான் அரிசி சாதம் சமைப்பார்கள். மற்ற காலங்களில், கம்பு, ராகி... போன்ற சிறுதானியங்கள், காய்கறி, பழங்கள் போன்றவற்றைத்தான் அதிக அளவு உண்பார்கள். இப்போது... சிறுதானிய சாகுபடியே கிட்டத்தட்ட இல்லாமல் போய் விட்டது. அதனால்தான், இதுபோன்ற உடல்ரீதியான பிரச்னைகள் பெருகியுள்ளன. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கே, போதுமான சத்து இல்லை என்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை.

'உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற கொள்கையை நாம் மீண்டும் பின்பற்றினால் போதும். தினமும் காலை எழுந்தவுடன், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, முருங்கை, துளசி... ஏதாவது இரண்டு இலைகளை தலா, 50 கிராம் எடுத்து சாறு பிழிந்து குடிக்கலாம்.
மதியம், முள்ளங்கி, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கேரட்... போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்றை 100 கிராம் அளவுக்கு எடுத்து சாறு பிழிந்து, தேங்காய், பேரீச்சம் பழம் போன்றவற்றைச் சேர்த்து குடிக்கலாம். முடிந்தவரை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கீரை, காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த இலைச் சாறு, காய்கறிச் சாறு போன்றவற்றைத் தொடர்ந்து குடித்து வந்தாலே உடல் வலிமை பெறும்.
உங்கள் உடலுக்கு, எந்த உணவு ஏற்றது என்பது அறிந்து, உணர்ந்து வாழ்ந்தாலே நூறு வயது வரை நோயின்றி வாழ முடியும். நாங்கள், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மதுரையிலும்; மூன்றாவது ஞாயிறுக்கிழமை திருச்சியிலும்; நான்காவது ஞாயிறுக்கிழமை சென்னையிலும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். அதன் மூலம், நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறைகளை, மீண்டும் மக்களிடம் சேர்த்து வருகிறோம்.''
தொடர்புக்கு, செல்போன்: 93810-03653.
''கால்நடைகளுக்குக் கரும்புத் தோகையைத் தீவனமாகக் கொடுக்கலாமா?''
ஆர். சாந்தி, காட்டூர்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின், ஊட்டச்சத்துத் துறை தலைவர், டாக்டர். ஆர். சந்திரசேகரன் பதில் சொல்கிறார்.
''கரும்பு சாகுபடி உள்ள இடங்களில், கால்நடைகளுக்குக் கரும்புத் தோகையை மாற்றுத் தீவனமாகக் கொடுத்து வருகிறார்கள். இதனால், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், திடீரென்று இதையே முழுஅளவில் தீவனமாகக் கொடுத்து விடக்கூடாது. அதனால், செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இரண்டு கிலோ அளவில் கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, ஒரு நாளைக்கு 30 கிலோ என்ற அளவு வரையில் கொடுத்து, பழக்க வேண்டும். இப்படி, படிப்படியாகத் தீவனத்தின் அளவைக் கூட்டும்போது, மாடுகளின் வயிறில் உள்ள நுண்ணுயிரிகள், கரும்புத் தோகையை செரிமானம் செய்யப் பழக்கப்பட்டுவிடும். அதன் பிறகு அளவு கூடினாலும் ஆபத்து இல்லை.''

